ஜெர்ரிமாண்டரிங் குறித்த கவலைகள் இருந்தாலும், இந்த செயல்முறை அதிகாரத்தை விளிம்பு நிலைவரை கொண்டுசெல்ல உதவும்.
இந்தியா "இரண்டாவது குடியரசு" என்ற புதிய கட்டத்தில் நுழைகிறது. முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை, ஜனநாயகத்தில் மக்கள்தொகைக்கும் பிரதிநிதித்துவத்திற்கும் இடையிலான ஏற்றத்தாழ்வு குறித்த விவாதத்தை மீண்டும் தொடங்கியுள்ளது. எல்லை நிர்ணயம் அரசியல் சமத்துவத்தை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால், இந்தியா போன்ற பெரிய குடியரசுகள் சவால்களை எதிர்கொள்கின்றன. அவை மக்கள்தொகை அளவு, பிராந்தியங்கள், இனக்குழுக்கள் மற்றும் அரசியல் நலன்கள் போன்ற பல்வேறு காரணிகளை சமநிலைப்படுத்த வேண்டும்.
தொகுதி மறுவரையறை மக்கள்தொகை மாற்றங்களின் அடிப்படையில் தொகுதி எல்லைகளை சீர்படுத்த உதவுகிறது. இது நாடாளுமன்றத்தில் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்கிறது. இருப்பினும், 1976 முதல், இந்த செயல்முறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தும் தென் மாநிலங்களை பாதுகாக்க இது செய்யப்பட்டது. இதன் காரணமாக, அதிக மக்கள் தொகை கொண்ட உத்தரபிரதேசம் மற்றும் பீகார் போன்ற மாநிலங்கள் நாடாளுமன்றத்தில் குறைவான பிரதிநிதித்துவத்தை பெற்றுள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்கு நேர்மாறாக, தமிழ்நாடு மற்றும் கேரளா போன்ற தென் மாநிலங்களில் குறைவான மக்கள் தொகை இருந்தாலும் அதிக இடங்கள் உள்ளன. தவறானப் பகிர்வு என்று அழைக்கப்படும் இந்த ஏற்றத்தாழ்வு அரசியல் பதட்டங்களை ஏற்படுத்தியுள்ளது. 2029-ஆம் ஆண்டு தொகுதி மறுவரையறை ஏற்கனவே அரசியல் ரீதியாக மேலாதிக்கம் செலுத்தும் (politically hegemonic) வட மாநிலங்களுக்கு அதிக அதிகாரத்தை வழங்கும் என்று பலர் கவலை கொள்கிறார்கள்.
அரசியலமைப்புச் சட்டத்தின் 82-வது பிரிவு தொகுதி மறுவரையறையை கட்டாயமாக்குகிறது. அதை ஒரு தன்னாட்சி தொகுதி மறுவரையறை ஆணையம் இந்த செயல்முறையை மேற்கொள்கிறது. 1952, 1962 மற்றும் 1972 ஆம் ஆண்டுகளில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டது. இருப்பினும், 1976ஆம் ஆண்டில், 42-வது அரசியலமைப்பு திருத்தம் அதை நிறுத்தியது. 2001-ஆம் ஆண்டில், அது மீண்டும் ஒத்திவைக்கப்பட்டது. 2026 வரை தொகுதி மறுவரையறை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த தாமதம் மக்கள்தொகை வளர்ச்சியை வெற்றிகரமாகக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் தங்களது நாடாளுமன்ற தொகுதிகளை இழக்க நேரிடும். அதே, நேரத்தில் அதிக பிறப்பு விகிதங்களைக் கொண்ட மாநிலங்கள் அதிக பிரதிநிதித்துவத்தைப் பெறும் ஒரு முரண்பாடான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது.
முன்மொழியப்பட்ட தொகுதி மறுவரையறை எதிர்ப்பவர்கள் தென் மாநிலங்கள் வட மாநிலங்களை விட பல துறைகளில் சிறப்பாக செயல்படுவதாகக் கூறுகின்றனர். தனிநபர் வருமானம், வரி பங்களிப்புகள், உட்கட்டமைப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி ஆகியவை இதில் அடங்கும். தெற்கில் அதிக நகர்ப்புறங்கள், குறைந்த குழந்தை இறப்புகள் மற்றும் நீண்ட ஆயுட்காலம் ஆகியவை உள்ளன. இந்த வேறுபாடுகள், தெற்கு வடக்கிற்கு நிதி உதவி செய்வதாகக் கூறுவதற்கு வழிவகுத்துள்ளன. வட மாநிலங்கள் அதிக மக்கள்தொகை வளர்ச்சி, வேலையின்மை, வறுமை மற்றும் பலவீனமான உட்கட்டமைப்பு ஆகியவற்றின் சுமையை தென் மாநிலங்கள் சுமக்கின்றன. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்காமல் தொகுதி மறுவரையறை செய்வது மாநிலங்களுக்குள் ஏற்றத்தாழ்வுகளை அதிகரிக்கும் என்று தங்களது கவலைகளை வெளிப்படுத்தியுள்ளனர். வட மாநிலங்களின் மக்கள்தொகை வளர்ச்சியைக் கட்டுப்படுத்தவில்லை அல்லது தெற்கின் பொருளாதார முன்னேற்றத்துடன் பொருந்தவில்லை என்றால், தொகுதி மறுவரையறை ஒரு "ரெட் குயின் விளைவை" உருவாக்கக்கூடும்.
தொகுதி மறுவரையறையை வெவ்வேறு நாடுகள் வெவ்வேறு வழிகளில் கையாளுகின்றன. நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்கா தங்கள் அரசியலமைப்பில் தெளிவான விதிகளைப் பின்பற்றுகின்றன. இந்தியாவும் ஜப்பானும் வழக்கமான சட்டங்கள் மூலம் தொகுதி மறுவரையறையை கைளாளுகின்றன. தொகுதி மறுவரையறை முடிவுகளை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டுமா என்பது பற்றிய விவாதமும் நடந்து வருகிறது. மேகராஜ் கோத்தாரி VS தொகுதி மறுவரையறை ஆணையம் 1966-ஆம் ஆண்டு வழக்கில், தொகுதி மறுவரையறை முடிவுகள் இறுதியானவை என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நீதிமன்றத் தலையீடு நீண்ட காலத்திற்கு தேர்தலை தாமதப்படுத்தக்கூடும் என்று உச்ச நீதிமன்றம் கூறியது. சமீபத்தில், ஜம்மு-காஷ்மீர் தொகுதி மறுவரையறை சிறுபான்மை சமூகங்களை ஓரங்கட்டுவதாகக் கூறப்பட்ட போதிலும், அதை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
பெண்களின் பிரதிநிதித்துவம் மற்றொரு முக்கியமான பிரச்சினையாக உள்ளது. 2023-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட மகளிர் இடஒதுக்கீடு மசோதா நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் மூன்றில் ஒரு பங்கு இடங்களை பெண்களுக்கு ஒதுக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இருப்பினும், இது அடுத்த தொகுதி மறுவரையறைக்குப் பிறகுதான் மசோதா செயல்படுத்தப்படும். உண்மையான பாலின பிரதிநிதித்துவம் 2029 வரை தாமதமாகும்.
தொகுதி மறுவரையறை, பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர், புலம்பெயர்ந்தோர் மற்றும் பிற சமூக-மத சிறுபான்மையினரையும் பாதிக்கிறது. அரசியலமைப்பின் பிரிவு 330(2)-ன் படி, பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் ஒவ்வொரு மாநிலத்திலும் அவர்களின் மக்கள்தொகைக்கு விகிதாசாரமாக இருக்க வேண்டும். இருப்பினும், இட ஒதுக்கீடு இன்னும் 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பை நம்பியிருப்பதால், அதன் பின்னர் கணிசமாக வளர்ந்த சமூகங்கள் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன. உதாரணமாக, பீகார் சாதி அடிப்படையிலான கணக்கெடுப்பு (2023), பட்டியல் சாதி மக்கள் தொகை 15.9 சதவீதத்திலிருந்து 19.65 சதவீதமாகவும், பட்டியல் பழங்குடியின மக்கள் தொகை 1.2 சதவீதத்திலிருந்து 1.68 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாகக் கண்டறிந்துள்ளது. இருப்பினும், இட ஒதுக்கீடு இந்த மக்கள்தொகை மாற்றங்களை பிரதிபலிக்கவில்லை, இதனால் பல பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடியினர் சமூகங்கள் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகின்றன.
குறிப்பாக, முற்றிலும் மக்கள்தொகை அடிப்படையிலான இட ஒதுக்கீடு, அதிகமாக இந்தி பேசும் பகுதிகளை அதிகாரத்தை நோக்கி கடுமையாக மாற்றக்கூடும். இதனால் தென் மாநிலங்களுக்கான பிரதிநிதித்துவம் குறையும். எந்த மாநிலத்திற்கும் பிரதிநிதித்துவத்தைக் குறைக்காமல் மக்கள்தொகை மாற்றங்களுக்கு ஏற்ப மக்களவை இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று அரசியல் விஞ்ஞானி அலிஸ்டர் மெக்மில்லன் பரிந்துரைக்கிறார். மக்களவையில் வடக்கத்திய ஆதிக்கத்திற்கு எதிரான சமநிலையை வழங்குவதற்காக, மாநிலங்களவையை சீர்திருத்த வேண்டும் என்று மிலன் வைஷ்ணவ் பரிந்துரைக்கிறார்.
தொகுதி மறுவரையறை பெரும்பாலும் அதிகாரப் பகிர்வு மற்றும் நிரந்தர அரசியல் பெரும்பான்மையை உருவாக்குவது குறித்த கவலைகளை எழுப்புகிறது. இருப்பினும், சிறிய பிராந்திய அலகுகளுக்கு அதிக அதிகாரம் வழங்குவதோடு, நாடாளுமன்ற இடங்களை விரிவுபடுத்துவதும் ஒரு நேர்மறையான அணுகுமுறையாகும். இது ஜனநாயகத்தில் பிரதிநிதித்துவத்தையும் பொதுப் பங்கேற்பையும் வலுப்படுத்தும். பெண்கள் மற்றும் தாழ்த்தப்பட்ட சாதியினரை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவில் படிப்படியாக சமத்துவத்தை அடைவது (equality of conditions) என்ற அலெக்சிஸ் டி டோக்வில்லின் தொலைநோக்குப் பார்வையுடன் இந்தக் கருத்து ஒத்துப்போகிறது.
இறுதியில், இந்தியாவில் தொகுதி மறுவரையறை பயிற்சி என்பது மக்கள்தொகை தரவு, அரசியலமைப்புச் சட்டம் மற்றும் அரசியல் நலன்களை உள்ளடக்கிய ஒரு சிக்கலான செயல்முறையாகும். தேர்தல்களில் நியாயமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதற்காக இது கவனமாகக் கையாளப்பட வேண்டும். இந்தியாவின் ஜனநாயகத்தை வலுவாக வைத்திருக்க, தேசிய மற்றும் பிராந்திய அரசியல் கட்சிகள் நாட்டின் தேர்தல் முறையைப் புதுப்பிக்க ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். 127-வது அரசியலமைப்பு திருத்த மசோதாவைச் சுற்றியுள்ள முன்னெப்போதும் இல்லாத அரசியல் ஒருமித்த கருத்து, டச்சு அரசியல் விஞ்ஞானி அரெண்ட் லிஜ்பார்ட் விவரித்தபடி, பெரும்பான்மை ஆட்சி முறைக்குள் இந்தியா அதிகாரப் பகிர்வு ஜனநாயகமாக மாறி வருவதை இது குறிக்கிறது. தொகுதி மறுவரையறை இந்தியாவின் தேர்தல் ஜனநாயகத்தை மேம்படுத்தவும், எதிர்காலத்தில் அதன் ஜனநாயக அமைப்பை வலுப்படுத்தவும் உதவும்.
எழுத்தாளர்கள் மும்பையில் உள்ள TISS, தேர்தல் ஆய்வுகள் மையத்தில் கற்பிக்கின்றனர்.