ஜன் விஸ்வாஸ் மசோதா 2026: இந்தியாவின் முக்கிய குற்றநீக்க நடவடிக்கையின் வீச்சு, நோக்கம் மற்றும் தாக்கம். -ஆயுஷி சர்மா, நவீத் மெஹ்மூத் அகமது

2023-ஆம் ஆண்டின் சட்டம் வணிகம் செய்வதை எளிதாக்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தபோதிலும், தற்போதைய மசோதாவானது தொழில், உள்கட்டமைப்பு மற்றும் நகராட்சி நிர்வாகம் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த சட்டங்களிலும், காலனித்துவ சட்டங்களிலும் திருத்தங்களை மேற்கொள்கிறது.


கடந்த வாரம், நாடாளுமன்றம் 2026-ஆம் ஆண்டிற்கான 'ஜன் விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்த) மசோதாவை நிறைவேற்றியது. இந்த மசோதா, 79 ஒன்றிய அரசின் சட்டங்களில் உள்ள 784 விதிகளில் திருத்தங்களை மேற்கொள்ள பரிந்துரை செய்துள்ளது. முன்னதாக, 2023-ஆம்  ஆண்டில் வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில், ஜன விஸ்வாஸ் (விதிமுறைகள் திருத்தம்) சட்டம், 42 சட்டங்களில் உள்ள 183 விதிகளில் திருத்தங்களை மேற்கொண்டிருந்தது.


இருப்பினும், தற்போதைய மசோதா இதைத் தாண்டிச் செல்கிறது. பரந்த அளவிலான சட்டங்களின்கீழ் தண்டனைகளை விரிவாகக் குற்றமற்றதாக்கியும், அவற்றை முறைப்படுத்தியும், ஒரு குடிமகனின் அன்றாடச் சட்டத் தொடர்புகளை வடிவமைக்கும் துறைகள் வரையிலும் இந்த சட்டம் சீர்திருத்தத்தை மேற்கொள்ள பரிந்துரை செய்கிறது.


மசோதாவின் நோக்கம்


தண்டனை விதிமுறைகளைச் சீரமைக்கும் முயற்சியாக, இந்த மசோதா பரந்த அளவிலான பல்வேறு துறைகளைச் சார்ந்த சட்டங்களைத் திருத்துகிறது. இந்தத்திருத்தங்கள் அனைத்தும் ஒருங்கிணைந்து, சட்டத்தின்கீழ் குற்றங்களாகக் கருதப்படும் 1,018 தனிப்பட்ட செயல்களையும் செயலின்மைகளையும் குற்றமற்றவையாக்குகின்றன அல்லது முறைப்படுத்துகின்றன.


வணிகம் மற்றும் தொழில்துறை துறையில், இந்த மசோதா தேயிலைச் சட்டம், தேங்காய் நார் தொழில் (Coir Industry Act) சட்டம் மற்றும் 2009-ஆம் ஆண்டு சட்ட அளவியல் (Legal Metrology Act) சட்டம், போன்ற சட்டங்களைத் திருத்துகிறது.


நகராட்சி நிர்வாகத்திற்காக, இந்த மசோதா டெல்லி மேம்பாட்டுச் சட்டம், டெல்லி மாநகராட்சிச் சட்டம் மற்றும் 2006-ஆம் ஆண்டின் இராணுவக் குடியிருப்புச் (Cantonments Act) சட்டம் போன்ற சட்டங்களில் மாற்றங்களைப் பரிந்துரைக்கிறது.


போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்புத் துறையில், இந்த மசோதாவானது மோட்டார் வாகனச் சட்டம், கடலோரக் கப்பல் போக்குவரத்துச் சட்டம் மற்றும் 1962-ஆம் ஆண்டின் பெட்ரோலியம் மற்றும் கனிமக் குழாய்வழிகள் (நிலத்தில் பயன்பாட்டு உரிமையைக் கையகப்படுத்துதல்) சட்டம் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.


இந்த மசோதா, வழக்கமான விதிமுறைகளை செயல்படுத்துவதற்குத் தொடர்ந்து குற்றவியல் சட்டத்தையே சார்ந்திருந்த, கால்நடை அத்துமீறல் சட்டம், கால்நடை இறக்குமதி சட்டம் மற்றும் இந்திய வாரிசுரிமைச் சட்டம் போன்ற காலனித்துவ காலச் சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்கிறது.


திருத்தங்கள்

இந்த மசோதா, 79 சட்டங்கள் முழுவதிலும் நான்கு பரந்த அளவிலான மாற்றங்களை முன்மொழிகிறது:


குற்றமற்றதாக்கப்படுதல் (Decriminalisation): இந்த மசோதா மொத்தம் 805 குற்றங்களை குற்றவியல் பட்டியலிலிருந்து நீக்குகிறது. சிறைத்தண்டனை அல்லது அபராதம் போன்ற குற்றவியல் தண்டனைகளை நீக்கி,  அதற்க்குப் பதிலாக எச்சரிக்கைகள் மற்றும் பண அபராதங்கள் போன்ற உரிமையியல் வழிமுறைகளை   அறிமுகப்படுத்துகிறது. இந்தக் குற்றங்கள் குற்றவியல் நீதி அமைப்பின் வரம்பிலிருந்து நீக்கப்படுவதால், இனி இவற்றின் மீது காவல்துறை நடவடிக்கையோ அல்லது குற்றவியல் நீதிமன்ற நடவடிக்கைகளோ விதிக்கப்படாது. இருப்பினும், பெரும்பாலான  சூழல்களில் அவை தொடர்ந்து ஒழுங்குபடுத்தப்படும்.


நீக்கம்: இந்த மசோதா 125 குற்றங்களை நீக்கப் பரிந்துரைக்கிறது. தேவையற்ற அல்லது காலாவதியான குற்றங்கள் நீக்கப்பட்டு, நடைமுறையில் அவை குற்றமற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. பொதுமக்களுக்குத் தொடர்ந்து தீங்கு விளைவிக்கக்கூடிய, ஆனால் ஏற்கனவே 'பாரதிய நியாய சன்ஹிதா, 2023' (Bharatiya Nyaya Sanhita (BNS)) சட்டத்தின்கீழ் இடம் பெற்றுள்ள குற்றங்களும் குறிப்பிட்ட சட்டங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பொதுச் சட்டத்தின்கீழ் அவற்றிற்கான குற்றவியல் பொறுப்பு (criminal liability) தொடர்ந்து நீடிக்கும்.


சமரசம் செய்தல்:  இது 35 குற்றங்களைச் சமரசம் செய்துகொள்ளும் வகையில் முன்மொழியப்பட்டுள்ளது. இது, சட்டதை மீறுபவர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையைச் செலுத்தி வழக்கை முடித்துக்கொள்வதற்கும், பல ஆண்டுகளாக நடந்து வரும்  சட்டப் போராட்டத்தைத் தவிர்ப்பதற்கும் வழிவகுக்கும். இது நடைமுறையில் சில நெகிழ்வுத்தன்மையை அளித்தாலும், இது போன்ற சட்ட மீறல்கள் தொடர்ந்து குற்றங்களாகவே கருதப்படுகின்றன.


தண்டனைகளை முறைப்படுத்துதல்: இந்த மசோதா 53 குற்றங்களுக்கு, சிறைத் தண்டனைக் காலத்தைக் குறைக்கிறது, ஆயுள் தண்டனை அல்லது மரண தண்டனை போன்ற கடுமையான தண்டனைகளை நீக்குகிறது. மேலும், அபராதத் தொகைகளைச் சமகாலத் தரநிலைகளுக்கு ஏற்பத் திருத்தியமைக்கிறது.


இந்த திருத்தங்களின் பின்னணியில், சட்டமீறல்களுக்கு அரசு எப்படி பதிலளிக்க வேண்டும் என்பதைக் நியாயமான முறையில் மாற்ற முயலும் ஒரு விழிப்புணர்வான முயற்சி உள்ளது.


அபராதங்கள் மற்றும் தண்டனைகள்


இந்த மசோதா அபராதங்களுக்கும் தண்டனைகளுக்கும் இடையிலான வேறுபாட்டைத் தெளிவுபடுத்துகிறது. அபராதங்கள் (Fines) நீதிமன்றத்தால் விதிக்கப்படுகின்றன. மேலும், பெயரளவிலான அபராதத் தொகைகளுக்கும்,  முழுமையான குற்றவியல்  நீதிமன்ற  நடவடிக்கை (criminal justice process) தேவைப்படுகிறது. இதற்கு மாறாக, தண்டனைகள் இயல்பாகவே உரிமை சார்ந்தவை மற்றும் நியமிக்கப்பட்ட அதிகாரிகளால் விதிக்கப்படுகின்றன. இது விரைவான மற்றும் திறமையான சட்ட செயல்முறையை சாத்தியமாகிறது.


குற்றங்கள் குற்றமற்றதாக்கப்படுதல்


குற்றமற்றதாக்கப்படும் அல்லது முறைப்படுத்தப்படும் குற்றங்கள் பின்வரும் வகைகளாகப் பிரிக்கப்படுகின்றன:


இந்த மசோதா, மிகச் சிறிய அல்லது காலாவதியான (obsolete) குற்றங்களை நீக்குகிறது. உதாரணமாக, ஏழு வயதுக்குட்பட்ட குழந்தையை பொது இடத்தில் மலம் கழிக்க அனுமதிப்பது அல்லது விளக்குகளை அணைப்பது போன்ற குற்றங்கள் நீக்கப்பட்டுள்ளன. அதேபோல், இராணுவ முகாம்களில் சுற்றித் திரிவது அல்லது பிச்சை எடுப்பது அல்லது எந்தவொரு இரயில் பெட்டியிலும் பொருட்களை விற்பனை செய்வது போன்ற குற்றங்களும் குற்ற பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளன.


பொதுவான மீறல்கள்: 12  ஒன்றிய அரசு  சட்டங்கள், சட்டம், விதிகள் அல்லது ஒழுங்குமுறைகளின் எந்தவொரு விதியையும் மீறுவதைக் குற்றமாக்குகின்றன. இது போன்ற விதிகள், அதிக குற்றம் ஏற்படுவதற்கு ஒரு முக்கியக் காரணியாக இருந்து வருகின்றன. 17 சட்டங்களில் இது போன்ற விதிகள் குற்றமற்றதாக்கப்பட்டுள்ளன. 5 சட்டங்களிலிருந்து அவை நீக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, 1988-ஆம் ஆண்டு மோட்டார் வாகனச் (Motor Vehicles Act) சட்டத்தின்கீழ், முதல் மீறலுக்கு எச்சரிக்கையும், இரண்டாவது அல்லது அடுத்தடுத்த மீறல்களுக்கு அபராதமும் விதிப்பதன் மூலம் இந்த விதி குற்றமற்றதாக்கப்பட்டுள்ளது.


நடைமுறைத் தவறுகள்: வணிகம் செய்வதை எளிதாக்கும் வகையில், அடிப்படை நடத்தை இயல்பாகவே குற்றமாக இல்லாத சிறு தவறுகளை இந்த மசோதா குற்றமற்றதாக்க முயல்கிறது. உதாரணமாக, 1953-ஆம் ஆண்டு தேயிலைச் சட்டத்தின்கீழ், முதல் மீறலுக்கு அபராதத்திற்குப் பதிலாக எச்சரிக்கையும், அடுத்தடுத்த மீறல்களுக்கு குடிமையியல் அபராதமும் விதிப்பதன் மூலம், கணக்கு அறிக்கைகளைத் தாக்கல் செய்யத் தவறுதல் மற்றும் தவறான கணக்கு அறிக்கைகளைத் தாக்கல் செய்தல் ஆகியவை குற்றமற்றதாக்கப்பட்டுள்ளன. இதேபோன்ற குற்றங்கள் 29 சட்டங்களிலிருந்து குற்றமற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. மேலும், 6 சட்டங்களிலிருந்து அவை நீக்கப்பட்டுள்ளன.


எந்தவொரு உத்தரவு, வழிகாட்டுதல், கோரிக்கை அல்லது அறிவிப்புகளுக்கு ஏற்பத் தவறுவதைக் குற்றமாக்கும் வகையிலான சட்டப்பிரிவுகள், 18 சட்டங்களிலிருந்து குற்றமற்றவையாக மாற்றப்பட்டுள்ளன. 6 சட்டங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன. மேலும், இரண்டு சட்டங்களில் சமரசத்திற்குரிய குற்றங்களாக மாற்றப்பட்டுள்ளன. உதாரணமாக, 1957-ஆம் ஆண்டின் டெல்லி மேம்பாட்டுச் சட்டத்தின் (Delhi Development Act) கீழ், கட்டுமானப் பொருட்கள், கருவிகள், இயந்திரங்கள், சாரக்கட்டுகள் அல்லது பிற பொருட்களை அகற்ற வேண்டும் என்ற உத்தரவை (requisition) பின்பற்றத் தவறுவது முன்பு ஒரு குற்றமாக இருந்தது. இப்போது, அந்த குற்றம் குற்றவியல் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது.


தடை ஏற்படுத்துதல்: ஒரு அரசு ஊழியருக்குத் ஊழியரை பணி செய்ய விடாமல்  தடுக்கும்  குற்றம், பல சட்டங்களில் காணப்படுகிறது. இவற்றில் 'தடை ஏற்படுத்துதல்' என்பதற்குத் தெளிவான வரையறை இல்லை. மேலும், தண்டனைகளும் வேறுபடுகின்றன. 20 சட்டங்களில் இது போன்ற குற்றங்கள் குற்றமற்றவையாக ஆக்கப்பட்டுள்ளன அல்லது நீக்கப்பட்டுள்ளன. உதாரணமாக, 1972-ஆம் ஆண்டின் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையச் (Marine Products Export Development Authority Act) சட்டத்தின்கீழ், தடை ஏற்படுத்தும் குற்றம் நீக்கப்பட்டுள்ளது.


மதிப்பெண் சார்ந்த தண்டனைகள்


சட்டம் பெரும்பாலும் குற்றமாக்கலையே இயல்பாகக் கொண்டிருந்தாலும், இந்த மசோதா அமலாக்கத்திற்கு மிகவும் கட்டமைக்கப்பட்ட மற்றும் படிநிலையான அணுகுமுறையை அறிமுகப்படுத்துகிறது. பல சட்டங்களில், சிறிய அல்லது முதல் முறை மீறல்களுக்கு எச்சரிக்கைகள் மற்றும் மேம்பாட்டு அறிவிப்புகளை இது வழங்குகிறது. இதன் மூலம், கடுமையான விளைவுகள் விதிக்கப்படுவதற்கு முன்பு, தனிநபர்களுக்கும் வணிகம்  செய்யும் நபர்களுக்கும் தங்கள் தவறுகளைச் சரிசெய்ய ஒரு வாய்ப்பு அளிக்கப்படுகிறது.


உதாரணமாக, 1954-ஆம் ஆண்டின் புத்தகங்கள் மற்றும் செய்தித்தாள்கள் (பொது நூலகங்கள்) விநியோகச் சட்டத்தின் கீழ், மீறல்களுக்கு முன்னர் குற்றவியல் அபராதம் விதிக்கப்பட்டது. இதற்குப் பதிலாக, முதல் மீறலுக்குத் திருத்தம் செய்வதற்கான வாய்ப்புடன் கூடிய அறிவிப்பு, மீண்டும் மீண்டும் மீறினால் பதிவை இடைநீக்கம் செய்தல் மற்றும் தொடர்ச்சியாக  குற்றங்களை செய்தால் நிரந்தரமாக ரத்து செய்தல் போன்ற நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளன.


மிகவும் கடுமையான மீறல்கள், குறிப்பாக பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துவபவர்களுக்கு குற்றவியல் தண்டனைகள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால், இந்தச் சந்தர்ப்பங்களில், விகிதாசாரத்தை உறுதி செய்வதற்காக, இந்த மசோதா தண்டனைகளை BNS சட்டத்திற்கு ஏற்றவாறு சீரமைக்க முயற்சிக்கிறது.


இது, அரசின் அமலாக்கக் கட்டமைப்புக் குறித்த ஒரு பரந்த சிந்தனையைப்   காட்டுகிறது. கடுமையான பாதிப்புகளுக்கு மட்டுமே குற்றவியல் சட்டத்தைப் பயன்படுத்துவது அதேவேளையில், தேவையற்ற மீறல்களுக்குக் குற்றவியல் முழுமையான குற்றவியல் நீதித்துறை அமைப்பை பயன்படுத்துவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்பதை உணர்ந்து, அது தவிர்க்கப்படுகிறது.




இந்த சீர்திருத்தங்கள் ஏன் தேவைப்பட்டன?


2024-ஆம் ஆண்டு டிசம்பர் மாத நிலவரப்படி, 7,305 குற்றவியல் குற்றங்களைக் கையாளும் 370 ஒன்றிய அரசு சட்டங்கள்  செயல் முறையில் இருந்தன. இது போன்ற குற்றங்களுக்கு 5333 சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது. இந்தச் சட்டங்களில் 74%-க்கும் மேற்பட்டவை, அடிப்படைக் குற்றவியல் நீதிச் சட்டங்கள் அல்ல மாறாக, அவை வரிவிதிப்பு, நகராட்சி நிர்வாகம், நிறுவன நிர்வாகம் போன்ற பிற துறைசார்ந்த விவகாரங்களை ஒழுங்குபடுத்தும் சட்டங்களாகவே இருந்தன.

 இந்த மசோதா குற்றவியல் சட்ட அமைப்பை (criminal law landscape) நியமானதாகவும் சீரானதாகவும் மாற்றும் ஒரு முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இது இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பு எதிர்கொள்ளும் அனைத்துப் பிரச்சினைகளையும் தீர்க்காவிட்டாலும், இது ஒரு முக்கிய முன்னேற்றமாகும்.


ஆசிரியர்கள், விதி சட்டக் கொள்கை மையத்தின் குற்றம் மற்றும் தண்டனைப் பிரிவில் பணிபுரிகின்றனர். மேலும், வர்த்தக அமைச்சகத்தின்கீழ் உள்ள தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டுத் துறைக்கு (Department for Promotion of Industry and Internal Trade (DPIIT)) ஜன் விஸ்வாஸ் பயிற்சியில் உதவிய குழுவிலும் இவர்கள் முக்கியப் பங்கு வகித்தனர்.

 

Original article: Jan Vishwas Bill 2026: Scale, scope and impact of India’s major decriminalisation exercise. -Ayushi Sharma, Naveed Mehmood Ahmad

Share: