உழவர்களையும் வேளாண் விளைபொருட்களையும் பாதுகாக்க, இந்தியாவின் புவிசார் குறியீட்டு முறையில் சீர்திருத்தம் தேவைப்படுகிறது. - அனுபவ் சௌத்ரி

பாதிக்கப்பட்ட தரப்பினரான, அமைப்புசாரா தொழிலாளர்கள் மற்றும் பருவகால வேளாண் தொழிலாளர்கள் உடனடியாகச் சட்டப் பாதுகாப்பு பெறவேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். ஆனால், அவர்கள் நீண்டகால நீதிமன்ற வழக்குகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளதால், தங்களின் சொந்தப் பாரம்பரியத்தைப் பாதுகாத்துக் கொள்வதற்குக்கூடப் போராட முடியாத அளவிற்கு நிதி நெருக்கடிக்கு ஆளாகுகின்றனர்.



"நாங்கள் சீரகத்தைப் பயிரிடுகிறோம், ஆனால் ‘உஞ்ஜா’ என்பது வெறும் சந்தை மட்டுமே" என்று ராஜஸ்தானைச் சேர்ந்த வேளாண் தொழிலாளி ஒருவர் கூறுகிறார். 20260-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், புவிசார் குறியீடு பதிவுத் துறை (Geographical Indication Registry), குஜராத்தைச் சேர்ந்த உஞ்சா வேளாண் விளைபொருள் சந்தைக் குழுவின் (Unjha Agriculture Produce Market Committee) பெயரில் 'உன்ஜா சீரகம் மற்றும் சோம்பிற்கு' புவிசார் குறியீட்டுத் (GI Tag) தகுதியை வழங்கியது. இதைத் தொடர்ந்து, இந்த முடிவு குஜராத்திற்கு வெளியே உள்ள உற்பத்தியாளர்களை, குறிப்பாக ஆண்டிற்கு சுமார் 3,00,000 டன் சீரகத்தை உற்பத்தி செய்யும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வேளாண் தொழிலாளர்களைப் பாதிக்கும் என்று உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.


1999-ஆம் ஆண்டின் புவிசார் குறியீடு (GI) சட்டத்தின்படி, ஒரு விண்ணப்பத்திற்கு எதிரான ஆட்சேபனைகளை வரவேற்பதற்காக, அதுகுறித்த அறிவிப்பு ‘GI’ இதழில் வெளியிடப்பட்டு மூன்றுமாத காலஅவகாசம் வழங்கப்படுகிறது. இருப்பினும், மொழி மற்றும் தகவல் தொடர்பு தடைகள் காரணமாக, ராஜஸ்தான் உற்பத்தியாளர்களால் குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தங்களது ஆட்சேபனையைத் தெரிவிக்க முடியாமல் போனது. இதன் காரணமாக, புவிசார் குறியீட்டுப் பதிவு நடைமுறை முடிந்த பிறகு, பாதிக்கப்பட்ட தரப்பினர் புவிசார் குறியீடு (GI) சட்டத்தின் பிரிவு 27-ன்கீழ் மிகவும் மெதுவான மற்றும் அதிகச் செலவை ஏற்படுத்தும் ரத்து செய்யும் நடைமுறையைத் தேர்ந்தெடுக்கக் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இந்தச் சிக்கல் ஏதோ ஒரு சாதாரண எல்லைப் பிரச்சினையை மட்டும் எழுப்பவில்லை. மாறாக, உடனடியாகச் சரிசெய்யப்பட வேண்டிய ஒரு ஆழமான நிர்வாகத் தோல்வியை வெளிக்காட்டியுள்ளது.


அலுவலக நடைமுறைச் சிக்கல்கள்


இந்தியாவில் தற்போது 724 பதிவு செய்யப்பட்ட புவிசார் குறியீடுகள் மட்டுமே உள்ளன. அதாவது பத்து லட்சம் மக்களுக்கு வெறும் 0.52 புவிசார் குறியீடுகள் என்ற விகிதத்திலேயே உள்ளன. இதற்கு மாறாக, ஹங்கேரி நாட்டில் 2023-ஆம் ஆண்டிலேயே 7,290 புவிசார் குறியீடுகள் இருந்தன. இது அங்குள்ள பத்து லட்சம் குடிமக்களுக்கு 751 புவிசார் குறியீடுகளுக்குச் சமமாகும். இந்த பிரம்மாண்டமான வித்தியாசத்திற்கு ஐரோப்பிய ஒன்றியத்தின் ஒருங்கிணைக்கப்பட்ட ஒற்றைப் பதிவு முறையே ஒரு முக்கியக் காரணமாகும். ஆனால், இந்தியாவில் நீண்ட பதிவு நடைமுறைகள் போன்ற காரணங்களால் தாமதமாகின்றன. இதுவரை விண்ணப்பிக்கப்பட்டவற்றில் 46 சதவீதம் மட்டுமே ஒப்புதல் பெற்றுள்ளன.  நிலுவையில் உள்ள பதிவுகள், திரும்பப் பெறப்படுதல், நிராகரிப்பு அல்லது விரக்தியடைந்த விண்ணப்பதாரர்களால் கைவிடப்பட்ட நிலையிலேயே முடங்கியுள்ளன. இது வெறும் எண்ணிக்கையைப் பற்றிய பிரச்சனை மட்டுமல்ல, யார் பின்னடைவைச் சந்திக்கிறார்கள் என்பதைப் பற்றியது ஆகும். இதனால் உஞ்சா வேளாண் விளைபொருள் சந்தைக் குழு (Unjha APMC) போன்ற அதிக நிதி பலம் கொண்ட அமைப்புகள் தொடர்ந்து செழித்து வளரும் வேளையில், ராஜஸ்தான், பஞ்சாப் மற்றும் மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த சிறு குறு வேளாண் தொழிலாளர்கள் இதன் பலன்களைப் பெற முடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.


எல்லை கடந்த நிலப்பரப்பு சார்ந்த சர்ச்சைகள் ஏற்படும்போது, அதற்குத் தீர்வுகாண சம்பந்தப்பட்ட தரப்பினர் உரிமையியல் நீதிமன்றங்களை அணுக வேண்டியுள்ளது. இது ஏற்கனவே மெதுவாகச் செயல்படும் நீதித்துறை அமைப்பின் தாமதத்தை மேலும் அதிகரிக்கிறது. பாஸ்மதி அரிசி தொடர்பான சர்ச்சையும் இந்த நீண்ட நீதிமன்ற நடைமுறையிலேயே முடங்கிக் கிடக்கிறது. 2021-ஆம் ஆண்டில் உச்சநீதிமன்றம் இந்த வழக்கை மீண்டும் சென்னை உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பி வைத்தபோதிலும், புவிசார் குறியீட்டில் (GI) தங்களையும் சேர்க்க வேண்டும் என்ற மத்தியப் பிரதேசத்தின் கோரிக்கைக்கு உயர்நீதிமன்றம் இன்னும் தீர்வு காணவில்லை. மைசூர் பாக் மற்றும் கோலாப்பூரி செருப்புகள் போன்ற புகழ்பெற்ற பொருட்களும் இதுபோன்ற காலதாமதங்களால் பாதிக்கப்பட்டுள்ளன. 2021-ஆம் ஆண்டில் அறிவுசார் சொத்துரிமை மேல்முறையீட்டு வாரியம் (Intellectual Property Appellate Board (IPAB)) கலைக்கப்பட்ட பிறகு இந்த நிலைமை மேலும் மோசமடைந்துள்ளது. மேலும், அவசர நீதிமன்றப் பாதுகாப்பு தேவைப்படக்கூடிய முறைசாரா மற்றும் பருவக்கால வேளாண் தொழிலாளர்கள் உட்பட பாதிக்கப்பட்ட பிரிவினர், உரிமையியல் நீதிமன்றங்களில் நீண்ட சட்டப் போராட்டங்களை எதிர்கொள்ள வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இது அவர்கள் தங்களது பாரம்பரிய உரிமைகளைப் பாதுகாப்பதற்காக மேற்கொள்ளும் சட்டப் போராட்டத்தையும் கடினமாக்கியுள்ளது.





அமலாக்க நடைமுறைகளில் உள்ள குறைபாடுகள்


நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு அப்பாற்பட்டு, புவிசார் குறியீடு சட்டம் (GI Act) "அங்கீகரிக்கப்பட்ட பயனர்கள்", "உற்பத்தியாளர்கள்" மற்றும் "பரிசீலனைக் கட்டமைப்புகள்" போன்ற பல முக்கிய சொற்களுக்குத் தெளிவற்ற வரையறைகளையே கொண்டுள்ளது. இந்தத் தெளிவின்மையானது, இந்தச் சட்டம் எந்த நோக்கத்திற்காக வடிவமைக்கப்பட்டதோ அதற்கும் நடைமுறையில் செயல்படும் விதத்திற்கும் இடையே பெரிய இடைவெளியை உருவாக்குகிறது. மேலும், புவிசார் குறியீட்டிற்கு விண்ணப்பிப்பவர்களுக்குப் பரிசீலனை அமைப்புகளின் தணிக்கையைக் கட்டாயமாக்காமல், விருப்பத் தேர்வாகவே இச்சட்டம் வைத்துள்ளது. இத்தகைய சரியான நேரடி ஆய்வு முறைகளும் இல்லாத நிலையில், புவிசார் குறியீட்டு உரிமைகளை நடைமுறையில் முழுமையாகச் செயல்படுத்த முடியாது.


இதன் விளைவாக, உலகளவில் சுமார் 4 கோடி கிலோ போலி டார்ஜிலிங் தேயிலை விற்பனை செய்யப்படுகிறது. இது உண்மையான உற்பத்தியைவிட 10 மடங்கு அதிகம் ஆகும். வாரணாசியில், கட்டுப்பாடின்றி சூரத்திலிருந்து வரும் இயந்திரத் தயாரிப்புகள், உண்மையான கைத்தறிப் பொருட்களுக்குப் பதிலாக விற்கப்படுகின்றன. இதுமட்டுமன்றி, போலி அல்போன்சா மாம்பழங்களின் விற்பனை மற்றும் பெயரளவில் மட்டுமே இயங்கும் காஷ்மீரி குங்குமப்பூவுக்கான பரிசோதனை மையங்கள் ஆகியவை இந்தச் சிக்கலை மேலும் தீவிரமாக்குகின்றன.


தகவல் சார்ந்த இடைவெளி இந்தச் சிக்கலை மேலும் மோசமாக்குகிறது. புவிசார் குறியீடு (GI Tag) சான்றிதழ் பெற்றவர்களில் சுமார் 78 சதவீதம் பேருக்கு, இந்தச் சான்றைப் பயன்படுத்தித் தங்கள் தயாரிப்புகளுக்கு எவ்வாறு சிறந்த விலையைப் பெறுவது என்பது தெரியவில்லை. அதுமட்டுமின்றி, 42 சதவீதப் புவிசார் குறியீடுகளுக்கு மட்டுமே அதிகாரப்பூர்வமாகப் பதிவுசெய்யப்பட்ட பயனர்கள் உள்ளனர். அதாவது, 58 சதவீதப் புவிசார் குறியீடுகள் பெயரளவில் மட்டுமே உள்ளனவே தவிர, அங்குள்ள தனிப்பட்ட உற்பத்தியாளர்களுக்கு அவற்றைச் சட்டப்பூர்வமாகப் பயன்படுத்துவதற்கான அதிகாரப்பூர்வ அனுமதி இன்னும் கிடைக்கவில்லை.



‘The Energy and Resources Institute’ (TERI) அமைப்பின் ஆய்வுகள், புவிசார் குறியீடு) பெற்ற தயாரிப்புகள் 20 முதல் 30 சதவீதம் வரை கூடுதல் விலையைப் பெற முடியும் என்பதைக் காட்டுகின்றன. இருப்பினும், மலபார் மிளகு மற்றும் வழக்குளம் அன்னாசிப்பழம் உற்பத்தி செய்யும் வேளாண் தொழிலாளர்கள், தங்கள் தயாரிப்புகளுக்கு புவிசார் குறியீடு பதிவு செய்த பிறகும் வருமானத்தில் எவ்வித உயர்வையும் காணவில்லை. சுமார் 80 சதவீத இந்திய வேளாண் தொழிலாளர்கள் இடைத்தரகர்கள், வியாபாரிகள் மற்றும் ஏற்றுமதியாளர்களையே நம்பியுள்ளனர். இதன் காரணமாக, உற்பத்தியாளர்களுக்குக் கிடைக்க வேண்டிய கூடுதல் லாபத்தில் வெறும் 10 முதல் 15 சதவீதம் மட்டுமே அவர்களுக்குச் சென்றடைகிறது. இதற்கு மாறாக, ஐரோப்பிய உற்பத்தியாளர்கள் 50 முதல் 60 சதவீதம் வரை கூடுதல் லாபத்தைப் பெறுகின்றனர். இதனால், இந்திய வேளாண் தொழிலாளர்கள் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த வேளாண் தொழிலாளர்களுக்குக் கிடைக்கும் பொருளாதாரப் பலனில் மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான அளவையே பெறுகின்றனர்.


சீர்திருத்தத்திற்கான பாதை


ஐரோப்பிய ஒன்றியத்தின் அரசு தலைமையிலான நிர்வாக மாதிரியைக் கருத்தில்கொண்டு, இந்த அமைப்பை மேலும் மேம்படுத்த வேண்டும். இந்தியப் புவிசார் குறியீட்டுச் சட்டத்தின் (Geographical Indications of Goods Act, 1999) பிரிவு-25-ன்கீழ், சந்தையில் நடக்கும் புவிசார் குறியீட்டு (GI) விதிமீறல்களைக் கண்காணிக்கும் பொறுப்பை நிதிப் பற்றாக்குறை கொண்ட உற்பத்தியாளர்கள்மீது சுமத்தாமல், அரசாங்கமே நேரடியாகக் கண்காணித்துச் செயல்படுத்தும் முறைக்கு இந்தியா மாற வேண்டும். இதில், மாநில வேளாண்மைத் துறைகளின்கீழ் புவிசார் குறியீட்டு அமலாக்கப் பிரிவுகளை அமைப்பதும், இணையதள இணையதள முகவரி எச்சரிக்கைகள் (Domain-name alerts) மற்றும் புவிசார் கட்டுப்பாடுகளைக் பயன்படுத்தி இணையத்தில் நடக்கும் போலி விற்பனையைத் தடுக்க 'இணையவழி புவிசார் குறியீட்டு கண்காணிப்புப் பிரிவை அமைப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.


ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வேளாண் தொழிலாளர் அமைப்புகளுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இது சந்தையில் தங்களின் பொருட்களுக்குச் சரியான விலையைப் பெறப் போராடும் அவர்களின் பேரம் பேசும் திறனை வலுப்படுத்தும் என்கின்றனர். சந்தைப்படுத்தும் அமைப்புகளுக்கும் உண்மையான வேளாண் தொழிலாளர்களுக்கும் இடையே லாபத்தைப் பகிர்ந்து கொள்ளும் முறை விரிவாக்கப்பட வேண்டும். மேலும், அவர்களின் விளைபொருட்களுக்குக் கிடைக்கும் கூடுதல் மதிப்பு வீணாகாமல் தடுப்பதற்கு, ஒருங்கிணைக்கப்பட்ட விளம்பரப் பிரசார நிதி ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும்.


சிலி (Chile) மற்றும் பெரு (Peru) நாடுகளுக்கு இடையேயான 'பிஸ்கோ' (Pisco) மதுபானச் சான்றிதழ் தொடர்பான பிரச்சனையில், புவியியல் குறியீடு பாதுகாப்பு என்பது "யார் முதலில் பயன்படுத்தினார்கள்" என்பதை வைத்துத் தீர்மானிக்கும் பந்தயம் அல்ல என்று டெல்லி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. ஆகவே, ஒரே பெயரைக் கொண்ட புவியியல் குறியீடுகள், பிராந்தியப் பெயர்களை (Regional prefixes) முன்னொட்டாகப் பயன்படுத்துவதன் மூலம் அமைதியான முறையில் ஒன்றாகப் பயன்பாட்டில் இருக்க முடியும். இந்தக் கொள்கை, புவியியல் குறியீடுகள் சந்திக்கும் ஒரு பொதுவான பிரச்சனைக்குத் தீர்வாக அமையலாம். இந்தியா தனது புவியியல் குறியீட்டு சட்டக் கட்டமைப்பை சீர்திருத்த வேண்டும். இதன் மூலம் நிலத்தையும் விளைபொருட்களைச் சாகுபடி செய்யும் வேளாண் தொழிலாளர்களையும் பாதுகாக்க முடியும். இல்லையெனில், ஒரு பலவீனமான சட்டப் பாதுகாப்பின் காரணமாகத் தங்களின் பாரம்பரிய உரிமையை இழக்கும் கடைசி நபர்களாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த வேளாண் தொழிலாளர்கள்  இருக்கமாட்டார்கள்.


Original Link: To protect farmers and their produce, India’s GI tag needs reform.

Share: