Showing posts with label Care Economy. Show all posts
Showing posts with label Care Economy. Show all posts

இந்தியாவின் வளர்ச்சிப் பாதையில் அதிகப்படியான பெண்களின் பணிப்பங்களிப்பு அவசியம். - கே. சந்திரசேகர், நரேன் பிரசாத்

பெண்களின் பணித்திறனை முழுமையாகப் பயன்படுத்துவதற்கு, அரசாங்கம் பராமரிப்புப் பொருளாதாரத்தில் முதலீடு செய்ய வேண்டும்.


உலகளாவிய பொருளாதார நிச்சயமற்ற சூழலிலும் வலுவான வளர்ச்சியைத் தக்கவைத்துக்கொண்டு, இந்தியப் பொருளாதாரம் குறிப்பிடத்தக்க மீள்திறனை வெளிப்படுத்தியுள்ளது.


சர்வதேச நாணய நிதியத்தின் (International Monetary Fund (IMF)) உலகப் பொருளாதாரக் கண்ணோட்ட அறிக்கையின்படி (ஏப்ரல் 2026), இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 2026-27-ஆம் நிதியாண்டில் 6.5 விழுக்காடு வளர்ச்சியடையும் என்று கணிக்கப்பட்டுள்ளது. மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின்கீழ் (Ministry of Statistics and Programme Implementation (MoS&PI)) இயங்கும் தேசிய புள்ளியியல் அலுவலகத்தின் (National Statistical Office (NSO)) தரவுகளும், இந்தியப் பொருளாதாரம் 2021 மற்றும் 2025-ஆம் ஆண்டுகளுக்கு இடையே 8.56 விழுக்காடு கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதத்தை (Compound Annual Growth Rate (CAGR)) பதிவு செய்துள்ளதைக் காட்டுகின்றன. இது கொரோனா பெருந்தொற்றுக்குப் பிந்தைய வலுவான மீட்சியையும், தொடர்ச்சியான பொருளாதார வளர்ச்சி வேகத்தையும் பிரதிபலிக்கிறது.


இந்த ஒட்டுமொத்தப் பொருளாதாரக் குறியீடுகள் (Macroeconomic indicators) ஊக்கமளிப்பதாக இருந்தாலும், ஒரு முக்கியமான கேள்வி எழுப்பப்படுகிறது. இந்தப் பொருளாதார வளர்ச்சி என்பது தகுந்த வேலைவாய்ப்புகளாக மாறுகிறதா? தங்களுக்குத் தேவையான தரமான வேலைகளைப் பெறுவதில் தொடர்ந்து தடைகளை எதிர்கொண்டு வரும் பெண்கள் மற்றும் படித்த இளைஞர்களுக்கு இந்தச் சிக்கல் மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது.



2025-ஆம் ஆண்டின் காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (Periodic Labour Force Survey (PLFS)) அறிக்கை, ஊக்கமளிக்கும் அறிகுறிகளையும், அதேநேரத்தில் இன்னும் செய்யவேண்டிய முக்கியமான வேலைகள் இருக்கின்றன என்ற நினைவூட்டலையும் எவ்வித சந்தேகமுமின்றி தெளிவாகக் காட்டுகிறது.


பெண்களின் பணிப்பங்களிப்பு


பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour Force Participation Rate (LFPR)) 2022-ஆம் ஆண்டில் இருந்த 25.4 விழுக்காட்டில் இருந்து 2025-ஆம் ஆண்டில் 30.7 விழுக்காடாக அதிகரித்துள்ளது. அதேபோல், தொழிலாளர் மக்கள்தொகை விகிதமும் (Worker Population Ratio (WPR)) 2022-ஆம் ஆண்டில் இருந்த 24.6 விழுக்காட்டில் இருந்து 2025-ஆம் ஆண்டில் 29.8 விழுக்காடாக உயர்ந்துள்ளது. முன்னெப்போதையும்விட இப்போது அதிக எண்ணிக்கையிலான பெண்கள் வேலை செய்கிறார்கள் அல்லது தீவிரமாக வேலை தேடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது.


இந்த முன்னேற்றம் இருந்தபோதிலும், நகர்ப்புறங்களை (22.2 விழுக்காடு) ஒப்பிடும்போது கிராமப்புறங்களில் பெண்களின் பங்கேற்பு (34.6 விழுக்காடு) மிக அதிகமாக உள்ளது. இது வேலைவாய்ப்புச் சந்தையில் நகர்ப்புறப் பெண்களின் பங்கு இன்னும் குறைவாகவே இருப்பதைக் காட்டுகிறது. இளைஞர்கள் இடையே இந்த நிலைமை இன்னும் கவலைக்குரியதாக உள்ளது. நகர்ப்புறங்களில் 15 முதல் 29 வயதுக்குட்பட்ட இளம் பெண்களின் வேலையின்மை விகிதம் 18.9 விழுக்காடாக உள்ளது. இது நகர்ப்புற ஆண்களின் வேலையின்மை விகிதமான 11.8 விழுக்காட்டைவிட மிக அதிகமாகும்.


இந்தியாவின் கிராமப்புறங்களில், பணியில் ஈடுபட்டுள்ள பெண்களில் சுமார் 70.7 விழுக்காட்டினர் சுயதொழில் செய்பவர்களாக உள்ளனர். வெறும் 9.3 விழுக்காட்டினர் மட்டுமே வழக்கமான நிலையான ஊதியம் பெறும் வேலைகளில் உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் வேளாண்மை, குடும்பத் தொழில்கள் அல்லது வீட்டில் இருந்தபடியே செய்யும் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.



சுயதொழில் என்பது வாழ்வாதாரத்திற்கான ஒரு முக்கிய ஆதாரமாக இருந்தாலும், இது பெரும்பாலும் குறைந்த உற்பத்தித் திறன், நிலையற்ற வருமானம் மற்றும் வளர்ச்சி வாய்ப்புகள் குறைவாக உள்ள வேலைகளுடனேயே தொடர்புடையதாக இருக்கிறது. எனவே, பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு விகிதம் அதிகமாக இருப்பதாலேயே, அவர்களுக்கு நல்ல தரமான வேலைகள் கிடைக்கின்றன என்றும் முடிவு செய்துவிட முடியாது.


கல்வித்துறையில், குறிப்பாக பெண் குழந்தைகள் மற்றும் இளம் பெண்களின் கல்வியில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. மேல்நிலைக் கல்வி அளவில் (Higher secondary level), பெண்களின் ஒட்டுமொத்த சேர்க்கை விகிதம் (Gross Enrolment Ratio (GER)) 2020-21-ஆம் ஆண்டில் 54.6 விழுக்காடாக இருந்தது, இது 2024-25-ஆம் ஆண்டில் 60.9 விழுக்காடாக உயர்ந்துள்ளது. இது ஆண்களின் சேர்க்கை விகிதத்தைவிட (56.2 விழுக்காடு) அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. பத்தாம் வகுப்பு முடித்த பிறகு ஒரு மாணவனைவிட ஒரு மாணவி மேல்நிலைக் கல்விக்குத் தொடர்வதற்கான வாய்ப்பு புள்ளிவிவரப்படி தற்போது அதிகமாக உள்ளது.


அதேபோல், உயர்கல்வியில் பெண்களின் மொத்தச் சேர்க்கை விகிதம் (FGER), 2020-21-ஆம் ஆண்டில் 27.9 விழுக்காடாக இருந்ததில் இருந்து, 2022-23-ஆம் ஆண்டில் 30.2 விழுக்காடாகத் தற்காலிகமாக உயர்ந்துள்ளது.


முன்பைவிட இப்போது அதிகமான மாணவிகள் உயர்கல்வியில் சேர்ந்து படித்து வருகிறார்கள் என்பதை இந்த புள்ளிவிவரங்கள் காட்டுகின்றன. ஆனால், இப்போதுள்ள முக்கிய சிக்கல் என்னவென்றால், இந்த கல்வி அவர்களுக்குச் சிறந்த வேலைவாய்ப்புகளைப் பெற்றுத் தருவதை உறுதி செய்வதுதான். பெண்களின் கல்வித் தரம் உயர்ந்து வந்தபோதிலும், நகர்ப்புறங்களில் வேலைக்குச் செல்லும் பெண்களின் பங்களிப்பு இன்னும் குறைவாகவே உள்ளது. மேலும், இளம்பெண்களிடையே வேலைவாய்ப்பின்மையும் இன்னும் அதிகமாகவே நீடிக்கிறது. இது கல்விக்கும் வேலைவாய்ப்புக்கும் இடையே உள்ள இடைவெளி தொடர்ந்து அதிகரித்து வருவதையே காட்டுகிறது.



இந்தச் சவாலை முன்கூட்டியே உணர்ந்த ஒன்றிய அரசு, தங்களின் காலமுறை தொழிலாளர் சக்தி கணக்கெடுப்பு (PLFS) அறிக்கை வெளியாவதற்கு முன்பாகவே, 2026-27 ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் நிதி ஆயோக்கின்கீழ் (NITI Aayog) 'கல்வி முதல் வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவோர் வரை' (Education-to-Employment-and-Enterprise (EEE)) என்ற குழுவை அமைப்பதாக அறிவித்தது. கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழில்முனைவு ஆகியவற்றுக்கு இடையேயான தொடர்புகளை வலுப்படுத்தவும், செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட வளர்ந்து வரும் புதிய தொழில்நுட்பங்கள் எதிர்கால வேலைவாய்ப்புகளை எவ்வாறு பாதிக்கும் என்பதைப் பற்றி ஆராயவும் இந்தக் குழு தனது முதல் கூட்டத்தை மே மாதம் 22-ஆம் தேதி நடத்தியது.


இந்த முயற்சி, கல்வி கற்பதற்கான வாய்ப்புகளை அனைவருக்கும் விரிவுபடுத்துவது என்பது முதல்படி மட்டுமே என்பதைக் காட்டுகிறது. கல்வியின் உண்மையான பலன் என்பது மக்கள் வருமானம் ஈட்டக்கூடிய நல்ல வேலைகளில் சேருவதற்கு உதவுவதிலும், அதேநேரத்தில் பெண்களின் திறமைகள் தற்போதைய வேலைவாய்ப்புச் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப இருப்பதை உறுதி செய்வதிலும்தான் உள்ளது.


பெண்களின் பங்கேற்பை ஊக்குவித்தல்


கல்வித் தகுதிக்கும் வேலைவாய்ப்பில் பங்கேற்பதற்கும் இடையே உள்ள இடைவெளியை, குறிப்பாகப் பெண்களின் விஷயத்தில், வேலைவாய்ப்புகள் மட்டுமே முழுமையாக விளக்கிவிட முடியாது. அதிகளவிலான பெண்கள் கல்வி கற்று வந்தபோதிலும், வேலைவாய்ப்பில் அவர்களின் பங்கேற்பு இன்னும் குறைவாகவே உள்ளது. குடும்ப பராமரிப்புப் பொறுப்புகள், நெகிழ்வான வேலை நேர வசதி இல்லாமை, பாதுகாப்புப் பயங்கள் மற்றும் போக்குவரத்துச் சிக்கல்கள் போன்ற பிற காரணிகளும் பெண்கள் வேலைக்குச் செல்வதற்கு ஒரு தடையாக இருக்கலாம்.


ஊதியமில்லாத வீட்டுப் பராமரிப்புப் பணிகளே இதற்கான ஒரு முக்கியக் காரணமாகும். ஏனெனில், இது பெண்கள் வேலைவாய்ப்புச் சந்தையில் நுழைவதையும், தொடர்ந்து நீடிப்பதையும் மற்றும் வளர்ச்சியடைவதையும் பாதிக்கிறது. உலகம் முழுவதும், குடும்பங்களைப் பராமரிக்கும் பெரும்பாலான பொறுப்புகளைப் பெண்களே தொடர்ந்து சுமந்து வருகின்றனர்.

சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organization (ILO)) கூற்றுப்படி, உலகெங்கிலும் ஊதியமில்லாத அனைத்துப் பராமரிப்புப் பணிகளில் நான்கில் மூன்று பங்குக்கும் அதிகமான (75%-க்கும் மேல்) வேலைகளைப் பெண்களே செய்கிறார்கள். மேலும், இந்த ஊதியமில்லாத பராமரிப்புப் பொறுப்புகளின் காரணமாகவே உலகம் முழுவதும் சுமார் 70.8 கோடிப் பெண்கள் வேலைக்குச் செல்ல முடியாத நிலையில் இருக்கின்றனர். இந்தப் பிரச்சனை தற்போது இந்தியாவின் நகர்ப்புறங்களிலும் மிக முக்கியமான ஒன்றாக உருவெடுத்து வருகிறது.


2024-ஆம் ஆண்டில் மேற்கொள்ளப்பட்ட ‘நேரப் பயன்பாட்டு ஆய்வின்படி (Time Use Survey 2024), பெண்கள் ஒரு நாளைக்குச் சராசரியாக 289 நிமிடங்களை ஊதியமில்லாத வீட்டு வேலைகளுக்காகவும், 137 நிமிடங்களை குடும்ப உறுப்பினர்களைப் பராமரிப்பதற்காவும் செலவிடுகிறார்கள் என்று தெரிவித்துள்ளது. இன்று பல குடும்பங்கள் தங்களது கூட்டுக்குடும்பங்களை விட்டுப் பிரிந்து, தனிக்குடித்தனமாக வாழ்கின்றன. இதன் விளைவாக, வேலைக்குச் செல்லும் பெற்றோர்கள், குறிப்பாகத் தாய்மார்கள், குழந்தைகளையும் பெரியவர்களையும் பராமரிக்கும் சுமையைத் தங்களின் தோள்களிலேயே சுமக்க வேண்டியுள்ளது. இந்த ஊதியமில்லாத பராமரிப்புப் பணிகளைப் பெண்களே முக்கியமாகச் செய்யும் வரை, வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தித் திறனில் ஏற்படும் முன்னேற்றம் என்பது சமமற்றதாகவும், நிலையற்றதாகவுமே இருக்கும் என்றும் கூறப்படுகிறது.


சுவீடன், டென்மார்க் மற்றும் ஜப்பான் போன்ற நாடுகள் குழந்தைப் பராமரிப்பு மற்றும் முதியோர் பராமரிப்புச் சேவைகளை உள்ளடக்கிய பராமரிப்புப் பொருளாதாரத்தில் (Care economy) முதலீடு செய்வதன் மூலம் இந்தச் சிக்கலை எதிர்கொள்கின்றன.


இந்தியாவின் மக்கள்தொகையும் நிதிநிலையும் இந்த நாடுகளிலிருந்து வேறுபட்டதாக இருந்தாலும், மலிவான மற்றும் எளிதில் கிடைக்கக்கூடிய பராமரிப்புச் சேவைகள், பெண்கள் வேலைக்குச் செல்வதை அதிகரிக்க உதவும் என்பதை இந்த நாடுகளின் நடவடிக்கைகள் காட்டுகின்றன.




பெண்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை உருவாக்குவது மட்டுமல்ல, அந்த வேலைவாய்ப்புகளைப் பெண்கள் தடையின்றிப் பெறுவதை உறுதி செய்வதும் ஒரு சவாலாக உள்ளது. பெண்கள் பெற்றுள்ள கல்வி வளர்ச்சியை நாட்டின் பொருளாதார வளர்ச்சியாக மாற்ற வேண்டுமானால், பராமரிப்புப் பொருளாதாரத்தில் முதலீடு செய்வது இந்தியா செய்யக்கூடிய மிகச்சிறந்த முதலீடுகளில் ஒன்றாக இருக்கும் என்கின்றனர்.


அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி


இந்தியாவின் பொருளாதார எதிர்காலம் மிகவும் வலுவாக உள்ளது. இருப்பினும், இந்தியாவின் அடுத்தகட்ட வளர்ச்சியானது பொருளாதாரம் எவ்வளவு வேகமாக வளர்கிறது என்பதை மட்டும் பொறுத்தது அல்ல. மாறாக, வாய்ப்புகள் அனைவருக்கும் எவ்வளவு நியாயமான முறையில் பகிர்ந்தளிக்கப்படுகின்றன என்பதையும் பொறுத்தே அமையும். பொருளாதார வளர்ச்சி, முதலீடுகள் மற்றும் கட்டமைப்புச் சீர்திருத்தங்கள் ஆகியவை நாட்டிற்கு ஒரு வலுவான அடித்தளத்தை வழங்குகின்றன. ஆனால், கல்வித்துறையில் இந்தியா அடைந்துள்ள முன்னேற்றத்தை உற்பத்தித் திறன் கொண்ட வேலைவாய்ப்புகளாக மாற்றுவதும், நாட்டின் தொழிலாளர் சக்தியில் அதிகமான பெண்கள் முழுமையாகப் பங்கேற்க உதவுவதும் தற்போதைய மிக முக்கிய முன்னுரிமைகளாகும்.


பராமரிப்புப் பொருளாதாரத்தில் (Care economy) முதலீடு செய்வது என்பது வெறும் சமூக நலத்திட்டம் மட்டுமல்ல. அது மனிதவளத்தை மேம்படுத்தவும், உற்பத்தித் திறனை அதிகரிக்கவும் மற்றும் இந்தியாவின் இலக்கான அனைவரையும் உள்ளடக்கிய, பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு ஆதரவளிக்கவும் கூடிய ஒரு சிறந்த பொருளாதார உத்தி ஆகும்.


சந்திரசேகர், மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தில் (MoS&PI) இணை இயக்குநராகப் பணியாற்றுகிறார்; பிரசாத், சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (ILO) ஆராய்ச்சி மற்றும் புள்ளியியல் துறையில் கல்வி மற்றும் பயிற்சிக்கான தலைவராக உள்ளார்.


Original Link: India’s growth story needs more women at work.


Share:

சீனாவுடனான அணுகுமுறையில் இந்தியா தளர்வு காட்டுவது, சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான நடவடிக்கையாகும்.

உள்நாட்டு உற்பத்திச் சூழலமைப்பை வலுப்படுத்த வேண்டும். அத்துடன், மதிப்புக்கூட்டலை அதிகரிக்கவும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளவும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். இதற்கு ஒரு கவனமான மற்றும் சீரான அணுகுமுறை தேவைப்படுகிறது.


2019-ஆம் ஆண்டில், 15 ஆசிய-பசிபிக் நாடுகளை உள்ளடக்கிய வர்த்தக ஒப்பந்தமான பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டாண்மையில் (Regional Comprehensive Economic Partnership (RCEP)) சேர வேண்டாம் என இந்தியா முடிவு செய்தது. சில மாதங்களுக்குப் பிறகு, 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மத்திய அரசு பத்திரிக்கை அறிக்கை 3 மூலம் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையைத் திருத்தியது. அதன்படி, இந்தியாவுடன் தரை எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் முதலீடுகளுக்கு அரசாங்க ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டது. இந்த இரண்டு முடிவுகளும், ஓரளவிற்கு, சீனா மீதான கவலைகளால் ஏற்ப்பட்டன. ஆனால், சீனா உடனான உறவில் அன்று முதல் நிலவும் தெளிவற்றத்தன்மை நிலவி வந்த சூழலிலும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள்   வலுப்பெற்றுள்ளன. 2025-26-ஆம் ஆண்டுகளில் சீனாவிலிருந்து இறக்குமதி $131 பில்லியன்த் தொட்டது. மேலும், இந்தியாவின் எண்ணெய் அல்லாத பொருட்களின் வர்த்தகப் பற்றாக்குறையில் ஏறக்குறைய பாதிக்கு அந்நாடு தற்போது காரணமாக உள்ளது. இருப்பினும், சீனாவிலிருந்து வரும் அந்நிய நேரடி முதலீடு மிகக் குறைவாகவே உள்ளது. 2000-ஆம் ஆண்டு முதல், இந்தியாவிற்கான முதலீட்டு வரவு வெறும் $2.5 பில்லியன் ஆக மட்டுமே உள்ளது. நாட்டில் மின்னணு சாதனங்கள் மற்றும் திறனபேசிகளை உற்பத்தி செய்வதற்காக, டிக்சன் டெக்னாலஜிஸ் மற்றும் விவோ மொபைல் நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு கூட்டு முயற்சிக்கு அரசாங்கம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இது ஒரு சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.


கடந்த சில ஆண்டுகளில், பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து விலகி தங்கள் முதலீடுகளைப் பன்முகப்படுத்த ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன. இருப்பினும், இந்த 'சீனா+1' உத்தியால் இந்தியா முக்கிய பயனாளியாக இல்லை. வியட்நாம் போன்ற நாடுகள் அதிகப் பயனடைந்துள்ளன. சீனாவிலிருந்து வர்த்தகத்தைத் திசைதிருப்புவதன் மூலம் பயனடைய, 2023-24-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இரண்டு தேர்வுகளை முன்வைத்தது: அவை ஒன்று, அதன் விநியோகச் சங்கிலிகளுடன் ஆழமாக ஒருங்கிணைவது அல்லது சீனாவிலிருந்து அதிக அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதாகும். இந்த ஆய்வறிக்கை பின்னர் தேர்வை நோக்கியே சாய்ந்தது. இந்தச் சிந்தனைக்கு ஏற்ப, அதிக முதலீட்டு வரவுகளை எளிதாக்கும் வகையில், இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளிலிருந்து வரும் முதலீடுகளுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மாற்றங்களுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. டிக்சன் டெக்னாலஜிஸ் மற்றும் விவோ மொபைல் இடையேயான கூட்டு முயற்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், மின்கலன்கள், மற்றும் திரைத் தொகுப்புகள் (display assemblies) உள்ளிட்டவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் 85 வகையான பொருட்களுக்கான சுங்கவரி விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.


சீனா உலகளாவிய உற்பத்தி விநியோகச் சங்கிலியுடன் (Global Manufacturing Supply Chain) முக்கிய இடத்தில் உள்ளது  இந்த உண்மையை புறக்கணிக்கமுடியாது. மேலும், சீனா அந்நிய நேரடி முதலீட்டின் முக்கிய ஆதார நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாடு (United Nations Conference on Trade and Development (UNCTAD)) வெளியிட்டுள்ள உலக முதலீட்டு அறிக்கையின்படி, சீனாவின் வெளிநாட்டு முதலீடுகள் தற்போது அதிக இலக்கு நோக்கியதாக மாறியுள்ளன. குறிப்பாக புதிய தொழிற்சாலைத் திட்டங்கள், உற்பத்தித் துறை, எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய மூலப்பொருட்கள் போன்ற துறைகளில், குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளிலும், தெற்கு–தெற்கு முதலீட்டு வழித்தடங்களிலும் அதிக கவனம் செலுத்தப்படுகின்றன. இந்தியாவுக்கு தேசிய பாதுகாப்பு மற்றும் ராஜதந்திரரீதியாக நியாயமான கவலைகள் இருந்தாலும், அதே நேரத்தில் பொருளாதாரத் தேவைகளும் உள்ளன. எனவே, பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன் போன்ற இரண்டிற்கும் இடையே சமநிலையான அணுகுமுறையைப் பின்பற்றுவது முக்கியமான நடவடிக்கையாகும். உள்நாட்டு உற்பத்திச் சூழலமைப்பை வலுப்படுத்த வேண்டும். அதனுடன், மதிப்புக்கூட்டலை அதிகரிக்கவும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளவும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். இதை செய்ய  ஒரு கவனமான மற்றும் சீரான அணுகுமுறை தேவைப்படுகிறது.


Original Link: India’s easing up on China is the right move at the right time.

Share:

இந்தியாவில் 'கோல்டிலாக்ஸ் பொருளாதாரம்' (Goldilocks economy) என்றால் என்ன? - பிரியா குமாரி சுக்லா

முக்கிய அம்சங்கள்:


QuantEco Research நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் செய்த சூழ்நிலை பகுப்பாய்வு படி, 2026–27-ஆம் ஆண்டில் எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு சுமார் $80 அளவில் இருந்தால், அதன் தாக்கம் மிகச் சிறியதாகவே இருக்கும். ஆனால் விலை இதைவிட உயர்ந்தால், அதன் விளைவுகள் பாதிப்பு “மிகச் சிறியதாகவே” இருக்கும். ஆனால், எண்ணெய் விலை அதிகமாக உயர்ந்தால், அதன் தாக்கம் “நேரியல் அல்லாததும் மற்றும் பரந்த அடிப்படையிலானதாக”  (non-linear and broad based) மாறும். குறிப்பாக, 2026-27-ல் எண்ணெய் விலை ஒரு பேரலுக்கு $100 ஆக சராசரியாக இருந்தால், ரூபாய் மதிப்பு ஒரு $98.5 வரை பலவீனமடையலாம் என்று தெரியவந்துள்ளது.


        பொருளாதாரத்தில் ‘Goldilocks period’ (அல்லது Goldilocks economy) என்பது, பொருளாதாரம் "இன்னும் கொஞ்சம் சரியாக" (just right) இருக்கும் ஒரு சிறந்த காலகட்டத்தைக் குறிக்கிறது. இது குழந்தைக் கதையான Goldilocks and the Three Bears-லிருந்து வந்த பெயர். இது "மிகவும் சூடாகவும் இல்லை, மிகவும் குளிர்ச்சியாகவும் இல்லை — சரியாக இருக்கிறது" என்ற நிலையாகும். இத்தகைய காலம் பங்குச் சந்தை, முதலீட்டாளர்கள் மற்றும் பொதுவாக பொருளாதாரத்திற்கு மிகவும் சாதகமானதாகக் கருதப்படுகிறது. 


இந்திய பொருளாதாரம் சமீபத்தில் சிறந்த வளர்ச்சி விகிதங்களை பதிவு செய்துள்ளது. பழைய மற்றும் புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி கணக்கீட்டிலும். 2025-26-ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 6.7% இருந்த வளர்ச்சி, ஜூலை–செப்டம்பர் 2025 காலத்தில் 8.4% ஆக உயர்ந்து, 2025-ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் 7.8 சதவீதமாக நிலைபெற்றது. பணவீக்கம் (Inflation) இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்த 4% நடுத்தர இலக்கத்திற்குக் கீழே சீராக உள்ளது. 2024-ஐ அடிப்படை ஆண்டாகக் கொண்ட புதிய நுகர்வோர் விலை குறியீட்டின் (Consumer Price Index (CPI)) படி, ஜனவரியில் பணவீக்கம் 2.75%-ஆக இருந்தது. ஆனால், இந்த  நேர்மறையான வளர்ச்சி-பணவீக்க சமநிலை தற்போது ஆபத்தில் உள்ளது. வலுவான வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கம் என்ற ‘Goldilocks’ நிலை புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி மற்றும் நுகர்வோர் விலை குறியிட்டு தரவுகளிலும் தொடர்கிறது. ஆனால், அதிகரிக்கும் கச்சா எண்ணெய் விலை மற்றும் எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இது பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது என்று Nomura நிறுவனத்தின் பொருளாதார நிபுணர்கள் சோனல் வர்மா மற்றும் அவுர்தீப் நந்தி கூறினர்.


உங்களுக்குத் தெரியுமா?


பத்திரிகை தகவல் பணியகத்தின் தகவலின்படி,


2025-26-ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் (Q2) இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (Real GDP) 8.2% ஆக வளர்ச்சி கண்டது இது முந்தைய காலாண்டில் பதிவான 7.8% மற்றும் 2024-25 நிதியாண்டின் நான்காம் காலாண்டில் பதிவான 7.4% ஆகிய அளவுகளைவிட அதிகமான அளவாகும். மேலும், தொழில்துறை மற்றும் சேவைத் துறைகளின் வலுவான செயல்பாடுகளால் மாற்றம் ஏற்பட்டு, உண்மையான மொத்த மதிப்புக் கூட்டல் (Gross Value Added (GVA)) 8.1%-ஆக வளர்ச்சி கண்டது.


இந்திய ரிசர்வ் வங்கி (RBI), 2025-26-ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி கணிப்பை முன்பு கூறிய 6.8%-லிருந்து 7.3%-ஆக உயர்த்தியுள்ளது. இந்தியாவின் உள்நாட்டு வளர்ச்சி பல காரணங்களால் வளர்ச்சியடைந்து வருகிறது. அவை: வலுவான உள்நாட்டு தேவை, வருமானவரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (goods and services tax (GST)) சீரமைப்பு, குறைந்த கச்சா எண்ணெய் விலை, அரசின் மூலதன செலவினத்தை (capital expenditure (CAPEX)) முன்கூட்டியே அதிகரித்தல் மற்றும் குறைந்த பணவீக்கம் ஆதரவு அளிக்கும் எளிதான பண மற்றும் நிதி சூழ்நிலைகள் ஆகும்.


எதிர்காலத்தை பார்க்கும்போது, உள்நாட்டு காரணிகள் பொருளாதார செயல்பாட்டை தொடர்ந்து ஆதரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த வேளாண்மை முன்னேற்றம், சரக்கு மற்றும் சேவை வரி சீரமைப்பின் நீடித்த பயன்கள், குறைந்த பணவீக்கம் மற்றும் நிறுவனங்கள் மற்றும் நிதி நிறுவனங்களின் வலுவான நிதிநிலை ஆகியவை முக்கிய காரணிகளாக உள்ளன. இதனுடன் சேர்ந்து, ஆதரவான பண மற்றும் நிதி சூழ்நிலைகளும் பொருளாதார வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும்.


வெளிப்புறக் காரணிகளில், சேவை ஏற்றுமதிகள் தொடர்ந்து வலுவாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. தற்போதைய வர்த்தக மற்றும் முதலீட்டு பேச்சுவார்த்தைகள் விரைவாக முடிவடையுமானால், அது வளர்ச்சிக்கான கூடுதல் வாய்ப்புகளை உருவாக்கும். நடைபெற்று வரும் சீர்திருத்தங்களும் வளர்ச்சியை மேலும் ஊக்குவிக்கும். தற்போதைய பேரியல் பொருளாதார (Macroeconomics) நிலை, உயர்ந்த வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கம் கொண்ட ஒரு அரிதான “கோல்டிலாக்ஸ்” காலமாகக் கருதப்படுகிறது.


இந்திய பொருளாதாரம் தற்போது உயர்ந்த வளர்ச்சி மற்றும் குறைந்த பணவீக்கம் கொண்ட ‘கோல்டிலாக்ஸ்’ நிலையில் உள்ளது. தேசிய புள்ளியியல் அலுவலகம் (National Statistical Office (NSO)) வெளியிட்ட முதல் முன்கூட்டிய கணிப்புகளின்படி, 2025-26 நிதியாண்டில் உண்மையான மொத்த உள்நாட்டு வளர்ச்சி வளர்ச்சி 7.4%-ஆக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பெயரளவிலான (Nominal) வளர்ச்சி 8%-ஆக இருக்கும். நுகர்வோர் விலை குறியீட்டு (CPI) அடிப்படையிலான பணவீக்கம் 2%-ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது. வர்த்தக மோதல்கள் மற்றும் புவியியல் அரசியல் ஆபத்துகள் இருந்தாலும், அரசின் நிதி ஆதரவு மற்றும் செயற்கை நுண்ணறிவு சார்ந்த முதலீடுகள் காரணமாக உலகளாவிய மற்றும் அமெரிக்க மொத்த உள்நாட்டு வளர்ச்சி எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருக்கலாம். உலக வர்த்தக அமைப்பு (World Trade Organization (WTO)) சரக்கு வர்த்தக அளவு வளர்ச்சி கணிப்பை 0.9%-லிருந்து 2.4%-ஆக உயர்த்தியுள்ளது. எஸ். மகேந்திர தேவ் தனது “இந்திய பொருளாதாரத்தின் ‘கோல்டிலாக்ஸ்’ நிலை நீடிக்கலாம்” (Goldilocks phase of India’s economy can be sustained) என்ற கட்டுரையில் தெரிவித்துள்ளார்.


Original Link: What is the Goldilocks economy in India? 


Share:

தன்னார்வப் பராமரிப்புப் பணிகளை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியம். -ரெஞ்சினி ராஜகோபாலன்

 இந்தியாவின் 'தன்னார்வலர்கள்' என்று அழைக்கப்படும் பராமரிப்புப் பணியாளர்கள், உண்மையில் நமது சமூக நல அரசின் நிரந்தரத் தூண்களாகத் திகழ்கின்றனர்.


தேசிய திறன் தகுதி கட்டமைப்பு (National Skills Qualification Framework (NSQF)) திட்டங்களுடன் இணைந்த பயிற்சித் திட்டங்கள் மூலம், முதியோர் பராமரிப்பு (Geriatric), அடிப்படைப் பராமரிப்பு மற்றும் அது சார்ந்த திறன்களில் 1.5 லட்சம் பன்முகத் திறன் கொண்ட பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் வாயிலாக ஒரு 'வலிமையான பராமரிப்பு சூழலை' உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்  2026-27-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தியாவின் பராமரிப்புத் தேவைகள் அதிகரித்துவரும் நிலையில், இத்தகைய நடவடிக்கை காலத்திற்கு ஏற்றதும் மிக அவசியமானதும் ஆகும்.


இருப்பினும், இந்த நிதிநிலைத் திட்டம் ஒரு ஆழமான முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது: சான்றிதழ் பெற்ற புதிய பராமரிப்பு நிபுணர்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ள அதே வேளையில், இந்தியாவின் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் குழந்தை பராமரிப்பு அமைப்புகளை ஏற்கனவே முன்னின்று நடத்தும் 50 லட்சத்திற்கும் அதிகமான பெண்களைப் பற்றி அது போதுமான அளவு குறிப்பிடவில்லை. குறிப்பாக, நமது அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (Accredited Social Health Activists (ASHAs)), அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், மற்றும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் என அனைவரும் நாள்தோறும் அத்தியாவசிய பொதுச் சேவைகளை வழங்கி வருகின்றனர். இருந்தபோதிலும், அவர்கள் இன்றும் வெறும் "தன்னார்வலர்களாகவே" (Volunteers) வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அரசு தற்போது வலுப்படுத்த முயலும் அதே முறையான அமைப்பிலிருந்து அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.



ஒரு நிழல் தொழிலாளர் படை


குழந்தைக்கு உணவளிப்பதை உறுதி செய்யும் அங்கன்வாடி பணியாளர்கள் முதல், தொலைதூரக் கிராமங்களில் கர்ப்பிணிப் பெண்களைக் கண்காணிக்கும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) வரை, இந்தப் பெண்களே இந்தியாவின் நலத்திட்ட அமைப்பின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். இவர்களது பணி அரசுக்கு மிக அவசியமானது மற்றும் தொடர்ச்சியானது என்றாலும், முறையான பணி ஒப்பந்தம், ஊதியத்துடன் கூடிய விடுப்பு அல்லது மகப்பேறு பலன்கள் எதுவுமின்றி, மிகக்குறைந்த மாதாந்திர கௌரவ ஊதியத்திற்காகப் பாதுகாப்பற்ற சூழலில் இவர்கள் பணியாற்றுகின்றனர். சில மாநிலங்கள் வழங்கும் ஊதிய உயர்வு, பணிக்கொடை அல்லது ஆயுஷ்மான் பாரத் போன்ற தேசியத் திட்டங்களில் இவர்களை இணைப்பது போன்ற நடவடிக்கைகள் இவர்களுக்குக் கிடைத்தாலும், அவை இந்தியாவின் பராமரிப்புப் பொருளாதாரத்தில் (Care Economy) உள்ள அடிப்படை முரண்பாட்டைத் தீர்க்கவில்லை. அதாவது, அத்தியாவசிய பொதுச் சேவைகளை வழங்கப் பெண்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பெரும் உழைப்பாளர் கூட்டத்தை அரசு நம்பியிருக்கிறது. ஆனால், முறையான வேலைவாய்ப்பில் வழங்கப்படும் சட்டப்பூர்வப் பாதுகாப்புகளை அவர்களுக்கு அளிக்கத் தவறி, அவர்களை வெறும் "கௌரவப் பணியாளர்கள்" (Honorary Workers) என்று மட்டுமே வகைப்படுத்துகிறது.


பாலின அடிப்படையிலான பணி


இந்த முரண்பாடானது பராமரிப்புப் பணிகள் குறித்த ஆழமான சமூக விதிமுறைகளிலிருந்து உருவாகிறது. இந்தியாவில் நிலவும் 'பராமரிப்பு அபராதம்' (Care Penalty) என்பது வெறும் சமூகவியல் கோட்பாடு மட்டுமல்ல, அது புள்ளிவிவரரீதியான உண்மை என்கின்றனர். பொருளாதார ஆய்வு 2025–26 (Economic Survey 2025–26) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 2024 நேரப் பயன்பாட்டு ஆய்வின் (Time Use Survey (TUS)) தரவுகள், இந்தியப் பெண்களே முதன்மையான பராமரிப்பாளர்களாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. 15 முதல் 59 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 41% பேர் நாளொன்றுக்கு 140 நிமிடங்களை வீட்டுப் பராமரிப்புப் பணிகளுக்காகச் செலவிடுகின்றனர். ஆனால், ஆண்களில் வெறும் 21.4% பேர் மட்டுமே இதே பணிக்காகச் சுமார் 74 நிமிடங்களைச் செலவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் நலத்திட்ட அமைப்பும் இதே போன்ற ஒரு முறையையே பின்பற்றுகிறது. பராமரிப்புப் பணிகளை 'தன்னார்வலர்கள்' என்று அழைக்கப்படும் பெண்களிடம் ஒப்படைப்பதன் மூலம், இப்பணிகள் ஊதியத்திற்குரிய தகுதியான வேலை என்பதைவிட, அவை பெண்களின் இயல்பான வீட்டுக்கடமை என்ற நீண்டகால நம்பிக்கையையே அரசு சார்ந்துள்ளது. இத்தகைய பராமரிப்புப் பணிகள் பெண்களுக்கு இயல்பானது எனக் கருதப்படுவதால், அவை குறைந்த ஊதியம் கொண்ட மற்றும் முறைசாரா பணிகளாகவே நடத்தப்படுகின்றன. இது ஒரு நச்சுச் சுழற்சியை (Vicious cycle) உருவாக்குகிறது. அதாவது, பராமரிப்புப் பணி ஒரு திறன் சார்ந்த உழைப்பாக அங்கீகரிக்கப்படாதபோது, அதற்கான முறையான ஊதியத்தை வழங்க வேண்டிய அழுத்தம் குறைகிறது, இதனால் பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற வேலைகளில் முடங்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையில், தற்போதைய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் புதிய பராமரிப்புப் பணியாளர்கள் குழுவை உருவாக்குவதில் காட்டிய ஆர்வம், ஏற்கனவே இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை முறைப்படுத்துவதற்கான தெளிவான திட்டங்கள் இல்லாததையே காட்டுகிறது. இந்தத் தொழிலாளர்கள் ஏற்கனவே உணர்வுப்பூர்வமான ஈடுபாடு, கள ஒருங்கிணைப்பு மற்றும் சமூகத் தேவைகள் குறித்த ஆழமான புரிதலுடன் கூடிய சிக்கலான மற்றும் பன்முகத்திறன் கொண்ட பணிகளைச் செய்து வருகின்றனர். எனவே, ஏற்கனவே இத்தகைய அத்தியாவசியப் பணிகளைச் செய்து வருபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு வேலை பாதுகாப்பை வழங்கவும் அரசு ஏன் முயற்சிக்கவில்லை என்கிற கேள்வி எழுகிறது.


இந்தியாவின் 'தன்னார்வலர்கள்' என்று அழைக்கப்படும் பராமரிப்புப் பணியாளர்கள், உண்மையில் நாட்டின் சமூகநல அரசின் நிரந்தரத் தூண்களாகத் திகழ்கின்றனர். இந்த அமைப்புகளைத் தாங்கிப் பிடிக்கும் பெண் பணியாளர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதும், அவர்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லாததும், அவர்கள் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத நிலையில் இருப்பதும் நீடித்தால், இந்தியா ஒரு உலகளாவிய சுகாதார வல்லரசாக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய முடியாது. இந்தியாவின் பராமரிப்புப் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டுமானால், அதற்குப் போதிய நிதி முதலீடு செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அந்தப் பணியாளர்களைப் பற்றிய சமூகத்தின் அணுகுமுறையிலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமாகிறது. 


பராமரிப்புப் பொருளாதாரத்தை மறுவடிவமைத்தல் 


பராமரிப்புப் பணியாளர்களை வெறும் 'தன்னார்வலர்கள்' (Volunteers) என்று அழைப்பதைக் கடந்து இந்தியா அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும் என்கின்றனர்.  உத்தரப் பிரதேச அரசுக்கு எதிரான தரம் சிங் (Dharam Singh & Anr. vs State of U.P. & Anr.) வழக்கில் 2025-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், ஒரு நிறுவனத்திற்குத் தேவையான அத்தியாவசியமான மற்றும் தொடர்ச்சியான பணிகளைச் செய்பவர்களை எப்போதும் தற்காலிகப் பணியாளர்களாகவே கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவின் தவிர்க்க முடியாத மற்றும் இடைவிடாத பணிகளைச் செய்துவரும் தன்னார்வப் பராமரிப்புப் பணியாளர்களுக்கு, அவர்களின் கௌரவப் பதவிகளை நிரந்தரப் பணிகளாக மாற்றக் கோரும் கோரிக்கைக்கு இந்தத் தீர்ப்பு வலுவான ஆதரவை வழங்குகிறது.


திறன் மேம்பாட்டிற்கான தற்போதைய நிதி ஒதுக்கீடுகளுடன் இணைந்து, இந்தியாவின் பராமரிப்புப் பணியாளர்களின் வேலைவாய்ப்பு விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வதற்கும், அவர்களுக்கு வழங்கப்படும் 'கௌரவ ஊதியத்திற்கு' (honorariums) பதிலாக முறையான ஊதியம் மற்றும் பணி ஒப்பந்தங்களை உறுதி செய்யும் மாறுதல் கட்டமைப்புகளை உருவாக்க அரசை ஊக்குவிக்க வேண்டும். இதற்கான முதல் படியாக, முன்மொழியப்பட்டுள்ள தேசிய திறன் தகுதிக் கட்டமைப்பு (National Skills Qualification Framework (NSQF)) சார்ந்த திட்டங்களை அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (Accredited Social Health Activists (ASHA)) மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் விரிவுபடுத்துவது அவசியமானதாகும்.


இந்தத் தொழிலாளர்கள் கண்ணியமான வாழ்விற்கும் தங்களுக்கான அங்கீகாரத்திற்கும் நாடு தழுவிய அளவில் போராட்டங்களைப் பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றனர். இப்போது, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation (ILO)) 'கண்ணியமான பராமரிப்புப் பணிக்கான 5R கட்டமைப்பு' (5R Framework for Decent Care Work) கொள்கையின் இறுதி இரண்டு வாக்குறுதிகளான 'வெகுமதி' மற்றும் 'பிரதிநிதித்துவம்' ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அயராது உழைக்கும் நமது பராமரிப்புப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியமும், வேலைவாய்ப்பு மற்றும் கொள்கை முடிவுகளில் உண்மையான அதிகாரமும்  வழங்கப்பட வேண்டியது அவசியமாகிறது. 


ரெஞ்சினி ராஜகோபாலன் ஒரு வழக்கறிஞர் மற்றும் JustJobs Network அமைப்பில் உள்ள பாலின பகுப்பாய்வு மையத்தின் ஆராய்ச்சித் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.


Original article :  The need to recognise ‘volunteer’ care work -Renjini Rajagopalan

Share: