QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை, தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் பற்றி… - பிரியா குமாரி சுக்லா

 QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசையில் இந்தியப் பல்கலைக்கழகங்கள் - தரவரிசை என்ன சொல்கிறது?


தற்போதைய நிகழ்வு : தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக, QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை 2027-ல் இந்திய நிறுவனங்களிலேயே ஐஐடி-டெல்லி முதலிடம் பிடித்துள்ளது. இது உலக அளவில் ஐந்து இடங்கள் முன்னேறி 118-வது இடத்தைப் பிடித்துள்ளது. ஒரு இந்திய நிறுவனம் எட்டிய மிக உயர்ந்த தரவரிசை இதுவாகும் (முன்னதாக ஐஐடி-மும்பை 2025-ம் ஆண்டு தரவரிசையில் இந்த மைல்கல்லை எட்டியிருந்தது).


QS World University Rankings என்பது உலகப் புகழ்பெற்ற பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல். QS என்பது Quacquarelli Symonds என்ற பிரிட்டிஷ் நிறுவனத்தின் சுருக்கம். இந்த நிறுவனம் 1990-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. உலக அளவில் பல்கலைக்கழகங்களை தரவரிசைப்படுத்தி வரும் மிக முக்கியமான மூன்று நிறுவனங்களில் ஒன்று QS ஆகும்.




முக்கிய அம்சங்கள் :


முன்பு இந்திய நிறுவனங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்த ஐஐடி-மும்பை, 129-வது இடத்திலிருந்து 134-வது இடத்திற்குச் சரிந்துள்ளது. முந்தைய ஆண்டிலும் இது 11 இடங்கள் சரிவைச் சந்தித்திருந்தது. உலக அளவில், மாசசூசெட்ஸ் தொழில்நுட்பக் கழகம் (Massachusetts Institute of Technology(MIT)) தொடர்ந்து 15-வது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. அதைத் தொடர்ந்து ஸ்டான்போர்ட் பல்கலைக்கழகம் (Stanford University), இம்பீரியல் கல்லூரி இலண்டன் (Imperial College London), ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் (University of Oxford) மற்றும் ஹார்வர்ட் பல்கலைக்கழகம் (Harvard University) ஆகியவை உள்ளன.


இந்தியாவின் முதல் 10 இடங்களுக்கான பட்டியலில் இந்தியத் தொழில்நுட்பக் கழகங்கள் (IITs) தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. ஐஐடி-டெல்லி மற்றும் ஐஐடி-மும்பை தவிர, உலக அளவில் முதல் 200 இடங்களுக்குள் இடம்பெற்ற மற்றொரு இந்திய நிறுவனம் ஐஐடி-சென்னை (IIT-Madras) மட்டுமே (இது கடந்த ஆண்டு 180-வது இடத்திலிருந்து 170-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது).


இந்தியாவின் முதல் 10 நிறுவனங்களின் பட்டியலில் உள்ள மற்ற நிறுவனங்கள்,


  •    ஐஐடி-கரக்பூர் (205)

  •    ஐஐடி-கான்பூர்  (221)

  •    இந்திய அறிவியல் நிறுவனம் (IISc), பெங்களூரு (221)

  •    டெல்லி பல்கலைக்கழகம் (322)

  •    ஐஐடி-ரூர்க்கே (335)

  •    ஐஐடி-கவுகாத்தி (349)


இவற்றில், இந்திய அறிவியல் நிறுவனம் பெங்களூரு (IISc Bangalore) மற்றும் ஐஐடி-கவுகாத்தி ஆகியவை கடந்த ஆண்டை விடத் தரவரிசையில் சரிவைச் சந்தித்துள்ளன.


உண்மையில், இந்திய அறிவியல் நிறுவனத்தின் (IISc) தரவரிசை கடந்த சில ஆண்டுகளாகத் தொடர்ந்து சரிந்து வருகிறது. 2023-ல் 155-வது இடத்தைப் பிடித்திருந்த இந்நிறுவனம், அதே ஆண்டில் மிக உயர்ந்த தரவரிசையைப் பெற்ற இந்திய நிறுவனமாகத் திகழ்ந்தது. கடந்த ஆண்டு இதன் தரவரிசை 219-ஆகவும், இந்த ஆண்டு 221 என்ற நிலைக்கு சரிந்துள்ளது. 'ஆசிரியருக்கான மேற்கோள்கள்' (citations per faculty) குறியீட்டில் 99.9 என்ற அதிகபட்ச மதிப்பெண்ணைப் பெற்றிருந்தாலும், 'வேலையளிப்போர் மத்தியில் நற்பெயர்' (48.8) மற்றும் 'வேலைவாய்ப்பு முடிவுகள்' (22.6) ஆகிய அளவுகோல்களில் இதன் செயல்பாடு குறைவாகவே உள்ளது. இந்த அளவுகோல்களில்தான் ஐஐடி-டெல்லி மற்றும் ஐஐடி-மும்பை ஆகியவை இந்த முதன்மையான ஆராய்ச்சி நிறுவனத்தை விடச் சிறப்பாகச் செயல்படுகின்றன. இந்த நிறுவனங்களைத் தவிர, இமாச்சலப் பிரதேசத்தில் உள்ள தனியார் கல்வி நிறுவனமான 'சூலினி பயோடெக்னாலஜி மற்றும் மேனேஜ்மென்ட் சயின்சஸ் பல்கலைக்கழகம்' (Shoolini University of Biotechnology and Management Sciences), கடந்த ஆண்டு 503-வது இடத்தில் இருந்த நிலையில், தற்போது 452-வது இடத்தைப் பிடித்து இந்தியாவின் முதல் 10 இடங்களுக்குள் (இந்தப் பட்டியலில் இடம்பெற்ற இந்திய நிறுவனங்களின் வரிசையில்) வந்துள்ளது.


உங்களுக்குத் தெரியுமா? 


விக்கிபீடியாவின் தகவலின்படி, 'QS உலகப் பல்கலைக்கழகத் தரவரிசை' (QS World University Rankings) என்பது உயர்கல்வித் துறை சார்ந்த தரவுப் பகுப்பாய்வு நிறுவனமான 'குவாக்வாரெல்லி சைமண்ட்ஸ்' (Quacquarelli Symonds) மூலம் தொகுக்கப்படும், கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களுக்கான ஒப்பீட்டுத் தரவரிசைப் பட்டியலாகும்.


QS தரவரிசையின் சமீபத்திய பதிப்பில் 52 இந்தியப் பல்கலைக்கழகங்கள் இடம்பெற்றுள்ளன. இது கடந்த ஆண்டு இருந்த 54-லிருந்து குறைவான எண்ணிக்கையாகும். இத்தரவரிசையில் இடம்பெற்றுள்ள மொத்த நிறுவனங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில், அமெரிக்கா (184), இங்கிலாந்து (93), சீனா (85) மற்றும் ஜெர்மனி (60) ஆகிய நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா ஐந்தாவது இடத்தில் (52) உள்ளது. கடந்த பத்தாண்டுகளில் இத்தரவரிசையில் இடம்பெறும் இந்திய நிறுவனங்களின் எண்ணிக்கை 271% அதிகரித்துள்ளது. அதாவது 2015-ல் 11-ஆக இருந்த நிறுவனங்களின் எண்ணிக்கை இந்த ஆண்டு 52-ஆக உயர்ந்துள்ளது. உலகளவில், இந்த ஆண்டுக்கான தரவரிசையில் 1,500-க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள் சேர்க்கப்பட்டுள்ளன.


ஐஐடி-களைத் தவிர்த்துப் பார்க்கையில், இந்தியக் கல்வி நிறுவனங்களிலேயே வேலூர் தொழில்நுட்பக் கழகம் (VIT) மிகப்பெரிய முன்னேற்றத்தைப் பதிவு செய்துள்ளது. இந்த நிறுவனம் 94 இடங்கள் முன்னேறி உலகளவில் 597-வது இடத்தைப் பிடித்துள்ளது. BITS பிலானி (BITS Pilani) 93 இடங்கள் முன்னேறி 575-வது இடத்தையும், ஜாமியா மில்லியா இஸ்லாமியா (Jamia Millia Islamia) 75-க்கும் மேற்பட்ட இடங்கள் முன்னேறி 686-வது இடத்தையும் பிடித்து, இந்தியாவின் முதல் 20 இடங்களுக்குள் நுழைந்துள்ளன.


இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் (FTA) ஏன் இந்தியாவுக்கு இராஜதந்திரரீதியாக முக்கியமாகக் கருதப்படுகிறது?


தற்போதைய நிகழ்வு என்ன? : ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் புதன்கிழமையன்று, இந்த ஆண்டின் இறுதிக்குள் இந்தியாவுடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடவுள்ளதாகத் தெரிவித்தார்.


முக்கிய அம்சங்கள் :


மற்றொரு நிகழ்வாக, ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸ், இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜெர்மனிக்கு வருகை தருமாறு பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுத்தார்.


ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் 'X' தளத்தில் பதிவிட்டதாவது, "அன்புள்ள நரேந்திரமோடி அவர்களே, இவ்வளவு விரைவில் மீண்டும் உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி. மிக முக்கியமான வர்த்தக ஒப்பந்தத்தை நாங்கள் நிறைவு செய்துள்ள நிலையில், எங்கள் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் வேகமாகச் செயல்பட்டு வருகிறோம். இந்த ஆண்டின் இறுதிக்குள் தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தில் (Free Trade Agreement) கையெழுத்திடுவோம். அத்துடன் முதலீட்டு ஒப்பந்தம் தொடர்பான பணிகளையும் விரைவுபடுத்துவோம்."


"தங்கள் பாதுகாப்பு மற்றும் தற்காப்புத் துறையிலான ஒத்துழைப்பையும் வலுப்படுத்துவோம்," என்று கூறிய அவர், 'இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தை' (India-Middle East-Europe Corridor (IMEC)) முன்னெடுப்பதன் மூலம் சிறந்த இணைப்பு வசதியை உருவாக்க ஐரோப்பிய ஒன்றியமும் இந்தியாவும் இணைந்து செயல்படும் என்றும் தெரிவித்தார்.


வெளியுறவு அமைச்சகத்தின் தகவலின்படி, ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய கவுன்சில் தலைவர் அன்டோனியோ கோஸ்டா மற்றும் ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் ஆகியோருடன் பிரதமர் மோடி புதன்கிழமையன்று இருதரப்பு சந்திப்புகளை நடத்தினார். அப்போது, ​​ஜனவரி 2026-ல் இந்தியாவில் நடைபெற்ற வரலாற்றுச் சிறப்புமிக்க 16-வது இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உச்சிமாநாட்டை அவர்கள் நினைவு கூர்ந்தனர். அதன்பிறகு இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய உறவுகளில் ஏற்பட்டுள்ள குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை தலைவர்கள் வரவேற்றனர்.


பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய மற்றும் உலகளாவிய விவகாரங்கள் குறித்து கருத்துக்களைப் பரிமாறிக் கொண்ட அவர்கள், "மேற்கு ஆசியாவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை வரவேற்றனர். அத்தகைய உலகளாவிய ஒழுங்கு அமைதி, நிலைத்தன்மை, வளம் மற்றும் நிலையான வளர்ச்சிக்கு பங்களிக்கும் வகையிலான, உறுதியான மற்றும் பலமுனை உலக ஒழுங்கை உருவாக்குவதில் தங்கள் கூட்டு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தினர்," என்று தெரிவிக்கப்பட்டது.


ஜி7 உச்சிமாநாட்டின் ஒரு பகுதியாக ஜெர்மன் அதிபர் ஃபிரெட்ரிக் மெர்ஸுடனான சந்திப்பு குறித்து வெளியுறவு அமைச்சகம் கூறுகையில், இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களை இருநாட்டு தலைவர்கள் ஆய்வு செய்ததாகத் தெரிவித்தது. மேலும், அதிபரின் இந்தியப் பயணம் மற்றும் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா-ஐரோப்பிய ஒன்றிய தடையற்ற வர்த்தக ஒப்பந்த (FTA) பேச்சுவார்த்தைகள் நிறைவடைந்தது ஆகியவற்றின் மூலம் இந்தியா-ஜெர்மனி இடையிலான 'இராஜதாந்திரக் கூட்டாண்மையில்' (Strategic Partnership) ஏற்பட்டுள்ள புதிய உத்வேகம் குறித்து அவர்கள் திருப்தி தெரிவித்தனர்.



இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஜெர்மனியில் நடைபெறவுள்ள 8-வது இந்தியா-ஜெர்மனி அரசுகளுக்கிடையிலான ஆலோசனைக் கூட்டத்திற்கு (Inter-Governmental Consultations (IGC)) பிரதமர் மோடியை அதிபர் மெர்ஸ் அழைப்பு விடுத்தார்.


உங்களுக்குத் தெரியுமா? 


இந்தியா-ஐரோப்பிய ஒன்றியம் இடையிலான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளின் முதல் சுற்று 2007-ல் தொடங்கப்பட்டது. அக்டோபர் 2013-க்குள், இந்தியாவும் பிரஸ்ஸல்ஸும் சுங்க வரிகள் மற்றும் சேவைகள் தொடர்பான சலுகை முன்மொழிவுகளைப் பரிமாறிக் கொண்டன. மேலும், தடையற்ற வர்த்தக ஒப்பந்தத்தின் (FTA) மிகச் சிக்கலான 'சந்தை அணுகல்' (market-access) தொடர்பான ஒப்பந்தத்தின் பொதுவான கட்டமைப்பை வரையறுப்பதில் அவர்கள் கவனம் செலுத்தினர்.


அக்காலத்தில், கார்கள் மற்றும் கார் உதிரிபாகங்கள் மீதான சுங்க வரிகள் இந்தியாவிற்கு அரசியல்ரீதியாக மிகவும் உணர்வுப்பூர்வமான விவகாரமாக இருந்தன. இந்த ஒப்பந்தத்தின் இறுதி உடன்படிக்கைக்கான (landing-zone) பேச்சுவார்த்தைகள் தொடங்கிய நேரத்தில், இந்தியாவில் பொதுத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருந்தது. அதேவேளையில், பிரதமர் மன்மோகன் சிங் தலைமையிலான அரசு அரசியல்ரீதியான சவால்களை எதிர்கொண்டிருந்தது.


2024-ல் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜவுளி மற்றும் ஆடை இறக்குமதியில் இந்தியாவின் பங்கு சுமார் 5% ஆக இருந்தது. 2024-ல் ஐரோப்பிய ஒன்றியத்திற்கு ஜவுளி மற்றும் ஆடைகளை அதிகளவில் ஏற்றுமதி செய்த நாடுகளில் சீனா (28%), வங்கதேசம் (22%), துருக்கி (11%), வியட்நாம் (6%) ஆகியவை முன்னணியில் இருந்தன. அதைத் தொடர்ந்து இந்தியாவும் இடம்பெற்றிருந்தது. மேலும், வங்கதேசம், வியட்நாம் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகள், தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAs) அல்லது மிகக் குறைந்த வளர்ச்சியடைந்த நாடுகளுக்கான (Least Developed Countries (LDCs)) சலுகைகள் மூலம் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் (EU) சுங்கவரி இல்லா அணுகலைப் (zero-duty access) பெற்றுள்ளன. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கான இந்தியாவின் சராசரி சுங்கவரி தற்போது சுமார் 10 முதல் 12% ஆக உள்ளது. ஆனால், இந்தியப் பொருட்களுக்கான ஐரோப்பிய ஒன்றியத்தின் சராசரி சுங்கவரி மிகக் குறைவாக, சுமார் 3-4% மட்டுமே உள்ளது.


குறிப்பிடத்தக்க வகையில், வர்த்தக ஒப்பந்தம் இல்லாமலேயே, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு இந்தியா ஏற்றுமதி செய்யும் பொருட்களில் 75%-க்கும் அதிகமானவை 1%-க்கும் குறைவான சுங்க வரியையே எதிர்கொள்கின்றன. ஐரோப்பியப் பொருட்களுக்கான தனது அதிகப்படியான சுங்கவரிகளைக் குறைப்பதன் மூலம் இந்தியா வழங்க வேண்டிய சலுகைகளுடன் ஒப்பிடுகையில், தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பிறகும்கூட, இந்த இந்தியப் பொருட்களில் பெரும்பாலானவை குறிப்பிடத்தக்க சந்தை வாய்ப்பைப் பெறாமல் போகலாம்.


இந்தியாவைப் பொறுத்தவரை, வாகனங்கள் மற்றும் ஐரோப்பாவில் தயாரிக்கப்படும் ஒயின் (wines) மற்றும் மதுபானங்கள் (spirits) ஆகியவை முக்கியப் பகுதிகளாக இருந்தன. மிகவும் உணர்திறன் வாய்ந்த பொருட்களான விவசாயம் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவை நீண்ட காலமாக ஒப்பந்த முன்னேற்றத்தைத் தடுத்து வந்ததால், அவை இப்போதைய பேச்சுவார்த்தையிலிருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளன. கடந்த முறை ஒப்பந்தம் முறியக் காரணமாக இருந்த வாகனத் துறையைப் பொறுத்தவரை, இரு தரப்பினரும் "பரஸ்பர நிரப்புத்தன்மை" (complementary factors) கொண்ட அம்சங்களை முன்னிலைப்படுத்தியுள்ளனர். அதாவது, சிறிய மற்றும் மலிவான கார்களைத் தயாரிப்பதில் இந்தியாவும், பெரிய வாகனங்களைத் தயாரிப்பதில் ஐரோப்பாவும் வலுவாக உள்ளன. எனவே, வாகன இறக்குமதிகள் மீது விலை சார்ந்த கட்டுப்பாடுகள் மற்றும் 10 ஆண்டுகளில் படிப்படியாகச் சுங்கவரியைக் குறைக்கும் நடைமுறை ஆகியவை அமல்படுத்தப்படவுள்ளன. பொதுவாக, வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொள்ளும்போது, ​​தனது மிகப்பெரிய உள்நாட்டுச் சந்தையை ஒரு முக்கிய பேரம் பேசும் காரணியாகவே இந்தியா பயன்படுத்துகிறது.


Original article : QS World University Rankings, Free Trade Agreement -Priya Kumari Shukla

Share: