தொகுதி மறுவரையறை, பெண்களுக்கான இடஒதுக்கீடு மற்றும் அரசியல் மாற்றங்கள். -ஜோயா ஹசன்

 மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அல்லது தொகுதி மறுவரையறை போன்ற நடைமுறைகளுக்காகக் காத்திருக்காமல், பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக அமல்படுத்துவது, உண்மையான பிரதிநிதித்துவத்தையும்  சீர்திருத்தங்களையும் பலவீனப்படுத்தக்கூடும் என்கின்றனர் .


செப்டம்பர் மாதம் 2023-ஆம் ஆண்டில், இந்திய நாடாளுமன்றம் 106-வது அரசியலமைப்பு சட்டத்திருத்த மசோதாவை (Constitution 106th Amendment Act, 2023) நிறைவேற்றியது. இது 'நாரி சக்தி வந்தன் அதினியம்' (Nari Shakti Vandan Adhiniyam) என்றும் அழைக்கப்படுகிறது. இந்தச் சட்டம் மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்க உறுதியளிக்கிறது. இதில் ஏற்கனவே பட்டியலினத்தவர் (Scheduled Castes (SC)) மற்றும் பழங்குடியினருக்காக (Scheduled Tribes (ST)) ஒதுக்கப்பட்ட இடங்களுக்குள்ளும் பெண்களுக்கான உள்ஒதுக்கீடு அடங்கும் என்கின்றனர். இருப்பினும், இந்த முக்கியமான சீர்திருத்தம் உடனடியாக நடைமுறைக்கு வராது என்றும் அடுத்த மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடைபெறும் தொகுதி மறுவரையறை பணிகளுக்குப் பிறகே இந்த நடைமுறை அமல்படுத்தப்படும் என்கின்றனர்.


நாடாளுமன்ற விவாதங்களின்போது, காங்கிரஸ் கட்சி மற்றும் பிற எதிர்க்கட்சிகள் இந்தச் சட்டத்தை உடனடியாக, குறிப்பாக 2024-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்பாகவே அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தன. பெண்களுக்கான உரிமை அமைப்புகளும் இந்தக் காலதாமதத்தைக் கண்டித்தன; மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை ஆகியவற்றுடன் இதனை இணைப்பது தேவையற்றது என்றும் எதிர்க்கட்சிகள் சுட்டிக்காட்டின. ஆனால், தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசாங்கம் இந்தக் கோரிக்கைகளை நிராகரித்தது. முறையான மக்கள்தொகை தரவு மற்றும் தொகுதி மறுவரையறை இல்லாமல், இவ்வளவு பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவது நியாயமானதாகவோ அல்லது நடைமுறைக்குச் சாத்தியமானதாகவோ இருக்காது என்று அரசு வாதிட்டதாகவும் கூறப்படுகிறது.


இந்த மாற்றம் மிகவும் திட்டமிட்டதாகத் தெரிகிறது.


மூன்று ஆண்டுகளுக்குள்ளேயே அந்த நிலைப்பாடு மாறியிருப்பதாகத் தெரிகிறது. சமீபத்திய அறிக்கைகளின்படி, புதிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு மற்றும் அதன் அடிப்படையிலான தொகுதி மறுவரையறைக்காகக் காத்திருக்காமல், 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையிலேயே தொகுதி மறுவரையறை பணிகளைத் தொடங்கி, பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம், 2023-ல் (Women’s Reservation Act (WRA)) திருத்தம் செய்ய அரசு தற்போது திட்டமிட்டுள்ளது. அதே நேரத்தில், மக்களவை மற்றும் மாநிலச் சட்டமன்றங்களின் இடங்களின் எண்ணிக்கை ஏறக்குறைய 50% வரை அதிகரிக்கப்படலாம் என்கின்றனர். இதன் மூலம் மக்களவையின் மொத்த இடங்கள் 543-லிருந்து 816-ஆக உயரும் என்கின்றனர். இந்த விரிவாக்கத்திற்குத் தெளிவான காரணங்கள் ஏதும் கூறப்படாததால், இது மக்கள் பிரதிநிதித்துவம் மற்றும் அரசியல் சமநிலை ஆகியவற்றில் எத்தகைய பாதிப்பை ஏற்படுத்தும் என்ற கவலை எழுகிறது.


இந்த மாற்றங்கள் அனைத்தும்—குறிப்பாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான பரிந்துரை—பெண்கள் இடஒதுக்கீடானது அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பிலிருந்து பிரிக்கப்படுவதைக் காட்டுகின்றன. அந்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) ஆகியோரைத் தவிர்த்து, மற்ற சாதி வாரியான தரவுகளும் சேர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து தொகுதி மறுவரையறை பணிகளும் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது. இந்த மாற்றம் இடஒதுக்கீட்டை விரைவாகச் செயல்படுத்துவதற்கான ஒரு வழியாகக் கூறப்பட்டாலும், இதற்குப் பின்னால் ஒரு திட்டமிட்ட அரசியல் மாற்றத்தை உருவாக்கும் நோக்கம் இருப்பதையும் இந்த நடவடிக்கை சுட்டிக்காட்டுகிறது.


இந்த நடவடிக்கை எடுக்கப்பட்ட நேரம் என்பது மிகவும் முக்கியமானது. முந்தைய அரசாங்கங்கள் செயல்படுத்தாத, நீண்டகாலமாக நிலுவையில் இருந்த ஒரு சீர்திருத்தத்தைக் கொண்டு வந்த பெருமையை இதன் மூலம் தற்போதைய ஒன்றிய அரசு பெற்றுக்கொள்கிறது. இது தனது முந்தைய நிலைப்பாட்டை மாற்றிக்கொள்வதாக இருந்தாலும்கூட, இந்தச் சீர்திருத்தத்தை இப்போது அமல்படுத்துகிறது. இதற்குத் தெளிவான தேர்தல் லாபங்களும் உள்ளன. வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தல்களில் பெண் வாக்காளர்களை ஈர்ப்பது, 2027-ஆம் ஆண்டு தேர்தலுக்கு முன்பாகத் தனது ஆதரவு தளத்தை வலுப்படுத்துவது மற்றும் பாரதிய ஜனதா கட்சி (BJP) தான் பெண்களுக்கு இடஒதுக்கீட்டையும் பாலின நீதியையும் உறுதி செய்த கட்சி என்று முன்னிறுத்துவது போன்ற பல நன்மைகளும் இதில் அடங்கும் என்கின்றனர். இந்த உரிமை கோரல், 2029-ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரச்சாரத்தில் அக்கட்சியின் மிக முக்கியமான ஆயுதமாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர்.


தொகுதி மறுவரையறை என்பது இன்னும் ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாகவே உள்ளது. பிரதிநிதித்துவம் என்பது வெறும் மக்கள்தொகையை மட்டும் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டுமா அல்லது பொருளாதார, சமூக மற்றும் மக்கள்தொகை உள்ளிட்ட காரணிகளையும் கருத்தில் கொள்ள வேண்டுமா என்ற கேள்வியை எழுப்புகிறது. முற்றிலும் மக்கள்தொகையை மட்டுமே அடிப்படையாகக் கொண்ட ஒரு அணுகுமுறை, அதிகக் கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ள வட மாநிலங்களின் நாடாளுமன்ற பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் என்றும், அதே நேரத்தில், மக்கள்தொகையைக் கட்டுப்படுத்தி, நாட்டின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பிற்குப் பெரும் பங்களிப்பை வழங்கும் தென் மாநிலங்கள் மற்றும் தீபகற்ப மாநிலங்களின் நாடாளுமன்ற செல்வாக்கைக் குறைக்கும் வகையில் அமையும் என்றும் கூறப்படுகிறது. இது வட-தெற்கு மாநிலங்களின் பிரிவினையை ஆழமாக்கி, கூட்டாட்சிச் சமநிலை மற்றும் மாநிலங்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவத்தில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.


தொகுதி மறுவரையறை மீதான அரசியலமைப்புரீதியான தடையில் இருந்துதான் இத்தகைய கவலைகள் எழுகின்றன. இந்தத் தடையின் காரணமாக 1970-களின் தொடக்கத்திலிருந்து தொகுதிகளின் எல்லைகளும், இடஒதுக்கீடுகளும் மாற்றப்படாமல் அப்படியே உள்ளன. ஏறக்குறைய 50 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது இந்தத் தடையை நீக்கி, மக்களவை தொகுதிகளை சுமார் 50% அதிகரிக்கவும், அதேபோல் மாநில சட்டப்பேரவை தொகுதிகளை அதிகரிக்கவும் அரசாங்கம் தயாராக உள்ளது. தென் மாநிலங்களின் இடப்பங்கீட்டைப் பாதுகாப்பதன் மூலம் அவர்களின் பயத்தைப் போக்கி, தொகுதி மறுவரையறைக்கு எதிரான எதிர்ப்பைக் குறைப்பதே இதன் நோக்கமாகும். இருப்பினும், அனைத்து மாநிலங்களிலும் சமமான அளவில் இடங்கள் அதிகரிக்கப்பட்டாலும், வட மாநிலங்களின் மொத்த இடங்களின் எண்ணிக்கை பெருமளவில் உயரும் என்றே கூறப்படுகிறது. இது அதிகார மையத்தை அவர்களுக்குச் சாதகமாக மாற்றும் என்றும் உதாரணமாக, உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே இணைந்து சுமார் 180 தொகுதிகளைப் பெறக்கூடும் என்றும் கூறப்படுகிறது. அதேசமயம் ஐந்து தென் மாநிலங்கள் அனைத்தும் இணைந்து சுமார் 195 தொகுதிகளையே பெறும் என்றும் கூறப்படுகிறது. இதன்மூலம் வட மாநிலங்களின் கூட்டமைப்பு மிக வலிமையான அரசியல் செல்வாக்கைக் கொண்டிருக்கும் என்கின்றனர். வாக்கு எண்ணிக்கையின் அடிப்படையில் வெற்றி தீர்மானிக்கப்படும் முதலாவதாக வருபவரே வெற்றியாளர் (First-Past-The-Post (FPTP)) என்கிற தேர்தல் முறையில், காகித அளவில் விகிதாசார சமநிலை பராமரிக்கப்பட்டாலும், மக்கள்தொகை குறைவாக உள்ள பகுதிகளுக்கு இது நீண்டகாலப் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.


தரவு தொடர்பான சிக்கல்


தரவுகளின் துல்லியம் குறித்த சந்தேகங்கள், நீதி மற்றும் சமநிலை பற்றிய கவலைகளை மேலும் அதிகமாக்கியுள்ளன. பெண்கள் இடஒதுக்கீட்டிற்கு 2011-ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பைப் பயன்படுத்துவது சிக்கலானதாகக் கருதப்படுகிறது; குறிப்பாக, புதிய கணக்கெடுப்பு நடந்து கொண்டிருக்கும் வேளையில் இந்த நடவடிக்கை பொருத்தமற்றதாயாகும். 2011-ஆம் ஆண்டுக்கும் 2026-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் இந்தியா பெரும் மாற்றங்களைச் சந்தித்துள்ளது. இடம்பெயர்வு, வேகமான நகரமயமாக்கல் மற்றும் கொரோனா (COVID-19) பெருந்தொற்றின் தாக்கம் போன்றவை நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள்தொகை அமைப்பை மாற்றியுள்ளன. தொகுதிகள் மறுவரையறை, இடங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு மற்றும் பெண்கள் இடஒதுக்கீடு போன்ற முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும்போது, காலாவதியான தரவுகளை நம்புவது தற்போதைய உண்மைநிலையைத் தவறாகச் சித்தரிக்கக்கூடும் என்கின்றனர். இருப்பினும், ஆட்சேபனைகளைவிட இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதே முக்கியம் என்ற அரசியல் கணக்கு இதில் தெரிகிறது. ஏனெனில், யாரும் இதனை வெளிப்படையாக எதிர்க்க மாட்டார்கள் என்பதால், அதன் காலம் அல்லது செயல்முறை குறித்து கேள்வி எழுப்ப வாய்ப்பு மிகக் குறைவு என்கின்றனர். அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிவுகள் வெளிவரும்போது இந்தச் சிக்கல் இன்னும் தீவிரமாகும். இதில் சாதிவாரியான தரவுகள் இடம்பெறும் என்று எதிர்பார்க்கப்படுவதால், நலிவடைந்த சாதிப் பிரிவினருக்கு கூடுதல் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்படுவதற்கான வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. இது பெண்கள் இடஒதுக்கீட்டிற்குள் உள்-ஒதுக்கீடு (Sub-quotas) கோரிக்கையை வலுப்படுத்தும் என்றும் குறிப்பாக இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (Other Backward Classes (OBCs)) மற்றும் தற்போது போதிய பிரதிநிதித்துவம் இல்லாத இஸ்லாமியர் (இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்) சமூகத்தினரிடமிருந்து இக்கோரிக்கை எழ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. பல அரசியல் கட்சிகளும் பெண்கள் அமைப்புகளும் ஏற்கனவே இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியுள்ளன. 2026–27-ஆம் ஆண்டு கணக்கெடுப்பு வரை காத்திருக்காமல் முன்னேறிச் செல்வதன் மூலம், அரசாங்கம் இந்த அழுத்தங்களைத் தற்காலிகமாகத் தவிர்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்வது போலத் தோன்றுகிறது.


பெண்களுக்கான இடஒதுக்கீடு நடைமுறையில் எவ்வாறு செயல்படும் என்பதில் தெளிவு இல்லாதது மற்றொரு சிக்கலாக உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்திருத்தம் பெண்களுக்கு 33% இடஒதுக்கீட்டை வழங்கினாலும், முக்கியமான விவரங்களை—குறிப்பாக ஒதுக்கப்பட்ட தொகுதிகள் எவ்வாறு சுழற்சி முறையில் மாற்றப்படும் என்பதை தவிர்த்துள்ளது. ஒரு தொகுதியில் யார் போட்டியிடலாம், எங்கிருந்து போட்டியிடலாம் மற்றும் எவ்வளவு காலம் பதவியில் இருக்கலாம் என்பதை இந்தச் சுழற்சி முறை தீர்மானிக்கும் என்பதால் இது மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. இதுவே மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்புணர்வையும் தொகுதியின் வளர்ச்சியையும் பாதிக்கிறது. அடிக்கடி தொகுதிகளை மாற்றுவது இந்த நோக்கங்களைச் சிதைக்கும் என்று முந்தைய ஆலோசனைகள் எச்சரித்தன. ஆனால், தற்போதைய கட்டமைப்பு இதைத் தெளிவாகக் கையாளவில்லை என்றும் விமர்சிக்கின்றனர். ஒன்று அல்லது இரண்டு மக்களவை இடங்களைக் கொண்ட சிறிய மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் (Union Territories) இந்தச் சுழற்சி முறை குறைவாகவே நடக்கக்கூடும் என்றும், பெரிய மாநிலங்களில் சில தொகுதிகள் பலமுறை தொடர்ந்து பெண்களுக்காகவே ஒதுக்கப்படலாம் என்றும் அறிக்கைகள் தெரிவிக்கின்றன. தொகுதி மறுவரையறைக்கு பிறகுதான் இந்தச் சுழற்சி முறை அமையும் என்று சட்டம் குறிப்பிடுகிறதே தவிர, அது எப்படிச் செயல்படுத்தப்படும் என்பதைத் தெளிவாக விளக்கவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர்.



ஆலோசனையின் அவசியம்


பெண்கள் இடஒதுக்கீடு என்பது நீண்டகாலமாக நிலுவையில் உள்ள, அரசியல்ரீதியாக மிகவும் அவசியமான ஒன்று என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. மற்ற நாடுகளின் தரவுகளைப் பார்க்கும்போது, இடஒதுக்கீடு முறை  சிறப்பான மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது உறுதியாகிறது. இந்தியாவிலும் இது நிச்சயம் பலனளிக்கும் என்றும் நம்பிக்கை தெரிவிக்கின்றனர். பெண்கள் இடஒதுக்கீடு, நாடாளுமன்ற இடங்களின் விரிவாக்கம் மற்றும் தொகுதி மறுவரையறை ஆகிய இவை அனைத்தும் தனித்தனி நடவடிக்கைகள் அல்ல என்றும் இவை ஒட்டுமொத்தமாகச் சேர்ந்து பிரதிநிதித்துவம், அதன் இடங்கள் மற்றும் விகிதாச்சாரத்தை மாற்றி அமைக்கும் என்றும் தெரிவிக்கின்றனர். இது தொகுதிகளைத் மாற்றி வரைவது, மாநிலங்களுக்கு இடையிலான சமநிலையைச் சரிசெய்வது மற்றும் சட்டமன்றங்களில் சமூகக் கட்டமைப்பை மாற்றுவது என தேர்தல் நடத்துவதற்கான திட்டமுறையையே மாற்றி அமைக்கும் ஒரு பெரும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இது ஒரு சிறிய தொழில்நுட்ப மாற்றம் அல்ல என்றும், மாறாகப் பிராந்தியங்கள், சமூகக் குழுக்கள் மற்றும் பாலினங்களுக்கு இடையே அரசியல் அதிகாரத்தைப் பகிர்ந்தளிக்கும் ஒரு மிக முக்கியமான கட்டமைப்பு மாற்றம் என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர்.


இந்த மாற்றத்தின் அளவு மற்றும் முக்கியத்துவம் கருதி, சமீபத்திய தரவுகளின் அடிப்படையில் மிகக் கவனமான விவாதங்களுக்குப் பிறகே இது நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர். தர்க்கரீதியாகவும், அரசியலமைப்புச் சட்டப்படியும் வகுக்கப்பட்டுள்ள வரிசைமுறையைப் புறக்கணிப்பது, தொகுதிகளின் பிரதிநிதித்துவத்தையும் இடஒதுக்கீட்டையும் சீர்குலைத்து, இந்தச் சீர்திருத்தத்தையே பலவீனப்படுத்திவிடும் என்றும் கூறப்படுகிறது. இந்தியக் குடியரசு உருவான ஆரம்பகாலத்திற்குப் பிறகு, அதன் பிரதிநிதித்துவ முறையில் மிக முக்கியமான ஒரு மாற்றத்தின் விளிம்பில் இந்தியா இப்போது நிற்பதாகக் கூறப்படுகிறது.


ஜோயா ஹாசன் அவர்கள், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் உள்ள அரசியல் ஆய்வு மையத்தின் ஓய்வுபெற்ற சிறப்புப் பேராசிரியர் ஆவார்.


Original article : Delimitation, women’s reservation, political dynamics. -Zoya Hasan

Share: