Showing posts with label ASHA. Show all posts
Showing posts with label ASHA. Show all posts

இந்தியாவின் அடுத்த சமூகப் பாதுகாப்பு என்பது பணமல்ல, பராமரிப்பே (care) ஆகும். -அர்ஷி ஆதில், ஷோபித் மிஸ்ரா

 சமூகப் பாதுகாப்பை வடிவமைப்பதற்கு பராமரிப்பும், பரிவும் தேவை.


இந்தியாவின் சமூகப் பாதுகாப்பு அமைப்பானது, அதன் பெரிய அளவின் அடிப்படையில் மூலமே அடிக்கடி விவரிக்கப்படுகிறது. லட்சக்கணக்கான மக்களுக்கு உணவு, பணம், ஓய்வூதியம் மற்றும் சேவைகளை வழங்குவதற்காக நாம் பெரிய தளங்களை உருவாக்கியுள்ளோம். ஆனால், தனியாக வாழும், சமூகரீதியாகத் தனிமைப்படுத்தப்பட்ட அல்லது நாள்பட்ட நோய் மற்றும் குறைந்த நடமாடும் திறனால் போராடும் முதியவர்களின் அன்றாட யதார்த்தங்கள் என்ற ஒரு மறைமுகமான நெருக்கடியை இந்த அமைப்புகள் இன்னும் முழுமையாகக் கையாளவில்லை.


இந்தியாவில் மக்கள்தொகையானது வயதானவர்களை அதிகமாகக் கொண்டுள்ளது. 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்களின் எண்ணிக்கை 2022-ல் 149 மில்லியனிலிருந்து 2050-க்குள் 347 மில்லியனாக உயரும். இது மொத்த மக்கள்தொகையில் ஐந்தில் ஒரு பங்கிற்கும் அதிகமாகும். ஓய்வூதியம் பசியைத் தடுக்கலாம். ஆனால், அதனால் தனிமையைப் போக்கவோ, மருந்துகளைச் சரியான நேரத்தில் எடுத்துக்கொள்வதை உறுதிசெய்யவோ அல்லது ஒருவர் மருத்துவமனைக்குச் செல்ல உதவவோ முடியாது. இந்தியாவில் வயது முதிர்வு அதிகரித்து வருவதால், சமூகப் பாதுகாப்பு என்பது பணப் பரிமாற்றங்களைத் தாண்டி, நீண்ட காலமாக ஒரு தனிப்பட்ட குடும்பப் பொறுப்பாகக் கருதப்பட்டு வந்த பராமரிப்பையும் உள்ளடக்கியதாக மாற வேண்டும்.


முதுமையை நல்ல முறையில் எதிர்கொள்ளும் சமூகங்கள், மருத்துவமனைகளையோ அல்லது குடும்பங்களையோ மட்டும் சார்ந்திருப்பதில்லை என்பதை உலகளாவிய சான்றுகள் காட்டுகின்றன. அவை ஒரு வலுவான சமூக ஆதரவு அமைப்பையும் உருவாக்குகின்றன. உலக சுகாதார அமைப்பு இதை நீண்டகாலப் பராமரிப்பு என்று அழைக்கிறது. இது வெறும் முதியோர் இல்லங்களை மட்டுமல்ல, முதியவர்கள் தங்கள் செயல்பாட்டுத் திறனையும் கண்ணியத்தையும் பேணிக்கொள்ள உதவும் வீடு மற்றும் சமூக ஆதரவின் ஒரு தொடர்ச்சியாகும்.


இந்தியாவில் இன்னும் பெரிய அளவிலான இத்தகைய அமைப்பு இல்லை. ஆனால், அதற்குச் சமமான சக்திவாய்ந்த ஒன்று அந்நாட்டில் உள்ளது. அது, ஏற்கனவே கடைக்கோடி மக்களைச் சென்றடையும் பெண்களின் கூட்டு நிறுவனங்களின் நாடு தழுவிய வலையமைப்பு ஆகும்.

ஒரு புதிய பணிக்கான பரிச்சயமான தளம்


தேசிய ஊரக வாழ்வாதார இயக்கத்தின் (National Rural Livelihoods Mission (NRLM)) கீழ், இந்தியாவின் மிகவும் வெற்றிகரமான அரசு ஆதரவு நிறுவனங்களில் சுய உதவிக் குழுக்களும் (Self-help groups (SHG)) அடங்கும். இன்று, அவை இந்தியா முழுவதும் 9.2 மில்லியனுக்கும் அதிகமான குழுக்களாக 102 மில்லியனுக்கும் மேற்பட்ட பெண்களை ஒன்றிணைக்கின்றன. அவை நிதி உள்ளடக்கமாக இருந்தாலும், சிறு தொழில் ஊக்குவிப்பாக இருந்தாலும், ஊட்டச்சத்தாக இருந்தாலும் அல்லது அரசுத் திட்டங்களுடன் ஒருங்கிணைப்பதாக இருந்தாலும், அவை நம்பிக்கைக்குரியவையாகவும், உள்ளூரில் வேரூன்றியவையாகவும் மற்றும் இறுதிநிலைச் சேவைகளை வழங்குவதில் அனுபவம் வாய்ந்தவையாகவும் இருக்கின்றன.


பராமரிப்பின் மூலம் விடுபட்ட அடுக்குநிலை


தேசிய ஊரக வாழ்வாதார இயக்கம் (NRLM) தனது பணிகளை உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் துப்புரவு ஆகிய துறைகளில் ஏற்கனவே விரிவடைந்துள்ளது. இந்த அமைப்புகள் பலவழிகளில் குடும்பங்களுக்கு ஆதரவு அளித்து, அரசு சேவைகளை அணுகுவதை எளிதாக்கி, ஆஷாக்கள் (ASHA) மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் (Anganwadi workers) போன்ற களப்பணியாளர்களுடன் ஒருங்கிணைப்பை ஊக்குவிக்கிறது.


இருப்பினும், தொடர்ச்சியான பராமரிப்பிற்கான ஒரு கட்டமைக்கப்பட்ட அடுக்குநிலை பெருமளவில் இல்லாமல் உள்ளது.


தற்போதைய அமைப்புகள் விழிப்புணர்வு மற்றும் சேவை இணைப்பில் திறம்படச் செயல்படுகின்றன. ஆனால், அவை அவ்வப்போது மட்டுமே செயல்படுகின்றன. வழக்கமான நலம்சார்ந்த விசாரிப்புகள், செயல்பாட்டு நலனைக் கண்காணித்தல் அல்லது தொடர்ச்சியான பராமரிப்பு தேவைப்படும் நபர்களுக்கு இடைவிடாத உதவி போன்ற நீடித்த ஆதரவை அவை வழங்குவதில்லை. தனிமையில் வாழும் அல்லது இடம்பெயர்வால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் உள்ள முதியவர்களிடையே இந்த இடைவெளி குறிப்பாகத் தெளிவாகத் தெரிகிறது. இந்தச் சூழல்களில், சேவைகளைப் பெறுவது மட்டுமல்லாமல், நிலையான, நம்பிக்கை அடிப்படையிலான ஈடுபாட்டைப் பெறுவதே சவாலாக உள்ளது.


இந்தியா புதிதாக ஒரு அமைப்பை ஆரம்பத்திலிருந்து உருவாக்க வேண்டிய அவசியமில்லை. அது ஏற்கனவே கட்டமைத்துள்ள அமைப்பை விரிவுபடுத்தினால் போதுமானது.


தற்போதுள்ள அமைப்புகளின் மீது ஒரு பராமரிப்பு அடுக்குநிலையை உருவாக்குதல்


பயிற்சி பெற்ற சுய உதவிக் குழு உறுப்பினர்கள் மற்றும் ஏற்கனவே உள்ள பணியாளர்கள் மூலம், உள்ளூர் சுகாதார அமைப்புகளுடன் இணைக்கப்பட்ட சமூக அடிப்படையிலான முதியோர் பராமரிப்பை வழங்கும் ஒரு புதிய சமூகப் பாதுகாப்பு அடுக்கைநிலையை உருவாக்குவதற்காக, இந்தியா தேசிய கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் (NRLM) கீழ் உள்ள சுய உதவிக் குழு (SHG) தளத்தைப் பயன்படுத்த வேண்டும்.


தேசிய கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் (NRLM) அதிகாரமானது, அதன் கட்டமைக்கப்பட்ட சமூக நிறுவனங்கள் மற்றும் பணியாளர் குழு அடிப்படையிலான அணுகுமுறையில் அடங்கியுள்ளது. இவை, பெரிய அளவில் வழக்கமான, தொலைதூரப் பகுதிகளில்கூட மக்களுடன் வழக்கமான தொடர்பைச் சாத்தியமாக்குகின்றன. எனவே, ஒரு தனி, இணையான பணியாளர் குழுவை உருவாக்குவது முக்கிய சவால் அல்ல, மாறாக, ஏற்கனவே உள்ள கட்டமைப்புகளை வலுப்படுத்திப் பயன்படுத்துவதே இலக்காக இருக்க வேண்டும்.


அடிப்படைப் பராமரிப்புப் பணிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், சமூகப் பணியாளர்களுக்குக் கூடுதல் கருவிகளும், தெளிவான வழிகாட்டுதல்களும் வழங்கப்படலாம். பாதிக்கப்படக்கூடிய முதியவர்களைத் தவறாமல் சென்று பார்த்தல், ஆரம்ப நிலையிலேயே அபாயங்களை கண்டறிதல், முதியவர்கள் அரசாங்க நலன்களைப் பெறுவதற்கு உதவுதல் மற்றும் உள்ளூர் சுகாதார சேவை இணைப்புகளை எளிதாக்குதல் ஆகியவை இதில் அடங்கும். இந்தப் பணியானது மருத்துவப் பணி அல்லாததாகவும், பராமரிப்பில் கவனம் செலுத்துவதாகவும் உள்ளது.


ஒருங்கிணைப்பு மற்றும் செயல்பாட்டு ஆதரவு பராமரிப்பின் முக்கியப் பகுதிகளாகும். இதை உணவு, ஊட்டச்சத்து, சுகாதாரம் மற்றும் நீர், சுகாதாரம் மற்றும் கழுவுதல் (Food, Nutrition, Health, and WASH(FNHW)) தளத்தில் உள்ளீடும்போது, பராமரிப்பானது ஒரு தனிப்பட்ட தலையீடாக இல்லாமல், ஒரு பரந்த நல்வாழ்வு செயல்திட்டத்தின் பகுதியாக மாறுவதை உறுதி செய்கிறது.


முக்கியமாக, இந்த அணுகுமுறை ஒரு தெளிவான செயல்பாட்டு இடைவெளியை நிரப்புகிறது. சுகாதார மற்றும் ஊட்டச்சத்து சேவைகளை வழங்குவதில் ஆஷாக்கள் (ASHA), அங்கன்வாடிப் பணியாளர்கள் (Anganwadi workers) மற்றும் துணை செவிலியர்கள் (Auxiliary Nurse Midwife (ANM)) இன்றியமையாதவர்களாக இருந்தாலும், வழக்கமான சமூகநல விசாரணைகள், செயல்பாட்டு உதவிகள் அல்லது நீண்டகாலப் பின்தொடர்தல் போன்ற நீடித்த, மருத்துவப் பணி அல்லாத ஈடுபாட்டிற்காக அவர்கள் கட்டமைக்கப்படவில்லை. இதற்கு மாறாக, தேசிய கிராமப்புற வளர்ச்சித் திட்டத்தின் (NRLM) சமூக நிறுவனங்கள் காலப்போக்கில் தொடர்ச்சியான ஆதரவை வழங்க மிகவும் பொருத்தமானவை.


முன்னோட்டங்களிலிருந்து விரிவாக்கம் வரை


இந்தியாவில் ஏற்கனவே செயல்படும் முன்னுதாரணங்கள் உள்ளன. புனேவின் விருத்தா மித்ரா மற்றும் கேரளாவின் குடும்பஸ்ரீ போன்ற மாதிரிகள், சமூகம் சார்ந்த முதியோர் பராமரிப்பை ஒழுங்கமைத்து, அதற்குத் திறன்களை அளித்து, வழங்க முடியும் என்பதைக் காட்டுகின்றன. அடுத்த கட்டமாக, இதை ஒரு முக்கிய சமூகப் பாதுகாப்புச் செயல்பாடாகக் கருதி, பெரிய அளவில் விரிவுபடுத்தும் வகையில் வடிவமைக்க வேண்டும்.


படிப்படியான, இலக்கு சார்ந்த அணுகுமுறை தொடங்குவதற்கு ஒரு நடைமுறைக்கு உகந்த தொடக்கப் புள்ளியாக அமைகிறது. இடம்பெயர்வு அதிகம் நிகழும் மற்றும் தொலைதூரப் பகுதிகளில்தான் மிகப்பெரிய தேவை உள்ளது. இப்பகுதிகளில், முதியவர்கள் தனிமையையும், சேவைகளைப் பெறுவதில் உள்ள வரம்புகளையும் எதிர்கொள்கின்றனர். இத்தகைய புவியியல் பகுதிகளுக்கு முன்னுரிமை அளிப்பது, தேவை அதிகமாக உள்ள இடங்களில் இந்த மாதிரியைச் சோதித்துப் பார்க்க வழிவகுக்கிறது.


அதேசமயம், கிராமப்புற இந்தியா எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை. நிலைமைகள் இடத்திற்கு இடம் வேறுபடுகின்றன. மேலும், இதற்கான கொள்கைகள் இந்த வேறுபாடுகளைப் பிரதிபலிக்க வேண்டும். இந்த அணுகுமுறை உள்ளூர் யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டு, ஆதரவு இடைவெளிகள் எங்கு உள்ளன என்பதைக் கண்டறிந்து, அதற்கேற்ப கட்டமைப்பை உருவாக்கும் வகையில், இந்த அணுகுமுறை உள்ளூர் யதார்த்தங்களை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும்.


பல்வேறு நன்மைகளைக் கொண்ட ஒரு தீர்வு


சுய உதவிக் குழுக்கள் (SHG) மூலம் வழங்கப்படும் சமூகப் பராமரிப்பு அமைப்பு நிலையானது, முதியோர் நலனைத் தாண்டிய பல நன்மைகளை வழங்கமுடியும். அவை,


முதலாவதாக, இது சமூகப் பாதுகாப்பு வலையில் உள்ள ஒரு பெரிய இடைவெளியை நிரப்புகிறது. ஓய்வூதியங்கள் முதியவர்கள் தங்களின் அடிப்படை நுகர்வுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய உதவுகின்றன. இருப்பினும், அன்றாடச் செயல்பாடுகளைப் பாதுகாப்பதில்லை. நடமாட்டம், சிகிச்சை முறைகளைப் பின்பற்றுதல் அல்லது சேவைகளைப் பெறுதல் ஆகியவற்றுக்கான ஆதரவு இல்லாமல், பல முதியவர்கள் திறம்படப் பாதுகாப்பற்றவர்களாகவே இருக்கின்றனர்.


இரண்டாவதாக, இது உள்ளூர் மட்டத்தில் கண்ணியமான வேலைவாய்ப்புகளை உருவாக்குகிறது. சுய உதவிக் குழுக்களின் மூலம் பராமரிப்பை முறைப்படுத்துவது, ஊதியம் பெறாத வேலையை பெண்களுக்குப் பயிற்சி பெற்ற, ஊதியம் பெறும் பணிகளாக மாற்றுகிறது. இதன் மூலம் இது ஒரு நலத்திட்டமாக இருப்பது போலவே, வாழ்வாதாரத்திற்கான ஒரு தலையீடாகவும் அமைகிறது.


மூன்றாவதாக, இது சுகாதார அமைப்பின் மீதான தேவையற்ற அழுத்தத்தைக் குறைக்கிறது. பல முதியவர்கள் பின்தொடர் சந்திப்புகளைத் தவறவிடுவதாலோ அல்லது மிகவும் தாமதமாகப் பரிந்துரைக்கப்படுவதாலோ மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள். நன்கு நிர்வகிக்கப்படும் ஒரு பணியாளர் குழு, சிகிச்சை முறைகளை முறையாகப் பின்பற்றுவதை மேம்படுத்துகிறது. ஆரம்பகால எச்சரிக்கை அறிகுறிகளைக் கண்டறிகிறது மற்றும் பரிந்துரைகளை இறுதி செய்கிறது. இது, கடுமையான சிக்கல்களுக்குச் சிகிச்சை அளிப்பதைவிட மிகவும் செலவு குறைந்ததாகும்.


நான்காவதாக, இது தனிமை மற்றும் மனநலப் பிரச்சினைகளைக் கையாள்கிறது. சமூகத் தனிமை பல முதியவர்களைப் பாதிக்கிறது. மேலும், வழக்கமான சந்திப்புகளும் நலம் விசாரிப்புகளும் அவர்களின் கண்ணியத்தையும், ஒரு குழுவில் அங்கம் வகிக்கும் உணர்வையும் மீட்டெடுக்க உதவும். நிதிப் பார்வையில், இந்த மாதிரி சாத்தியமானது. ஏனெனில், இது ஏற்கனவே உள்ள அமைப்புகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால், மருத்துவமனை சார்ந்த பராமரிப்புடன் ஒப்பிடும்போது செலவுகள் ஒப்பீட்டளவில் குறைவாக இருக்கின்றன.



நிலைத்தன்மைக்காக வடிவமைத்தல்


இந்த அமைப்பு வெற்றிபெற, பராமரிப்பு ஒரு கூடுதல் அம்சமாக அல்லாமல், ஒரு முக்கியப் பணியாகக் கருதப்பட வேண்டும். இதற்குப் பயிற்சிபெற்ற பணியாளர்கள், தெளிவாக வரையறுக்கப்பட்ட பொறுப்புகள், முறையான மேற்பார்வை மற்றும் கணிக்கக்கூடிய ஊதியம் ஆகியவை தேவைப்படுகின்றன. இவற்றை ஆதரிப்பதற்கு தேசிய கிராமப்புற வளர்ச்சித் திட்டம் (NRLM) நன்கு தயாராக உள்ளது. பணியாளர்களுக்கு ஏற்படும் அதிகப்படியான பணிச்சுமை, சீரற்ற தரம் மற்றும் ஒருங்கிணைப்புச் சவால்கள் உள்ளிட்ட அபாயங்கள் இருந்தாலும், இதற்கு முன்பும் சிக்கலான தலையீடுகளை விரிவுபடுத்திய ஒரு அமைப்பிற்குள் இவற்றைச் சமாளிக்க முடியும்.


கடைக்கோடி வரை சேவைகள் சென்றடைய முடியும் என்பதை இந்தியா நிரூபித்துள்ளது. சமூகப் பாதுகாப்பு என்பது வருமானத்தை மட்டுமல்ல, கண்ணியம், செயல்படும் திறன் மற்றும் நல்வாழ்வையும் பாதுகாப்பதை உறுதி செய்வதே அடுத்த கட்டமாகும். அதற்கான அடிப்படை கட்டமைப்பு ஏற்கனவே உள்ளது. இனி செய்ய வேண்டியது, விடுபட்ட பராமரிப்பு அடுக்கைக் கட்டமைப்பது மட்டுமே.


ஆதில், மைக்ரோசேவ் கன்சல்டிங்கில் மூத்த மேலாளராகவும், மிஸ்ரா மூத்த மேலாளராகவும் உள்ளனர்.


Original article: India’s next social protection is care, not cash. -Arshi Aadil, Shobhit Mishra

Share:

அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் முதல் செயற்கை நுண்ணறிவு வரை: இந்தியாவின் டிஜிட்டல் சுகாதார முன்னெடுப்பிற்கான விலையை யார் கொடுக்கிறார்கள்? -அபிலாஷா செம்வால்

தொழில்நுட்பம் பிரச்சினை அல்ல: பிரச்சினை தரவு ஆளுமைகளில்தான் உள்ளது. அங்கு  நம்பிக்கைக்குப் பதிலாக இலக்குகள் முக்கியமாகின்றன; மக்களுடன் நேரடி தொடர்பு கொள்ளுவதற்குப் பதிலாக அளவீடுகள் முன்னிலைப்படுத்தபடுகின்றன. டிஜிட்டல் சுகாதாரம் வெற்றிபெற வேண்டுமெனில், சீர்திருத்தம் முதலில் தொழிலாளர்களிடமிருந்து தொடங்க வேண்டும். தேவையற்ற பதிவுகளை குறைக்க வேண்டும். டிஜிட்டல் உழைப்பிற்கான ஊதியத்தை வழங்க வேண்டும், தொடர்ந்து பயிற்சி அளிக்க வேண்டும். மேலும், செயற்கை நுண்ணறிவு தொடர்பான முடிவுகளை கேள்விக்குட்படுத்தக்கூடியதாக மாற்ற வேண்டும்.


ஒரு அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர் தனது மொபைல் போனைச் சரிபார்க்கிறார். அதில் செயல்திறன் எச்சரிக்கைகள், நிரப்பப்படாத பதிவுகள் மற்றும் நிலுவையில் உள்ள பதிவேற்றங்கள் போன்ற அறிவிப்புகள் வருகின்றன. வீட்டுக்கு வீடு சென்று பணியைத் தொடங்குவதற்கு முன்பே, கணினி அடிப்படையிலான வினாடி வினா (quiz) அமைப்பு அவரது  திறனை மதிப்பீடு செய்து விடுகிறது. இந்தியாவின் சுகாதாரத் தொழில்நுட்பப் புரட்சியானது தகவல் பலகைகள் மற்றும் வழிமுறைகளை அடிப்படையாகக் கொண்டிருந்தாலும், வீடு தேடி செல்லும் பெண்களே முக்கியமான நபர்களாக திகழ்கின்றனர்.


இந்தியாவில் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர்களும், 13 லட்சத்திற்கும் மேற்பட்ட அங்கன்வாடிப் பணியாளர்களும் இறுதிக்கட்ட சுகாதாரப் பணிகளை செய்துவருகின்றனர். இது உலகின் மிகப்பெரிய சமூக சுகாதார வலையமைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. கோவிட்-19 தடுப்பூசித் திட்டம், காசநோய் கண்காணிப்பு மற்றும் குழந்தைகளுக்கான நோய்த்தடுப்பு முயற்சிகள் அனைத்தும் அவர்களைச் சுற்றியே இருந்து வருகிறது. இன்றைய டிஜிட்டல் அரசியல் சூழலில், அவர்களின் பங்கு குறைக்கப்படவில்லை. மாறாக, அது மறுபரிணாமம் பெற்று, உரிய அங்கீகாரம் இன்றி  விரிவுபடுத்தப்பட்டுள்ளது.


ஒரு தரவுப் பலகை நோயாளிகளை பதிலீடு செய்யும்போது


ஆயுஷ்மான் பாரத் டிஜிட்டல் திட்டத்தின் (Ayushman Bharat Digital Mission) மூலம் 65 கோடிக்கும் மேற்பட்ட சுகாதார தரவு ஆவணங்கள் இணைக்கப்பட்டுள்ளன; மேலும், 80 கோடிக்கும் அதிகமான சுகாதார அடையாள எண்கள் வழங்கப்பட்டுள்ளன. eSanjeevani என்ற தேசிய தொலைமருத்துவ திட்டத்தின் மூலம் 39 கோடிக்கும் மேற்பட்ட ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன. கர்ப்பம், உணவுமுறை, தடுப்பூசி, மற்றும் நோய் கண்காணிப்பு போன்றவை அனைத்தும் மொபைல் பயன்பாடுகள் மூலம் பதிவுசெய்யப்படுகின்றன. வளங்கள் ஒதுக்கீடு மற்றும் அபாயங்களை முன்கூட்டியே கணிக்க செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence (AI)) பயன்படுத்தப்படுகிறது. இந்த கொள்கையின் தனிச்சிறப்பு அதன் செயல்திறனாகும். இருப்பினும், இதை செயல்படுத்துவதற்கு அதிக முயற்சி தேவைப்படுகிறது.


காகிதப் பணிகளை முற்றிலும் ஒழிப்பதற்குப் பதிலாக, டிஜிட்டல் மயமாக்கல் அதை மேலும் அதிகரித்துள்ளது. பல்வேறு செயலிகளில் தரவை பதிவு செய்வதுடன், அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் (ASHA) கையால் எழுதும் பதிவுப் புத்தகங்களையும் பராமரிக்க வேண்டிய சூழலை ஏற்படுத்தியுள்ளது. இணைய இணைப்பு சிக்கல்கள் காரணமாக, டிஜிட்டல் வேலைகள் இரவு நேரம் வரை தள்ளிப் போகின்றன. இத்தனை முயற்சிகளுக்குப் பிறகும், தாமதமான பதிவுகள் எச்சரிக்கைகளுக்கும் அல்லது ஊக்கத் தொகை இழப்பிற்கு முக்கியக் காரணமாக இருக்கலாம். இறுதியில், இந்த அமைப்பு பராமரிப்பு (care) சேவையைவிட, தரவு பதிவேற்றத்திற்கே முக்கியத்துவம் அளிக்கிறது.


பெருநகரங்களில்- தடையற்ற மின்சாரம், நம்பகமான இணைய வசதி மற்றும் ஆங்கில அறிவுதான் இந்த செயலியின் (app) வடிவமைப்புக்கு அடிப்படையாக உள்ளது. ஆனால், நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் அவ்வாறு நடக்கவில்லை. தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்படும்போது, செயலி உருவாக்குபவர்களோ அல்லது நிர்வாகிகளோ பொறுப்பேற்பதில்லை, மாறாக முன்கள பணியாளர்களே (Frontline workers) பொறுப்பேற்க வைக்கப்படுகிறார்கள். துல்லியமானதாக டிஜிட்டல் செயல்முறையில் பொறுப்புடைமை (accountability) போதுமான அளவு இல்லை.


இந்த இடைவெளியை செயற்கை நுண்ணறிவு மேலும் அதிகரிக்கிறது. அது ஒரு பகுதியை “செயல்திறன் குறைவானது” என்று சுட்டிக்காட்டுகிறது. ஆனால், சாதி சார்ந்த பிரச்சினைகள், இடம்பெயர்வு போக்குகள் அல்லது பொது நிறுவனங்களின் மீது உள்ள நம்பிக்கையின்மை போன்றவற்றை யாராலும் புரிந்து கொள்ள முடியாது. மீண்டும், மிகக் குறைந்த அதிகாரம் கொண்ட நபர்கள் — அதாவது பெண்கள் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் விளக்கத்தின் முழுச் சுமையையும் ஏற்க வேண்டிய நிலைக்கு ஆளாகிறார்கள்.


டிஜிட்டல் அரசு, ஊதியம் பெறாத பெண்கள்


சமூக அடிப்படையிலான சுகாதார சேவைகளில் தொழில்நுட்பம் இணைக்கப்பட்டதால் ஏற்பட்ட மாற்றங்களின் பெரும்பகுதியை பெண்களே சுமக்கின்றனர்.


அதிகாரப்பூர்வமாகத் தன்னார்வலர்கள் என வகைப்படுத்தப்பட்டாலும், செயற்பாட்டாளர்கள் மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்கள் பொதுவாகத் தங்களின் திறன்பேசிகள், இணைய இணைப்பு மற்றும் மின்சாரத்திற்குத் தாங்களே பணம் செலுத்துகின்றனர். படிப்படியாக அதிகரிக்கும் பணிகளின் வரம்பு இருந்தபோதிலும், ஊக்கத்தொகைகள் உட்பட, ஒரு குறிப்பிட்ட மாதாந்திர மதிப்பூதியம், 2025-ஆம் ஆண்டு பிறகும்கூட, ரூ.3,500 என்ற அளவிலேயே உள்ளது. இதன் பொருள், அரசு முறைசாரா தொழிலாளர்களின் (informal) உழைப்பை பயன்படுத்தி சுகாதாரத்தை டிஜிட்டல் மயமாக்குகிறது என்பதாகும்.


இந்தியாவும் முன்னெப்போதும் இல்லாத அளவிலான சுகாதாரத் தரவுகளைச் சேகரித்து வருகிறது. ஆனால், கீழ்மட்ட ஊழியர்கள் இந்தத் தரவுகள் எவ்வாறு புதுப்பிக்கப்படுகின்றன அல்லது பயன்படுத்தப்படுகின்றன என்பது பற்றி அறியாமல் இருக்கிறார்கள்.


சீர்திருத்தம் தேவைப்படும் இடம்


தொழில்நுட்பம் ஒரு பிரச்சனையல்ல: சில மாநிலங்களில், டிஜிட்டல் பணம் செலுத்துதல் வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தியுள்ளது. அதேநேரத்தில், தொலைமருத்துவம் அணுகலை விரிவுபடுத்தியுள்ளது. பிரச்சனை தகவல் பலகைகளில்தான் உள்ளது. அங்கு நம்பிக்கைக்குப் பதிலாக இலக்குகளும் நோக்கங்களும் முக்கியமாகின்றன.


டிஜிட்டல் சுகாதாரத்தின் இலக்கு வெற்றிபெற வேண்டுமானால், சீர்திருத்தம் உழைப்பிலிருந்து தொடங்க வேண்டும்: தேவையற்ற பதிவுகளைக் குறைத்தல், டிஜிட்டல் உழைப்பிற்கு ஊதியம் வழங்குதல், தொடர்ச்சியான பயிற்சி அளித்தல், மற்றும் செயற்கை நுண்ணறிவின் தேர்வுகளை கேள்விக்குட்படுத்தக்கூடியதாக  மற்ற வேண்டும். இல்லையெனில், டிஜிட்டல்மயமாக்கல் சுரண்டலாக மாறிவிடும், அப்போது ஏழைகளிடமிருந்து தரவுகளைச் சுரண்ட பெண்களின் ஊதியமற்ற உழைப்பு பயன்படுத்தப்படும்.


இந்தியாவின் சுகாதார அமைப்பின் வெற்றிக்கு, அரசு மற்றும் மக்களுக்கிடையில் இடைத்தரகர்கள்மீது இருக்கும் நம்பிக்கைதான் முக்கிய காரணமாக உள்ளது. அந்த நம்பிக்கை உடைந்துவிட்டால், அமைப்பு செயலிழந்து விடும்; ஆனால் தரவு மட்டும் அப்படியே இருக்கும். இந்தியாவில் டிஜிட்டல் சுகாதாரம் இருக்குமா என்பது பிரச்சனை அல்ல; மாறாக, அதனை நடைமுறைப்படுத்துவதற்கான மருத்துவ வல்லுநர்கள் இருப்பார்களா என்பதே உண்மையான பிரச்சினையாகும்.


அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதாரச் செயற்பாட்டாளர்கள் முதல் செயற்கை நுண்ணறிவு வரை, பொதுச் சுகாதாரத்தின் எதிர்காலம் தொழில்நுட்பத்தைவிட அரசியல் சூழலை சார்ந்தே உள்ளது. வெறும் செயல்திறன் மட்டும் முக்கியமா, அல்லது மனித மரியாதையுடன் செயல்திறனும் சேர்ந்து இருக்கவேண்டுமா என்ற கேள்வி முக்கியத்துவம் பெறுகிறது.


அபிலாஷா செம்வால், ASIA-வின் திட்டங்கள் மற்றும் செயல்முறைகளுக்கான துணை இயக்குநராகவும், குர்கானில் உள்ள SGT பல்கலைக்கழகத்தின் சட்டப் புலத்தில் உதவிப் பேராசிரியராகவும் உள்ளார். 


Original Link: From ASHA to AI: who pays the price of India’s digital health push?


Share:

தன்னார்வப் பராமரிப்புப் பணிகளை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியம். -ரெஞ்சினி ராஜகோபாலன்

 இந்தியாவின் 'தன்னார்வலர்கள்' என்று அழைக்கப்படும் பராமரிப்புப் பணியாளர்கள், உண்மையில் நமது சமூக நல அரசின் நிரந்தரத் தூண்களாகத் திகழ்கின்றனர்.


தேசிய திறன் தகுதி கட்டமைப்பு (National Skills Qualification Framework (NSQF)) திட்டங்களுடன் இணைந்த பயிற்சித் திட்டங்கள் மூலம், முதியோர் பராமரிப்பு (Geriatric), அடிப்படைப் பராமரிப்பு மற்றும் அது சார்ந்த திறன்களில் 1.5 லட்சம் பன்முகத் திறன் கொண்ட பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் வாயிலாக ஒரு 'வலிமையான பராமரிப்பு சூழலை' உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்  2026-27-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தியாவின் பராமரிப்புத் தேவைகள் அதிகரித்துவரும் நிலையில், இத்தகைய நடவடிக்கை காலத்திற்கு ஏற்றதும் மிக அவசியமானதும் ஆகும்.


இருப்பினும், இந்த நிதிநிலைத் திட்டம் ஒரு ஆழமான முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது: சான்றிதழ் பெற்ற புதிய பராமரிப்பு நிபுணர்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ள அதே வேளையில், இந்தியாவின் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் குழந்தை பராமரிப்பு அமைப்புகளை ஏற்கனவே முன்னின்று நடத்தும் 50 லட்சத்திற்கும் அதிகமான பெண்களைப் பற்றி அது போதுமான அளவு குறிப்பிடவில்லை. குறிப்பாக, நமது அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (Accredited Social Health Activists (ASHAs)), அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், மற்றும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் என அனைவரும் நாள்தோறும் அத்தியாவசிய பொதுச் சேவைகளை வழங்கி வருகின்றனர். இருந்தபோதிலும், அவர்கள் இன்றும் வெறும் "தன்னார்வலர்களாகவே" (Volunteers) வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அரசு தற்போது வலுப்படுத்த முயலும் அதே முறையான அமைப்பிலிருந்து அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.



ஒரு நிழல் தொழிலாளர் படை


குழந்தைக்கு உணவளிப்பதை உறுதி செய்யும் அங்கன்வாடி பணியாளர்கள் முதல், தொலைதூரக் கிராமங்களில் கர்ப்பிணிப் பெண்களைக் கண்காணிக்கும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) வரை, இந்தப் பெண்களே இந்தியாவின் நலத்திட்ட அமைப்பின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். இவர்களது பணி அரசுக்கு மிக அவசியமானது மற்றும் தொடர்ச்சியானது என்றாலும், முறையான பணி ஒப்பந்தம், ஊதியத்துடன் கூடிய விடுப்பு அல்லது மகப்பேறு பலன்கள் எதுவுமின்றி, மிகக்குறைந்த மாதாந்திர கௌரவ ஊதியத்திற்காகப் பாதுகாப்பற்ற சூழலில் இவர்கள் பணியாற்றுகின்றனர். சில மாநிலங்கள் வழங்கும் ஊதிய உயர்வு, பணிக்கொடை அல்லது ஆயுஷ்மான் பாரத் போன்ற தேசியத் திட்டங்களில் இவர்களை இணைப்பது போன்ற நடவடிக்கைகள் இவர்களுக்குக் கிடைத்தாலும், அவை இந்தியாவின் பராமரிப்புப் பொருளாதாரத்தில் (Care Economy) உள்ள அடிப்படை முரண்பாட்டைத் தீர்க்கவில்லை. அதாவது, அத்தியாவசிய பொதுச் சேவைகளை வழங்கப் பெண்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பெரும் உழைப்பாளர் கூட்டத்தை அரசு நம்பியிருக்கிறது. ஆனால், முறையான வேலைவாய்ப்பில் வழங்கப்படும் சட்டப்பூர்வப் பாதுகாப்புகளை அவர்களுக்கு அளிக்கத் தவறி, அவர்களை வெறும் "கௌரவப் பணியாளர்கள்" (Honorary Workers) என்று மட்டுமே வகைப்படுத்துகிறது.


பாலின அடிப்படையிலான பணி


இந்த முரண்பாடானது பராமரிப்புப் பணிகள் குறித்த ஆழமான சமூக விதிமுறைகளிலிருந்து உருவாகிறது. இந்தியாவில் நிலவும் 'பராமரிப்பு அபராதம்' (Care Penalty) என்பது வெறும் சமூகவியல் கோட்பாடு மட்டுமல்ல, அது புள்ளிவிவரரீதியான உண்மை என்கின்றனர். பொருளாதார ஆய்வு 2025–26 (Economic Survey 2025–26) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 2024 நேரப் பயன்பாட்டு ஆய்வின் (Time Use Survey (TUS)) தரவுகள், இந்தியப் பெண்களே முதன்மையான பராமரிப்பாளர்களாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. 15 முதல் 59 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 41% பேர் நாளொன்றுக்கு 140 நிமிடங்களை வீட்டுப் பராமரிப்புப் பணிகளுக்காகச் செலவிடுகின்றனர். ஆனால், ஆண்களில் வெறும் 21.4% பேர் மட்டுமே இதே பணிக்காகச் சுமார் 74 நிமிடங்களைச் செலவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் நலத்திட்ட அமைப்பும் இதே போன்ற ஒரு முறையையே பின்பற்றுகிறது. பராமரிப்புப் பணிகளை 'தன்னார்வலர்கள்' என்று அழைக்கப்படும் பெண்களிடம் ஒப்படைப்பதன் மூலம், இப்பணிகள் ஊதியத்திற்குரிய தகுதியான வேலை என்பதைவிட, அவை பெண்களின் இயல்பான வீட்டுக்கடமை என்ற நீண்டகால நம்பிக்கையையே அரசு சார்ந்துள்ளது. இத்தகைய பராமரிப்புப் பணிகள் பெண்களுக்கு இயல்பானது எனக் கருதப்படுவதால், அவை குறைந்த ஊதியம் கொண்ட மற்றும் முறைசாரா பணிகளாகவே நடத்தப்படுகின்றன. இது ஒரு நச்சுச் சுழற்சியை (Vicious cycle) உருவாக்குகிறது. அதாவது, பராமரிப்புப் பணி ஒரு திறன் சார்ந்த உழைப்பாக அங்கீகரிக்கப்படாதபோது, அதற்கான முறையான ஊதியத்தை வழங்க வேண்டிய அழுத்தம் குறைகிறது, இதனால் பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற வேலைகளில் முடங்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையில், தற்போதைய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் புதிய பராமரிப்புப் பணியாளர்கள் குழுவை உருவாக்குவதில் காட்டிய ஆர்வம், ஏற்கனவே இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை முறைப்படுத்துவதற்கான தெளிவான திட்டங்கள் இல்லாததையே காட்டுகிறது. இந்தத் தொழிலாளர்கள் ஏற்கனவே உணர்வுப்பூர்வமான ஈடுபாடு, கள ஒருங்கிணைப்பு மற்றும் சமூகத் தேவைகள் குறித்த ஆழமான புரிதலுடன் கூடிய சிக்கலான மற்றும் பன்முகத்திறன் கொண்ட பணிகளைச் செய்து வருகின்றனர். எனவே, ஏற்கனவே இத்தகைய அத்தியாவசியப் பணிகளைச் செய்து வருபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு வேலை பாதுகாப்பை வழங்கவும் அரசு ஏன் முயற்சிக்கவில்லை என்கிற கேள்வி எழுகிறது.


இந்தியாவின் 'தன்னார்வலர்கள்' என்று அழைக்கப்படும் பராமரிப்புப் பணியாளர்கள், உண்மையில் நாட்டின் சமூகநல அரசின் நிரந்தரத் தூண்களாகத் திகழ்கின்றனர். இந்த அமைப்புகளைத் தாங்கிப் பிடிக்கும் பெண் பணியாளர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதும், அவர்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லாததும், அவர்கள் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத நிலையில் இருப்பதும் நீடித்தால், இந்தியா ஒரு உலகளாவிய சுகாதார வல்லரசாக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய முடியாது. இந்தியாவின் பராமரிப்புப் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டுமானால், அதற்குப் போதிய நிதி முதலீடு செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அந்தப் பணியாளர்களைப் பற்றிய சமூகத்தின் அணுகுமுறையிலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமாகிறது. 


பராமரிப்புப் பொருளாதாரத்தை மறுவடிவமைத்தல் 


பராமரிப்புப் பணியாளர்களை வெறும் 'தன்னார்வலர்கள்' (Volunteers) என்று அழைப்பதைக் கடந்து இந்தியா அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும் என்கின்றனர்.  உத்தரப் பிரதேச அரசுக்கு எதிரான தரம் சிங் (Dharam Singh & Anr. vs State of U.P. & Anr.) வழக்கில் 2025-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், ஒரு நிறுவனத்திற்குத் தேவையான அத்தியாவசியமான மற்றும் தொடர்ச்சியான பணிகளைச் செய்பவர்களை எப்போதும் தற்காலிகப் பணியாளர்களாகவே கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவின் தவிர்க்க முடியாத மற்றும் இடைவிடாத பணிகளைச் செய்துவரும் தன்னார்வப் பராமரிப்புப் பணியாளர்களுக்கு, அவர்களின் கௌரவப் பதவிகளை நிரந்தரப் பணிகளாக மாற்றக் கோரும் கோரிக்கைக்கு இந்தத் தீர்ப்பு வலுவான ஆதரவை வழங்குகிறது.


திறன் மேம்பாட்டிற்கான தற்போதைய நிதி ஒதுக்கீடுகளுடன் இணைந்து, இந்தியாவின் பராமரிப்புப் பணியாளர்களின் வேலைவாய்ப்பு விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வதற்கும், அவர்களுக்கு வழங்கப்படும் 'கௌரவ ஊதியத்திற்கு' (honorariums) பதிலாக முறையான ஊதியம் மற்றும் பணி ஒப்பந்தங்களை உறுதி செய்யும் மாறுதல் கட்டமைப்புகளை உருவாக்க அரசை ஊக்குவிக்க வேண்டும். இதற்கான முதல் படியாக, முன்மொழியப்பட்டுள்ள தேசிய திறன் தகுதிக் கட்டமைப்பு (National Skills Qualification Framework (NSQF)) சார்ந்த திட்டங்களை அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (Accredited Social Health Activists (ASHA)) மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் விரிவுபடுத்துவது அவசியமானதாகும்.


இந்தத் தொழிலாளர்கள் கண்ணியமான வாழ்விற்கும் தங்களுக்கான அங்கீகாரத்திற்கும் நாடு தழுவிய அளவில் போராட்டங்களைப் பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றனர். இப்போது, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation (ILO)) 'கண்ணியமான பராமரிப்புப் பணிக்கான 5R கட்டமைப்பு' (5R Framework for Decent Care Work) கொள்கையின் இறுதி இரண்டு வாக்குறுதிகளான 'வெகுமதி' மற்றும் 'பிரதிநிதித்துவம்' ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அயராது உழைக்கும் நமது பராமரிப்புப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியமும், வேலைவாய்ப்பு மற்றும் கொள்கை முடிவுகளில் உண்மையான அதிகாரமும்  வழங்கப்பட வேண்டியது அவசியமாகிறது. 


ரெஞ்சினி ராஜகோபாலன் ஒரு வழக்கறிஞர் மற்றும் JustJobs Network அமைப்பில் உள்ள பாலின பகுப்பாய்வு மையத்தின் ஆராய்ச்சித் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.


Original article :  The need to recognise ‘volunteer’ care work -Renjini Rajagopalan

Share: