பெண்கள் தங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற வேலைகளில் தொடர்ந்து நீடிக்கத் தேவையான ஆதரவைப் பெற வேண்டும்.
பல்கலைக்கழகங்களில் அதிக எண்ணிக்கையிலான இந்தியப் பெண்கள் சேர்வதால், கல்லூரி வகுப்பறைகளில் நிலவிய பாலின இடைவெளி குறைந்துள்ளது. 2023-24-ஆம் ஆண்டிற்கான உயர்கல்விக்கான அகில இந்தியக் கணக்கெடுப்பு (All India Survey on Higher Education (AISHE)) தரவுகளின்படி, கடந்த பத்தாண்டுகளில் பெண்களின் மொத்தச் சேர்க்கை 42% அதிகரித்துள்ளது. அதாவது, 2014-15-ல் 1.57 கோடியாக இருந்த எண்ணிக்கை 2.24 கோடியாக உயர்ந்துள்ளது. இதே காலகட்டத்தில், ஆண்களின் சேர்க்கை 1.85 கோடியிலிருந்து 2.26 கோடியாக அதிகரித்தது. ஆண்களின் சேர்க்கை வளர்ச்சி விகிதமான 22.16%-ஆனது பெண்களின் வளர்ச்சி விகிதத்தைவிட மிகவும் குறைவு. இதன் விளைவாக உயர்கல்விச் சேர்க்கையின் மொத்த எண்ணிக்கையின் சாதனை அளவாக 4.5 கோடியை எட்டியுள்ளது. தற்போது இந்தியப் பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உள்ள மொத்த மாணவர்களில் பெண்கள் கிட்டத்தட்ட பாதியளவை (49.7%) வகிக்கின்றனர். பாலினச் சமத்துவக் குறியீடு (Gender Parity Index) 1.08-ஆக உள்ள நிலையில், ஒவ்வொரு 100 ஆண்களுக்கும் 108 இளம் பெண்கள் உயர்கல்வியில் சேருகின்றனர். இது ஒரு முக்கியமான சாதனையாகும். குறிப்பாக விளிம்புநிலைச் சமூகங்களில், பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினப் பெண்களின் சேர்க்கை முறையே 51.4% மற்றும் 75.7% அதிகரித்துள்ளது. இருப்பினும், தரவுகளை உன்னிப்பாகக் கவனிக்கும்போது, இன்னும் சில முக்கியமான சவால்கள் இருப்பது தெரியவருகிறது. கல்லூரிப் படிப்பை முடித்த பிறகு பெண்களுக்குப் போதுமான வேலைவாய்ப்புகள் இல்லையென்றால், இந்தச் சேர்க்கை எண்ணிக்கை மேலோட்டமான ஒரு தோற்றத்தையே உருவாக்குகிறது. STEM (அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம்) துறைகளில் பயிலும் மாணவர்களில் பெண்கள் 44%-ஆக இருந்தாலும், இந்த எண்ணிக்கை 'S' (அறிவியல்) எனப்படும் பொது அறிவியல் பிரிவுகளில் (உயிரியல் மற்றும் வேதியியல் போன்றவை) அதிகமாக உள்ளது. பொது அறிவியல் சார்ந்த இத்துறைகளில் உள்ள மாணவர்களில் பெண்கள் 54.6%-ஆக உள்ளனர். இதற்கு மாறாக, பொறியியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகள் ஆண்களின் ஆதிக்கமே தொடர்ந்து நீடிக்கிறது. இத்துறைகளில் பெண்களின் சேர்க்கை வெறும் 31.1% மட்டுமே உள்ளனர். பாரம்பரிய அறிவியல் பிரிவுகளில் அதிகளவில் கவனம் செலுத்துவதால், செயற்கை நுண்ணறிவு மற்றும் மென்பொருள் பொறியியல் போன்ற எதிர்காலப் பொருளாதார வளர்ச்சியைத் தீர்மானிக்கும் துறைகளிலிருந்து பெண்கள் விலகி நிற்கும் நிலை ஏற்படுகிறது.
இந்தியாவில் உள்ள கல்வி நிறுவனங்கள் பெரும்பாலும் ஆண்களின் ஆதிக்கம் கொண்ட அமைப்புகளாகவே தொடர்ந்து நீடிக்கின்றன. மாணவர் எண்ணிக்கையில் ஆண்களும் பெண்களும் ஏறக்குறைய சம அளவில் உள்ளனர். இருப்பினும், ஒவ்வொரு 100 ஆண் ஆசிரியர்களுக்கும் 82 பெண் ஆசிரியர்கள் மட்டுமே உள்ளனர். கல்வி நிறுவனங்களின் உயர்மட்டத் தலைமைப் பொறுப்புகளில் பெண்கள் இன்னும் பெருமளவில் இடம்பெறவில்லை. மேலும், மாணவர் சேர்க்கை அதிகரித்த அதேவேளையில், தனியார் மற்றும் தரம் குறைந்த கல்லூரிகளின் எண்ணிக்கையும் பெருமளவில் பெருகியுள்ளது. இக்கல்லூரிகள் கடுமையான ஆசிரியர் பற்றாக்குறை மற்றும் மோசமான உள்கட்டமைப்பு வசதிகளைக் கொண்டுள்ளன. உயர்கல்விக்கும் முறையான வேலைவாய்ப்புச் சந்தைக்கும் இடையே ஒரு இடைவெளி இருப்பதையும் இந்தியா எதிர்கொள்கிறது. சமூக எதிர்பார்ப்புகள், வீட்டுப் பொறுப்புகள் மற்றும் பாதுகாப்பு தொடர்பான தடைகள் ஆகியவற்றின் காரணமாக, காலமுறை தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Periodic Labour Force Survey (PLFS)) குறைவாகவே உள்ளது. 2025-ம் ஆண்டின் காலமுறை தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (PLFS) அறிக்கையின்படி, வழக்கமான ஊதியம் பெறும் பணியாளர் பிரிவில் ஆண்களே ஆதிக்கம் செலுத்துகின்றனர் (ஆண்கள் 26.5%, பெண்கள் 18.2%) மற்றும் அவர்கள் அதிக வருமானம் ஈட்டுகின்றனர். ஆண்களின் சராசரி மாத வருமானம் ₹24,217 ஆகவும், பெண்களின் வருமானம் ₹18,353-ஆகவும் உள்ளது. சுமார், 64.2% பெண்கள் சுயதொழில் செய்பவர்களாக வகைப்படுத்தப்பட்டிருந்தாலும், இந்த வகைப்பாடு தெளிவற்றதாக உள்ளது. மேலும், ஊதியம் பெறாத வீட்டு வேலைகள் அல்லது விவசாயப் பணிகளும் பெரும்பாலும் இதில் சேர்க்கப்படுகின்றன. இதனால், கல்வி நிலையங்களை விட்டு வெளியேறும் பெண் மாணவர்கள் அடுத்து எங்கு செல்கிறார்கள் என்பதைத் துல்லியமாக அறிய முடிவதில்லை. 2.24 கோடி இளம் பெண்கள் உயர்கல்வி வளாகங்களில் தங்களது இடத்தைப் பிடித்துள்ள நிலையில், அவர்கள் தங்கள் கல்வித் தகுதிக்கு ஏற்ற, பயனுள்ள மற்றும் ஊதியம் தரும் வேலைவாய்ப்புகளில் தொடர்ந்து நீடிப்பதை உறுதி செய்யவேண்டிய பொறுப்பு கொள்கை வகுப்பாளர்கள், கல்வி நிறுவனத் தலைவர்கள் மற்றும் தொழில் துறைத் தலைவர்கள்மீது பொறுப்பு உள்ளது.