இந்தியா போன்ற நாட்டின் நீடித்த வளர்ச்சிக்கு பரந்த மற்றும் ஆழமான சீர்திருத்தங்கள் தேவை.
2007-08ஆம் ஆண்டில், இந்தியா குறைந்த நடுத்தர வருமான நாடாக வகைப்படுத்தப்பட்டது. அந்த நேரத்தில், இந்தியாவின் தனிநபர் வருமானம் $1,022 ஆக இருந்ததாக சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)) தெரிவித்துள்ளது. 2024ஆம் ஆண்டுக்குள், சராசரி வருமானம் $2,697 ஆக அதிகரித்துள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. குறைந்த நடுத்தர வருமானத்திலிருந்து உயர் நடுத்தர வருமானத்திற்கு மாற, உலக வங்கி 2024-25ஆம் ஆண்டிற்கு தேவையான தனிநபர் வருமானத்தை $4,516 ஆக நிர்ணயித்துள்ளது. 2029ஆம் ஆண்டுக்குள் இந்தியாவின் தனிநபர் வருமானம் $4,195-ஐ எட்டும் என்று IMF எதிர்பார்க்கிறது. இதன் பொருள் பத்தாண்டுகளின் இறுதிக்குள் இந்தியா உயர் நடுத்தர வருமான நிலையை அடையாது. உலக வங்கியின் கூற்றுப்படி, 2032-ம் ஆண்டுக்குள் இந்தியா உயர் நடுத்தர வருமானப் பொருளாதாரமாக (upper middle-income economy) மாற வாய்ப்புள்ளது. இருப்பினும், 2047-ம் ஆண்டுக்குள் உயர் வருமானம் கொண்ட வளர்ந்த நாடாக மாறுவதே மிகப்பெரிய சவாலாகும்.
இது ஒரு கடினமான பணியாக உள்ளது. கடந்த பத்தாண்டுகளில், தென் கொரியா, செக் குடியரசு மற்றும் ருமேனியா போன்ற ஒரு சில நாடுகள் மட்டுமே நடுத்தர வருமான நிலையிலிருந்து உயர் வருமான நிலைக்கு மாறியுள்ளன. பிரேசில், தென்னாப்பிரிக்கா மற்றும் மலேசியா போன்ற பல நாடுகளால் இந்த மாற்றத்தை அடைய முடியவில்லை. இந்த நாடுகள் "நடுத்தர-வருமான வலையில்" (middle-income trap) சிக்கித் தவிக்கின்றன. இதற்கான கேள்வி என்னவென்றால்: இந்தியாவும் இதே விதியைத் தவிர்க்க முடியுமா? 'ஒரு தலைமுறையில் அதிக வருமானம் ஈட்டும் பொருளாதாரமாக மாறுதல்' (Becoming a high-income economy in a generation) என்ற தலைப்பில் சமீபத்திய பொருளாதார அறிக்கையில், 2047-ல் அதிக வருமானம் ஈட்டும் நாடாக இந்தியா அடுத்த பத்தாண்டுகளில் 7.8 சதவீத வளர்ச்சியை அடைய வேண்டும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. எனவே, தற்போதைய அணுகுமுறையைத் தொடர்வது "உறுதியான நலன்சார்ந்த ஆதாயங்களுக்கு" (tangible welfare gains) வழிவகுக்கும். ஆனால், நீண்ட காலத்திற்கு இதுபோன்ற உயர் வளர்ச்சியை தொடர்ந்து பராமரிக்க இது போதுமானதாக இருக்காது.
இந்த இலக்கை அடைய வங்கியானது, ஒரு கொள்கைக்கான செயல்திட்டத்தை செயல்படுத்தக் கோடிட்டுக் காட்டியுள்ளது. மேலும், இதற்கான கட்டமைப்பு மாற்றத்தை ஊக்குவிப்பதிலும், முதலீடுகளை அதிகரிப்பதிலும் இது கவனம் செலுத்துகிறது. மேலும், உற்பத்தித் திறன் மிக்க வேலைவாய்ப்புகளை உருவாக்குவதையும் தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவிப்பதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது. கூடுதலாக, நாட்டில் உள்ள மாநிலங்கள் வேகமாக வளர்ச்சிக்கு உதவவும் இது முயல்கிறது. "துரிதப்படுத்தப்பட்ட சீர்திருத்தங்கள்" (accelerated reforms) சூழ்நிலை 2035-ம் ஆண்டுக்குள் முதலீடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் 40% ஐ எட்டும் என்று எதிர்பார்க்கிறது. 2050-ம் ஆண்டுக்குள் பெண் தொழிலாளர் பங்களிப்பு (female labour force participation) விகிதம் 55% ஆக உயரும் என்றும் எதிர்பார்க்கிறது. இது அதிக உற்பத்தித் திறனுக்கு வழிவகுக்கும். முதலீடு மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் தற்போது 33 சதவீதமாக உள்ளது. மேலும், தனியார் முதலீடுகள் குறைக்கப்பட்டுள்ளன. சமீபத்திய ஆண்டுகளில், பெண் தொழிலாளர் பங்களிப்பு (female labour force participation) கடுமையாக அதிகரித்துள்ளது. 15 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட பெண்களில் இது இப்போது 41.7 சதவீதமாக உள்ளது. விவசாயத் துறையை விட்டு வெளியேறுவதற்குப் பதிலாக அதிகமான பெண்கள் விவசாயத்தில் வேலை செய்கிறார்கள். விவசாயத்தில் தொழிலாளர்களின் பங்கு 2017-18ஆம் ஆண்டில் 44.1 சதவீதத்திலிருந்து 2023-24ஆம் ஆண்டில் 46.1 சதவீதமாக அதிகரித்துள்ளது. இந்தியாவை நீண்டகால உயர்வளர்ச்சிப் பாதையில் வைத்திருக்க, ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஆழமான மற்றும் பரந்த சீர்திருத்தங்களை அறிமுகப்படுத்த வேண்டும்.