பெரும்பாலான நிதி ஆதாரங்கள் ஒன்றிய அரசின் நிபந்தனைகளுடன் பிணைக்கப்பட்டுள்ள நிலையில், நகரங்களால் அவற்றின் எதிர்காலத்தைத் தன்னிச்சையாகத் திட்டமிட முடியுமா?
நகரங்கள் மிக வேகமாக செல்வத்தை உருவாக்கும் முக்கிய மையங்களாக மாறி வருகின்றன. அரசின் வருவாயில் சுமார் 90% மற்றும் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) ஏறக்குறைய 67% நகர்ப்புறங்களில் இருந்தே கிடைக்கின்றன. நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான ஒட்டுமொத்த நிதி ஒதுக்கீடு குறைவாகவே இருந்தாலும், நகரங்கள் தங்களுக்கெனத் தனிப்பட்ட வருவாயை அதிகரித்துக் கொள்ள வேண்டும் என்றும், வரி வசூலிக்கும் வரம்பை விரிவுபடுத்த வேண்டும் என்றும் 16-வது நிதி ஆணையம் பரிந்துரைக்கிறது.
புள்ளிவிவரங்கள் எதை வெளிப்படுத்துகின்றன?
15-வது நிதி ஆணையத்தின்கீழ், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் ஐந்து ஆண்டுகளில் சுமார் ₹1.2–1.3 லட்சம் கோடி நிதியைப் பெற்றன. அதே காலகட்டத்தில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் ₹200–210 லட்சம் கோடியாக இருந்தது. இந்த நிதிப் பகிர்வு நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.12–0.13% மட்டுமே ஆகும்.
16-ஆவது நிதி ஆணையத்தின்கீழ், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு 2026 முதல் 2031 வரையிலான காலத்திற்கு சுமார் ₹3.56 லட்சம் கோடி நிதி ஒதுக்கப்படும் என்கின்றனர். இது ஆண்டுக்கு ₹75,000 கோடி ஆகும். இருப்பினும், ஒரு பெரிய நகர்ப்புற வளர்ச்சியை எட்டுவதற்கு இந்த நிதி போதுமானதாக இல்லை. 2031-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) சுமார் ₹400 லட்சம் கோடியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இந்த நிதிப்பகிர்வு என்பது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) வெறும் 0.13% என்ற அளவிலேயே நீடிக்கிறது.
மற்றொரு சிக்கல் என்னவென்றால், "நகர்ப்புறம்" என்பதற்கான வரையறையாகும். பல்வேறு தரவு ஆதாரங்களின் கணிப்புப்படி, 2031-ஆம் ஆண்டிற்குள் இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை சுமார் 41% எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஒரு நபருக்கான நிதி ஒதுக்கீட்டில் பெரிய அளவிலான மாற்றங்கள் எதுவும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.
தனிநபர் வருமானம் அல்லது ஒதுக்கீடு (per capita) புள்ளிவிவரங்களைக் கணக்கில் கொள்ளும்போது, நகர்ப்புற நிதிப்பகிர்வு தொடர்பான இந்த மாயை இன்னும் வலுவடைகிறது. இந்தியாவின் நகர்ப்புற மக்கள் தொகை 2020-ஆம் ஆண்டிலேயே 470 மில்லியனைக் கடந்த நிலையில், 16-வது நிதி ஆணையத்தின் காலமான 2026–30-ஆகிய காலகட்டத்தில் இது 600 மில்லியனை என்கிற அளவை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவ்வளவு பெரிய மக்கள் தொகைக்கு நகர்ப்புற மானியங்கள் பிரித்து வழங்கப்படும்போது, தனிநபருக்கான நிதிப் பரிமாற்றம் தேக்கமடைவதுடன், பணவீக்கத்தைக் கணக்கிடும்போது உண்மையான மதிப்பில் அது குறையவும் வாய்ப்புள்ளது.
நிதிப் பயன்பாடு குறித்த மற்றொரு முக்கியக் கவலை என்னவென்றால், 15-வது நிதி ஆணையத்தின்கீழ் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வழங்கப்பட்ட மொத்த மானியம் சுமார் ₹4.36 லட்சம் கோடியாகும். இருப்பினும், இதில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்காக ஒதுக்கப்பட்ட ₹30,000–35,000 கோடி உட்பட, சுமார் ₹90,000–95,000 கோடி வரையிலான ஒரு பெரும் பகுதி நிதி செலவிடப்படாமலோ அல்லது நிலுவையிலோ உள்ளதாகக் கூறப்படுகிறது.
கட்டுப்படுத்தப்பட்ட மானியங்கள் என்றால் என்ன?
நகரங்களுக்கான கட்டுப்படுத்தப்பட்ட மானியங்கள் (Tied grants) என்பது குடிநீர் வழங்கல், தூய்மைப் பணிகள் மற்றும் கழிவுநீர் மேலாண்மை போன்ற குறிப்பிட்ட திட்டங்களுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட நிதியாகும். மாநிலங்களும் உள்ளூர் அமைப்புகளும் இந்தத் தொகையை அந்தந்த நோக்கங்களுக்காக மட்டுமே செலவிட வேண்டும் என்ற நிபந்தனை இருப்பதால், இது அவர்களின் நிதிசார் சுயாட்சியை (Fiscal autonomy) அல்லது நிதியைத் தன்னிச்சையாகப் பயன்படுத்தும் அதிகாரத்தைக் கட்டுப்படுத்துகிறது.
16-வது நிதி ஆணையத்தின் அணுகுமுறையானது மிகவும் கடுமையானதாக உள்ளது. குறிப்பாக, நிதியுதவிகள் அனைத்தும் செயல்பாட்டுத் திறனின் அடிப்படையில் வழங்கப்படுவதால், நிதியைப் பயன்படுத்துவதில் நகரங்களுக்கு இருந்த சுதந்திரம் குறைக்கப்பட்டுள்ளது. நிதி விடுவிக்கப்பட வேண்டுமானால், நிதி ஒழுக்கத்தைப் பேணுதல் (Fiscal discipline), உள்ளாட்சித் தேர்தல்களைத் தவறாமல் நடத்துதல், வரவு-செலவு கணக்குகளைப் பொதுவெளியில் வெளியிடுதல் மற்றும் மாநில நிதி ஆணையங்களை அமைத்தல் போன்ற குறிப்பிட்ட நிபந்தனைகளை மாநிலங்களும் உள்ளாட்சி அமைப்புகளும் நிறைவேற்ற வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.
அனைத்து நிபந்தனைகளும் நியாயமானவை என்றாலும், நகரங்களுக்கு வழங்கப்படும் நிதியில் 20% கூடுதல் நிபந்தனைகளுடன் வருவதுதான் சிக்கலை ஏற்படுத்துகிறது. ஒருவேளை அந்த நிபந்தனைகளை நிறைவேற்றத் தவறினால், நகரங்கள் அந்தத் தொகையை இழக்க நேரிடும் என்கின்றனர். இதில் முக்கியமான நிபந்தனை என்னவென்றால், சொத்துவரி மற்றும் பயன்பாட்டுக் கட்டணங்கள் மூலம் நகரங்கள் தங்களுடைய சொந்த ஆதார வருவாயை (Own-Source Revenue (OSR)) அதிகரிக்க வேண்டும் என்பதாகும். இதற்காக, ஒரு வீட்டிற்கு சராசரியாக ₹1,200 வருவாய் ஈட்டப்பட வேண்டும் என்பதை ஒரு அளவுகோலாக நிதி ஆணையம் நிர்ணயித்துள்ளது.
இது ஏன் கூட்டாட்சி முறை தொடர்பான கவலைகளை எழுப்புகிறது?
ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் தொகையைக் கொண்ட நகர்ப்புறக் கிராமங்களை (Urban Villages), புறநகர்ப் பகுதிகளுடன் (Peri-urban) இணைப்பதற்காக, ஒருமுறை மட்டும் வழங்கப்படும் ஊக்கத்தொகையாக ₹10,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த அணுகுமுறையில் இரண்டு முக்கியப் சிக்கல்கள் உள்ளன. முதலாவதாக, நகர்ப்புற வளர்ச்சி என்பது மாநில அரசுகளின் பொறுப்பாகும், எனவே இதில் ஒன்றிய அரசின் தலையீடு அபாயகரமானது. வெறும் 10% நகரங்களின் வெளிப்பகுதிகளை இணைப்பது, முக்கியமாக உள்ளூர் வருவாயை அதிகரிப்பதற்காக மட்டுமே செய்யப்படுவதால், அது சீரற்ற நகர்ப்புற வளர்ச்சிக்கு வழிவகுக்கும் என்றும் எச்சரிக்கின்றனர். இரண்டாவதாக, கேரளா போன்ற ஊரக உள்ளாட்சி அமைப்புகள் வலுவாக உள்ள மாநிலங்களில், கிராமப்புறங்களை நகரங்களுடன் இணைப்பது நிர்வாகம் மற்றும் சமூகம் சார்ந்த சிக்கல்களை உருவாக்கும். மேலும், 16-வது நிதி ஆணையம் காலநிலை மாற்றத்தை ஓரளவிற்குப் புறக்கணிப்பதுடன், ஒன்றிய அரசால் வசூலிக்கப்படும் வளர்ந்துவரும் உபரி வரி (Cess) வருவாயையும் கணக்கில் கொள்ளவில்லை என்றும் சுட்டிக்காட்டுகின்றனர். இந்த உபரி (Cess) வரிகள் மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்படும் தொகுப்பில் சேராது. தற்போது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) சுமார் 2.2% அதாவது ஏறத்தாழ ₹8.8 லட்சம் கோடியாக உள்ள இந்த உபரி வரி வருவாய், பெரும்பாலும் நகரங்களிலிருந்தே கிடைப்பவை என்றாலும், அவை இன்னும் உள்ளூர் அமைப்புகளின் சொந்த வருவாய் (Own-Source Revenue (OSR)) கணக்கில் சேர்க்கப்படாமல் தவிர்க்கப்படுகின்றன.
ஒன்றிய அரசானது நகரங்களுக்கு ஆதரவு வழங்கும் ஒரு அமைப்பாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, நகரங்கள் தங்களின் எதிர்காலத்தைத் தாங்களே திட்டமிட்டுக்கொள்ள வேண்டும் என்ற மிக முக்கியமான கருத்தை 16-வது நிதி ஆணையம் கவனிக்கத் தவறிவிட்டதாகக் கூறப்படுகிறது. இறுதியில், அது அந்தந்த நகரங்களுக்குச் சொந்தமான வரிப்பணம் என்பதால், அந்த நிதியை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்று தீர்மானிக்கும் உரிமை அந்த நகரங்களுக்கே உள்ளதாகவும் தெரிவிக்கின்றனர்.
திகேந்தர் சிங் பன்வார், சிம்லாவின் முன்னாள் துணை மேயராக இருந்தவர் மற்றும் தற்போது கேரள நகர்ப்புற ஆணையத்தின் உறுப்பினராகப் பணியாற்றி வருகிறார்.
Original article : Why are Finance Commission grants to cities still so limited? -Tikender Singh Panwar