பீகாரின் பலிராஜ்கரில் இந்திய தொல்லியல் துறை (Archaeological Survey of India (ASI)) அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. இந்த இடத்தின் முக்கியத்துவம் என்ன? இது மகாஜனபதங்களுடன் எவ்வாறு தொடர்புடையது? நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே உள்ளது.
தற்போதைய செய்தி ?
பண்டைய மிதிலாவின் நுழைவாயில் என்று நம்பப்படும் பீகாரின் வரலாற்று சிறப்புமிக்க பலிராஜ்கர் தளத்தில், இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ASI) அகழ்வாராய்ச்சியைத் தொடங்கியுள்ளது. இந்தச் சூழலில், இந்தத்தளத்தின் முக்கியத்துவம் என்ன என்பதையும், மகாஜனபதங்களுடனான அதன் தொடர்பையும் அறிந்துகொள்வோம்.
முக்கிய அம்சங்கள்:
1. மதுபானி மாவட்டத்தின் பாபுபர்ஹி வட்டத்தில் அமைந்துள்ள பலிராஜ்கர் புராண மற்றும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. உள்ளூர் நாட்டுப்புறக் கதைகள் இதைப் புகழ்பெற்ற மன்னன் பலியின் தலைநகரமாகக் குறிப்பிடுகின்றன.
2. இந்தத்தளம் பண்டைய விதேகப் பேரரசின் ஒரு முக்கிய நிர்வாக மையமாகச் செயல்பட்டதாகச் சில அறிஞர்கள் நம்புகின்றனர். விதேகப் பேரரசு 16 மகாஜனபதங்களில் ஒன்றாக இருந்தது.
3. 2013–2014-ஆம் ஆண்டுகளில் மேற்கொள்ளபட்ட முதற்கட்ட ஆய்வுகள், ஏறத்தாழ 176 ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ள ஒரு பிரம்மாண்டமான செங்கல் கோட்டை அமைப்பைக் கோடிட்டுக் காட்டியதுடன், இந்தத்தளத்தின் சாத்தியக்கூறுகளை உணர்த்தும் சிறிய கலைப்பொருட்களையும் வெளிக்கொண்டு வந்துள்ளன. இதுவே தற்போதைய அறிவியல் ஆய்வுக்கு வழிவகுத்தது.
4. முன்னதாக, இந்திய தொல்லியல் துறையின் (ASI) ஆய்வுகள், மௌரிய, சுங்க, குஷான மற்றும் பாலப் பேரரசுகள் போன்றவற்றை வரையறுக்கும் பல வம்சங்களின் தொடர்ச்சியான வரலாற்றை இந்தத்தளத்தில் நிறுவின. பலிராஜ்கர் 1938-ல் இந்திய தொல்லியல் துறையால் பாதுகாக்கப்பட்ட தளமாக அறிவிக்கப்பட்டது.
5. இந்திய தொல்லியல் துறையின் (ASI) பாட்னா வட்டத்தின் கண்காணிப்பு தொல்பொருள் ஆய்வாளர் ஹரி ஓம் ஷரன், “மனிதக் குடியேற்றம் முதன்முதலில் எப்போது தொடங்கியது என்பதைத் துல்லியமாகக் கண்டறிய, மூல மண்ணை — அதாவது உண்மையான, மனித செயல்களால் பாதிக்கப்படாத நிலத்தை — சென்றடைவதே எங்களின் நோக்கம் என்றும், இந்தத் தளம் மௌரியர் காலத்திற்கு முற்பட்டதா என்பதை உறுதிப்படுத்த இந்த அகழ்வாராய்ச்சிகள் உதவும். இது இரும்புக்காலத்தைச் சேர்ந்த 'விதேக' பேரரசின் ஒரு பகுதியாக இருக்கலாம் எனத் தொடக்கநிலைத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இதன்மூலம், இந்தப்பகுதியின் ஆவணப்படுத்தப்பட்ட வரலாற்றை பற்றி தெரிந்துகொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்று கூறினார்.
6. இந்திய தொல்லியல் துறை குழு, “பண்பாட்டு அமைப்பு” (cultural fabric) மற்றும் தொடர்ச்சித் தன்மைகளை ஆய்வுசெய்ய 20 அகழ்வுப் பள்ளங்களைத் தோண்டவுள்ளது. இது மௌரிய காலம் (NBPW), சுங்க காலம், குஷன் காலம், குப்தர் காலம் மற்றும் பால காலம் ஆகிய ஐந்து தனித்துவமான காலகட்டங்களை பற்றி ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது.
7. முந்தைய அகழ்வாராய்ச்சிகளில், பழங்கால மணிகள், செப்புப் பொருட்கள், எலும்புக் கருவிகள், சுடுமண் சிலைகள், பொம்மைகள் மற்றும் முத்திரையிடப்பட்ட நாணயங்கள் உள்ளிட்ட கலைப்பொருட்களின் புதையல் கிடைத்துள்ளது. பண்டைய காலங்களிலேயே இந்தப்பகுதி நகரத் திட்டமிடலில் மிகவும் திறமை வாய்ந்ததாக இருந்தது என்பதை இந்தக் கண்டுபிடிப்புகள் நிரூபிப்பதாக வல்லுநர்கள் குறிப்பிடுகின்றனர். இந்த அகழ்வாராய்ச்சியானது, இந்தியத் தத்துவம் மற்றும் கலாச்சார பாரம்பரியத்தின் உலகப் புகழ்பெற்ற மையமாக மதுபானியின் நிலையை மேலும் வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மிதிலாவின் விதேகங்கள்
1. மிதிலா என்பது நேபாள எல்லையில் அமைந்துள்ள ஜனக்பூர்நகரத்துடன் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. மகாபாரதத்திற்குப் பிறகு முடியாட்சி வீழ்ச்சியடைந்ததும், இங்கு ஒரு குடியரசு நிறுவப்பட்டது.
2. மிதிலா விதேக கானாவின் (gana) தலைநகராக விளங்கியது. விதேஹாவும் வஜ்ஜி சங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார். வஜ்ஜி 16 மகாஜனபதங்களின் ஒரு பகுதியாக இருந்தார்.
மகாஜனபதங்கள் (Mahajanapadas)
1. தொடக்கக்கால பௌத்த மற்றும் சமண நூல்கள், பிற செய்திகளுடன் சேர்த்து, 'மகாஜனபதங்கள்' என அறியப்படும் 16 அரசுகளைப் பற்றியும் குறிப்பிடுகின்றன. இந்தப்பட்டியல்கள் மாறுபட்டிருந்தாலும், வஜ்ஜி, மகதம், கோசலம், குரு, பாஞ்சாலம், காந்தாரம் மற்றும் அவந்தி போன்ற சில பெயர்கள் அடிக்கடி இடம்பெறுகின்றன. இவை மிக முக்கியமான மகாஜனபதங்களில் ஒன்றாகும்.
2. மகத, அங்க, காசி, கோசல, அவந்தி, வத்ச, காந்தார, காம்போஜ, சேதி, வஜ்ஜி, மல்ல, குரு, பாஞ்சால, மத்ஸ்ய, சூரசேன, அஸ்ஸகா ஆகிய 16 மகாஜனபதங்கள் ஆகும்.
3. பெரும்பாலான மகாஜனபதங்கள் மன்னர்களால் ஆளப்பட்டாலும், கணங்கள் அல்லது சங்கங்கள் என்று அழைக்கப்பட்ட சில, அமைப்புகளாக இருந்தன. இவற்றில் அதிகாரம் பல ஆண்களால் பகிரப்பட்டது. அவர்கள் கூட்டாக அரசர்கள் என்று அழைக்கப்பட்டனர். சில சமயங்களில், வஜ்ஜி சங்கத்தைப் போல, அரசர்கள் நிலம் போன்ற வளங்களை கூட்டாகக் கட்டுப்படுத்தியிருக்கலாம். ஒவ்வொரு மகாஜனபதத்திற்கும் ஒரு தலைநகரம் இருந்தது. அது கோட்டையால் சூழப்பட்டிருந்தது.
வஜ்ஜி மகாஜனபதம் (Vajji Mahajanapada)
1. வஜ்ஜி 8 மாநிலங்களைக் கொண்ட ஒரு குடியரசாக இருந்தது. அது கங்கை நதிக்கு வடக்கே, நேபாள மலைகள் வரை பரவியிருந்தது. இந்த எட்டு மாநிலங்களில், லிச்சவி, விதேகா மற்றும் கிரகத்திரிகா போன்றவை முக்கியமானவையாக இருந்தன. மிதிலா விதேகாக்களின் தலைநகராகவும், வைஷாலி லிச்சவிகளின் தலைநகராகவும், குண்டகிராமம் கிரகத்திரிகாக்களின் தலைநகராகவும் இருந்தன.
2. பாணினி எழுதிய அஷ்டத்யாயில் வஜ்ஜி குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. பின்னர், அஜாதசத்ரு எனும் மகத அரசன், வஜ்ஜியை தனது அரசுடன் இணைத்தான்.
இந்தியத் தொல்லியல் துறை (Archaeological Survey of India)
1. கலாச்சார அமைச்சகத்தின் ஓர் அங்கமாக உள்ள இந்தியத் தொல்லியல் ஆய்வுத் துறை (ASI), தொல்லியல் ஆராய்ச்சி மற்றும் நாட்டின் கலாச்சாரப் பாரம்பரியத்தைப் பாதுகாப்பதற்கான முக்கிய அமைப்பாக உள்ளது.
2. தேசிய முக்கியத்துவம் வாய்ந்த முக்கிய நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்களைப் பராமரிப்பதே இந்திய தொல்லியல் துறையின் (ASI) முக்கிய நோக்கமாகும்.
3. மேலும், இந்தியத் தொல்லியல் துறை 1958-ஆம் ஆண்டின் பண்டைய நினைவுச்சின்னங்கள், தொல்பொருள் தளங்கள் மற்றும் எச்சங்கள் சட்டத்தின் விதிகளுக்கு ஏற்ப, நாட்டில் உள்ள அனைத்து தொல்பொருள் நடவடிக்கைகளையும் மேற் கொள்கிறது. இந்தியத் தொல்லியல் துறை 1972-ஆம் ஆண்டின் தொல்பொருட்கள் மற்றும் கலைப் பொக்கிஷங்கள் (Antiquities and Art Treasures Act) சட்டத்தையும் கண்காணிக்கிறது.
4. 1851-ஆம் ஆண்டில், இந்தியாவில் இருந்த ஆங்கிலேய அரசாங்கம் நாட்டின் தொல்லியல் சார்ந்த முறையான ஆய்வு ஒன்றின் தேவையை உணர்ந்தது. அதன் விளைவாக, 1861-ஆம் ஆண்டில் இந்தியத் தொல்லியல் துறை (ASI) உருவாக்கப்பட்டது. பிரின்செப்பின் மாணவரான அலெக்சாண்டர் கன்னிங்ஹாம், இந்தியத் தொல்லியல் துறையின் முதல் தலைமை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.
Original article : Balirajgarh Excavation: How is it connected to Mahajanapadas and why it matters. -Roshni Yadav