இந்தியாவின் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' முன்மொழிவானது கூட்டாட்சித் தத்துவம், நிர்வாக ஆளுமை, ஜனநாயகக் கோட்பாடுகள் மற்றும் வாக்காளர்களின் ஆணை ஆகியவற்றைத் தீவிரமாகச் சிதைக்கும் வகையில் அமைந்துள்ளது.
கடந்த 2019-ஆம் ஆண்டு, இந்தோனேசியா அதிபர் தேர்தல், தேசிய மற்றும் பிராந்திய சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் என அனைத்தையும் ஒரேநாளில் நடத்தி ஒரு வரலாற்றுச் சாதனையைப் படைத்தது. செலவுகளைக் குறைப்பதும், நிர்வாகத்தை எளிமையாக்குவதும் இதன் நோக்கமாக இருந்தபோதிலும், இது பெரும் மனித உயிரிழப்புகளுக்கு வழிவகுத்தது. தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த சுமார் 900 ஊழியர்கள் உயிரிழந்தனர் மற்றும் 5,000-க்கும் மேற்பட்டோர் கடுமையான உடல்நலப் பாதிப்புக்கு உள்ளாயினர். மீண்டும் 2024-ஆம் ஆண்டில் நடந்த தேர்தலிலும் 100-க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளும், சுமார் 15,000 பேருக்கு உடல்நலப் பாதிப்புகளும் ஏற்பட்டு பெரும் பாதிப்பை ஏற்படுத்தின. இதன் விளைவாக, வாக்காளர்கள் மற்றும் தேர்தல் பணியாளர்களுக்கு ஏற்படும் அதீத பணிச்சுமை மற்றும் ஜனநாயகப் பங்கேற்பில் அது ஏற்படுத்தும் தாக்கத்தைக் கருத்தில் கொண்டு, 2025-ஆம் ஆண்டு ஜூன் மாதம் அந்நாட்டின் நீதிமன்றம் ஒரு முக்கிய தீர்ப்பை வழங்கியது. அதன்படி, 2029-ஆம் ஆண்டு முதல் தேசிய மற்றும் உள்ளாட்சித் தேர்தல்கள் இரண்டரை ஆண்டுகள் இடைவெளியில் தனித்தனியாக நடத்தப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் ‘ஒரே நாடு, ஒரே தேர்தல்’ (One Nation, One Election (ONOE)) திட்டத்தை ஆதரிப்பவர்கள், மக்களவைத் தேர்தலையும் மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவது தேர்தல் செலவுகளைக் குறைக்கும், பாதுகாப்புப் படையினரின் நீண்டகாலப் பணியமர்த்தலைக் குறைக்கும், தேர்தல் நடத்தை விதிகளால் (Model Code of Conduct (MCC)) ஏற்படும் நிர்வாகத் தடைகளைக் கட்டுப்படுத்தும் மற்றும் அரசியல் கட்சிகள் எப்போதும் தேர்தல் பிரச்சார மனநிலையிலேயே இருப்பதைத் தவிர்க்கும் என்று கூறுகின்றனர். இருப்பினும், இத்தகைய முறையைச் செயல்படுத்திய இந்தோனேசியாவின் அனுபவம் இதற்கு ஒரு எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
ஒப்பீட்டு முறையிலான அரசியலமைப்பு நடைமுறைகளை ஆராய்ந்தால், தேர்தல்களைக் கட்டாயமாக ஒரே நேரத்தில் நடத்துவதற்கு மிகக் குறைந்த ஆதரவே கிடைக்கிறது. உதாரணமாக, கனடாவில் கூட்டாட்சி மற்றும் மாகாணத் தேர்தல்கள் தன்னிச்சையாக, தனித்தனியாக நடத்தப்படுகின்றன. ஆஸ்திரேலியாவில் இத்தகைய ஒருங்கிணைப்பு சாத்தியமில்லை. ஏனெனில், அங்குள்ள மாநிலச் சட்டமன்றங்கள் நான்கு ஆண்டுகள் நிலையான பதவிக்காலத்தைக் கொண்டுள்ளன. ஆனால், கூட்டாட்சிப் பிரதிநிதிகள் சபையின் அதிகபட்ச பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் மட்டுமே ஆகும்.
ஜெர்மனியின் அரசியல் சூழல் பெரும்பாலும் தவறாகவே முன்னுதாரணம் காட்டப்படுகிறது. அந்த நாட்டின் உறுதித்தன்மை என்பது நாடாளுமன்றத் தேர்தல்களையும் மாநில (Länder) தேர்தல்களையும் ஒரே நேரத்தில் நடத்துவதால் வருவதல்ல. உண்மையில் அங்கு மாநிலத் தேர்தல்கள் வேண்டுமென்றே வெவ்வேறு காலங்களில்தான் நடத்தப்படுகின்றன. மாறாக, ஜெர்மனியின் இந்த உறுதித்தன்மைக்கு 'ஆக்கபூர்வமான நம்பிக்கையில்லாத் தீர்மானம்' (Constructive Vote of No Confidence) என்ற நடைமுறைதான் முக்கியக் காரணமாகும். இதன்படி, அந்நாட்டின் நாடாளுமன்றமான 'பன்டெஸ்டாக்' (Bundestag), பதவியில் இருக்கும் ஒரு அதிபரை நீக்குவதற்கு முன்பாகவே, அவருக்குப் பதிலாகப் புதிய ஒருவரைத் தேர்ந்தெடுத்திருக்க வேண்டும் என்பதை இந்தச் சட்டம் கட்டாயமாக்குகிறது.
தென்னாப்பிரிக்கா மற்றும் இந்தோனேசியா ஆகிய நாடுகள் விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ (Proportional Representation) முறையைப் பயன்படுத்துகின்றன; இது அரசியல் அதிகாரத்தைப் பரவலாக்குவதுடன், சிறுபான்மையினரின் குரல்களையும் பாதுகாக்கிறது. ஆனால், இந்தியாவின் 'முதலில் வருபவருக்கே வெற்றி' தேர்தல் முறையில் இத்தகைய பாதுகாப்புகள் இல்லை, எனவே ஒரு தேசிய அளவிலான அலை மாநிலத் தேர்தல்களில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும். அமெரிக்காவை இதனுடன் ஒப்பிடுவது இன்னும் பொருத்தமற்றது; ஏனெனில் அங்குள்ள அதிபர் ஆட்சி முறையில் தேர்தல் சுழற்சிகள் நிலையானவை, அங்கு நிர்வாகத் துறையின் பதவிக்காலம் சட்டமன்றத்தின் நம்பிக்கையைச் சார்ந்து இருப்பதில்லை.
அரசியலமைப்பு திருத்த முன்மொழிவு
முன்னாள் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு (2023–24) வழங்கிய விரிவான திட்டமானது, தற்போது இந்திய அரசியலமைப்பு (129-வது திருத்தச்) மசோதா, 2024-ன் மூலம் சட்டமாக்கப்பட்டு வருகிறது. இதற்கெனப் பரிந்துரைக்கப்பட்டுள்ள பிரிவு 82A, குடியரசுத் தலைவர் ஒரு குறிப்பிட்ட "நிர்ணயிக்கப்பட்ட தேதியை" அறிவிக்க அனுமதி அளிக்கிறது. இந்தத் தேதிக்குப் பிறகு அமையும் சட்டமன்றங்கள், அவற்றின் ஐந்தாண்டு காலத்தை நிறைவு செய்யாவிட்டாலும், அவற்றின் பதவிக்காலம் குறைக்கப்பட வாய்ப்புள்ளது. மேலும், இந்த மசோதா "முழுமையடையாத பதவிக்காலத்திற்கான தேர்தல்கள்" (Unexpired-term elections) என்ற புதிய முறையை அறிமுகப்படுத்துகிறது. இதன்படி, ஒரு சட்டமன்றம் அதன் காலம் முடிவதற்கு முன்பே கலைக்கப்பட்டால், புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சட்டமன்றம் முழுமையாக ஐந்து ஆண்டுகள் பதவியில் இருக்காது. மாறாக, முந்தைய சட்டமன்றத்தின் எஞ்சிய காலத்திற்கு மட்டுமே செயல்படும். அத்துடன், மாநிலத் தேர்தல்களை மக்களவைத் தேர்தலுடன் இணைந்து நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டால், அத்தேர்தல்களை ஒத்திவைக்கப் பரிந்துரைக்கும் அதிகாரம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு வழங்கப்படுகிறது. இந்த மசோதா அரசியலமைப்பின் 83, 172 மற்றும் 327 ஆகிய பிரிவுகளிலும் திருத்தங்களைக் கொண்டுவரப் பரிந்துரைப்பதால், இது முக்கியமான அரசியலமைப்புச் சார்ந்த விவாதங்களை எழுப்பியுள்ளது.
சட்டமன்றத்தின் நம்பிக்கையைப் பெற்றுள்ள வரை மட்டுமே அரசாங்கம் ஆட்சியில் நீடிக்கும் வகையிலான ஒரு நாடாளுமன்ற ஆட்சி முறையை இந்தியா திட்டமிட்டுத் தேர்ந்தெடுத்தது. இதற்கான காரணத்தை அரசியலமைப்பு நிர்ணய சபையில் விளக்கிய பி. ஆர். அம்பேத்கர், ஒரு ஜனநாயகத்தில் 'நிலையான ஆட்சி' மற்றும் 'பொறுப்புக்கூறல்' ஆகிய இரண்டையும் ஒரேநேரத்தில் முழுமையாகப் பெற முடியாது என்று குறிப்பிட்டார். நிலையான பதவிக்காலத்தை உறுதி செய்வதைவிட, நிர்வாகம் தொடர்ச்சியாக மக்களுக்குப் பதிலளிக்கக் கடமைப்பட்டிருப்பதை உறுதி செய்யும் 'பொறுப்புக்கூறல்' கொள்கைக்கே இந்தியா முன்னுரிமை அளித்தது.
அரசியலமைப்புச் சட்டத்தின் 75 மற்றும் 164-வது பிரிவுகள், நிர்வாகக் குழு (அமைச்சரவை) சட்டமன்றத்திற்கு முழுப் பொறுப்புடையது என்று கூறுகின்றன. அதேபோல், 83 மற்றும் 172-வது பிரிவுகள் சட்டமன்றங்களின் கால அளவை அதிகபட்சமாக ஐந்து ஆண்டுகள் என நிர்ணயித்துள்ளனரே தவிர, அது முழுமையான பதவிக்காலம் என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் அளிக்கவில்லை. எனவே, ஒரு அரசாங்கம் மீதான நம்பிக்கை இழக்கப்படும்போது, சட்டமன்றம் முன்கூட்டியே கலைக்கப்படுவது என்பது ஒரு குறைபாடு அல்ல; மாறாக, வாக்காளர்கள் தங்கள் புதிய தீர்ப்பை வழங்க வழிவகை செய்யும் ஒரு ஜனநாயகப் பாதுகாப்பு அரண் ஆகும். ஆனால், ஒரே நாடு, ஒரே தேர்தல் (One Nation, One Election (ONOE)) என்ற யோசனையானது, இத்தகைய ஆட்சி கலைப்பு முறையை ஒரு நிர்வாகச் சிக்கலாகப் பார்க்கிறது. இது இந்தியாவின் நாடாளுமன்ற ஜனநாயக முறையை மெல்ல மெல்ல 'அதிபர் ஆட்சி முறை' (Quasi-presidential model) போன்ற ஒரு முறைக்கு மாற்றி, சட்டமன்றப் பொறுப்புணர்வைக் குறைக்க வழிவகை செய்கிறது.
எஸ்.ஆர். பொம்மை vs இந்திய ஒன்றியம் (1994) (S.R. Bommai vs Union of India (1994)) இடையிலான வழக்கில், இந்திய உச்சநீதிமன்றம் கூட்டாட்சி தத்துவம் (Federalism) என்பது அரசியலமைப்பின் 'அடிப்படை கட்டமைப்பின்' ஒரு அங்கமாகும் என்பதை உறுதிப்படுத்தியது. இதன்படி, மாநிலங்கள் என்பவை வெறும் நிர்வாக அமைப்புகள் மட்டுமல்ல; அவை சுதந்திரமான அரசியலமைப்புரீதியான அடையாளத்தைக் கொண்டுள்ளன. எனவே, மாநிலங்களின் ஜனநாயக நடைமுறைகளும் அவற்றின் அரசியல் மாற்றங்களும் ஒன்றிய அரசிலிருந்து மாறுபட்டு இருப்பதில் எந்தத் தவறும் இல்லை; அது சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட ஒன்றாகும்.
'ஒரே நாடு ஒரே தேர்தல்' (One Nation, One Election (ONOE)) என்ற நடைமுறை, ஜனநாயகம் மற்றும் கூட்டாட்சித் தத்துவத்தின் அடிப்படை விதிகளை நிலைகுலையச் செய்கிறது. பொதுவாக, ஒரு மாநில அரசின் ஆயுட்காலம் முடிவதற்கு முன்பே அது கலைக்கப்படுவது என்பது அந்த அரசு சட்டமன்றத்தில் பெரும்பான்மையை இழக்கும்போது மட்டுமே நடக்கும்; ஆனால், இந்த நடைமுறையில் சட்டமன்றத்தின் மீதான நம்பிக்கை குறையாத நிலையிலும், தேசிய தேர்தல் கால அட்டவணையுடன் பொருந்துவதற்காக மட்டுமே ஒரு மாநில அரசின் பதவிக்காலம் வலுக்கட்டாயமாகக் குறைக்கப்படும். உதாரணமாக, இந்தத் திட்டம் 2029-ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரும்போது, 2033-ஆம் ஆண்டில் தனது சட்டமன்றத்தைத் தேர்ந்தெடுக்கும் ஒரு மாநிலம், தேசிய தேர்தலுடன் இணைய வேண்டும் என்பதற்காக வெறும் ஓராண்டிலேயே தனது பதவிக்காலத்தை இழக்கவேண்டிய சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.
இதற்கு நேர்மாறாக, நாடாளுமன்றம், மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு வெவ்வேறு காலங்களில் தேர்தல்களை நடத்துவது ஒரு தொடர்ச்சியான பின்னூட்ட அமைப்பை (Continuous feedback system) உருவாக்குகிறது. இது அரசாங்கங்கள் எப்போதும் பொதுமக்களின் கருத்துகளை உணர்ந்து செயல்பட உதவுகிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைத் திரும்பப் பெறும் உரிமை (Right to recall) இல்லாத ஒரு அமைப்பில், அரசாங்கத்தின் பொறுப்புணர்வை உறுதி செய்வதற்கு இத்தகைய தேர்தல்களே அடுத்த சிறந்த வழியாக அமைகின்றன. ஜேம்ஸ் மேடிசன் 'பெடரலிஸ்ட் எண். 52'-ல் (Federalist No. 52) குறிப்பிட்டது போல, அடிக்கடி நடக்கும் தேர்தல்கள் அரசாங்கமானது மக்கள்மீது "நேரடிச் சார்பு கொண்டிருக்கவும் மற்றும் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்கவும்" உதவுகின்றன.
முழுமையடையாத பதவிக்காலத்திற்கான தேர்தல்களில் உள்ள நடைமுறைச் சிக்கல்கள்
இந்த முன்மொழிவில் மிகவும் கவலைக்குரிய அம்சம் என்னவென்றால், எஞ்சியிருக்கும் சட்டமன்றக் காலத்திற்காக மட்டும் இடைக்காலத் தேர்தல்களை நடத்துவதாகும். ஒரு குறிப்பிட்டகாலம் முடிவதற்கு முன்பே தேர்தல் நடந்தால், எஞ்சியிருக்கும் காலத்தை மட்டுமே புதிய அரசு நிறைவு செய்ய வேண்டும் என்ற கருத்தாக்கத்தை இந்திய அரசியலமைப்பு அங்கீகரிக்கவில்லை. முன்மொழியப்பட்ட சட்டப்பிரிவுகள் 83(6) மற்றும் 172(5) ஆகியவை, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் சபை முந்தைய சபையின் தொடர்ச்சியாக இருக்காது என்று கூறினாலும், அனைத்துத் தேர்தல்களையும் ஒரேநேரத்தில் நடத்தும் முறையை பராமரிப்பதற்காக பழைய தேர்தல் சுழற்சியையே அவை பின்பற்றுகின்றன. இது ஜனநாயக நடைமுறைகளில் பலவிதமான குளறுபடிகளையும் சமச்சீரற்றத் தன்மையையும் உருவாக்குகிறது.
முதலாவதாக, இத்தகைய நடைமுறை வாக்களிக்கும் உரிமையின் மதிப்பைக் குறைக்கிறது. ஒரு ஆட்சியின் இடைக்காலத்திலேயே தேர்தல் நடத்தப்படும்போது, அவை முழுமையற்ற அல்லது குறுகிய கால ஆட்சிக்கான ஆணையை மட்டுமே கொண்ட அரசாங்கங்களை உருவாக்கும். இது தேர்தல்களை வெறும் தற்காலிகப் பயிற்சிகளாக மாற்றவதுடன், வாக்காளர்களிடையே ஜனநாயகத்தின்மீது ஒருவித ஈடுபாடற்றத் தன்மையை ஏற்படுத்தும் அபாயத்தைக் கொண்டுள்ளது.
இரண்டாவதாக, இந்த முறையானது நிர்வாகத்தையும் பொறுப்புணர்வையும் பலவீனப்படுத்துகிறது. ஏனெனில், மிகக் குறுகியகாலமே பதவியில் இருக்கும் அரசாங்கங்களுக்குப் பெரிய அளவிலான சீர்திருத்தங்களை மேற்கொள்வதற்கான ஆர்வம் குறைவாகவே இருக்கும். இது மக்கள் கவர்ச்சித் திட்டங்களை முன்னெடுப்பதற்கும், கொள்கைரீதியான தேக்கநிலை அல்லது திசைமாற்றம் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும். தேர்தல் நடத்தை விதிகளால் (MCC) ஏற்படும் தற்காலிகக் கட்டுப்பாடுகளைப் போலன்றி, இத்தகைய சுருக்கப்பட்ட பதவிக்காலங்கள் சில வாரங்களுக்குப் பதில் பல ஆண்டுகளுக்கு நிர்வாகத்தைப் பாதிக்கும் அபாயம் உள்ளது.
மூன்றாவதாக, இது ஒரு "நிர்வாகம் செயலிழந்த மண்டலத்தை" (Governance dead zone) உருவாக்கக்கூடும். ஒரு பதவிக்காலம் பாதியிலேயே முடியும் பட்சத்தில், எஞ்சியிருக்கும் காலம் குறைந்தபட்சம் எவ்வளவு இருந்தால் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை இந்தத் திருத்தச் சட்டம் தெளிவாகக் குறிப்பிடவில்லை. இதனால், ஒரு அவையின் ஆயுட்காலம் முடிவதற்குச் சில காலமே இருக்கும்போது அந்த அவை கலைக்கப்பட்டால், புதிய தேர்தல் நடத்தப்படாமல் அந்த இடைப்பட்ட காலம் எவ்வித மக்கள் பிரதிநிதித்துவமும் இன்றி நிர்வாகம் முடங்கும் சூழல் ஏற்பட வாய்ப்புள்ளது.
மாநில அளவில், தேர்தல்களைத் தாமதப்படுத்துவது குடியரசுத் தலைவர் ஆட்சியை (President’s Rule) நீட்டிக்க வழிவகுக்கும். இது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 356(5)-க்கு முரணாக அமையக்கூடும். இந்தப் பிரிவின்படி, குடியரசுத் தலைவர் ஆட்சியை ஒரு ஆண்டிற்கு மேல் நீட்டிக்க முடியாது. ஒருவேளை தேசிய அவசரநிலை அமலில் இருந்து, தேர்தலை நடத்துவதில் சிக்கல் உள்ளதாக இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) சான்றளித்தால் மட்டுமே, குடியரசுத் தலைவர் ஆட்சியை அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும்.
ஒன்றிய அளவில், ஒரேநேரத்தில் தேர்தல்கள் நடத்தப்படுவதற்காகக் காத்திருக்கும்போது ஒரு தற்காலிக இடைக்கால அரசு பதவியில் இருக்கும் சூழல் உருவாகலாம். இது நாடாளுமன்றம் ஆறு மாதங்களுக்கு ஒருமுறையாவதுகூட வேண்டும் என்று வலியுறுத்தும் அரசியலமைப்புச் சட்டம் 85-வது பிரிவை (Article 85) மீறுவதாக அமையக்கூடும். மேலும், இத்தகைய அரசாங்கத்தால் அரசியலமைப்புச் சட்டப் பிரிவுகள் 112-117-ன்கீழ் முழுமையான நிதிநிலை அறிக்கையை சமர்ப்பிக்க முடியாது. மாறாக, 116-வது பிரிவின்கீழ் இடைக்கால நிதி ஒதுக்கீட்டு முறை (Vote on Account) மூலம் மட்டுமே நிதியைப் பெற முடியும் என்பதால் இது நாட்டின் நிதிசார் நிர்வாகத்தை பலவீனப்படுத்த வாய்ப்புள்ளது.
எனவே, ஒன்றிய அளவில் ஆறு மாதங்களுக்கு மேலாக எஞ்சியிருக்கும் பதவிக்காலத்தை மட்டும் பூர்த்தி செய்யும் "முழுமையடையாத பதவிக்கால" (unexpired-term) முறையை அமல்படுத்துவது சட்டப்பூர்வமாக சாத்தியமற்றது. இதனைச் செயல்படுத்த வேண்டுமானால், அரசியலமைப்பில் மிகப்பெரிய திருத்தங்களைக் கொண்டுவர வேண்டியிருக்கும், மேலும், அத்தகைய மாற்றங்கள் அரசியலமைப்பின் அடிப்படைத் தன்மையையே மாற்றி, அதன் 'அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை' மீறுவதாக அமைகின்றன.
முன்மொழியப்பட்டுள்ள பிரிவு 82A(5), ஒரு மாநிலத்தின் சட்டமன்றத் தேர்தலை மக்களவைத் தேர்தலுடன் (Lok Sabha elections) ஒரேநேரத்தில் நடத்த முடியாத சூழல் ஏற்பட்டால், அந்தத் தேர்தலைத் தள்ளிவைக்க இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்யும் அதிகாரத்தை வழங்குகிறது. இருப்பினும், இந்தத் தள்ளிவைப்பு தொடர்பாகத் தெளிவான விதிகள், கால வரம்புகள் அல்லது நாடாளுமன்றக் கண்காணிப்பு போன்ற பாதுகாப்புகள் இதில் இடம்பெறவில்லை. பொதுவாக, ஒரு மாநிலத்தில் ஆட்சிக்கவிழ்ப்பு போன்ற அவசர காலங்களில் பயன்படுத்தப்படும் பிரிவு 356-ல்கூட, நாடாளுமன்ற ஒப்புதல் மற்றும் குறிப்பிட்ட காலக்கெடு போன்ற பாதுகாப்பு நடைமுறைகள் உள்ளன. ஆனால், அதற்கு நேர்மாறாக, இந்தப் புதிய பிரிவு 82A(5) எந்தவித வழிகாட்டுதலும் இல்லாத மிக விரிவான மற்றும் தன்னிச்சையான அதிகாரத்தைத் தேர்தல் ஆணையத்திற்கு வழங்குகிறது.
ஒரு மாநில அரசு தனது பதவிக்காலத்தை முடிப்பதற்கு முன்பே கலைக்கப்பட்டால், மத்திய அரசு அங்கு குடியரசுத் தலைவர் ஆட்சியை அமல்படுத்தி, தேர்தலைத் தள்ளிவைக்க வாய்ப்புள்ளது. இத்தகைய சூழலில், அந்த மாநிலம் ஆளுநரின் மூலம் நிர்வகிக்கப்படும். இறுதியாகத் தேர்தல்கள் நடத்தப்படும்போது, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்படும் அரசுக்கு முழுமையான ஐந்தாண்டு காலம் வழங்கப்படாமல், மீதமுள்ள ஒரு குறுகியகாலத்திற்கு மட்டுமே ஆட்சி செய்யும் அதிகாரம் வழங்கப்படும் என்கிற சிக்கல் உள்ளது.
இந்தத் திருத்தத்தின் மூலம் முறைகேடுகள் நடக்குமா என்பது சிக்கல் அல்ல, மாறாக அத்தகைய முறைகேடுகள் நடப்பதற்கான வாய்ப்பை இந்தத் திருத்தம் அரசியலமைப்புரீதியாகவே உருவாக்கித் தருகிறது என்பதுதான் முக்கியமான சிக்கல் ஆகும். ஓர் அரசியலமைப்பில் முறைகேடு நடப்பதற்கான சிறிய வாய்ப்பு இருப்பதுகூட அந்த அரசியலமைப்புச் சட்டத்தின் மீதான கடுமையான எதிர்ப்பிற்குப் போதுமான காரணமாகும் என்று 1788-ஆம் ஆண்டின் 'பெடரலிஸ்ட் எண். 59'-ல் (Federalist No. 59), அலெக்சாண்டர் ஹாமில்டன் முன்பே எச்சரித்துள்ளார்.
தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய (National Judicial Appointments Commission (NJAC)) வழக்கில், ஒரு சட்டத்தின் அரசியலமைப்புச் செல்லுபடியாகும் தன்மை என்பது அந்த நிறுவனங்களின் வடிவமைப்பைப் பொறுத்ததே தவிர, அதிகாரம் பொறுப்புடன் பயன்படுத்தப்படும் என்ற வாக்குறுதிகளைப் பொறுத்தது அல்ல என்று நீதிமன்றம் தெரிவித்தது. எனவே, அரசியலமைப்பின் 'அடிப்படைக் கட்டமைப்பை' சிதைக்கும் வகையில் அமையும் எந்தவொரு திருத்தமும், நடைமுறையில் அந்த அதிகாரம் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது என்பதைப் பொருட்படுத்தாமல், அரசியலமைப்புக்கு முரணானதாகவே கருதப்படும். இதேபோல், 'ஒரே நாடு ஒரே தேர்தல்' (ONOE) முன்மொழிவானது, தேர்தல்களை ஒருங்கிணைக்க வேண்டும் என்ற பெயரில், தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கம் இல்லாமல் மாநிலங்களை நீண்டகாலத்திற்கு ஆட்சி செய்ய வழிவகுப்பதன் மூலம், இந்திய கூட்டாட்சித் தத்துவத்திற்கு அச்சுறுத்தலாக அமைந்துவிடும்.
செலவு குறித்த வாதம்
நாட்டின் முழுமையான பொருளாதாரத்தோடு ஒப்பிடும்போது, தேர்தல்களுக்காகச் செலவிடப்படும் தொகை மிகக் குறைவானதுதான். எனவே, இவ்வளவு சிறிய பொருளாதாரக் காரணியைக் காரணமாகக் காட்டி, அரசியலமைப்பில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டு வருவது நியாயமானதாக இருக்காது.
2015–16-ஆம் ஆண்டில் மக்களவை மற்றும் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்காக மேற்கொள்ளப்பட்ட மொத்தச் செலவு சுமார் ₹4,500 கோடி என நாடாளுமன்ற நிலைக்குழு மதிப்பிட்டுள்ளது; இது ஒன்றிய அரசின் நிதி ஒதுக்கீட்டுத் தொகையில் சுமார் 0.25% மற்றும் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product - GDP) 0.03% ஆகும். ‘PRS Legislative Research’ நிறுவனத்தின் தரவுகளின்படி, 1957-ஆம் ஆண்டு முதல் 2014-ஆம் ஆண்டு வரை மக்களவைத் தேர்தலுக்கான செலவு வரலாற்றுரீதியாக மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.02% முதல் 0.05% வரை மட்டுமே இருந்துள்ளது. தற்போது தேர்தல்கள் பல்வேறு கட்டங்களாக (2024-ஆம் ஆண்டில் 82 நாட்கள்) நடத்தப்படுவதால், இந்திய தேர்தல் ஆணையம் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் (Electronic Voting Machine (EVMs)), வாக்காளர் சரிபார்க்கும் காகித தணிக்கை சோதனை (Voter Verifiable Paper Audit Trail (VVPATs)) கருவிகள் மற்றும் பாதுகாப்புப் படைகளை மீண்டும் மீண்டும் வெவ்வேறு இடங்களுக்குப் பயன்படுத்த முடிகிறது. ஆனால், ஒரேநேரத்தில் தேர்தல்கள் நடத்தப்பட்டால், இந்த நெகிழ்வுத்தன்மை இல்லாமல் போய்விடும் என்பதோடு, கூடுதல் செலவுமிக்க ஆதாரங்கள் தேவைப்படும்; இது ஒரே நேரத் தேர்தலால் கிடைக்கும் எனச் சொல்லப்படும் நிர்வாக நன்மைகளைக் குறைத்துவிடும்.
மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீதத்திற்கும் குறைவான தொகையை மிச்சப்படுத்துவதற்காக, நாட்டின் அரசியலமைப்பைத் திருத்தி கூட்டாட்சித் தத்துவத்தை பலவீனப்படுத்துவது புத்திசாலித்தனமான செயலா? தேர்தல்கள் என்பவை குறைக்கப்பட வேண்டிய தேவையற்ற செலவுகள் அல்ல; அவை அதிகாரத்தில் இருப்பவர்களை மக்களுக்குப் பொறுப்பானவர்களாக வைத்திருக்கும் ஜனநாயகத்தின் வழக்கமான மற்றும் அவசியமான செலவினங்கள் ஆகும்.
தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட மத்திய-மாநில உறவுகள் குறித்த நீதியரசர் குரியன் ஜோசப் குழு (Justice Kurian Joseph Committee on Union-State Relations), பிப்ரவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் தாக்கல் செய்த தனது அறிக்கையின் முதல் பாகத்தில் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' மசோதாவைத் திரும்பப் பெற வேண்டும் என்று பரிந்துரைத்துள்ளது. இந்தப் பரிந்துரையைத் தமிழ்நாடு அரசும் ஆதரிக்கிறது. 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்தினால் கிடைக்கும் என்று கூறப்படும் நன்மைகள் மிகைப்படுத்தப்பட்டவை என்றும், அதே சமயம் இதில் உள்ள கட்டமைப்புரீதியான ஆபத்துகள் மிகவும் கடுமையானவை என்றும் அக்குழு குறிப்பிட்டுள்ளது. இத்திட்டம் இந்திய அரசியலமைப்பின் தனித்தன்மையை மாற்றி அமைப்பதோடு, அதன் அடிப்படைக் கட்டமைப்பையும் மீறுவதாக அமையக்கூடும். எனவே, இந்த விவகாரத்தில் இந்தோனேசியா செய்த தவறுகளை இந்தியா மீண்டும் செய்யாமல் தவிர்க்க வேண்டும் என்று அந்த அறிக்கை எச்சரிக்கிறது.
மு.க. ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார்.
Original article : One Nation, One Election — remedy worse than disease. -M K Stalin