பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission (UGC)) வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படுவதை உறுதிசெய்ய, அவற்றைக் கண்காணித்தல், முறையான தணிக்கைகள் செய்தல் மற்றும் ஆக்கபூர்வமான மேற்பார்வை ஆகியவற்றின் மூலம் வலுப்படுத்த வேண்டும்.
உச்சநீதிமன்றச் செய்திகளை வழங்கும் ‘Supreme Court Observer’ அறிக்கையின்படி, ஒரு முக்கியமான காலகட்டத்தில், உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவத்தை மேம்படுத்துவதற்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) 2026-ஆம் ஆண்டு விதிகளுக்கு உச்சநீதிமன்றம் தற்காலிகத் தடை விதித்துள்ளது. உயர்கல்வி நிறுவனங்களில் நிலவும் சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் மாணவர் தற்கொலைகள் குறித்த 'ஆபிதா சலீம் தத்வி vs இந்திய ஒன்றியம்' (Abeda Salim Tadvi v Union of India) என்ற வழக்கின் தொடர்ச்சியாகவே இந்த விதிகள் உருவாக்கப்பட்டன. கல்வி நிறுவனங்களுக்குள் அனைவருக்கும் சமமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கற்றல் சூழலை உறுதிசெய்வதில் ஏற்பட்டுள்ள தோல்விகளை இந்த வழக்கு வெளிப்படுத்துகிறது.
உயர்கல்வியில் நிலவும் சாதிப்பாகுபாடு குறித்து விவாதிக்கும்போது, அந்தப் பிரச்சினையைத் தெளிவாக வரையறுப்பது அவசியமாகும். 2026-ஆம் ஆண்டு விதிகளின் (2026 Regulations) பிரிவு 3(c)-ன்படி, "சாதி அடிப்படையிலான பாகுபாடு" என்பது பட்டியல் சாதியினர் (Scheduled Castes (SC)), பட்டியல் பழங்குடியினர் (Scheduled Tribes (ST)) மற்றும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (Other Backward Classes (OBC)) எதிராகச் சாதி அல்லது பழங்குடி அடையாளத்தின் அடிப்படையில் காட்டப்படும் பாகுபாட்டைக் குறிக்கிறது. இந்த வரையறையானது மற்றவர்களைப் புறக்கணிப்பதற்காக உருவாக்கப்பட்டதல்ல என்றும் மாறாக, சாதி என்பது ஏதோ அங்கொன்று இங்கொன்றுமாக நடக்கும் தனிப்பட்ட நிகழ்வு அல்ல, அது ஒரு தொடர்ச்சியான ஒடுக்குமுறை முறைமை என்பதை அங்கீகரிப்பதற்காகவே இவ்வாறு வரையறுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
நடுநிலைமை ஏன் தோல்வியடைகிறது
இந்த வரையறையானது "பொதுப் பிரிவைச்" (General Category) சேர்ந்த மாணவர்களைப் புறக்கணிப்பதாக விமர்சிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று உத்தரவாதம் அளிக்கும் அரசியலமைப்புச் சட்டத்தின் 14-வது பிரிவின் (Article 14) அடிப்படையில், சாதி வேறுபாடற்ற ஒரு அணுகுமுறையைக் கையாண்டு அவர்களையும் இதில் சேர்க்க வேண்டும் என்று சிலர் பரிந்துரைக்கின்றனர். இருப்பினும், சாதியரீதியான பாகுபாடு நடைமுறையில் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும், அரசியலமைப்பின்கீழ் 'சமத்துவம்' என்பது எவ்வாறு விளக்கப்படுகிறது என்பதையும் இந்த வாதம் தவறாகப் புரிந்துகொள்கிறது.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் என்பது எல்லாச் சூழலுக்கும் பொருந்தக்கூடிய ஒரே மாதிரியான பொதுவான நடுநிலைமையை வலியுறுத்தவில்லை. அரசியலமைப்பின் பிரிவு-15 (Article 15) பாகுபாட்டைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல், சமூகரீதியாகவும் கல்விரீதியாகவும் பின்தங்கிய வகுப்பினர், பட்டியல் சாதிகள் (SCs) மற்றும் பட்டியல் பழங்குடியினர் (STs) ஆகியோருக்கு உண்மையான சமத்துவத்தை உறுதி செய்வதற்காக அரசு சிறப்புச் சலுகைகளை வழங்கவும் வழிவகை செய்கிறது. இந்த வகையில் பார்க்கும்போது, சமத்துவம் என்பது வெறும் பெயரளவில் இல்லாமல், அதன் சாராம்சத்தில் உண்மையான பயன் தரும் வகையில் இருக்க வேண்டும் என்பதே இதன் நோக்கமாகக் கூறப்படுகிறது.
சட்டப்படியான சமத்துவம் என்பது பாகுபாடு எல்லா தரப்பினரையும் ஒரே மாதிரியாகத்தான் பாதிக்கிறது என்றும், அனைவருக்கும் ஒரே மாதிரியான பாதுகாப்பு தேவை என்றும் கருதுகிறது. ஆனால், சாதிப் பாகுபாடு என்பது ஒரு கட்டமைக்கப்பட்ட முறை ஆகும். இது கௌரவம், வளங்கள் மற்றும் அதிகாரம் ஆகியவற்றைப் பெறுவதில் படிநிலைகளை அடிப்படையாகக் கொண்டதாகும். சாதி குறித்து வரையறுக்கும்போது சாதி-சார்பற்ற (Caste-neutral) அணுகுமுறையைக் கையாண்டு, அதில் "பொதுப் பிரிவினரையும்" உள்ளடக்குவது, ஆழமான இந்தச் சமத்துவமின்மையை ஒரு பொதுவான புகாராக மாற்றிவிடும் அபாயம் உள்ளது. இது ஒரு சமூக அமைப்பால் நடத்தப்படும் ஒடுக்குமுறையையும், தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளையும் ஒன்றாகக் கருதுவதற்குச் சமமாகும். இத்தகைய நடுநிலைத்தன்மை பாதுகாப்பை வலுப்படுத்தாது என்றும் மாறாக, சாதியை ஒரு அதிகார அமைப்பாகக் கருதி அதை எதிர்கொள்ளும் சட்டத்தின் திறனை பலவீனப்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர்.
பல ஆண்டுகளாக, பட்டியல் சாதிகள் (SC) மற்றும் பழங்குடியின (ST) மாணவர்கள் சமூகப் புறக்கணிப்பு, சமமற்ற நடத்தை, அவமதிப்பு மற்றும் கல்வி நிறுவனங்களின் பாரபட்சமான அணுகுமுறைகளை எதிர்கொண்டு வருகின்றனர். சில நேரங்களில், இத்தகைய முறையான பாகுபாடுகள் கடுமையான மன உளைச்சலை ஏற்படுத்தி, மாணவர்களின் தற்கொலைகளுக்குக்கூட வழிவகுத்துள்ளன. தற்போது நடைமுறையில் உள்ள 'சமத்துவ விதிகள்' உருவாக்கப்படக் காரணமாக இருந்த வழக்கின் மூலம் வெளிவந்துள்ள இந்த உண்மைகள், இப்பிரச்சினைகள் ஏதோ தற்செயலாக நடப்பவை அல்ல என்றும் மாறாக இவை சமூகத்தில் ஆழமாக வேரூன்றியுள்ள சிக்கல்கள் என்பதையும் தெளிவுபடுத்துகின்றன.
சாதி-சார்பற்ற வரையறை என்பது அனைவரையும் சமமாக நடத்துவதன் மூலம், சமூகத்தில் நிலவும் உண்மையான ஏற்றத்தாழ்வுகளைப் புறக்கணிக்கிறது. இதை இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஆதரிக்கவில்லை. பிரிவு-14 மற்றும் 15 (Articles 14 and 15) ஆகியவை வரலாற்றுரீதியான மற்றும் சமூகரீதியான பாதிப்புகளைச் சரிசெய்ய, மக்களுக்கு இடையே வித்தியாசமான சலுகைகளை வழங்க அனுமதிக்கின்றன. சாதி அடிப்படையிலான ஒடுக்குமுறையை அனைத்துத் தரப்பினருக்கும் சமமானது என்று கருதுவது, சாதி அமைப்பிற்குள் இருக்கும் படிநிலைகளை மறைப்பதோடு, கவனத்தைச் சமூகக் கட்டமைப்பில் உள்ள சிக்கல்களிலிருந்து தனிப்பட்ட புகார்களுக்கு வழிவகுக்கிறது. எனவே, வரலாற்றுரீதியாகப் பின்தங்கிய மற்றும் ஒடுக்கப்பட்ட குழுக்களின் அடிப்படையில் சாதிப் பாகுபாட்டை வரையறுப்பது தன்னிச்சையானது அல்ல என்கின்றனர். இது, அதிகாரம் என்பது சிலருக்குப் பயன் அளிப்பதாகவும் சிலருக்குத் தீங்கிழைப்பதாகவும் இருப்பதை அங்கீகரிக்கிறது. இது "தலைகீழ் பாகுபாடு" (Reverse discrimination) அல்ல, மாறாக உண்மையான சமத்துவத்திற்கு நடைமுறைரீதியான நீதி தேவை என்பதைப் புரிந்துகொள்வதாகும். சாதி-சார்பற்ற அணுகுமுறை இந்த உண்மைநிலையை மறைத்து, உயர்கல்வியில் நிலவும் சாதி அடிப்படையிலான விலக்கலை கையாள்வதற்கான சட்டத்தின் வலிமையைக் குறைத்துவிடும் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
சட்டத்தை அமல்படுத்துவதே மிக முக்கியம்
உயர்கல்வியில் சாதி அடிப்படையிலான பாகுபாட்டைத் தெளிவாக வரையறுப்பது உள்ளிட்ட சமத்துவ விதிமுறைகள், மற்றவர்களுக்குப் பாதுகாப்பை மறுப்பதற்காக உருவாக்கப்பட்டவை அல்ல, மாறாக, வரலாற்றுரீதியாகப் புறக்கணிக்கப்பட்டவர்களுக்கு அடிப்படை கண்ணியத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சியையும் உறுதி செய்வதையே இவை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த அணுகுமுறை இந்திய அரசியலமைப்பின் பிரிவு-14 (சட்டத்தின் முன் அனைவரும் சமம்) மற்றும் பிரிவு-15 (பாகுபாட்டைத் தடுத்தல்) ஆகியவற்றுடன் ஒத்துப்போகிறது. அதாவது, பின்தங்கிய நிலையில் இருப்பவர்களின் பாதிப்பைக் குறைத்து, உண்மையான சமத்துவத்தை அடைய அவர்களுக்குச் சிறப்பு சலுகைகள் அல்லது மாறுபட்ட அணுகுமுறைகளை வழங்க இந்தச் சட்டப்பிரிவுகள் அனுமதிக்கின்றன. சாதியக் கட்டமைப்பு கொண்ட ஒரு சமூகத்தில், சூழலைப் புறக்கணிக்கும் நடுநிலையான அணுகுமுறையை மட்டும் பின்பற்றுவதன் மூலம் அரசியலமைப்புச் சட்டம் கூறும் சமத்துவத்தை அடைந்துவிட முடியாது என்பதைத் தெளிவுபடுத்துகின்றனர்.
மிக முக்கியமாக, இந்த விதிகளும் சட்டங்களும் நடைமுறையில் எவ்வளவு சிறப்பாகச் செயல்படுகின்றன என்பதே முக்கியமான விஷயமாகும். சாதி அடிப்படையிலான பாகுபாடுகளைக் களைவதில் ஏற்பட்டுள்ள தோல்விக்கு, சட்டங்களைச் செயல்படுத்துவதில் உள்ள பலவீனம் மற்றும் அமைப்புகளின் பொறுப்புக்கூறல் இல்லாமையே முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன.
பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) விதிமுறைகளின் நோக்கத்தைக் குறைப்பதற்குப் பதிலாக, புகார்களை விசாரிக்கத் தனிச்சயான அமைப்புகள், காலக்கெடுவுடன் கூடிய விசாரணைகள், வெளிப்படையான முடிவுகள் மற்றும் விதிகளைப் பின்பற்றாத கல்வி நிறுவனங்களுக்கு அபராதங்கள் ஆகியவற்றை உறுதி செய்வதன் மூலம் அவற்றை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும். இந்த வழிகாட்டுதல்கள் முறையான கண்காணிப்பு, வழக்கமான தணிக்கைகள் மற்றும் பயனுள்ள மேற்பார்வை ஆகியவற்றால் ஆதரிக்கப்பட வேண்டும். நடைமுறையில் நடக்கும் சாதிரீதியான பாகுபாடுகளைக் கையாள்வதில் கல்வி நிறுவனங்கள் பொறுப்பேற்காதவரை, சாதி சார்ந்த பாதிப்புகளைத் தடுப்பதற்கான ஒரு அமைப்பு முழுமையாகச் செயல்பட முடியாது என்கின்றனர்.
சட்டங்களைச் செயல்படுத்துவதைப் பற்றிப் பேசுவதை விட்டுவிட்டு, 'நடுநிலைமை' போன்ற கற்பனையான கருத்துகளைப் பற்றி விவாதிப்பது உண்மையான பிரச்சினையைத் திசைதிருப்பிவிடும் வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். தினசரி சாதி ரீதியிலான புறக்கணிப்புகளைச் எதிர்கொள்ளும் மாணவர்களுக்கு, தத்துவரீதியான விளக்கங்கள் முக்கியமல்ல மாறாக அவர்களுக்கு சாதி அடிப்படையிலான புறக்கணிப்புகள் ஏற்படும்போது இந்த அமைப்பு தகுந்த நடவடிக்கை எடுக்குமா என்பதே அவர்களின் உண்மையான எதிர்பார்ப்பாக உள்ளது. எனவே, உயர்கல்வியில் சமத்துவம் மற்றும் கண்ணியத்தை உறுதி செய்யும் அரசியலமைப்புச் சட்டத்தின் வாக்குறுதியை நிறைவேற்ற, பல்கலைக்கழக மானியக் குழுவின் (UGC) செயல்பாட்டு முறைகளை வலுப்படுத்துவது மிகவும் அவசியமாகிறது.
பிரியா சௌத்ரி, சட்டக் கொள்கை ஆய்வு மையத்தில் ஆராய்ச்சி உதவியாளராகப் பணியாற்றி வருகிறார்.
Original article : Limits of neutrality in addressing caste. -Priya Chaudhary