தன்னார்வப் பராமரிப்புப் பணிகளை அங்கீகரிக்க வேண்டியதன் அவசியம். -ரெஞ்சினி ராஜகோபாலன்

 இந்தியாவின் 'தன்னார்வலர்கள்' என்று அழைக்கப்படும் பராமரிப்புப் பணியாளர்கள், உண்மையில் நமது சமூக நல அரசின் நிரந்தரத் தூண்களாகத் திகழ்கின்றனர்.


தேசிய திறன் தகுதி கட்டமைப்பு (National Skills Qualification Framework (NSQF)) திட்டங்களுடன் இணைந்த பயிற்சித் திட்டங்கள் மூலம், முதியோர் பராமரிப்பு (Geriatric), அடிப்படைப் பராமரிப்பு மற்றும் அது சார்ந்த திறன்களில் 1.5 லட்சம் பன்முகத் திறன் கொண்ட பராமரிப்பாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதன் வாயிலாக ஒரு 'வலிமையான பராமரிப்பு சூழலை' உருவாக்க வேண்டும் என்கிற நோக்கத்தில்  2026-27-ஆம் ஆண்டிற்கான ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் இந்தத் திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. இந்தியாவின் பராமரிப்புத் தேவைகள் அதிகரித்துவரும் நிலையில், இத்தகைய நடவடிக்கை காலத்திற்கு ஏற்றதும் மிக அவசியமானதும் ஆகும்.


இருப்பினும், இந்த நிதிநிலைத் திட்டம் ஒரு ஆழமான முரண்பாட்டை வெளிப்படுத்துகிறது: சான்றிதழ் பெற்ற புதிய பராமரிப்பு நிபுணர்களை உருவாக்க அரசு திட்டமிட்டுள்ள அதே வேளையில், இந்தியாவின் சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் குழந்தை பராமரிப்பு அமைப்புகளை ஏற்கனவே முன்னின்று நடத்தும் 50 லட்சத்திற்கும் அதிகமான பெண்களைப் பற்றி அது போதுமான அளவு குறிப்பிடவில்லை. குறிப்பாக, நமது அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (Accredited Social Health Activists (ASHAs)), அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் உதவியாளர்கள், மற்றும் சத்துணவுத் திட்டப் பணியாளர்கள் என அனைவரும் நாள்தோறும் அத்தியாவசிய பொதுச் சேவைகளை வழங்கி வருகின்றனர். இருந்தபோதிலும், அவர்கள் இன்றும் வெறும் "தன்னார்வலர்களாகவே" (Volunteers) வகைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், அரசு தற்போது வலுப்படுத்த முயலும் அதே முறையான அமைப்பிலிருந்து அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டுள்ளனர்.



ஒரு நிழல் தொழிலாளர் படை


குழந்தைக்கு உணவளிப்பதை உறுதி செய்யும் அங்கன்வாடி பணியாளர்கள் முதல், தொலைதூரக் கிராமங்களில் கர்ப்பிணிப் பெண்களைக் கண்காணிக்கும் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) வரை, இந்தப் பெண்களே இந்தியாவின் நலத்திட்ட அமைப்பின் முதுகெலும்பாகத் திகழ்கின்றனர். இவர்களது பணி அரசுக்கு மிக அவசியமானது மற்றும் தொடர்ச்சியானது என்றாலும், முறையான பணி ஒப்பந்தம், ஊதியத்துடன் கூடிய விடுப்பு அல்லது மகப்பேறு பலன்கள் எதுவுமின்றி, மிகக்குறைந்த மாதாந்திர கௌரவ ஊதியத்திற்காகப் பாதுகாப்பற்ற சூழலில் இவர்கள் பணியாற்றுகின்றனர். சில மாநிலங்கள் வழங்கும் ஊதிய உயர்வு, பணிக்கொடை அல்லது ஆயுஷ்மான் பாரத் போன்ற தேசியத் திட்டங்களில் இவர்களை இணைப்பது போன்ற நடவடிக்கைகள் இவர்களுக்குக் கிடைத்தாலும், அவை இந்தியாவின் பராமரிப்புப் பொருளாதாரத்தில் (Care Economy) உள்ள அடிப்படை முரண்பாட்டைத் தீர்க்கவில்லை. அதாவது, அத்தியாவசிய பொதுச் சேவைகளை வழங்கப் பெண்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட ஒரு பெரும் உழைப்பாளர் கூட்டத்தை அரசு நம்பியிருக்கிறது. ஆனால், முறையான வேலைவாய்ப்பில் வழங்கப்படும் சட்டப்பூர்வப் பாதுகாப்புகளை அவர்களுக்கு அளிக்கத் தவறி, அவர்களை வெறும் "கௌரவப் பணியாளர்கள்" (Honorary Workers) என்று மட்டுமே வகைப்படுத்துகிறது.


பாலின அடிப்படையிலான பணி


இந்த முரண்பாடானது பராமரிப்புப் பணிகள் குறித்த ஆழமான சமூக விதிமுறைகளிலிருந்து உருவாகிறது. இந்தியாவில் நிலவும் 'பராமரிப்பு அபராதம்' (Care Penalty) என்பது வெறும் சமூகவியல் கோட்பாடு மட்டுமல்ல, அது புள்ளிவிவரரீதியான உண்மை என்கின்றனர். பொருளாதார ஆய்வு 2025–26 (Economic Survey 2025–26) அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள 2024 நேரப் பயன்பாட்டு ஆய்வின் (Time Use Survey (TUS)) தரவுகள், இந்தியப் பெண்களே முதன்மையான பராமரிப்பாளர்களாக இருப்பதை உறுதிப்படுத்துகின்றன. 15 முதல் 59 வயதுக்குட்பட்ட பெண்களில் சுமார் 41% பேர் நாளொன்றுக்கு 140 நிமிடங்களை வீட்டுப் பராமரிப்புப் பணிகளுக்காகச் செலவிடுகின்றனர். ஆனால், ஆண்களில் வெறும் 21.4% பேர் மட்டுமே இதே பணிக்காகச் சுமார் 74 நிமிடங்களைச் செலவிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இந்தியாவின் நலத்திட்ட அமைப்பும் இதே போன்ற ஒரு முறையையே பின்பற்றுகிறது. பராமரிப்புப் பணிகளை 'தன்னார்வலர்கள்' என்று அழைக்கப்படும் பெண்களிடம் ஒப்படைப்பதன் மூலம், இப்பணிகள் ஊதியத்திற்குரிய தகுதியான வேலை என்பதைவிட, அவை பெண்களின் இயல்பான வீட்டுக்கடமை என்ற நீண்டகால நம்பிக்கையையே அரசு சார்ந்துள்ளது. இத்தகைய பராமரிப்புப் பணிகள் பெண்களுக்கு இயல்பானது எனக் கருதப்படுவதால், அவை குறைந்த ஊதியம் கொண்ட மற்றும் முறைசாரா பணிகளாகவே நடத்தப்படுகின்றன. இது ஒரு நச்சுச் சுழற்சியை (Vicious cycle) உருவாக்குகிறது. அதாவது, பராமரிப்புப் பணி ஒரு திறன் சார்ந்த உழைப்பாக அங்கீகரிக்கப்படாதபோது, அதற்கான முறையான ஊதியத்தை வழங்க வேண்டிய அழுத்தம் குறைகிறது, இதனால் பெரும்பாலான பெண் தொழிலாளர்கள் பாதுகாப்பற்ற வேலைகளில் முடங்கும் சூழல் ஏற்படுகிறது. இந்த நிலையில், தற்போதைய ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையில் புதிய பராமரிப்புப் பணியாளர்கள் குழுவை உருவாக்குவதில் காட்டிய ஆர்வம், ஏற்கனவே இப்பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களை முறைப்படுத்துவதற்கான தெளிவான திட்டங்கள் இல்லாததையே காட்டுகிறது. இந்தத் தொழிலாளர்கள் ஏற்கனவே உணர்வுப்பூர்வமான ஈடுபாடு, கள ஒருங்கிணைப்பு மற்றும் சமூகத் தேவைகள் குறித்த ஆழமான புரிதலுடன் கூடிய சிக்கலான மற்றும் பன்முகத்திறன் கொண்ட பணிகளைச் செய்து வருகின்றனர். எனவே, ஏற்கனவே இத்தகைய அத்தியாவசியப் பணிகளைச் செய்து வருபவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், அவர்களுக்கு வேலை பாதுகாப்பை வழங்கவும் அரசு ஏன் முயற்சிக்கவில்லை என்கிற கேள்வி எழுகிறது.


இந்தியாவின் 'தன்னார்வலர்கள்' என்று அழைக்கப்படும் பராமரிப்புப் பணியாளர்கள், உண்மையில் நாட்டின் சமூகநல அரசின் நிரந்தரத் தூண்களாகத் திகழ்கின்றனர். இந்த அமைப்புகளைத் தாங்கிப் பிடிக்கும் பெண் பணியாளர்களுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதும், அவர்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லாததும், அவர்கள் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத நிலையில் இருப்பதும் நீடித்தால், இந்தியா ஒரு உலகளாவிய சுகாதார வல்லரசாக வேண்டும் என்ற தனது இலக்கை அடைய முடியாது. இந்தியாவின் பராமரிப்புப் பொருளாதாரத்தை மறுசீரமைக்க வேண்டுமானால், அதற்குப் போதிய நிதி முதலீடு செய்யப்படுவதோடு மட்டுமல்லாமல், அந்தப் பணியாளர்களைப் பற்றிய சமூகத்தின் அணுகுமுறையிலும் ஒரு பெரிய மாற்றம் ஏற்பட வேண்டியது அவசியமாகிறது. 


பராமரிப்புப் பொருளாதாரத்தை மறுவடிவமைத்தல் 


பராமரிப்புப் பணியாளர்களை வெறும் 'தன்னார்வலர்கள்' (Volunteers) என்று அழைப்பதைக் கடந்து இந்தியா அடுத்த கட்டத்திற்கு நகரவேண்டும் என்கின்றனர்.  உத்தரப் பிரதேச அரசுக்கு எதிரான தரம் சிங் (Dharam Singh & Anr. vs State of U.P. & Anr.) வழக்கில் 2025-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட தீர்ப்பில், ஒரு நிறுவனத்திற்குத் தேவையான அத்தியாவசியமான மற்றும் தொடர்ச்சியான பணிகளைச் செய்பவர்களை எப்போதும் தற்காலிகப் பணியாளர்களாகவே கருத முடியாது என்று உச்சநீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. இந்தியாவின் தவிர்க்க முடியாத மற்றும் இடைவிடாத பணிகளைச் செய்துவரும் தன்னார்வப் பராமரிப்புப் பணியாளர்களுக்கு, அவர்களின் கௌரவப் பதவிகளை நிரந்தரப் பணிகளாக மாற்றக் கோரும் கோரிக்கைக்கு இந்தத் தீர்ப்பு வலுவான ஆதரவை வழங்குகிறது.


திறன் மேம்பாட்டிற்கான தற்போதைய நிதி ஒதுக்கீடுகளுடன் இணைந்து, இந்தியாவின் பராமரிப்புப் பணியாளர்களின் வேலைவாய்ப்பு விதிமுறைகளை மறுபரிசீலனை செய்வதற்கும், அவர்களுக்கு வழங்கப்படும் 'கௌரவ ஊதியத்திற்கு' (honorariums) பதிலாக முறையான ஊதியம் மற்றும் பணி ஒப்பந்தங்களை உறுதி செய்யும் மாறுதல் கட்டமைப்புகளை உருவாக்க அரசை ஊக்குவிக்க வேண்டும். இதற்கான முதல் படியாக, முன்மொழியப்பட்டுள்ள தேசிய திறன் தகுதிக் கட்டமைப்பு (National Skills Qualification Framework (NSQF)) சார்ந்த திட்டங்களை அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (Accredited Social Health Activists (ASHA)) மற்றும் அங்கன்வாடி பணியாளர்களுக்கும் விரிவுபடுத்துவது அவசியமானதாகும்.


இந்தத் தொழிலாளர்கள் கண்ணியமான வாழ்விற்கும் தங்களுக்கான அங்கீகாரத்திற்கும் நாடு தழுவிய அளவில் போராட்டங்களைப் பல ஆண்டுகளாக முன்னெடுத்து வருகின்றனர். இப்போது, சர்வதேச தொழிலாளர் அமைப்பின் (International Labour Organisation (ILO)) 'கண்ணியமான பராமரிப்புப் பணிக்கான 5R கட்டமைப்பு' (5R Framework for Decent Care Work) கொள்கையின் இறுதி இரண்டு வாக்குறுதிகளான 'வெகுமதி' மற்றும் 'பிரதிநிதித்துவம்' ஆகியவற்றை நிறைவேற்ற வேண்டிய பொறுப்பு அரசுக்கு உள்ளது. அயராது உழைக்கும் நமது பராமரிப்புப் பணியாளர்களுக்கு நியாயமான ஊதியமும், வேலைவாய்ப்பு மற்றும் கொள்கை முடிவுகளில் உண்மையான அதிகாரமும்  வழங்கப்பட வேண்டியது அவசியமாகிறது. 


ரெஞ்சினி ராஜகோபாலன் ஒரு வழக்கறிஞர் மற்றும் JustJobs Network அமைப்பில் உள்ள பாலின பகுப்பாய்வு மையத்தின் ஆராய்ச்சித் தலைவராகவும் பணியாற்றி வருகிறார்.


Original article :  The need to recognise ‘volunteer’ care work -Renjini Rajagopalan

Share: