100 ஜிகாவாட் (GW) மின்சக்தி இலக்கை அடைய வேண்டுமானால், SHANTI சட்டத்தை (SHANTI Act) நடைமுறைப்படுத்துவது அவசியம். மேலும், மின்சாரக் கட்டணம், எரிபொருள் உரிமை, கழிவு மேலாண்மை, காப்பீடு, சிக்கல்களுக்கான தீர்வு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றில் தெளிவான தீர்வுகளைக் கண்டறிய வேண்டும்.
2025–26-ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில், ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், இந்தியாவின் அணுசக்தி உற்பத்தித் திறன் தற்போதுள்ள 8,180 மெகாவாட்டிலிருந்து (MW), 2047-ஆம் ஆண்டிற்குள் 1,00,000 மெகாவாட்டாக (அதாவது 100 ஜிகாவாட்) உயர்த்தப்படும் என்று அறிவித்தார். அணுசக்தித் துறையில் முக்கியச் சட்டச்சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் குறிப்பிட்டிருந்தார். அதன் தொடர்ச்சியாக, டிசம்பர் மாதம் 2025-ஆம் ஆண்டில் சாந்தி மசோதா (Strategic Harnessing and Nuclear Technology Initiative (SHANTI Bill)) அறிமுகப்படுத்தப்பட்டு, நாடாளுமன்றத்தில் விரைவாக நிறைவேற்றப்பட்டது.
தற்போது முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள் மிகவும் முக்கியமானவையாகும். இதுவரை, இந்தியாவின் அனைத்து அணுசக்தி நடவடிக்கைகளும் அணுசக்தித் துறையின் (Department of Atomic Energy (DAE)) நேரடி கட்டுப்பாட்டில் மட்டுமே இருந்து வந்தன. ஆனால், புதிய சாந்திச் சட்டம் (SHANTI Act) இந்தியாவின் அணுசக்தித் துறையில் பெரிய மாற்றத்தைக் கொண்டுவர இலக்கு நிர்ணயித்துள்ளது. இச்சட்டம் தனியார் நிறுவனங்கள் அணுமின் நிலையங்களைக் கட்டவும், அவற்றைத் தங்கள் வசம் வைத்து இயக்கவும் அனுமதி அளிக்கிறது. மேலும், அணுசக்தி ஒழுங்குமுறை வாரியத்திற்கு (Atomic Energy Regulatory Board (AERB)) சட்டப்பூர்வ அங்கீகாரத்தை வழங்குவதுடன், தனியார் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கும் வகையில் இழப்பீட்டு விதிகளையும் மாற்றியமைக்கிறது. இச்சட்டம், 1962-ஆம் ஆண்டின் அணுசக்திச் சட்டம் (Atomic Energy Act of 1962) மற்றும் 2010-ஆம் ஆண்டின் அணுசக்தி சேதத்திற்கான குடிமைப் பொறுப்புச் சட்டம் (Civil Liability for Nuclear Damage Act of 2010) ஆகிய இரண்டிற்கும் மாற்றாக அமையும் என்கின்றனர்.
இருந்தபோதிலும், 100 கிகாவாட் (GW) இலக்கை அடைய வேண்டுமானால், முறையான திட்ட அமலாக்க அமைப்புகளை (implementation systems) உருவாக்குவது அவசியமாகும். அத்துடன், சாந்தி சட்டம் (SHANTI Act) என்ற சட்டத்தின் மாற்றத்தக்க நோக்கங்களுக்கு ஏற்ப, ஆதரவான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை அறிவிக்க வேண்டும் என்றும் தெரிவிக்கின்றனர்.
சீர்திருத்தங்களை முன்னெடுத்துச் செல்லுதல்
2047-ஆம் ஆண்டிற்குள் வளர்ச்சியடைந்த இந்தியா (Viksit Bharat) என்ற நிலையை அடைவது மற்றும் 2070-ஆம் ஆண்டிற்குள் நிகரபூஜ்ஜிய உமிழ்வு (Net-Zero Emissions) இலக்கை எட்டுவது போன்ற இரண்டு முக்கிய இலக்குகளை இந்த சீர்திருத்தமானது அடிப்படையாகக் கொண்டுள்ளது. ஒரு நாடு வளர்ச்சியடையும்போது, அதன் எரிசக்தி பயன்பாடானது விறகு, போக்குவரத்து மற்றும் பெட்ரோலிய எரிபொருட்கள் மற்றும் தொழில்துறைக்கான நிலக்கரி போன்ற பாரம்பரிய ஆதாரங்களிலிருந்து மின்சாரத்திற்கு மாறுகிறது. எனவே, நிகர பூஜ்ஜிய இலக்கை அடைய வேண்டுமானால், பெட்ரோலிய எரிபொருட்களை அடிப்படையாகக் கொண்ட மின்உற்பத்தியில் இருந்து விலகி, புதுப்பிக்கத்தக்க மற்றும் குறைந்த கார்பன் வெளியேற்றும் வழிமுறைகளுக்கு மாறவேண்டியது அவசியமாகிறது. 2024-ஆம் ஆண்டில், இந்தியாவின் தனிநபர் மின்உற்பத்தி 1,418 (kWh)-ஆக இருந்தது. இது சீனாவில் 7,097 kWh, அமெரிக்காவில் 12,701 kWh, மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பின் (Organisation for Economic Co-operation and Development (OECD)) சராசரியான 8,000 kWh உடன் ஒப்பிடும்போது மிகவும் குறைவாகும். 'வளர்ச்சியடைந்த இந்தியா' என்கிற இலக்கை அடைய இந்தியா இன்னும் எவ்வளவு தூரம் பயணிக்க வேண்டும் என்பதை இந்த விளக்கம் காட்டுகிறது. மேலும், 2024-ஆம் ஆண்டில் இந்தியாவின் தனிநபர் மொத்த எரிசக்தி நுகர்வு 7,893 kWh-ஆக இருந்தது. மேலும், இந்தியாவின் மொத்த எரிசக்தி பயன்பாட்டில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே மின்சாரத்திலிருந்து கிடைக்கிறது என்பதைத் தரவுகள் தெரிவிக்கின்றன.
ஜூன் மாதம் 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, இந்தியாவின் மின்உற்பத்தித் திறன் 476 கிகாவாட் (GW) அளவை எட்டியுள்ளது. இதில் சுமார் 50% நிலக்கரி அல்லாத மூலங்களிலிருந்து கிடைக்கிறது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன் 227 கிகாவாட் ஆகும். இதில் சூரிய மின்சக்தி 111 கிகாவாட், காற்றாலை மின்சக்தி 51 கிகாவாட், நீர்மின்சக்தி (Hydropower) 48 கிகாவாட், சிறிய நீர்மின் திட்டங்கள் (Micro-hydel) 5 கிகாவாட் மற்றும் உயிரி எரிசக்தி (Bioenergy) 12 கிகாவாட் பங்களிக்கின்றன. குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட அணுசக்தி 8.8 கிகாவாட் வழங்குகிறது. நிலக்கரி சார்ந்த அனல் மின் உற்பத்தி (Thermal power) 240 கிகாவாட் அளவாக உள்ளது. 2030-ஆம் ஆண்டிற்குள் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனை 500 ஜிகாவாட்டாக உயர்த்த இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இருப்பினும், வெறும் உற்பத்தி திறனை மட்டும் வைத்து முழு நிலவரத்தையும் கணிக்கமுடியாது. ஏனெனில், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி என்பது நேரம், வானிலை மற்றும் இருப்பிடத்தைச் சார்ந்தது ஆகும். 2024–25 நிதியாண்டில், இந்தியா மொத்தம் 1,824 (Terawatt-hours (TWh)) மின்சாரத்தை உற்பத்தி செய்தது. இதில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலம் 403 TWh மட்டுமே கிடைத்தது. அனல் மின்சாரம் வெறும் 50% உற்பத்தி திறனைக் கொண்டிருந்தாலும், நாட்டின் 75% மின் தேவையைப் பூர்த்தி செய்துள்ளது. ஆனால், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி 50% உற்பத்தி திறனைக் கொண்டிருந்தும், வெறும் 22% மின்சாரத் தேவையைப் உற்பத்தி செய்துள்ளது. அணுசக்தி 1.8% உற்பத்தித் திறனுடன் 3% மின்சாரத்தை வழங்கியுள்ளது. இதற்குக் காரணம் அனல் மற்றும் அணுமின் நிலையங்கள் நிலையான அடிப்படையிலான மின்சாரத்தை வழங்குகின்றன. புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை அதிகப்படுத்த வேண்டுமானால், எரிசக்தி சேமிப்பு கட்டமைப்புகளில் பெரும் முதலீடுகள் தேவைப்படுகின்றன. இதன் விளைவாக, தற்போது புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி வேகம் குறைந்து வருகிறது. மேலும். மின் கொள்முதல் ஒப்பந்தங்கள் இல்லாததால் சுமார் 40 ஜிகாவாட் மதிப்பிலான திட்டங்கள் முடங்கியுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
இந்தியாவின் அணுசக்திப் பயணம் மற்றும் அதற்கான வாய்ப்புகள்
வளர்ச்சியடைந்த இந்தியா (Viksit Bharat) இலக்குகளை அடைய இந்தியா தனது மின் உற்பத்தித் திறனை 2,000 கிகாவாட் (GW) அளவுக்கும் அதிகமாக உயர்த்த வேண்டியிருக்கும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. மலிவான மற்றும் மேம்பட்ட மின்கல சேமிப்பு (Battery Storage) வசதிகள் இருந்தாலும், சூரியசக்தி மற்றும் காற்றாலை போன்ற புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்களுக்கு, அனல் மின் நிலையங்களைவிட சுமார் 10 மடங்கு கூடுதல் நிலம் தேவைப்படுகிறது. நிலக்கரி பயன்பாடு "நிகர பூஜ்ஜியம்" (Net Zero) என்ற சுற்றுச்சூழல் இலக்குகளுக்குப் பொருந்தாது என்பதால், நம்பகமான மற்றும் சிறந்த மாற்றாக அணுசக்தி பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் முதல் அணு உலை 1969-ஆம் ஆண்டு தாராப்பூரில் (Tarapur) தனது செயல்பாட்டைத் தொடங்கியது. இன்று, இந்திய அணுசக்தி கழகம் (Nuclear Power Corporation of India Limited (NPCIL)) மொத்தம் 8,780 மெகாவாட் (MW) திறன் கொண்ட 24-அணு உலைகளை இயக்கி வருகிறது (ராவத்பாட்டாவில் உள்ள ஓர் அணு உலை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது). இவற்றில் பழமையான இரண்டு உலைகள் கொதிநீர் உலைகள் (Boiling Water Reactors (BWR)) வகையைச் சார்ந்தவை. கூடங்குளத்தில் உள்ள இரண்டு உலைகள் ரஷ்ய வடிவமைப்பான அழுத்தப்பட்ட நீர் உலைகள் (Water-Water Energetic Reactor (VVER)) வகையைச் சார்ந்தவை ஆகும். மற்றவை அனைத்தும் அழுத்தப்பட்ட கனநீர் உலைகள் (Pressurised Heavy Water Reactors (PHWR)) ஆகும். தொடக்கத்தில் 220 மெகாவாட் திறனுடன் இருந்த வடிவமைப்பு, தற்போது வெற்றிகரமாக 540 மெகாவாட் மற்றும் 700 மெகாவாட் திறன் கொண்ட உலைகளாக மேம்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த மூன்று ஆண்டுகளில் அணுசக்தித் துறைக்கான (DAE) நிதி ஒதுக்கீடு சுமார் 24,000 முதல் 26,000 கோடி ரூபாய் வரை உள்ளது. இந்தியாவின் 700 மெகாவாட் (MW) திறன் கொண்ட அழுத்தப்பட்ட கனநீர் உலைகளை (PHWR) உருவாக்க ஒரு மெகாவாட்டிற்கு சுமார் 2 மில்லியன் டாலர்கள் செலவாகிறது. இது உலகளவில் மிகக் குறைந்த செலவிலான அணுசக்தித் தேர்வுகளில் ஒன்றாக அமைகிறது. அடுத்த 20 ஆண்டுகளில் கூடுதலாக 90 ஜிகாவாட் (GW) மின் உற்பத்தியைச் சேர்க்க 200 பில்லியன் டாலர்களுக்கும் (₹18 லட்சம் கோடி) அதிகமான நிதி தேவைப்படும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. இவ்வளவு பெரிய தொகையை உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுத் தனியார் முதலீடுகள் மூலமாக மட்டுமே திரட்ட முடியும் என்றும் கூறப்படுகிறது.
2017-ஆம் ஆண்டில், இந்திய அரசு தலா 700 மெகாவாட் (MW) திறன் கொண்ட 10 அணு உலைகளை 'ஒட்டுமொத்தத் தொகுதி' (fleet mode) அடிப்படையில் கட்ட அனுமதி அளித்தது. இருப்பினும், இவற்றின் கட்டுமானப் பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. இந்த 'fleet mode' என்பது உற்பத்தியை எளிதாக்கவும், பெரிய அளவில் திட்டங்களைச் செயல்படுத்துவதன் மூலம் செலவுகளைக் குறைக்கவும் கொண்டு வரப்பட்டது. இது தவிர, மகாராஷ்டிராவின் ஜெய்தாப்பூர் (Jaitapur), குஜராத்தின் மிதி விர்தி (Mithi Virdi) மற்றும் ஆந்திரப் பிரதேசத்தின் கொவ்வடா (Kovvada) ஆகிய மூன்று இடங்களிலும் அணுமின் நிலையங்கள் அமைக்க கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாகத் திட்டமிடப்பட்டு வருகிறது. ஜெய்தாப்பூரில், பிரெஞ்சு வடிவமைப்பின் அடிப்படையில் ஆறு 1,650 மெகாவாட் உலைகளும், மற்ற இரண்டு இடங்களில் அமெரிக்க-ஜப்பானிய வடிவமைப்புகளைப் பயன்படுத்தி தலா ஆறு 1,000 மெகாவாட் உலைகளும் அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளன. ஆனால், இன்னும் சோதனை செய்யப்படாத இந்த புதிய வடிவமைப்புகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பதற்கான செலவு ஒரு மெகாவாட்டிற்கு 5 மில்லியன் டாலர்களுக்கும் மேலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பல தொழிற்சாலைகள் தங்களுக்குத் தேவையான மின்சாரத்தைத் தயாரிக்க 10 மெகாவாட் (MW) முதல் 200 மெகாவாட் வரையிலான திறன் கொண்ட சொந்த மின் உற்பத்தி நிலையங்களைக் கொண்டுள்ளன. இதில் பெரும்பாலானவை நிலக்கரி போன்ற புதைபடிவ எரிபொருட்களையே பயன்படுத்துகின்றன. இந்தியாவில் இத்தகைய நிலையங்களின் மொத்த நிறுவப்பட்ட திறன் சுமார் 90 கிகாவாட் (GW) ஆகும். இதில் 100 மெகாவாட் மற்றும் அதற்கு மேற்பட்ட திறன் கொண்ட நிலையங்கள் மட்டும் மூன்றில் இரண்டு பங்கு என்கிற அளவில் பங்களிக்கின்றன. இந்நிலையில், 2033-ஆம் ஆண்டிற்குள் 5 மெகாவாட், 55 மெகாவாட் மற்றும் 200 மெகாவாட் திறன் கொண்ட ஐந்து உள்நாட்டு சிறிய மாடுலர் உலைகளை (Small Modular Reactors (SMR)) உருவாக்க அரசு ₹20,000 கோடியை ஒதுக்கியுள்ளது. அதே நேரத்தில், ஏற்கனவே 15 இடங்களில் பயன்பாட்டில் உள்ள இந்தியாவின் சொந்த தொழில்நுட்பமான 220 மெகாவாட் அழுத்தப்பட்ட கனநீர் உலை (PHWR) ஒரு நம்பகமான மாற்றாக அமையும் என்கின்றனர். முறையான திட்ட மேலாண்மை மற்றும் நவீன கட்டுமான முறைகளைப் பயன்படுத்தினால், இவற்றை வெறும் 40 மாதங்களில் கட்டி முடித்துச் செயல்பாட்டிற்குக் கொண்டுவர முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். இரும்பு, சிமெண்ட், பெட்ரோ கெமிக்கல் மற்றும் தரவு மையங்கள் போன்ற துறைகள் இத்தகைய அணுசக்தி திட்டங்களில் அதிக ஆர்வம் காட்டி வருவதாகவும் சுட்டிக்காட்டப்படுகிறது.
மூன்று முனை அணுசக்தி உத்தி
இந்த 100 ஜிகாவாட் (GW) இலக்கை அடைய, மூன்று முக்கியத் துறைகளில் கவனமான திட்டமிடல் அவசியமாகிறது. முதலாவதாக, ‘Electricite de France’ மற்றும் ‘Westinghouse’ நிறுவனங்களின் அணு உலை வடிவமைப்புகள் ஒப்பீட்டளவில் புதியவை என்பதால் செலவுகளைக் குறைக்க அவற்றை உள்நாட்டுப் பயன்பாட்டிற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும். சீனா தனது உள்நாட்டுத் தொழில்துறையை வலுப்படுத்தி, அடுத்த 10 ஆண்டுகளில் தலா 1,000 மெகாவாட் (MW) திறன் கொண்ட 33 அணு உலைகளை, ஒரு மெகாவாட்டிற்கு 2 மில்லியன் டாலருக்கும் குறைவான செலவில் கட்டமைக்கத் திட்டமிட்டுள்ளது. இரண்டாவதாக, இந்திய அணுசக்தி துறை (Department of Atomic Energy (DAE)), உள்நாட்டிலேயே சிறிய மாடுலர் உலைகளை (SMRs), குறிப்பாக உருகிய உப்பு உலை (Molten-Salt Reactor) வடிவமைப்புகளை விரைவுபடுத்த வேண்டும். அதிவேக ஈனுலை (Breeder Reactor) முறைக்கு மாற்றாக, உயர் செறிவூட்டப்பட்ட குறைந்த செறிவு யுரேனியத்துடன் (High Assay Low Enriched Uranium (HALEU)) தோரியம் உறை (Thorium Cladding) பயன்படுத்தும் ஆராய்ச்சியில் கவனம் செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இதன் மூலம், இந்தியாவின் தோரியம் கையிருப்புகளைத் திட்டமிட்ட காலத்திற்கு முன்னதாகவே எரிபொருளாகப் பயன்படுத்த முடியும் என்கின்றனர். மூன்றாவதாக, இந்தியாவில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 220 மெகாவாட் (MW) திறன் கொண்ட அழுத்தப்பட்ட கனநீர் உலை (PHWR) மாதிரியை ஒரு சிறிய தொகுப்பாக (Modular) மாற்றியமைக்கலாம். இதனைத் திறன்மிக்க தனியார் நிறுவனங்களின் ஒத்துழைப்புடன், தொழிற்சாலைகளின் சொந்தப் பயன்பாட்டிற்கான மின் உற்பத்தி நிலையங்களுக்கு ஒரு சிக்கனமான மாற்றாகப் பயன்படுத்த முடியும் என்கின்றனர். அணுசக்தித் திட்டங்களுக்குத் தொடக்கத்தில் அதிக முதலீடு தேவைப்படும் என்றாலும், சுமார் 60 ஆண்டுகள் வரையிலான நீண்ட ஆயுட்காலத்தில் அவற்றைப் பராமரிப்பதற்கான செலவு மிகவும் குறைவாகும். எனவே, இதற்கேற்ற பொருத்தமான நிதி மாதிரியை உருவாக்க வேண்டும். மேலும், ஒரே இடத்தில் பல அணு உலைகள் இருப்பதை அடிப்படையாகக் கொண்டு தற்போது நடைமுறையிலுள்ள 'தடைசெய்யப்பட்ட மண்டல' (Exclusion Zone) விதிமுறைகளை, ஒரு குறிப்பிட்ட தொழிற்சாலையில் மட்டும் அமைக்கப்படும் ஒற்றை அணு உலைகளுக்கு ஏற்ப மாற்றி அமைக்க வேண்டியது அவசியமாகிறது.
சாந்தி (SHANTI) சட்டம் என்பது கொள்கைரீதியாக, உத்திமுறை மற்றும் பாதுகாப்பு தொடர்பான அணுசக்தி செயல்பாடுகளை, பொதுமக்களுக்கான மின்உற்பத்தி செயல்பாடுகளிலிருந்து தெளிவாகப் பிரித்தறிய முயல்கிறது. இனிவரும் விதிகளும் ஒழுங்குமுறைகளும் இந்த வேறுபாட்டை உறுதிப்படுத்துவது அவசியமாகும். மேலும், மின்சாரக் கட்டணம், எரிபொருள் உரிமை, கழிவு மேலாண்மை, காப்பீடு, சிக்கல்களுக்கான தீர்வு மற்றும் ஒழுங்குமுறை அமைப்புகளின் சுதந்திரமான செயல்பாடு ஆகியவற்றில் தெளிவான தீர்வுகளைக் கண்டறிய வேண்டும். அப்போதுதான் சாந்தி (SHANTI) சட்டத்தின் உண்மையான நோக்கத்தை முழுமையாக நிறைவேற்ற முடியும் என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ராகேஷ் சூட், ஒரு முன்னாள் ராஜதந்திரி ஆவார். இவர் தற்போது ‘Council for Strategic and Defence Research’ குழுவில் புகழ்பெற்ற ஆய்வாளராகப் பணியாற்றி வருகிறார்.
Original article: Transforming India’s nuclear power landscape. -Rakesh Sood