சிறந்த சுகாதார சேவைகள் மட்டும் இந்தியாவின் ஊட்டச்சத்து சவால்களை சமாளிக்க போதுமானதாக இருக்காது.
சமீபத்தில் வெளியிடப்பட்ட தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (National Family Health Survey (NFHS)) அறிக்கை, இந்தியாவின் முன்னேற்றம் குறித்த ஒருங்கிணைந்த நிலையை வெளிப்படுத்துகிறது. இது மகிழ்ச்சியளிக்கும் அதே வேளையில், கவனமாக அணுகப்பட வேண்டிய பகுதிகளையும் சுட்டிக்காட்டுகிறது. சாதகமான அம்சமாக, நீண்ட காலத்திற்குப் போதுமான உணவு கிடைக்காத நிலை மற்றும் பிற வகையான பற்றாக்குறைகளால் ஏற்படும் ’வளர்ச்சிக்குறைபாடு’ (stunting) (ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளிடம் காணப்படுவது) 35.5%-லிருந்து 29.3%-ஆகக் குறைந்துள்ளது. இந்தக் குறைவு சிறிய அளவிலேயே இருந்தாலும், பெண்களுக்கு அறிவு மற்றும் வளங்கள் கிடைப்பதை உறுதி செய்தல், சிறந்த குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் ஆரோக்கியமான, மலிவு விலையிலான உணவு கிடைப்பதை உறுதி செய்தல் போன்ற சிக்கலான பணிகளைக் கருத்தில் கொள்ளும்போது, எந்தவொரு முன்னேற்றமும் வரவேற்கத்தக்கதாகும். குழந்தைகளின் உயரத்திற்கு ஏற்ற எடை இல்லாமையைக் குறிக்கும் 'உடல் மெலிவு' (wasting) அளவுகளில், தீவிரமான உடல் மெலிவு நிலைகளைத் தவிர, மற்றவற்றில் எந்த மாற்றமும் இல்லை. பல்வேறு குறியீடுகளின் போக்கு ஒரு விஷயத்தைத் தெளிவாக உணர்த்துகிறது. அவை, குழந்தைகளின் ஊட்டச்சத்தில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களுக்கு சிறந்த சுகாதார அணுகல், தடுப்பூசி பாதுகாப்பு, தாய்மார்களின் கல்வி மற்றும் வீட்டுவசதி, குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளின் மேம்பாடு ஆகியவற்றால் சாத்தியமாகியுள்ளன. அதேசமயம், உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் தரமான உணவு கிடைப்பதில் உள்ள குறைபாடுகள் தொடர்ந்து முன்னேற்றம் அடைவதைத் தடுக்கின்றன.
மருத்துவமனைகள் அல்லது சுகாதார மையங்களில் நடைபெறும் பிரசவங்களின் (institutional births) அளவு 90%-ஐ எட்டியுள்ளது. இதில், 58% பிரசவங்கள் பொது சுகாதார நிலையங்களில் நடைபெற்றுள்ளன. 91% பிரசவங்கள் தகுதிவாய்ந்த மருத்துவப் பணியாளர்களால் மேற்கொள்ளப்பட்டன. மேலும், 95% தாய்மார்கள் கர்ப்பகாலத்தில் சுகாதாரப் பணியாளர்களின் குறைந்தது ஒரு முறையாவது பரிசோதனை அல்லது ஆலோசனையைப் பெற்றுள்ளனர்.
குழந்தைகளுக்கான தடுப்பூசி செலுத்தும் அளவும் மிகுந்த ஊக்கமளிப்பதாக உள்ளது. 12 முதல் 23 மாத வயதுடைய குழந்தைகளில் 87% பேர் இப்போது முழுமையாகத் தடுப்பூசி செலுத்திக்கொண்டுள்ளனர். இதில், தனியார் மருத்துவமனைகளின் பங்கு தடுப்பூசி செலுத்துதலில் சுமார் 3% மட்டுமே என்பதால், இந்த அதிக அளவிலான தடுப்பூசி பயன்பாடு என்பது களப்பணியாளர்களின் அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (Accredited Social Health Activists (ASHA)), அங்கன்வாடி பணியாளர்கள் (Anganwadi Workers (AWW)) மற்றும் துணை செவிலியர் மருத்துவ உதவியாளர்கள் (Auxiliary Nurse Midwives (ANM)) ஆகியோரின் வலுவான செயல்பாடுகளையே பிரதிபலிக்கிறது. இந்தத் தேசிய சராசரிகள் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை மறைத்தாலும், அனைத்து மாநிலங்களிலும் சுகாதார சேவைகளுக்கான அணுகல் மேம்பட்டுள்ளது.
குறைபாடுள்ள உணவுப் பழக்கவழக்கங்கள்
மருத்துவமனைகளில் நடைபெறும் பிரசவங்களின் விகிதம் அதிகமாக இருந்தபோதிலும், பிறந்த குழந்தைகளில் சுமார் 50% மட்டுமே பிறந்த முதல் ஒரு மணி நேரத்திற்குள் தாய்ப்பால் பெறுகின்றன. இது, ஆரம்பக்கட்டத்திலேயே தாய்ப்பால் கொடுப்பதை ஊக்குவிப்பதற்கான முயற்சிகளை சுகாதார அமைப்பு வலுப்படுத்த வேண்டும் என்பதை இது காட்டுகிறது. ஆறு முதல் எட்டு மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளில் சுமார் 60% பேர் திட அல்லது அரை-திட உணவைப் பெறுகின்றனர். அதேசமயம், ஆறு முதல் 23 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளில் 15% மட்டுமே போதுமான ஊட்டச்சத்துமிக்க உணவைப் பெறுகின்றனர். துணை உணவை (தாய்ப்பால் தவிர்த்த பிற உணவுகள்) சரியான நேரத்தில் அறிமுகப்படுத்துவதை மேம்படுத்துவதும், அனைத்துக் குழந்தைகளுக்கும் போதுமான உணவு கிடைப்பதை உறுதி செய்வதும் ஊட்டச்சத்துக் குறைபாட்டைக் குறைப்பதற்கான முக்கிய வழிகளாகும். இந்தியாவில், துணை உணவூட்டல் என்பது அன்னப்பிரசான (annaprasana) சடங்கு முறையுடன் நெருக்கமாக இணைக்கப்பட்டுள்ளது. இது பொதுவாக ஆறு முதல் 12 மாதங்களுக்குள் செய்யப்படுகிறது. இதில் ஏற்படும் எந்தவொரு தாமதமும் வளர்ச்சித் தடைக்கு வழிவகுக்கும்.
இந்தியாவில் குழந்தைகளின் ஊட்டச்சத்தைப் பாதிக்கும், ஆனால் போதுமான அளவு ஆய்வு செய்யப்படாத ஒரு காரணி 'தாய்மார்களின் நேரப் பற்றாக்குறை' (maternal time poverty) ஆகும். பெண்கள் வீட்டிற்கு உள்ளேயும் வெளியேயும் பலவிதமான பொறுப்புகளை மேற்கொள்கின்றனர். கடந்த 12 மாதங்களில் சுமார் 30% பெண்கள் ஊதியம் பெறும் வேலையில் ஈடுபட்டதாக தேசிய குடும்ப சுகாதாரக் கணக்கெடுப்பு-6 (NFHS) அறிக்கை கூறுகிறது. ஆனால், இது அவர்களின் ஒட்டுமொத்த வேலைச் சுமையை கணிசமாகக் குறைத்து மதிப்பிடுகிறது. முறைசாரா பொருளாதாரத்தில் பணிபுரியும் ஏராளமான பெண்கள், ஊதியம் பெறாத குடும்ப உழைப்பு, விவசாயம்/மீன்பிடி, கால்நடைப் பராமரிப்பு மற்றும் வீட்டு வேலைகளில் ஈடுபடுகின்றனர். ஆறு முதல் 23 மாதங்களுக்குட்பட்ட குழந்தைகளைக் கொண்ட இளம் தாய்மார்களில், பணியில் இருப்பவர்களின் சதவீதம் குறித்த தெளிவான மதிப்பீடுகள் எதுவும் இல்லை. மேலும், பெண்கள் தங்களின் மற்ற வேலைகளுடன் குழந்தைக்கு உணவளிப்பதை எவ்வாறு நிர்வகிக்கிறார்கள் என்பது பற்றிய ஆவணங்களும் மிகக் குறைவாகவே உள்ளன. பல கிராமப்புறங்களில், குழந்தைகள் காப்பகங்கள் இல்லாததால், பெண்கள் வயல்களுக்குச் செல்லும்போது, தங்கள் கைக்குழந்தைகளையும் சிறு குழந்தைகளையும் வயதான குடும்ப உறுப்பினர்களிடமோ அல்லது குழந்தையின் மூத்த உடன்பிறப்பிடத்திலோ (பொதுவாக ஒரு பெண்) விட்டுச் செல்கின்றனர். இது தாய்ப்பால் ஊட்டுதல் மற்றும் துணை உணவு ஊட்டுதல் ஆகிய இரண்டையும் பாதிக்கிறது.
பதப்படுத்தப்பட்ட உணவு அட்டவணை
சமீபத்திய நுகர்வோர் செலவினக் கணக்கெடுப்பு முடிவுகள், குடும்பங்கள் தானியங்களுக்கான செலவைக் குறைத்துள்ளதாகவும், பால் பொருட்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் மற்றும் பானங்களுக்கு அதிகமாகவும் செலவிடுவதைக் காட்டுகின்றன. இதில் பிந்தைய இரண்டுப் பொருட்களும் செலவினத்தின் பெரும் பகுதியாக அமைகின்றன. இது உணவு வகைகளில் பன்முகத்தன்மை இருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது. ஆனால், அது ஊட்டச்சத்துக்குப் போதுமான தன்மை பூர்த்தி செய்யப்படுவதிலிருந்து மாறுபட்டது. ஊட்டச்சத்துப் போதுமான உணவு என்பது இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) - தேசிய ஊட்டச்சத்து நிறுவனத்தின் (NIN) உணவு அடிப்படையிலான உணவு வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும். துரதிர்ஷ்டவசமாக, மக்கள்தொகையின் கணிசமான பிரிவினருக்கு, பருப்பு வகைகள், சிறுதானியங்கள், பழங்கள் மற்றும் காய்கறிகள், விலங்கு உணவுகள் மற்றும் கொட்டைகள் அடங்கிய சத்தான உணவு கட்டுப்படியாகாததாக உள்ளது. இதற்கு மாறாக, பதப்படுத்தப்பட்ட உணவுகள் எளிதில் கிடைக்கின்றன, அவை உண்ணத் தயார் நிலையில் உள்ளன மற்றும் மலிவு விலைப் பொட்டலங்களில் அடைக்கப்பட்டுள்ளன.
முதல் 1,000 நாட்கள், கர்ப்ப காலம் முதல் ஒரு குழந்தையின் இரண்டாவது பிறந்தநாள் வரை, ஆரோக்கியமான உடல் மற்றும் அறிவாற்றல் வளர்ச்சிக்கு மிகவும் முக்கியமான காலகட்டமாகும் (பெரும்பாலான மூளை வளர்ச்சி முதல் ஐந்து ஆண்டுகளில் நிகழ்கிறது). 0-2 வயதுக் குழுவிற்கான பிரிக்கப்பட்ட தரவுகள் நமக்குத் தேவை, அவை தற்போது கிடைக்கவில்லை. ஏனெனில், வளர்ச்சி குன்றுதல் பொதுவாக வாழ்க்கையின் இரண்டாம் ஆண்டில் உச்சத்தை அடைகிறது மற்றும் வளர்ச்சித் தடை பெரும்பாலும் அதற்கு முன்பே தொடங்குகிறது. பிரதமரின் முழுமையான ஊட்டச்சத்துக்கான விரிவான திட்டத்தின் (போஷன்) அபியான் திட்டம் (Holistic Nourishment (POSHAN) Abhiyaan programme) தற்போது கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளைக் கண்டறிந்து அவர்களுக்கு மறுவாழ்வு அளிப்பதில் கவனம் செலுத்துகிறது. வளர்ச்சித் தடை ஏற்படுவதைத் தடுப்பதற்கு அதிக முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். எடை அல்லது உயரத்தில் ஏற்படும் தேக்கநிலையை முன்கூட்டியே கண்டறிந்து, தாய்மார்களுக்கு உரிய நேரத்தில் ஆலோசனையும் ஆதரவும் வழங்குவது, இதனைத் தடுப்பதற்கு முக்கியமானதாக அமைகிறது.
முன்கள ஊட்டச்சத்துப் பணியாளர்களை வலுப்படுத்துதல்
சிறு குழந்தைகளுக்கான மாதாந்திர உடல் அளவியல் தரவுகள் அங்கன்வாடிப் பணியாளர்களால் (AWWs) சேகரிக்கப்படுகின்றன. தரவு சேகரிப்பில் அவர்களின் திறன்களை வலுப்படுத்துவது தரவின் தரத்தை மேம்படுத்தும். சேகரிக்கப்பட்ட பெருமளவிலான தரவுகள் உள்ளூரிலேயே பகுப்பாய்வு செய்யப்பட்டு, உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதற்காக அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மற்றும் அங்கன்வாடிப் பணியாளர்களுக்குக் கருத்துகள் வழங்கப்பட வேண்டும்.
இந்தப் பணிக்காக, மாவட்ட அளவில் ஒரு ஊட்டச்சத்து நிபுணரும் ஒரு தரவுப் பகுப்பாய்வாளரும் பணியமர்த்தப்பட வேண்டியது அவசியம். அவசியமான இடங்களில், உள்ளூரில் கிடைக்கும் ஆரோக்கியமான உணவுகளின் அடிப்படையில், வெவ்வேறு வயதுகளில் உள்ள சிறு குழந்தைகளுக்கு எப்படி, எப்போது, என்ன உணவளிக்க வேண்டும் என்பது குறித்த நடைமுறைத் தகவல்களைப் பணியாளர்களுக்கும் தாய்மார்களுக்கும் வழங்குவதன் மூலம், நேரடி ஆலோசனைக்குத் துணையாக டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்தலாம்.
நடத்தையை மாற்றுவதற்கான முயற்சிகள், சரியான நேரத்தில் மற்றும் பொருத்தமான துணை உணவூட்டத்தை வலுப்படுத்த அன்னப்பிராசனம் போன்ற நடைமுறைகளை ஒருங்கிணைத்து, கலாச்சாரரீதியாக வேரூன்றியதாக இருக்க வேண்டும். உள்ளூரில் கிடைக்கும், மலிவு விலை உணவுகளைப் பயன்படுத்தி, உணவுப் பழக்கங்களை மேம்படுத்துவது குறித்து குடும்பங்களுக்கு பயனுள்ள தகவல் தொடர்புப் பொருட்களைக் கொண்டு ஆலோசனை வழங்குவதிலும், உணவூட்டும் பழக்கங்களை மதிப்பிடுவதிலும் அங்கன்வாடிப் பணியாளர்கள் (AWWs), அங்கீகரிக்கப்பட்ட சமூக சுகாதார ஆர்வலர்கள் (ASHA) மற்றும் துணை செவிலியர்கள் (ANMs) ஆகியோரின் கூட்டுத் திறன் மேம்பாடு, ஆலோசனையின் தரத்தை உயர்த்தி, ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அபாயத்தைக் குறைக்கும்.
குழந்தை ஊட்டச்சத்துக் குறைபாட்டைச் சமாளிக்க, பல்வேறு துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு அவசியம். இருப்பினும், அத்தகைய ஒருங்கிணைப்பு பலவீனமாகவே உள்ளது. கிராம சபை மற்றும் பஞ்சாயத்து விவாதங்களில் குழந்தை ஊட்டச்சத்து ஒரு நிரந்தர செயல்திட்ட நிகழ்வாக இருக்க வேண்டும். உள்ளூர் திட்டமிடலில் அங்கன்வாடி உள்கட்டமைப்பு, பாதுகாப்பான குடிநீர் மற்றும் சுகாதார வசதிகளை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். ஏனெனில், இந்த அடிப்படை சேவைகள் குழந்தைகளின் வளர்ச்சி மற்றும் ஆரோக்கியத்தை நேரடியாகப் பாதிக்கின்றன.
குழந்தைப் பராமரிப்பில் ஆண்களை ஈடுபடுத்துவது, பகிரப்பட்ட வீட்டுப் பொறுப்புகளை ஊக்குவிப்பது மற்றும் தாய்மார்களுக்கான ஆதரவை வலுப்படுத்துவது ஆகியவை உணவூட்டும் மற்றும் பராமரிப்பு நடத்தைகளை கணிசமாக மேம்படுத்தும். இந்தியாவில் உள்ள பல அரசு சாரா நிறுவனங்கள், குழந்தைப் பராமரிப்பு, ஊட்டச்சத்து மற்றும் ஆரம்பக்காலக் கற்றல் கல்வி ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் மழலையர் பராமரிப்பு மைய மாதிரிகளை (crèche models) உருவாக்கியுள்ளன. மேலும், இம்மையங்களை உள்ளூர் அளவில் பயிற்சி பெற்ற பெண்களே நிர்வகிக்க முடியும். பாலினச் சமத்துவக் கண்ணோட்டத்தில், மழலையர் காப்பகங்கள் குழந்தை மேம்பாட்டுத் தலையீடுகள் மட்டுமல்ல, அவை பெண்களின் பொருளாதாரப் பங்களிப்பைச் சாத்தியமாக்கி, ஊதியம் பெறாத பராமரிப்புச் சுமைகளைக் குறைக்கும் சமூக உள்கட்டமைப்பாகும். துறைகள் மற்றும் சமூகங்கள் முழுவதும் ஒருங்கிணைந்த நடவடிக்கையின் மூலம், குழந்தை ஊட்டச்சத்தில் அர்த்தமுள்ள மற்றும் நீடித்த முன்னேற்றத்தை முழுமையாக அடைய முடியும்.
சௌமியா சுவாமிநாதன், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் தலைவராகவும், தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டத்தின் முதன்மை ஆலோசகராகவும் உள்ளார். ரமா நாராயணன், எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையில் மூத்த ஆராய்ச்சி ஆய்வாளராகப் பணியாற்றுகிறார்.
Original article : NFHS-6 reveals progress amid nutrition challenges -Soumya Swaminathan, Rama Narayanan