மாநிலங்களவைத் தேர்தல்களுக்கான வாக்குகள் எவ்வாறு கணக்கிடப்படுகின்றன? -விகாஸ் பதக்

 18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களைப்போல இல்லாமல், மாநிலங்களவை உறுப்பினர்கள் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாசார பிரதிநிதித்துவ முறை (proportional representation) மூலம் ஒற்றை, மாற்றத்தக்க வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


மார்ச் 16-ஆம் தேதி, 10 மாநிலங்களுக்கான 37 மாநிலங்கவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த முறை, மிக முக்கியமான போட்டியாளர் ஐக்கிய ஜனதா தள தலைவர் நிதிஷ் குமார் ஆவார். எதிர்பாராத விதமாக, 21 ஆண்டுகால பீகார் முதல்வர் பதவி வகித்த  பிறகு, நிதிஷ் குமார் பதவி விலக முடிவு செய்துள்ளார். பீகாரில் இருந்து போட்டியிடும் மற்றொரு முக்கிய நபர் பாஜக தலைவர் நிதின் நபின் ஆவார்.


மாநிலங்களவைத் தேர்தலை நடத்துவதற்கான செயல்முறை என்ன, வாக்குகள் எவ்வாறு எண்ணப்படுகின்றன?


மாநிலங்களவை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்?


மாநிலங்களவையில் 250 உறுப்பினர்கள் வரை உள்ளனர். அவர்களில் 12 பேர் இலக்கியம், அறிவியல், கலை அல்லது சமூகசேவை குறித்த சிறப்பு நிபுணத்துவத்திற்காக பரிந்துரைக்கப்படுகிறார்கள். மற்றவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


18 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட குடிமக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படும் மக்களவை உறுப்பினர்களைப் போல் இல்லாமல், மாநிலங்களவை உறுப்பினர்கள் விகிதாசார பிரதிநிதித்துவ முறையின் மூலம் மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் ஒற்றை, மாற்றத்தக்க வாக்கு மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


டெல்லி மற்றும் புதுச்சேரியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மாநிலங்களவை உறுப்பினர்கள், இந்த யூனியன் பிரதேசங்களின் சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஒரு தேர்தல் கல்லூரியின் உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், லட்சத்தீவுகள், தாத்ரா மற்றும் நாகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, சண்டிகர் மற்றும் லடாக் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு மாநிலங்களவையில் எந்த விதமான பிரதிநிதித்துவம் இல்லை. இருப்பினும், ஜம்மு & காஷ்மீர் மாநிலத்திற்கு பிரதிநிதித்துவம் உள்ளது.


யார் மாநிலங்களவை உறுப்பினராக முடியும்?


ஒரு மாநிலங்களவை உறுப்பினராக இருப்பதற்கான குறைந்தபட்ச வயது 30 ஆகும். மேலும், எந்தவொரு மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரதேசத்திலோ பிரதிநிதியாகத் தேர்ந்தெடுக்கப்படத் தகுதியுள்ள ஒருவர் அந்த மாநிலம் அல்லது பிரதேசத்தில் உள்ள ஒரு நாடாளுமன்றத் தொகுதியின் வாக்காளராக இருக்க வேண்டும் என்று எம்.என்.கவுல் மற்றும் எஸ்.எல். ஷக்தேர் ஆகியோர் தங்கள் "நாடாளுமன்ற செயல்முறை மற்றும் நடைமுறை" (Practice and Procedure of Parliament) என்ற புத்தகத்தில்  தெரிவித்துள்ளனர்.


ஒரு மாநிலங்களவை உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும். மேலும், உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு பேர் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஓய்வு பெறுகிறார்கள். மக்களவையைப் போல் இல்லாமல், மாநிலங்களவை ஒருபோதும் கலைக்கப்படாத ஒரு நிரந்தர அமைப்பாக இருப்பதால், அவை நடவடிக்கை தொடர்ந்து உறுதி செய்யப்படுகிறது.


தேர்தல் செயல்முறை எவ்வாறு தொடங்குகிறது?


மாநிலங்களவையில் இருந்து ஓய்வுபெறும் உறுப்பினர்களின் பதவிக்காலம் முடிவடைந்தவுடன் இடங்களை நிரப்புவதற்கு, குடியரசுத் தலைவர், "தேர்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்படும் தேதி அல்லது நாள்களில் அரசிதழில் வெளியிடப்பட்ட ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அறிவிப்புகள் மூலம், சட்டமன்றத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களையோ அல்லது, சூழ்நிலைக்கேற்ப, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் தேர்தல் கல்லூரி உறுப்பினர்களையோ, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் (Representation of the People Act), 1951-ன் விதிகள் மற்றும் அதன்கீழ் உருவாக்கப்பட்ட விதிகள் மற்றும் உத்தரவுகளின்படி மாநிலங்களவை உறுப்பினர்களைத் தேர்ந்தெடுக்க அழைப்பு விடுக்கிறார்" என்று கவுல் மற்றும் ஷக்தேர் கூறுகின்றனர்.


தேர்தல் ஆணையத்தின் முன் ஒப்புதலுடன், தேர்தல் நடத்த வேண்டிய இடத்தை தேர்தல் அலுவலர் (Returning Officer) நிர்ணயித்து, தேர்தல் ஆணையம் ஏற்கும் வகையில், நிர்ணயிக்கப்பட்ட இடத்தை அறிவிப்பார். தேர்தல் நடத்தும் அதிகாரி, நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் அத்தகைய தேர்தலுக்குத் தலைமை  ஏற்கிறார்.  மேலும், அவர் தேவை என்று நினைக்கும் போது அவருக்கு உதவ அத்தகைய வாக்குச் சாவடி அலுவலர் (polling officer) அல்லது அலுவலர்களை நியமிக்கிறார்


தேர்தலில் வெற்றி பெற எத்தனை வாக்குகள் தேவை?


இது சம்பந்தப்பட்ட மாநில சட்டமன்றத்தின் பலத்தைப் பொறுத்து இருக்கும். அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் அதிக இடங்களும், குறைந்த மக்கள் தொகை கொண்ட மாநிலங்களில் குறைவான இடங்களும் உள்ளன.


ஒரு வேட்பாளர் வெற்றி பெற தேவையான ஒதுக்கீட்டைக் கணக்கிட ஒரு சூத்திரம் பயன்படுத்தப்படுகிறது. ஒரு மாநிலத்தில் வாக்களிக்கும் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை தேர்தலுக்குச் செல்லும் இடங்களின் எண்ணிக்கையுடன் 1-ஐ சேர்த்து வகுக்கப்படுகிறது. பின்னர், ஒதுக்கீட்டைக் கணக்கிட, பெறப்பட்ட எண்ணுக்கு 1 சேர்க்கப்படுகிறது. இதை ஒரு எடுத்துக்காட்டின் மூலம் புரிந்து கொள்ளலாம்.


ஒரு மாநிலத்தில் வாக்களிக்கும் மொத்த சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 200 என்றும், நான்கு இடங்களுக்கு தேர்தல்கள் நடைபெறுவதாகவும் வைத்துக்கொள்வோம்.


அப்படியானால், 200-ஐ 4+1 அல்லது 5-ஆல் வகுக்க வேண்டும். இதன் விளைவாக 40 என்ற எண்ணிக்கை கிடைக்கும்.


இவ்வாறு ஒதுக்கீடு 40+1 அல்லது 41 ஆக இருக்கும். 41 வாக்குகளைப் பெறும் எந்தவொரு வேட்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்.


இருப்பினும், அனைத்து வாக்குகள் ஒரே மாற்றக்கூடிய வாக்கு (Single Transferable Vote) முறையை பின்பற்றுகின்றன. மாநிலங்கவை தேர்தலில் சட்டமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கும் போது  வெளிப்படையான வாக்கெடுப்பு,  முதலாவது, இரண்டாவது, மூன்றாவது போன்ற விருப்பங்களை குறிக்கலாம்.


மேற்கண்ட எடுத்துக்காட்டில், 41 முதல் விருப்ப வாக்குகளைப் பெறும் ஒவ்வொரு வேட்பாளரும் தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்படுவார்கள்.


இது அனைத்து இடங்களையும் நிரப்பவில்லை என்றால், ஏற்கனவே தேர்ந்தெடுக்கப்பட்டவர்களின் உபரி வாக்குகள் முதல் விருப்பத்தேர்வுகள் ஏற்கனவே வென்ற சட்டமன்ற உறுப்பினர்களின் இரண்டாவது விருப்பத்தேர்வு வேட்பாளர்களுக்கு மாற்றப்படும்.


எனவே, மேலே உள்ள உதாரணத்திற்குத் திரும்புவோம். அங்கு 41 வெற்றி ஒதுக்கீடாகும்.


ஒரு வெற்றி பெற்ற வேட்பாளர் 45 வாக்குகள் பெற்றால், அதற்கு 4 கூடுதல் (surplus) வாக்குகள் இருக்கின்றன. இந்த 4 கூடுதல் வாக்குகள் இரண்டாவது விருப்ப வேட்பாளர்களுக்கு மாற்றப்படும்.


ஒரேநேரத்தில் பல வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு கூடுதல் வாக்குகள் இருந்தால், அதிக கூடுதல் வாக்குகள் முதலில் மாற்றப்படும்.


இதுவும் அனைத்து இடங்களையும் நிரப்பவில்லை என்றால், முதலாவது விருப்ப வாக்குகள் குறைவான வேட்பாளர் நீக்கப்படுவார். அவரது வாக்குச் சீட்டில் உள்ள இரண்டாவது விருப்ப வாக்குகள் மாற்றப்படும்.


அனைத்து இடங்களும் நிரப்பப்படும் வரை இந்த செயல்முறை தொடர்கிறது.


கட்சிகள் முடிந்தவரை அதிக இடங்களைப் பெறுவதை உறுதி செய்ய எவ்வாறு  முயற்சி செய்கின்றன?


ஒரு கட்சி முதலில் ஒரு இடத்தை வெல்லத் தேவையான ஒதுக்கீட்டைக் கணக்கிடுகிறது. பின்னர், அந்த கட்சியில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்களின் எணிக்கையை கணக்கிடுகிறது.


எனவே, 100 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்து, ஒதுக்கீடு 41-ஆக இருந்தால், 82 சட்டமன்ற உறுப்பினர்கள் இரண்டு வேட்பாளர்களின் வெற்றியை உறுதிசெய்யும் வகையில் எந்த வேட்பாளருக்கு வாக்களிக்க வேண்டும் என்று கட்சியில் உள்ள ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தெரிவிக்கும்.


அதன் மூன்றாவது வேட்பாளர் 18 முதல் விருப்ப வாக்குகளைப் பெறுவார். அவர் வெற்றி பெற வாய்ப்பில்லை. ஆனால் இங்கே, கட்சிகள் குறுக்கு வாக்களிப்பை (cross-voting) உறுதி செய்ய முயற்சிக்கின்றன அல்லது முதல் விருப்ப வாக்குகளால் மட்டுமே வெற்றிபெற முடியாத வேட்பாளர்களுக்கு வாக்களிக்க சுயேச்சைகள் அல்லது சிறிய கட்சிகளை நம்ப வைக்க முயற்சிக்கின்றன.

அவர்கள் தங்கள் சொந்த சட்டமன்ற உறுப்பினர்கள் குறுக்கு வாக்களிப்பதைத் தடுக்கவும் முயற்சிக்கிறார்கள். இதற்காக, 2003-ஆம் ஆண்டு முதல், அனைத்து கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தங்கள் வாக்குச் சீட்டுகளை தங்கள் கட்சிகளின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்களிடம் காட்டவேண்டும் என்ற திறந்த வாக்குச்சீட்டு முறை நடைமுறையில் உள்ளது. இல்லையெனில், அவர்களின் வாக்கு செல்லாததாகிவிடும். இது குறுக்கு வாக்களிக்க முயலும் எந்த சட்டமன்ற உறுப்பினருக்கும் கட்சி நடவடிக்கை எடுக்கப்படும் என்ற பயத்தை உருவாக்குகிறது. சுயேச்சை சட்டமன்ற உறுப்பினர்கள் தங்கள் வாக்குச் சீட்டுகளை யாருக்கும் காட்டுவதில்லை.


Original article :  How votes for Rajya Sabha elections are calculated?. -Vikas Pathak

Share: