மதமாற்ற அரசியல்: மதச்சார்பின்மைக்கு விடுக்கப்படும் சவால். -ஷேக் முஜிபுர் ரஹ்மான்

 மதமாற்றத் தடைச் சட்டங்கள் சமூகப் பிரிவினைகளை ஆழப்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளன.


பல்வேறு சமூக மற்றும் தொழில் பின்னணியைச் சேர்ந்த இஸ்லாமியர்கள்—உதாரணமாக உடற்பயிற்சிக் கூட உரிமையாளர்கள், மருத்துவர்கள் மற்றும் மத குருமார்கள்—இந்து மதத்திலிருந்து இஸ்லாமிய மதத்திற்கு மதமாற்றம் செய்யும் திட்டமிட்டக் குழுக்களின் ஒருபகுதியாக இருப்பதாகக் கூறி கைது செய்யப்படுவது குறித்து ஊடகங்களில் தொடர்ந்து செய்திகள் வருகின்றன. இத்தகைய செய்திகள் பெரும்பாலும் வட இந்தியாவில், குறிப்பாக உத்திரப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களிலிருந்து வருகின்றன. இவற்றில் பல வழக்குகள் இன்னும் விசாரணையில் உள்ளன. ஒருவேளை இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மையாக இருக்கும் பட்சத்தில், இந்தியாவில் உள்ள இஸ்லாமிய சமூகத்தின் ஒரு குறிப்பிட்ட பிரிவினரிடையே ஏற்பட்டுள்ள புதிய வகை சித்தாந்த மாற்றத்தையே இது காட்டுகிறது. மாறாக, இந்தக் குற்றச்சாட்டுகள் பொய்யாகும் பட்சத்தில், இவை ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் அடிப்படையில் செயல்படும் அரசால் உருவாக்கப்பட்ட புனைவுகளாகவே பார்க்கப்படும் என்கின்றனர். 


இந்தியாவில் அதிக அளவில் மக்கள் இஸ்லாம் மதத்திற்கு மாறிய கடைசி முக்கிய நிகழ்வு, பிப்ரவரி 1981-ல் தமிழ்நாட்டின் மீனாட்சிபுரத்தில் நடைபெற்றது. அங்கு வேரூன்றியிருந்த சாதியப் பாகுபாடுகளிலிருந்து விடுபடுவதற்காக 558 தலித் மக்கள் இஸ்லாம் மதத்தைத் தழுவினர். இது குறித்துக் கருத்துத் தெரிவித்த அடல் பிகாரி வாஜ்பாய், இந்து சமூகத்தில் பிறப்பு மற்றும் சாதியின் அடிப்படையில் நீண்டகாலமாகப் பிரச்சினைகள் இருந்து வருவதாகவும், இதுபோன்ற மதமாற்றங்கள் இந்து சமூகத்திற்குள் இருக்கும் சமத்துவமின்மையின் விளைவு என்பதையும் குறிப்பிட்டார்.


சர்ச்சைக்குரிய பிரச்சினை


மத மாற்றம்—குறிப்பாக இந்து மதத்திலிருந்து இஸ்லாம் அல்லது கிறிஸ்தவத்திற்கு மாறுவது—நீண்டகாலமாக ஒரு சர்ச்சைக்குரிய விஷயமாக இருந்து வருகிறது. வெகுஜன மத மாற்றங்களை ஏழை மற்றும் கல்வி அறிவற்ற மக்களுக்கு எதிரான அச்சுறுத்தலாக மட்டும் பார்க்கவில்லை, மாறாக இந்தியாவின் காலனித்துவ எதிர்ப்பு ஒற்றுமைக்கும்  ஒரு பெரும் சவாலாகவே மகாத்மா காந்தி கருதியதாக  ‘Religious Freedom and Mass Conversion in India’ என்ற புத்தகத்தின் ஆசிரியரான லாரா டி. ஜென்கின்ஸ் குறிப்பிட்டுள்ளார். 


நவீன இந்திய வரலாற்றின் மிக முக்கியமான மதமாற்றங்களில் ஒன்று 1956-ஆம் ஆண்டில் டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் புத்த மதத்தைத் தழுவியதாகும். இதற்கு முன்னதாக, அக்டோபர் மாதம் 13-ஆம் தேதி, 1935-ஆம் ஆண்டு நடைபெற்ற இயோலா மாநாட்டில் (Yeola Conference), "நான் ஒரு இந்துவாகப் பிறந்தேன், ஆனால் ஒரு இந்துவாக இறக்கமாட்டேன்" (“I was born a Hindu, but I will not die a Hindu.”) என்று கூறி, இந்து மதத்தை விட்டு வெளியேறும் தனது முடிவை அவர் அறிவித்தார். அம்பேத்கரைப் பொறுத்தவரை, மத மாற்றம் என்பது சுதந்திரத்திற்கான ஒரு வழியாக அமைந்தது. இக்காலக்கட்டத்தில், தலித் மக்கள் இந்து மதத்தைத் துறந்து, இஸ்லாம் உள்ளிட்ட தங்களுக்கு விருப்பமான எந்த ஒரு மதத்தையும் தேர்ந்தெடுக்குமாறு அம்பேத்கர் அவர்கள் ஊக்குவித்தார்.


அம்பேத்கர் அவர்கள் தலித்துகள் சீக்கிய மதத்திற்கு மாறுவது குறித்த யோசனையை முன்வைத்தார். வியக்கத்தக்க வகையில், இந்து மகாசபையைச் சேர்ந்த டாக்டர் பி.எஸ். மூஞ்சே இதற்கு ஆதரவளித்ததுடன், மற்ற இந்துத் தலைவர்களையும் இதனை ஆதரிக்குமாறு வலியுறுத்தினார். இருப்பினும், இந்த யோசனையை மகாத்மா காந்தி, சி. ராஜகோபாலாச்சாரி மற்றும் பண்டிட் மதன் மோகன் மாளவியா ஆகியோர் எதிர்த்தனர். அம்பேத்கர் இந்து மதத்தை விட்டு வெளியேறினால் தனது ஆதரவாளர்களை இழக்க நேரிடும் என்று காந்தி வாதிட்டார். ஆனால், காந்தி இன்று உயிருடன் இருந்திருந்தால், அவரது அந்த கருத்து தவறானது என்பதை உணர்ந்திருப்பார். ஏனெனில், தலித் மக்கள் இன்றும் அம்பேத்கரை மேலாக மதிக்கிறார்கள். அதற்கு அவர் மதம் மாறியதும் ஒரு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. இது காந்தியின் அன்றைய கணிப்பு தவறு என்பதைத் தற்போது திட்டவட்டமாக நிரூபிக்கிறது.


கடந்த பல தசாப்தங்களாக


மதமாற்றம் குறித்த கவலைகளும், அதை ஒழுங்குபடுத்துவதற்கான முயற்சிகளும் பிரிட்டிஷ் காலனித்துவ காலத்திலேயே தொடங்கிவிட்டன. உதாரணமாக, மதமாற்றங்களைக் கண்காணிப்பதை நோக்கமாகக் கொண்டு ராய்கர் அரசு மதமாற்றச் சட்டம் (1936) (Raigarh State Conversion Act (1936)) மற்றும் பாட்னா மத சுதந்திரச் சட்டம் (1942) (Patna Freedom of Religion Act (1942)) ஆகியவை கொண்டு வரப்பட்டன. பின்னர், மத சுதந்திரம் மற்றும் மதமாற்றம் குறித்த விவகாரம் அரசியலமைப்பு நிர்ணய சபையில் விரிவாக விவாதிக்கப்பட்டது. இதன் விளைவாக, இந்திய அரசியலமைப்பின் பிரிவு-25(1) (Article 25(1)) உருவாக்கப்பட்டது. இது ஒவ்வொரு குடிமகனுக்கும் தனது மனசாட்சிப்படி செயல்படவும், எந்தவொரு மதத்தையும் சுதந்திரமாகப் பின்பற்றவும், கடைப்பிடிக்கவும் மற்றும் பரப்பவும் உரிமை அளிக்கிறது. இருப்பினும், இந்த அரசியலமைப்புப் பாதுகாப்பு ஒரு நிலையான அரசியல் அல்லது சமூக உடன்பாட்டை ஏற்படுத்தவில்லை என்பதை உண்மையாகும். 


சுதந்திர இந்தியாவில், இந்து தேசியவாத குழுக்கள் ஒரு முக்கியத் தேர்தல் சக்தியாக மாறுவதற்கு முன்பே, மதச்சார்பற்ற அரசாங்கங்களால் பல மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு திருத்தப்பட்டன. இதற்கு முக்கியமாக கிறிஸ்தவ மதப் பிரச்சார செயல்பாடுகள் குறித்த கவலைகளே காரணமாக இருந்தன. இதற்கு குறிப்பிடத்தக்க உதாரணங்களாக ஒடிசா மத சுதந்திரச் சட்டம் (1967) (Orissa Freedom of Religion Act (1967)) மற்றும் மத்தியப் பிரதேச தர்ம சுதந்திர அதினியம் (1968) (Madhya Pradesh Dharma Swatantrya Adhiniyam (1968)) ஆகியவற்றைக் கூறலாம். இருப்பினும், மதமாற்றங்களைச் சரியாகத் தடுக்க இந்தச் சட்டங்கள் போதுமான வலிமையுடன் இல்லை என்பதையே இந்துத்துவா அமைப்புகள் வாதமாக முன்வைக்கின்றன. 


குறிப்பிட்ட உதாரணங்கள்


இதன் விளைவாக, பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சியில் உள்ள பல மாநிலங்கள் தங்களது தற்போதைய சட்டங்களில் திருத்தங்களைக் கொண்டு வந்துள்ளன. இந்தச் சட்டங்கள், கிறிஸ்தவ மதப் பிரச்சார நடவடிக்கைகள் குறித்த கவலைகளைத் தாண்டி, இஸ்லாம் மதத்திற்கு மாறுவதையும் (குறிப்பாக "லவ் ஜிகாத்" என்று விவரிக்கப்படும் நிகழ்வுகளில்) உள்ளடக்கும் வகையில் விரிவுபடுத்தப்பட்டுள்ளன. 2018-ஆம் ஆண்டின் உத்தரகாண்ட் சமய சுதந்திரச் சட்டம் (Uttarakhand Freedom of Religion Act) இந்த மாற்றத்தைப் பிரதிபலிக்கிறது. 2022-ஆம் ஆண்டில் இந்தச் சட்டம் மேலும் கடுமையாக்கப்பட்டு, நீண்டகாலச் சிறைத்தண்டனை உட்படக் கடுமையான அபராதங்கள் விதிக்கப்பட்டன. 2025-ஆம் ஆண்டில் முன்மொழியப்பட்ட ஒரு திருத்தம், தண்டனையை 3 முதல் 10-ஆண்டுகளாகவும், தீவிரமான வழக்குகளில் 20-ஆண்டுகள் அல்லது ஆயுள் தண்டனை வரை உயர்த்தவும் கோரியது. இருப்பினும், ஆளுநர் இந்த மசோதாவை மறுபரிசீலனை செய்யத் திருப்பி அனுப்பியதால், இந்த மாற்றங்கள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இதன் காரணமாக, இந்தச் சட்டங்கள் பல சட்டப் போராட்டங்களுக்கும் சர்ச்சைகளுக்கும் வழிவகுத்துள்ளன.


சமீபத்திய அறிக்கைகளின்படி, 2022-ஆம் ஆண்டு திருத்தப்பட்ட சட்டத்தின்கீழ் 2023-ஆம் ஆண்டில் 20 வழக்குகளும், 2025-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை மேலும் 18 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதேசமயம், 2018-ஆம் ஆண்டு சட்டத்தின்கீழ் முழுமையான விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பல வழக்குகளில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் விடுதலையாகியுள்ளனர். இத்தகைய சட்டங்கள் பாரதிய ஜனதா கட்சி (BJP) ஆட்சி செய்யும் மாநிலங்களில் மட்டுமே இருப்பதாகக் கருதமுடியாது; மாறாக, பல்வேறு அரசியல் கட்சிகளும் இதற்கு ஆதரவளித்துள்ளன. உதாரணமாக, இமாச்சலப் பிரதேச மத சுதந்திரச் சட்டம் (2006) (Himachal Pradesh Freedom of Religion Act (2006)) காங்கிரஸ் ஆட்சியில் கொண்டுவரப்பட்டது. தமிழ்நாட்டிலும், ஜெ.ஜெயலலிதா தலைமையிலான அண்ணா திராவிட முன்னேற்றக் கழக அரசு 2002-ஆம் ஆண்டில் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டத்தைக் (forced religious conversion) கொண்டுவந்தது. பின்னர் 2006-ஆம் ஆண்டில் மு. கருணாநிதி தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக அரசு அந்தச் சட்டத்தை ரத்து செய்தது. மதமாற்றங்களை முறைப்படுத்துவதில் பல்வேறு அரசியல் கட்சிகளிடையே ஒரு பரந்த உடன்பாடு இருப்பதையே இந்த உதாரணங்கள் காட்டுகின்றன.


நடைமுறையில், இந்தச் சட்டங்கள் பெரும்பாலும் சட்டத்தை மக்கள் கையில் எடுக்கும் போக்கை ஊக்குவிக்கின்றன. இது சில நேரங்களில் வன்முறைக்கு வழிவகுப்பதோடு, இந்தியாவின் மதச்சார்பற்ற சமூகக் கட்டமைப்பையும் சீர்குலைக்கிறது. எனவே, அரசாங்கங்கள் இந்தச் சட்டங்களை மறுபரிசீலனை செய்வது மிகவும் அவசியமாகிறது.


Original article: Conversion politics, the challenge to secularism. -Shaikh Mujibur Rehman

Share: