உள்நாட்டு உற்பத்திச் சூழலமைப்பை வலுப்படுத்த வேண்டும். அத்துடன், மதிப்புக்கூட்டலை அதிகரிக்கவும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளவும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். இதற்கு ஒரு கவனமான மற்றும் சீரான அணுகுமுறை தேவைப்படுகிறது.
2019-ஆம் ஆண்டில், 15 ஆசிய-பசிபிக் நாடுகளை உள்ளடக்கிய வர்த்தக ஒப்பந்தமான பிராந்திய விரிவான பொருளாதாரக் கூட்டாண்மையில் (Regional Comprehensive Economic Partnership (RCEP)) சேர வேண்டாம் என இந்தியா முடிவு செய்தது. சில மாதங்களுக்குப் பிறகு, 2020-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், மத்திய அரசு பத்திரிக்கை அறிக்கை 3 மூலம் அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையைத் திருத்தியது. அதன்படி, இந்தியாவுடன் தரை எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளின் முதலீடுகளுக்கு அரசாங்க ஒப்புதல் கட்டாயமாக்கப்பட்டது. இந்த இரண்டு முடிவுகளும், ஓரளவிற்கு, சீனா மீதான கவலைகளால் ஏற்ப்பட்டன. ஆனால், சீனா உடனான உறவில் அன்று முதல் நிலவும் தெளிவற்றத்தன்மை நிலவி வந்த சூழலிலும், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் வலுப்பெற்றுள்ளன. 2025-26-ஆம் ஆண்டுகளில் சீனாவிலிருந்து இறக்குமதி $131 பில்லியன்த் தொட்டது. மேலும், இந்தியாவின் எண்ணெய் அல்லாத பொருட்களின் வர்த்தகப் பற்றாக்குறையில் ஏறக்குறைய பாதிக்கு அந்நாடு தற்போது காரணமாக உள்ளது. இருப்பினும், சீனாவிலிருந்து வரும் அந்நிய நேரடி முதலீடு மிகக் குறைவாகவே உள்ளது. 2000-ஆம் ஆண்டு முதல், இந்தியாவிற்கான முதலீட்டு வரவு வெறும் $2.5 பில்லியன் ஆக மட்டுமே உள்ளது. நாட்டில் மின்னணு சாதனங்கள் மற்றும் திறனபேசிகளை உற்பத்தி செய்வதற்காக, டிக்சன் டெக்னாலஜிஸ் மற்றும் விவோ மொபைல் நிறுவனங்களுக்கு இடையேயான ஒரு கூட்டு முயற்சிக்கு அரசாங்கம் தற்போது ஒப்புதல் அளித்துள்ளது. இது ஒரு சரியான திசையில் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும்.
கடந்த சில ஆண்டுகளில், பன்னாட்டு நிறுவனங்கள் சீனாவிலிருந்து விலகி தங்கள் முதலீடுகளைப் பன்முகப்படுத்த ஒரு ஒருங்கிணைந்த முயற்சியை மேற்கொண்டுள்ளன. இருப்பினும், இந்த 'சீனா+1' உத்தியால் இந்தியா முக்கிய பயனாளியாக இல்லை. வியட்நாம் போன்ற நாடுகள் அதிகப் பயனடைந்துள்ளன. சீனாவிலிருந்து வர்த்தகத்தைத் திசைதிருப்புவதன் மூலம் பயனடைய, 2023-24-ஆம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை இரண்டு தேர்வுகளை முன்வைத்தது: அவை ஒன்று, அதன் விநியோகச் சங்கிலிகளுடன் ஆழமாக ஒருங்கிணைவது அல்லது சீனாவிலிருந்து அதிக அந்நிய நேரடி முதலீட்டை ஊக்குவிப்பதாகும். இந்த ஆய்வறிக்கை பின்னர் தேர்வை நோக்கியே சாய்ந்தது. இந்தச் சிந்தனைக்கு ஏற்ப, அதிக முதலீட்டு வரவுகளை எளிதாக்கும் வகையில், இந்தியாவுடன் நில எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் நாடுகளிலிருந்து வரும் முதலீடுகளுக்கான அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கையில் மாற்றங்களுக்கு இந்த ஆண்டு மார்ச் மாதம் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. டிக்சன் டெக்னாலஜிஸ் மற்றும் விவோ மொபைல் இடையேயான கூட்டு முயற்சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டதும், மின்கலன்கள், மற்றும் திரைத் தொகுப்புகள் (display assemblies) உள்ளிட்டவற்றின் உற்பத்தியில் பயன்படுத்தப்படும் 85 வகையான பொருட்களுக்கான சுங்கவரி விலக்கும் அறிவிக்கப்பட்டுள்ளன.
சீனா உலகளாவிய உற்பத்தி விநியோகச் சங்கிலியுடன் (Global Manufacturing Supply Chain) முக்கிய இடத்தில் உள்ளது இந்த உண்மையை புறக்கணிக்கமுடியாது. மேலும், சீனா அந்நிய நேரடி முதலீட்டின் முக்கிய ஆதார நாடுகளில் ஒன்றாகவும் உள்ளது. ஐக்கிய நாடுகளின் வர்த்தக மற்றும் வளர்ச்சி மாநாடு (United Nations Conference on Trade and Development (UNCTAD)) வெளியிட்டுள்ள உலக முதலீட்டு அறிக்கையின்படி, சீனாவின் வெளிநாட்டு முதலீடுகள் தற்போது அதிக இலக்கு நோக்கியதாக மாறியுள்ளன. குறிப்பாக புதிய தொழிற்சாலைத் திட்டங்கள், உற்பத்தித் துறை, எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய மூலப்பொருட்கள் போன்ற துறைகளில், குறிப்பாக வளர்ந்துவரும் நாடுகளிலும், தெற்கு–தெற்கு முதலீட்டு வழித்தடங்களிலும் அதிக கவனம் செலுத்தப்படுகின்றன. இந்தியாவுக்கு தேசிய பாதுகாப்பு மற்றும் ராஜதந்திரரீதியாக நியாயமான கவலைகள் இருந்தாலும், அதே நேரத்தில் பொருளாதாரத் தேவைகளும் உள்ளன. எனவே, பாதுகாப்பு மற்றும் பொருளாதார நலன் போன்ற இரண்டிற்கும் இடையே சமநிலையான அணுகுமுறையைப் பின்பற்றுவது முக்கியமான நடவடிக்கையாகும். உள்நாட்டு உற்பத்திச் சூழலமைப்பை வலுப்படுத்த வேண்டும். அதனுடன், மதிப்புக்கூட்டலை அதிகரிக்கவும் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளுடன் நெருக்கமான ஒருங்கிணைப்பை மேற்கொள்ளவும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். இதை செய்ய ஒரு கவனமான மற்றும் சீரான அணுகுமுறை தேவைப்படுகிறது.