இது வெறும் தொழில்நுட்பரீதியான விஷயம் மட்டுமல்ல; இது ஒரு அரசியலமைப்புச் சட்ட உறுதிமொழியின் நம்பகத்தன்மை குறித்த விஷயமாகும்.
இந்திய அரசு, 2023-ஆம் ஆண்டின் பெண்கள் இடஒதுக்கீடு சட்டத்தில் (Women’s Reservation Act, 2023) திருத்தங்களை மேற்கொள்வது குறித்து விவாதிக்க, நாடாளுமன்றத்தின் கூடுதல் கூட்டத்தொடர்களை நடத்த முடிவெடுத்திருப்பதாக வரும் செய்திகள், ஒரு நேர்மறையான மற்றும் முக்கியமான நடவடிக்கையாகும். இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சீர்திருத்தம் தற்போது நடைமுறை செயலாக்கத்திற்கான அடிப்படையாக அமைகிறது.
கடந்த 30 ஆண்டுகளாக நாடாளுமன்றத்தால் சாதிக்கமுடியாத ஒரு விஷயத்தை பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் தற்போது சாத்தியமாக்க உள்ளார். மக்களவை மற்றும் மாநிலச் சட்டப்பேரவைகளில் பெண்களுக்கு 33% இடஒதுக்கீடு வழங்கும் அரசியலமைப்பு (106-வது திருத்தம்) சட்டம், 2023 (Constitution (106th Amendment) Act, 2023), ஒரு மிக முக்கியமான சீர்திருத்தமாகக் கருதப்படுகிறது. இந்தத் திட்டம் சுமார் 26 ஆண்டுகளாகத் தள்ளிப்போடப்பட்டு வந்த நிலையில், தற்போது இது நிறைவேற்றப்பட்டிருப்பது ஒரு வலுவான அரசியல் உறுதியைக் காட்டுகிறது.
ஆனால் ஒவ்வொரு சீர்திருத்தமும் ஒரு முக்கியமான கேள்விக்குப் பதில் அளிக்க வேண்டியுள்ளது: அந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும்?
தற்போதுள்ள ஆலோசனைகளின்படி, மக்களவையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 543-லிருந்து சுமார் 816-இடங்களாக அதிகரிக்கப்படலாம் என்கின்றனர். அதாவது கூடுதலாக 273-இடங்கள் சேர்க்கப்படும் என்கின்றனர். இந்தக் கூடுதல் இடங்கள் அனைத்தையும் பெண்களுக்காக ஒதுக்கினால், தற்போதுள்ள உறுப்பினர்களை மாற்றாமலேயே, விரிவாக்கப்பட்ட அவையில் மூன்றில் ஒரு பங்கு அளவிற்கு பெண்களின் பங்களிப்பை உறுதிசெய்ய முடியும் என்றும் கூறப்படுகிறது.
இருப்பினும், ஒரு அடிப்படைப் பிரச்சினை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது: பெண்கள் எந்தெந்தத் தொகுதிகளில் போட்டியிடுவார்கள்?
புதிய நாடாளுமன்ற இடங்களுக்குத் தொகுதிகள் தேவைப்படுகின்றன. இந்தத் தொகுதிகளை தொகுதி மறுவரையறை (Delimitation) மூலமாக மட்டுமே உருவாக்க முடியும். சட்டப்படி, தொகுதி மறுவரையறை செய்வதற்கு முன்பாக மக்கள்தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அடுத்த மக்கள்தொகைக் கணக்கெடுப்பு 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நடைமுறைகள் மிக வேகமாக நடந்தாலும்கூட, தரவுகளை வெளியிடுதல், ஒரு தொகுதி மறுவரையறை ஆணையத்தை (Delimitation Commission) அமைத்தல் மற்றும் அதன் பணிகளை முடித்தல் ஆகியவற்றுக்கு பல ஆண்டுகள் ஆகும். கடந்தகால அனுபவங்களின் அடிப்படையில் பார்த்தால், இந்தத் தொகுதி மறுவரையறைப் பணிகள் 2032 அல்லது 2033-ஆம் ஆண்டிற்குள்கூட முடிவடைய வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
இது ஒரு அடிப்படை சிக்கலுக்கு வழிவகுக்கிறது: தொகுதிகள் மறுசீரமைக்கப்படாமல் தேர்தல்களை நடத்தமுடியாது என்றும் அதேபோல், தொகுதி மறுவரையறை செய்யப்படாமல், இடஒதுக்கீடு முறையைச் செயல்படுத்துவதற்கான முறையான தேர்தல் செயல்திட்டதை உருவாக்க முடியாது என்றும் கூறப்படுகிறது.
இதற்கிடையில் ஒரு அரசியலமைப்புரீதியான சிக்கலும் உள்ளது. 2026-ஆம் ஆண்டிற்குப் பிறகு எடுக்கப்படும் முதல் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு முடியும்வரை, மாநிலங்களுக்கு இடையிலான மக்களவை இடங்களின் எண்ணிக்கையைப் பகிர்ந்தளிப்பதில் மாற்றம் செய்யக்கூடாது என்று இந்திய அரசியலமைப்பு சட்டம் நிறுத்தி வைத்துள்ளது. இதற்கு முன்னதாகவே இந்த முறையில் மாற்றம் செய்ய வேண்டுமென்றால், அதற்கு மீண்டும் ஒரு அரசியலமைப்பு திருத்தம் (Constitutional Amendment) தேவைப்படும் என்கின்றனர். அவ்வாறு செய்வது, வட இந்திய மற்றும் தென்னிந்திய மாநிலங்களுக்கு இடையிலான பிரதிநிதித்துவப் பங்கீடு குறித்த உணர்வுப்பூர்வமான பிரச்சனையை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கப்படுகிறது.
வடக்கு மற்றும் தெற்கு மாநிலங்களுக்கு இடையேயான சமநிலை பராமரிக்கப்படும் என்றும், தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு விகிதாச்சார அடிப்படையில் (Proportional) இருக்கும் என்றும் உறுதியளிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினைக்குத் தீர்வுகாண மத்திய உள்துறை அமைச்சர் முயன்றுள்ளார். இதைவிடச் சிறந்த மாற்றுவழி இல்லாத நிலையில், இது நியாயமானதாகத் தோன்றுகிறது. இருப்பினும், 'விகிதாச்சாரம்' என்பது அந்தந்த மாநிலங்களின் விகிதத்தை மட்டுமே அப்படியே வைத்திருக்கும், பிரதிநிதித்துவத்தை அல்ல என்றும் கூறப்படுகிறது. பெரிய மாநிலங்கள் இன்னும் அதிகமான இடங்களை பெறும், மேலும் நாடாளுமன்ற முடிவுகள் விகிதாச்சாரத்தைவிட எண்ணிக்கையையே அதிகம் சார்ந்திருக்கின்றன. அப்படியிருந்தும், இதுவரை சிறந்த மாற்றுத் திட்டம் எதுவும் முன்மொழியப்படாததால், தற்போதைக்கு இதுவே ஏற்றுக்கொள்ளக் கூடிய சமரசமாக இருக்கும் என்றும் தெரிவிக்கின்றனர்.
ஆனால், இந்தப் பிரச்சினையைத் தற்காலிகமாகப் ஒதுக்கி வைத்துவிட்டுப் பார்த்தாலும், ஒரு முக்கியமான கேள்வி எழுகிறது: தொகுதிகள் ஒதுக்கப்படாமல், தேர்தலில் பெண்கள் எவ்வாறு போட்டியிட முடியும்?
முன்னேறிச் செல்வதற்கு ஒரு வழி இருக்கிறது.
ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் ஒரு குறிப்பிட்ட தொகுதியிலிருந்துதான் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. பல ஜனநாயக நாடுகளில் தொகுதி வாரியான தேர்தல் மற்றும் விகிதாசார பிரதிநிதித்துவ (Proportional Representation) முறை ஆகிய இரண்டும் கலந்த ஒரு முறை பின்பற்றப்படுகிறது. இத்தகைய அமைப்புகளில், சில உறுப்பினர்கள் தொகுதிகள் மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்; மற்றவர்கள் அரசியல் கட்சிகள் பெற்ற மொத்த வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்தியா இந்த மாதிரியின் ஒரு குறிப்பிட்ட, தற்காலிகமான வடிவத்தை ஏற்றுக்கொண்டு செயல்படுத்தலாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது.
தற்போதுள்ள 543 தொகுதிகள் மாற்றமின்றி அப்படியே இருக்கலாம், அவற்றுக்கான தேர்தல்களும் வழக்கம் போலவே நடைபெறலாம் என்கின்றனர். இதற்கு இணையாக, பெண்களுக்கு மட்டுமே எனத் தனியாகச் சில இடங்களை உருவாக்கலாம். இந்த இடங்கள் குறிப்பிட்ட தொகுதிகளோடு பிணைக்கப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் அதற்குப் பதிலாக, அரசியல் கட்சிகள் அல்லது கூட்டணி கட்சிகள் பெறும் வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் இந்த இடங்களை பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யலாம் என்றும் தெளிவுபடுத்துகின்றனர்.
கடந்த பொதுத் தேர்தலின் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால், ஆளுங்கூட்டணி அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு அடுத்தபடியாக பிரதான எதிர்க்கட்சிக் கூட்டணி இடங்களைப் பெறும், மீதமுள்ள இடங்களை இதர கட்சிகள் பெறும் என்றும் கணிக்கப்படுகிறது. ஒவ்வொரு கூட்டணிக்குள்ளும், அந்தந்தக் கூட்டணிக் கட்சிகள் தங்களுக்குள் இடங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் ஆலோசனை வழங்கப்படுகிறது.
இந்த அணுகுமுறை, அரசியல் நிலைத்தன்மையைப் பராமரிக்கும் அதே வேளையில், பிரதிநிதித்துவம் மக்களின் விருப்பத்தைப் பிரதிபலிப்பதை உறுதி செய்கிறது. இதன் மூலம் எந்தவொரு கட்சியோ அல்லது கூட்டணியோ அநீதியான முறையில் நடத்தப்பட வாய்ப்பில்லை என்கின்றனர்.
தேர்தல் முடிந்த பிறகு, ஒவ்வொரு கட்சியும் அல்லது கூட்டணியும் தாங்கள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில் கூடுதல் இடங்களைப் பகிர்ந்து கொள்ளலாம் என்றும் கட்சிகள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இந்த இடங்களுக்கு, முன்னரே அறிவிக்கப்பட்ட பட்டியலிலிருந்து பெண் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கலாம் என்றும் கூறப்படுகிறது. இந்த நடைமுறையானது தேர்தல் செயல்பாட்டில் நீதி, வெளிப்படைத்தன்மை மற்றும் நம்பகத்தன்மையை உறுதி செய்யும் என்றும் நம்பப்படுகிறது.
இந்த அணுகுமுறை மிக முக்கியமான சிக்கலுக்குத் தீர்வாக அமைகிறது. இதன்படி, தொகுதி மறுவரையறைக்காகக் காத்திருக்க வேண்டிய அவசியமில்லாமல் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை உடனடியாக நடைமுறைப்படுத்த முடியும் என்கின்றனர். மேலும், இதற்காகப் புதிய தொகுதிகளை உருவாக்க வேண்டிய தேவையும் இருக்காது.
இந்த முறையானது வேறு சில நன்மைகளையும் கொண்டுள்ளது. இது வாக்காளர்களின் வாக்குச் சதவீதத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதால், மக்களின் உண்மையான விருப்பத்தைத் துல்லியமாகப் பிரதிபலிக்கிறது. மேலும், அதிகச் செலவு பிடிக்கும் தேர்தல் முறைகளால் பெண்களுக்கு ஏற்படும் சிக்கல்களை இந்த முறையானது குறைக்க உதவுகிறது. உண்மையில், இந்த முறையினால் அரசுக்குக் கூடுதல் செலவு எதுவும் ஏற்படாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இடஒதுக்கீடு என்பது பெண்களுக்கு வழங்கப்பட்ட ஒரு குறைந்தபட்ச உத்தரவாதம் மட்டுமே தவிர, அது அவர்களுக்கான அதிகபட்ச எல்லை அல்ல என்பதைப் புரிந்துகொள்வது அவசியமாகிறது. பெண்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் மட்டுமின்றி, பொதுத் தொகுதிகளிலும் தாராளமாகப் போட்டியிட்டு வெற்றி பெறமுடியும்; அவ்வாறு பெண்கள் பொதுத் தொகுதிகளில் பெறும் வெற்றிகளுடன், இந்த இடஒதுக்கீடு தொகுதிகளும் கூடுதல் வாய்ப்பாக அமையும் என்கின்றனர்.
புதிய நாடாளுமன்றக் கட்டிடம் 888 உறுப்பினர்கள் வரை அமரக்கூடிய வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது இதற்குமுன் இல்லாத ஒரு சிறந்த வாய்ப்பை வழங்குகிறது. இது திட்டமிட்டு செய்யப்பட்டதா இல்லையா என்பது ஒருபுறம் இருக்க, தற்போது அதற்கான உள்கட்டமைப்பும் வசதிகளும் முழுமையாகத் தயாராக உள்ளன. இதற்கான அரசியல் துணிச்சலும், நிறுவனரீதியான தயார்நிலையும் இருக்கும் பட்சத்தில், இதனை நடைமுறைப்படுத்துவதை இன்னும் பத்தாண்டுகளுக்குத் தள்ளிப்போடுவதற்கான காரணங்கள் எதுவுமில்லை என்கின்றனர்.
இந்த அணுகுமுறையை ஏற்றுக்கொண்டால், தொகுதிகள் மறுவரையறை செய்யும் வரை காத்திருக்காமல், 2029-ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலேயே பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்த முடியும் என்கின்றனர். உண்மையில், நாம் அவ்வளவு காலம் காத்திருக்க வேண்டும் என்று எந்த அரசியலமைப்பு விதியும் கட்டாயப்படுத்தவில்லை. விகிதாசார ஒதுக்கீட்டிற்கு (Proportional allocation) நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தவுடன், பெண்களுக்காக கூடுதல் இடங்களை உருவாக்கி, சமீபத்திய தேர்தல் முடிவுகளின் அடிப்படையில் அவற்றை நிரப்ப முடியும் என்றும் அரசியலமைப்புரீதியாக ஒரு வாக்குறுதி அளிக்கப்பட்டால், அதை நிறைவேற்ற அடுத்த தேர்தல்வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை என்றும் தெரிவிக்கின்றனர்.
இந்தத் திட்டமானது ஒரு ஆரம்பகட்ட நடவடிக்கைக்கான வாய்ப்பை வழங்குகிறது. சமீபத்திய பொதுத் தேர்தலில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதத்தின் அடிப்படையில், அரசியலமைப்புச் சட்டத்திருத்தத்தின் மூலம் தற்போதைய மக்களவையில் கூடுதல் இடங்களை உருவாக்க முடியும். இதன் மூலம் ஏற்கனவே உள்ள உறுப்பினர்களின் பதவிக்காலத்தைப் பாதிக்காமல், பெண்களுக்கான பிரதிநிதித்துவத்தை உடனடியாக அதிகரிக்க முடியும் என்றும் கூறப்படுகிறது. இதற்குத் தேவைப்படுவது மற்றொரு தேர்தல் அல்ல, மாறாக ஒரு தீர்க்கமான முடிவு மட்டுமே என்கின்றனர்.
இதற்கானத் தீர்வுக்கு ஒரு அரசியலமைப்புச் சட்டத்திருத்தம் மட்டுமே போதுமானதாகும். இந்திய நாடாளுமன்றத்தால் விரைந்து செயல்பட முடியும் என்பதற்கு ஏற்கனவே பல முன்னுதாரணங்கள் உள்ளன. குறிப்பாக, பெண்களுக்குப் பிரதிநிதித்துவ உரிமையை வழங்குவதற்காக நமது அரசியலமைப்புச் சட்டம் ஏற்கனவே திருத்தப்பட்டுள்ளது. அதேபோல், அந்த உரிமை காலதாமதமின்றி பெண்களுக்குக் கிடைப்பதை உறுதி செய்யவும் மீண்டும் ஒரு சட்டத் திருத்தத்தைக் கொண்டுவர வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
இந்த நடைமுறை நிரந்தரமான ஒன்றாக இருக்க வேண்டிய அவசியமில்லை. இதனை ஒன்று அல்லது இரண்டு தேர்தல்களுக்கு மட்டும் பயன்படுத்திக்கொள்ளலாம். அதன்பிறகு, தொகுதி மறுவரையறை செய்யப்பட்டவுடன், தொகுதிகளை மீண்டும் மாற்றி அமைத்துக் கொள்ளலாம்; தேவைப்படும் பட்சத்தில், வழக்கமான முறையில் இடஒதுக்கீட்டுத் தொகுதிகளையும் ஒதுக்கீடு செய்துகொள்ளலாம் என்கின்றனர்.
தற்போதைய இந்தப் பிரச்சனை ஒரு தொழில்நுட்பம் சார்ந்த சிக்கல் அல்ல, மாறாக அரசியலமைப்பு வழங்கிய வாக்குறுதியின் நம்பகத்தன்மை பற்றியதாகும். இதற்கான கட்டமைப்பு ஏற்கனவே தயார் நிலையில் உள்ளது. அதை நாம் பயன்படுத்துவதற்குத் தயாராக இருக்கிறோமா என்பதுதான் இப்போதைய கேள்வியாக உள்ளது.
குரைஷி, இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் ஆவார். இவர் தெற்காசியாவின் அரசியல் போராட்டங்களைப் பற்றி விவரிக்கும் "Democracy’s Heartland: Inside the Battle for Power in South Asia" என்ற புத்தகத்தின் ஆசிரியர் ஆவார்.
Original article: A roadmap to fast-track reservation for women in Parliament. -S Y Quraishi