தகவல் தொழில்நுட்ப விதிகள் (IT rules) இணைய சுதந்திரத்தைக் குறைத்துள்ளன. -அபர் குப்தா

 பொறுப்புணர்வுக்கான தொடர்ச்சியான கோரிக்கைகள் புறக்கணிக்கப்படுவதும், தகவல் தொழில்நுட்ப விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்கள் டீப்ஃபேக்குகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தவறான தகவல்களுக்கு எதிரான நடவடிக்கைகளாகக் கட்டமைக்கப்படுவதும் துரதிர்ஷ்டவசமானது.


26 வயதான நகைச்சுவைக் கலைஞரான (stand-up comic) புல்கித் மணி, பாதுகாப்பையும் நம்பிக்கையையும் வழங்கத் தவறி வன்முறைச் சுழல்களில் சிக்கியுள்ள உலகில், நகைச்சுவையைப் பயன்படுத்திச் சமாளிக்கும் பல இளம் இந்தியர்களில் இவரும் ஒருவர். கடந்த மாதம், அவரது குறுகிய காணொளி சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியது. இந்தத் தளங்களைப் பயன்படுத்திய எவரும் அதை எளிதில் தவறவிட முடியாது. மார்ச் 18 அன்று, தகவல் தொழில்நுட்பச் சட்டத்தின் பிரிவு 79(3)(b)-இன் கீழ் இந்தக் காணொளி இன்ஸ்டாகிராமில் முடக்கப்பட்டது. இதற்காக, புல்கித் மணி அந்த சமூக ஊடகத் தளத்திலிருந்து ஒரு சுருக்கமான அறிவிப்பை மட்டுமே பெற்றுள்ளார். அவருடைய காணொளி ஏன் சட்டவிரோதமானது என்று மத்திய அரசு அவரிடம் கூறவில்லை. மேலும், விசாரணைக்கான வாய்ப்போ அல்லது காரணத்துடன் கூடிய உத்தரவோ அவருக்கு வழங்கப்படவில்லை. இணையத்தில் அரசாங்கத்தால் இயக்கப்படும் தணிக்கையின் அபாயகரமான அதிகரிப்பிற்கு அவருடைய அனுபவம் ஒரு பொதுவான உதாரணமாகும்.


இந்த அதிகாரம் தகவல் தொழில்நுட்ப விதிகள், 2021-இலிருந்து, இந்த விதிகள் பிப்ரவரி 25, 2021 அன்று ஒரு நிர்வாக ஆணை மூலம் அறிமுகப்படுத்தப்பட்டன. பின்னர், அவை அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் மூலம் பலமுறை விரிவுபடுத்தப்பட்டன. ஒவ்வொரு திருத்தமும் நிர்வாகத்தின் அதிகாரத்தை விரிவுபடுத்தி, பயனர்களின் உரிமைகளைப் பலவீனப்படுத்தியுள்ளது. இந்த விதிகளின் பல பிரிவுகள் வெவ்வேறு உயர்நீதிமன்றங்களில் சவால் செய்யப்பட்டுள்ளன. அவை, அமலாக்கத்தைத் தடுக்கும் இடைக்கால உத்தரவுகளைப் பிறப்பித்து, சிலவற்றை அரசியலமைப்புக்கு முரணானது எனக் கூறி ரத்து செய்தும், சிலவற்றை நிலைநிறுத்தியும் உள்ளன. இருப்பினும், இந்த வழக்குகள் அனைத்தும் இறுதி சட்டத் தீர்ப்புக்காகக் காத்திருக்கின்றன. ஒரு வெற்றிகரமான அரசியலமைப்புரீதியான சவாலை முன்வைப்பதற்கு, மிக உயர்ந்த சட்டத் தரநிலையை எட்டியிருக்க வேண்டியது அவசியமாகும். இத்தகைய உயர்ந்த வரம்பு இருப்பதாலும், இத்தொடர்பான வழக்குகள் இன்னும் நிலுவையில் இருப்பதாலும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தால் (MeitY) தனது தணிக்கை மற்றும் கண்காணிப்பு அதிகாரங்களைத் தொடர்ந்து விரிவுபடுத்த முடிந்துள்ளது.


தகவல் தொழில்நுட்ப விதிகள்-2021, முன்னதாக பிப்ரவரி 10 அன்று விரிவுபடுத்தப்பட்டு, இணைய உள்ளடக்கங்களை நீக்குவதற்கான காலக்கெடு மூன்று மணிநேரமாகக் குறைக்கப்பட்டது. இந்தத் திருத்தங்களில் கேலிச்சித்திரம் அல்லது நையாண்டிக்கு எந்த விலக்கும் அளிக்கப்படவில்லை. மேலும், பல வழிகளில் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட உள்ளடக்கங்களுக்கான உண்மை சரிபார்ப்பு அதிகாரத்தை மீண்டும் கொண்டுவந்தன. அதற்குமுன்பு, அக்டோபர் 10, 2025 அன்று, இந்தச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தங்கள் சஹ்யோக் தணிக்கை தரவுத்தளத்திற்கு (Sahyog censorship portal) ஆதரவளித்தன. அதில் இப்போது 35-க்கும் மேற்பட்ட மாநிலக் காவல் அதிகாரிகளும், 8 மத்திய முகமைகளும் உள்ளடக்கங்களை நீக்க உத்தரவிட முடியும். கூடுதலாக, பிரிவு 69A-ன்கீழ் இணையதளங்களைத் தடுக்க மத்திய அரசுக்கு அதிகாரம் உள்ளது. இந்தப் பிரிவு ஓரளவிற்கு நடைமுறையான நியாயத்தை வழங்குகிறது. இருப்பினும், இந்த நடைமுறைகள் தொடர்ந்து பின்பற்றப்படவில்லை. தணிக்கைக்கான அதிகாரங்கள் ஒன்றுடன் ஒன்று மேலெழும் சட்ட அதிகாரங்களை ஒரேநேரத்தில் பயன்படுத்தப்படுகின்றன. ஒரு பயனர், தான் ஏன் அல்லது யாரால் தணிக்கை செய்யப்பட்டார் என்பதை அறிய முடிவதில்லை. கடந்த மூன்று வாரங்களாக சமூக ஊடகங்களில் கணக்குக் கட்டுப்பாடுகள் மற்றும் உள்ளடக்க நீக்கங்கள் குறித்த அறிவிப்புகளில் இதற்கான சான்றுகள் ஏராளமாகக் காணப்படுகின்றன.


நிலைமை இன்னும் மோசமாகப் போகிறது. மார்ச் 30 அன்று, நடப்பு நிகழ்வுகள் மற்றும் அரசியல் குறித்து கருத்து தெரிவிக்கும் எந்தவொரு சமூக ஊடகப் பயனருக்கும் டிஜிட்டல் செய்தி ஊடகத் தளங்களின் மீதான தணிக்கை அதிகாரங்களை விரிவுபடுத்துவது உள்ளிட்ட சில திருத்தங்களை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MeitY) முன்மொழிந்தது. இந்த நடவடிக்கை ஆபத்தானது மட்டுமல்ல, பரவலான பொதுமக்களின் சீற்றம் காரணமாக அந்த மசோதா முன்னரே முடங்கிப்போன, 2024-ம் ஆண்டின் ஒளிபரப்பு மசோதாவின் (Broadcasting Bill) கீழ் முன்மொழியப்பட்ட விதிமுறைகளைக் கொண்டு வருவதற்கான ஒரு மறைமுக நடவடிக்கையாகவும் இது உள்ளது. கூடுதலாக, ஆலோசனைகள் மற்றும் நிலையான செயல்பாட்டு நடைமுறைகள் (Standard Operating Procedures (SOP)) போன்ற, மூலச் சட்டத்தின்கீழ் வராத முறைசாரா ஆவணங்களை வெளியிடத் தேவையின்றி சட்டப்பூர்வமாக்க மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் விரும்புகிறது. மற்றொரு மாற்றம் என்னவென்றால், நமது இணைய மின்னஞ்சல் வழங்குநர்கள் அல்லது இணைய சேவை வழங்குநர்கள் (Internet Service Providers (ISP)) உட்பட இடைத்தரகர்களுக்கான கட்டாயத் தரவு தக்கவைப்பு காலக்கெடு இனி மூன்று மாதங்களுக்கு வரம்பிடப்பட்டுள்ளது. ஒரு பிரபலமான வரியைக் கடன் வாங்கிச் சொல்வதானால், எந்தவொரு தனி அரசாங்கத்திடமும் இவ்வளவு அதிகாரம் இருக்கக்கூடாது.


மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், பொறுப்புணர்வுக்கான கோரிக்கைகளை தொடர்ந்து தவிர்த்து வருவது, தகவல் தொழில்நுட்ப விதிகளில் செய்யப்பட்ட மாற்றங்களை டீப்ஃபேக்குகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்ட தவறான தகவல்களுக்கு எதிரான ஒரு நடவடிக்கையாகக் காட்டியிருப்பது துரதிர்ஷ்டவசமானது. பிப்ரவரியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவு தாக்க மாநாட்டில், அவர் இந்தியாவின் அணுகுமுறையை ஒரு “உலகளாவிய அளவுகோல்” (global benchmark) என்று குறிப்பிட்டார். இந்தத் துறையில் இந்தியா உண்மையாகவே ஒரு உலகளாவிய தரமாகக் கருதப்படுவதற்கு இன்னும் வெகுதூரம் பயணிக்க வேண்டியுள்ளது.


கட்டுரையாளர் ஒரு வழக்கறிஞர் மற்றும் nternet Freedom Foundation அமைப்பின் நிறுவன இயக்குநர் ஆவார்.


Original article: IT rules have made the internet less free. -Apar Gupta

Share: