பெரும்பாலான இந்திய மாநிலங்கள் கருவுறுதல் மாற்றத்தை (Fertility transition) ஏற்கனவே நிறைவு செய்துவிட்டதால், பெண்களின் கல்வித் தரம் இன்னும் எவ்வளவு உயர்ந்தாலும், பிறப்பு விகிதம் (Fertility rate) மேலும் குறைவதற்கு இனி பெரிய அளவில் வாய்ப்பில்லை. இருப்பினும், கல்வி என்பது இன்னும் மிக முக்கியமான ஒன்றாகவே தொடர்கிறது. ஏனெனில், அது பெண்களின் திருமண வயதைத் தள்ளிப்போட உதவுகிறது. இந்தியாவில் இப்போதும் குழந்தைத் திருமணங்கள் ஒரு பிரச்சனையாக நீடிப்பதால், இது மிக முக்கியமான மாற்றமாகும்.
குழந்தைத் திருமணங்களைக் குறைக்கவும், அதிகப்படியான பிறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தவும் இந்தியா இரண்டு முக்கியக் கொள்கை அணுகுமுறைகள் மூலம் பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. முதலாவது அணுகுமுறை, பெண்கல்வியை அதிகரிப்பதில் கவனம் செலுத்துகிறது. 'அனைவருக்கும் கல்வி இயக்கம்' (Sarva Shiksha Abhiyan (2001)) போன்ற திட்டங்கள் அனைவருக்கும் தொடக்கக் கல்வியை வழங்குவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. அதேநேரத்தில் 'கல்வி உரிமைச் சட்டம்' (Right to Education Act (2009)) 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்குக் கல்வியை ஒரு அடிப்படை உரிமையாக்கியது. 'மதிய உணவுத் திட்டம்' (Mid-Day Meal Scheme) சத்துணவு வழங்குவதன்மூலம் குழந்தைகள் பள்ளிக்கு வருவதை ஊக்குவித்தது. அதன் பிறகு வந்த 'பெண் குழந்தைகளைக் காப்போம், பெண் குழந்தைகளுக்குக் கற்பிப்போம்' (Beti Bachao Beti Padhao), 'செல்வமகள் சேமிப்புத் திட்டம்' (Sukanya Samriddhi Yojana) மற்றும் மேற்குவங்கத்தின் 'கன்யாஸ்ரீ பிரகல்பா' (Kanyashree Prakalpa) போன்ற திட்டங்கள் பெண்கல்வியை மேலும் ஊக்குவித்து, பெண்களின் திருமண வயதைத் தள்ளிப்போட உதவின.
இரண்டாவது அணுகுமுறை நேரடியாகக் குடும்ப அளவு மற்றும் திருமணத்தை இலக்காகக் கொண்டது. இந்தியா 1952-ஆம் ஆண்டில் உலகிலேயே முதன்முறையாகத் தேசியக் குடும்பக் கட்டுப்பாட்டுத் திட்டத்தைத் தொடங்கியது. குழந்தை திருமணத் தடுப்புச் சட்டம், 2006-ன்படி பெண்களுக்கான குறைந்தபட்ச சட்டப்பூர்வ திருமண வயது 18-ஆக நிர்ணயிக்கப்பட்டது, மேலும், 2021-ஆம் ஆண்டில் கொண்டுவரப்பட்ட ஒரு முன்மொழிவு இதனை 21-வயதாக உயர்த்த முயன்றது.
இந்த இரண்டு அணுகுமுறைகளுமே கல்வி, திருமணம் மற்றும் குடும்ப அளவு ஆகியவை ஒன்றுக்கொன்று நெருங்கிய தொடர்புடையவை என்ற கருத்தின் அடிப்படையில்தான் அமைந்துள்ளன. உயர்கல்வியானது பெண்களின் திருமணத்தை தாமதப்படுத்துகிறது, கருவுறுதல் விகிதத்தைக் (Fertility) குறைக்கிறது மற்றும் பெண்களின் அதிகாரமளித்தலை (Women's empowerment) மேம்படுத்துகிறது. அதேநேரத்தில், சிறிய குடும்பங்கள் இருப்பதால் பெற்றோர்களால் தங்களின் ஒவ்வொரு குழந்தையின் கல்வியிலும் அதிக முதலீடு செய்யமுடிகிறது. தேசியக் குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (National Family Health Survey (NFHS-6): 2023-24) மற்றும் தேசியக் குடும்பச் சுகாதாரக் கணக்கெடுப்பு-5 (NFHS-5: 2019-21) ஆகியவற்றின் முடிவுகளை ஒப்பிட்டுப் பார்ப்பதன் மூலம், சமீபத்திய மாநில அளவிலான தரவுகளைக் கொண்டு இந்தத் தொடர்பை விரிவாக ஆராய முடிகிறது.
பள்ளிக்கல்வியில் வளர்ச்சி
மேற்கொள்ளப்பட்ட இரண்டு ஆய்வுகளுக்கு இடைப்பட்ட காலத்தில், இந்தியாவின் ஏறக்குறைய அனைத்துப் பகுதிகளிலும் பெண்களின் கல்வி தொடர்ந்து முன்னேற்றம் கண்டுள்ளது. 10 ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாகப் பள்ளிப்படிப்பை முடித்த பெண்களின் விகிதம், 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 33-ல் அதிகரித்துள்ளது. இந்த 35-ல் 27 பகுதிகளில் எதிர்பார்த்தபடியே ஒரு தொடர்பு காணப்பட்டது. அதாவது, பெண்களின் கல்விநிலை அதிகமாக இருக்கும்போது, அவர்களின் சிறுவயது திருமண விகிதம் குறைவாக இருந்தது. அனைத்து மாநிலங்களையும் ஒப்பிட்டுப் பார்க்கும்போது, பெண்களின் கல்வி வளர்ச்சிக்கும் சிறுவயது திருமணத்திற்கும் இடையேயான தொடர்பு -0.40-ஆக இருந்தது. இது புள்ளிவிவரப்படி ஒரு வலுவான தொடர்பை (p = 0.018) காட்டுகிறது. பொதுவாக, எந்தெந்த மாநிலங்களில் பெண் பிள்ளைகள் நீண்டகாலம் பள்ளியில் படித்து வந்தார்களோ, அந்த மாநிலங்களில் சிறுவயது திருமணங்கள் மிக வேகமாக குறைந்தன.
மாநில அளவில் குழந்தை திருமணங்கள் குறைந்து வருவது, தேசிய அளவிலான போக்கோடு ஒத்துப்போகிறது. இந்தியா முழுவதும், 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்துகொண்ட பெண்களின் பங்கு, இரண்டு கட்ட ஆய்வுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் 23.3 விழுக்காட்டில் இருந்து 20.1 விழுக்காடாகக் குறைந்துள்ளது. இதில் மிகப்பெரிய வீழ்ச்சி தாத்ரா & நகர் ஹவேலி மற்றும் தாமன் & தியூ (10 சதவீதப் புள்ளிகள்) மற்றும் அந்தமான் & நிக்கோபார் தீவுகளில் (7.4 சதவீதப் புள்ளிகள்) காணப்பட்டது. குழந்தை திருமண விகிதம் அதிகமாக உள்ள அசாம், பீகார் மற்றும் திரிபுரா ஆகிய மாநிலங்களும் தலா 6 சதவீதப் புள்ளிகளுக்கும் மேலாக வீழ்ச்சி அடைந்துள்ளன. இருப்பினும், சில மாநிலங்களில் குழந்தை திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நாகாலாந்து மாநிலம் மிக அதிகப்படியான உயர்வை (4.6 சதவீதப் புள்ளிகள்) பதிவு செய்துள்ளது. அதேநேரத்தில் இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப் மற்றும் டெல்லி ஆகிய மாநிலங்களில் சிறிய அளவிலான உயர்வு காணப்பட்டது.
பள்ளிப்படிப்பு மற்றும் கருவுறுதல் விகிதத்திற்கு இடையேயான தொடர்பு
கல்வி அறிவிற்கும் குழந்தைப் பிறப்பு வீதத்திற்கும் இடையே ஒரு நெருங்கிய தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றன. அதாவது, கல்வி அறிவு அதிகரிக்கும்போது பொதுவாகக் குழந்தைப் பிறப்பு விகிதம் குறையும் என்றே நம்பப்படுகிறது. ஆனால், அண்மை தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்புகளான தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு-5 மற்றும் தேசியக் குடும்பநலக் கணக்கெடுப்பு-6 ஆகியவற்றின் தரவுகள் முற்றிலும் வேறுபட்ட ஒரு போக்கைக் காட்டுகின்றன. கல்வி அறிவில் ஏற்படும் மாற்றங்களுக்கும், மொத்த கருவுறுதல் விகிதத்திற்கும் இடையேயான தொடர்பு மிகவும் பலவீனமாகவும், புள்ளிவிவரரீதியாகக் குறிப்பிடத்தக்க அளவு இல்லாமலும் இருப்பதை இந்தத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன (இதன் தொடர்பு குணகம் = -0.10, p = 0.57). கல்வி அறிவில் 8 அல்லது 9 விழுக்காடு வரை கணிசமான வளர்ச்சியைப் பெற்றுள்ள மாநிலங்கள், கல்வி அறிவில் மிகக் குறைந்த மாற்றத்தைக் கண்டுள்ள மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், அதற்கேற்ப தங்கள் குழந்தைப் பிறப்பு விகிதத்தில் தொடர்ச்சியான குறைவைக் காட்டவில்லை. இந்தியாவில் உள்ள 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், வெறும் 12 மாநிலங்கள் மட்டுமே கல்வி அறிவு அதிகரித்த அதேநேரத்தில் குழந்தைப் பிறப்பு விகிதம் குறைந்திருக்கும் என்கிற வழக்கமான போக்கைக் காட்டுகின்றன.
இதற்கு என்ன காரணம்? இந்தியாவில் பிறப்பு விகிதம் குறைவதற்கான கருவுறுதல் மாறுதல் பருவம் ஏறக்குறைய அதன் இறுதிநிலையை எட்டிவிட்டதே இந்தக் குழந்தை பிறப்பு விகிதத்தில் பெரிய மாற்றம் இல்லாததற்குக் காரணமாகும். ஒரு பெண்ணிற்குப் பிறக்கும் குழந்தைகளின் எண்ணிக்கையின் தேசியச் சராசரி 2.0-ஆக உள்ளது. இது மக்கள்தொகையை நிலையாக வைத்திருப்பதற்கான மாற்று நிலை அளவான 2.1-ஐவிடக் குறைவு ஆகும். மாதிரிப் பதிவு முறை (Sample Registration System) அறிக்கையின்படி, இந்தியாவின் தேசிய மொத்த பிறப்பு விகிதம் 1.9-ஆகக் குறைந்துள்ளது. தற்போது 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மட்டுமே இந்த 2.1 என்ற மாற்று நிலை அளவிற்கு மேல் உள்ளன. இந்தப் பட்டியலில் பீகார் (2.7) முதலிடத்தில் உள்ளது. அதனைத் தொடர்ந்து உத்தரப் பிரதேசம், ஜார்க்கண்ட், மேகாலயா மற்றும் லட்சத்தீவு (இவை ஒவ்வொன்றும் 2.2) ஆகிய பகுதிகள் உள்ளன. மற்ற அனைத்து மாநிலங்களும் யூனியன் பிரதேசங்களும் இந்த மாற்று நிலை வரம்பிற்குள்ளோ அல்லது அதற்குக் கீழோதான் உள்ளன. குறிப்பாகக் கேரளா, தமிழ்நாடு, மேற்குவங்கம், டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட பல மாநிலங்களில் இந்த பிறப்பு விகிதம் 1.6 முதல் 1.8 என்ற மிகக் குறைந்த அளவில் பதிவாகியுள்ளது.
பெரும்பாலான மாநிலங்கள் தங்களின் கருவுறுதல் மாற்றத்தை (Fertility transition) நிறைவு செய்துவிட்டதால், கல்வித் தகுதி உயர்வதன் மூலம் ஏற்படும் குறைவு உட்பட, இனிவரும் காலங்களில் பிறப்பு விகிதம் மேலும் குறைவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாகவே உள்ளன. இருப்பினும், பெண்களின் கல்விக்கும் கருவுறுதலுக்கும் இடையிலான தொடர்பு இன்னும் நீடிக்கவே செய்கிறது. பத்து ஆண்டுகள் அல்லது அதற்கும் மேலாகப் பள்ளிப் படிப்பை முடித்த பெண்களை அதிக எண்ணிக்கையில் கொண்ட மாநிலங்களில், ஒட்டுமொத்த பிறப்பு விகிதம் (Total fertility rate) தொடர்ந்து குறைவாகவே இருப்பதை சமீபத்தியத் தரவுகள் காட்டுகின்றன. இந்தத் தொடர்பு பல்வேறு மாநிலங்களுக்கு இடையே தெளிவாகத் தெரிந்தாலும், சமீபகாலமாகப் படிப்படியாக ஏற்பட்டு வரும் மாற்றங்களில் இது பெரிய அளவில் பிரதிபலிக்கவில்லை.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்தியாவின் கருவுறுதல் நிலை மாற்றம் ஏறக்குறைய நிறைவடையும் நிலையை எட்டிவிட்டது. நாட்டின் 35 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 30 பகுதிகள், மக்கள்தொகை மாற்றீடு கருவுறுதல் அளவை (Replacement fertility level) அடைந்துவிட்டன அல்லது அதற்குக் கீழே குறைந்துவிட்டன. இதன் விளைவாக, நாடு முழுவதும் மாநிலங்களுக்கு இடையே கருவுறுதல் விகிதத்தில் பெரிய வேறுபாடுகள் எதுவும் இல்லை. பெண்கள் திருமணப் பருவத்தை எட்டுவதைத் தள்ளிப்போடுவதன் மூலம், கல்வி இப்போதும் ஒரு முக்கியப் பங்காற்றி வருகிறது. இருப்பினும், சமீபத்திய தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS) தரவுகளின்படி, இளம்பெண்களில் ஐந்தில் ஒருவர் 18 வயதிற்கு முன்பே திருமணம் செய்துகொள்ளும் குழந்தை திருமண முறை இன்னும் பரவலாகவே காணப்படுகிறது.
தற்போதைய முக்கியக் கவலை என்னவென்றால், பெண்கள் எந்த வயதில் திருமணம் செய்துகொள்கிறார்கள் என்பதுதான். பள்ளிப் படிப்பைத் தொடரும் ஒவ்வொரு கூடுதல் ஆண்டும் அவர்களின் திருமணத்தைத் தள்ளிப்போடுகிறது. இது பெண்கள் திருமண வாழ்க்கைக்குள் நுழைவதற்கு முன்பு அவர்களின் கல்வி, தனிப்பட்ட வளர்ச்சி மற்றும் வேலைவாய்ப்பு ஆகியவற்றிற்கான கூடுதல் நேரத்தை வழங்குகிறது. இந்த உலக மக்கள்தொகை தினத்தில் (World Population Day), பெண்கள் திருமணத்திற்கு முன்பு செலவிடும் இந்த ஆண்டுகள் ஒரு முக்கியமான குறியீடாக மாறியுள்ளன. இப்போது கவனம் அனைத்தும் பெண்கள் பெற்றுக்கொள்ளும் குழந்தைகளின் எண்ணிக்கையில் இருந்து மாறி, திருமணத்திற்கு முன்பு அவர்கள் தங்களின் இலக்குகளை அடைவதற்கு அவர்களுக்கு எத்தனை ஆண்டுகள் கிடைக்கின்றன என்ற முக்கியத்துவத்திற்கு பெண்களின் கவனம் மாறியுள்ளது.
(ஆதாரங்கள்: தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு-5 (NFHS-5, 2019-21) மற்றும் தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு-6 (NFHS-6, 2023-24) தகவல் குறிப்புகள், இந்திய அரசாங்கம். மாதிரிப் பதிவு முறை (2024) நாட்டின் மொத்த பிறப்பு விகிதத்தை (TFR) 1.9-ஆகக் குறிப்பிடுகிறது; மாதிரிப் பதிவு முறை (SRS) மற்றும் தேசியக் குடும்ப நலக் கணக்கெடுப்பு (NFHS) ஆகிய அமைப்புகள் தங்களின் கணக்கெடுப்பு முறைகள் மற்றும் குறிப்புக் காலங்களில் மாறுபடுவதால், அவை தனித்தனிச் சார்பற்ற ஆதாரங்களாக இங்கே வழங்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த ஒப்பீடுகளும் மாநில அளவிலான எளிய தொடர்புகளின் (Simple associations, n = 35) அடிப்படையிலானவை, இவை காரண-விளைவு மதிப்பீடுகள் அல்ல. மணிப்பூர் மாநிலத்தில் தேசியக் குடும்பநலக் கணக்கெடுப்பு-6 நடத்தப்படாததால், அது இந்த ஆய்வில் இருந்து விலக்கப்பட்டுள்ளது.)