திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சியில் ஏற்பட்டுள்ள இந்த சர்ச்சை, இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணை (கட்சித் தாவல் தடைச் சட்டம்) இதுவரை தெளிவாகப் பதிலளிக்காத ஒரு கேள்வியை அடிப்படையாகக் கொண்டது. அதாவது, ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பேர் பிரிந்து செல்லும்போது அங்கு கட்சியின் 'இணைப்பு' நடந்துவிடுகிறதா, அல்லது முதலில் அந்த அரசியல் கட்சியே அதிகாரப்பூர்வமாக மற்றொன்றுடன் இணைய வேண்டுமா?
திரிணாமுல் காங்கிரஸ் (TMC) கட்சிக்குள் தற்போது நடந்துவரும் இந்த மோதலில், அக்கட்சியின் 20 அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜூன் மாதம் 14-ஆம் தேதி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவைச் சந்தித்து, தாங்கள் இந்திய தேசியவாத குடிமக்கள் கட்சியுடன் (NCPI) இணைந்துவிட்டதாகக் கூறி உரிமை கோரியுள்ளனர்.
ககோலி கோஷ் தஸ்திதார் மற்றும் சுதீப் பந்தோபாத்யாய் ஆகியோர் தலைமையிலான இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், திரிபுராவை தளமாகக் கொண்ட அந்தக் கட்சியில் இணைந்துள்ளனர். இந்தக் கட்சி கடந்த 2023-ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின்போது இரண்டு தொகுதிகளில் வெறும் 822 வாக்குகளை மட்டுமே பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், நாடாளுமன்றத்தில் தங்களுக்கு மீதமுள்ள திரிணாமுல் காங்கிரஸ் (TMC) நாடாளுமன்ற உறுப்பினர்களிடமிருந்து தனியாக அமரும் வசதியை வழங்குமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்கும் அதிகமானோரின் ஆதரவு தங்களுக்கு இருப்பதாக அந்த அதிருப்தி குழு உரிமை கோருகிறது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின்கீழ் (Anti-defection law) தகுதி நீக்கம் செய்யப்படுவதைத் தவிர்த்து, அவையில் தங்களின் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்கு மக்கள் பிரதிநிதிகளுக்குத் தேவைப்படும் குறைந்தபட்ச ஆதரவு எண்ணிக்கை இதுவாகும்.
இந்த இணைப்புக் கோரிக்கையைப் பற்றி இறுதி முடிவெடுப்பதற்குமுன், மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா இருதரப்பு வாதங்களையும் கேட்பார். இதற்கு முன்னதாக, திரிணாமூல் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச் செயலாளர் அபிஷேக் பானர்ஜி அவருக்கு எழுதிய கடிதத்தில், தங்களது கட்சி, ஒற்றை, பிரிக்க முடியாத அரசியல் கட்சியாகவே நீடிக்கிறது என்றும், கட்சியில் எந்தவொரு அதிகாரப்பூர்வ இணைப்பும் நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த சர்ச்சை, இந்திய அரசியலமைப்பின் பத்தாவது அட்டவணை (கட்சித் தாவல் தடைச் சட்டம்) இதுவரை தெளிவாகப் பதிலளிக்காத ஒரு கேள்வியை அடிப்படையாகக் கொண்டது. அதாவது, ஒரு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு (2/3) பேர் பிரிந்து செல்லும்போது அங்கு கட்சியின் 'இணைப்பு' நடந்துவிடுகிறதா, அல்லது முதலில் அந்த அரசியல் கட்சியே அதிகாரப்பூர்வமாக மற்றொரு கட்சியுடன் இணைய வேண்டுமா?
இதேபோன்ற ஒரு சர்ச்சை சிவ சேனா (உத்தவ் பாலசாஹேப் தாக்கரே) கட்சிக்குள்ளும் உருவாகி வருகிறது. சட்டமன்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு, கட்சியிலிருந்து பிரிந்து சென்ற எந்தவொரு குழுவையும் அங்கீகரிக்கக் கூடாது என்று அக்கட்சி மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவிடம் கேட்டுக்கொண்டுள்ளது. கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் 4-வது பத்தி என்பது, வெறும் மூன்றில் இரண்டு பங்கு (2/3) நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டும் குறிக்கவில்லை, மாறாக ஒட்டுமொத்த மூல அரசியல் கட்சியே மற்றொரு கட்சியுடன் இணைவதைத்தான் கட்டாயமாக்குகிறது என்று அக்கட்சியின் தலைவர்கள் வாதிடுகின்றனர். இந்த நிலைப்பாடு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தலைமை எடுத்த முடிவைப் போன்றதே ஆகும்.
கட்சித் தாவல் தடைச் சட்டம் கூறுவது என்ன?
நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தனது சொந்தக் கட்சியிலிருந்து விலகினாலோ அல்லது கட்சியின் கொறடா உத்தரவை (Party whip) மீறிச் செயல்பட்டாலோ, பத்தாவது அட்டவணையின் 2-ஆவது பத்தியின்படி அவர் பொதுவாகத் தகுதி நீக்கம் செய்யப்படுவார்.
இருப்பினும், 4-ஆவது பத்தியானது கட்சிகள் ஒன்றிணைவதற்கு ஒரு விதிவிலக்கை அளிக்கிறது. பத்தி 4(1)-ன்படி, ஒரு மூல அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் தங்களின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்காமல் மற்றொரு கட்சியுடன் இணைய அனுமதிக்கிறது. ஆனால், பத்தி 4(2)-ன்படி, சட்டமன்றத்திலோ அல்லது நாடாளுமன்றத்திலோ உள்ள அக்கட்சியின் உறுப்பினர்களில் குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கினர் (2/3) இந்த இணைப்பிற்குச் சம்மதித்தால் மட்டுமே இது சாத்தியமாகும் என்று கூறுகிறது.
இந்த அட்டவணையில் உள்ள இரண்டு சொற்கள் மிகவும் முக்கியமானவை. ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் "மூல அரசியல் கட்சி" என்பது, அவர்களைத் தேர்தலில் வேட்பாளராக நிறுத்திய, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மற்றும் நாடாளுமன்றத்திற்கு வெளியேயான கட்சி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான ஒரு கட்சியாகும். ஆனால், "சட்டமன்றக் கட்சி" அல்லது "சட்டமன்றக் குழு" என்பது ஒரு குறிப்பிட்ட அவையில் இருக்கும் அந்தக் கட்சியின் உறுப்பினர்களை மட்டுமே கொண்ட ஒரு சிறிய குழுவாகும்.
மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை கிடைத்தவுடன், கட்சி இணைப்பில் இணையும் உறுப்பினர்கள் மற்றும் அந்த இணைப்பை நிராகரித்துவிட்டுத் தனிக் குழுவாகத் தொடரும் உறுப்பினர்கள் ஆகிய இருதரப்பினருமே தகுதி நீக்கத்திலிருந்து பாதுகாக்கப்படுகிறார்கள்.
1985-ஆம் ஆண்டின் 10-வதுஅட்டவணையில் (கட்சித்தாவல் தடைச் சட்டம்), பத்தி 3-ன்கீழ் கட்சிகள் பிரிவதற்கு மிக எளிமையான விதிமுறை இருந்தது. ஒரு சட்டமன்ற அல்லது நாடாளுமன்றக் கட்சியின் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் பிரிந்து சென்றால், அது "கட்சிப் பிளவு" எனக் கருதப்பட்டு அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட்டது. இருப்பினும், இந்த விதிமுறை பெருமளவில் கட்சித்தாவலை ஊக்குவிக்கப் பயன்படுத்தப்பட்டதால், 2003-ஆம் ஆண்டின் 91-ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டம் (91st Amendment Act, 2003) இந்த விதியை நீக்கியதுடன், தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கையை மூன்றில் இரண்டு பங்காக உயர்த்தியது. எனவே, தகுதி நீக்கத்தைத் தவிர்ப்பதற்கு இப்போது பத்தி 4-ன்கீழ் நடக்கும் கட்சி இணைப்புகள் மட்டுமே ஒரே வழியாகும்.
ஒரே சட்டப்பிரிவை வெவ்வேறு விதமாகப் புரிந்துகொள்ளுதல்
திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிருப்தி நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்தாவது அட்டவணையின் 4-வது சட்டப்பிரிவை தங்களின் ஒரே தகுதித்தேர்வாகக் காட்டுகின்றனர். அதாவது, மூன்றில் இரண்டு பங்கு என்ற எல்லையைக் கடந்துவிட்டால், கட்சி இணைப்பு உறுதியாகிவிடுகிறது என்பது அவர்களின் வாதம் ஆகும். ஆனால், கட்சியின் தலைவரான மமதா பானர்ஜியின் கடிதம், இந்த வாதம் முற்றிலும் தவறானது என்று வாதிட்டது.
இந்த விஷயத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சி வேறொரு கட்சியுடன் உண்மையில் இணைந்திருக்க வேண்டும், மற்றும் சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கு ஆதரவு இருக்க வேண்டும் ஆகிய இரண்டு நிபந்தனைகளை பத்தாவது அட்டவணையின் 4-வது பத்தி வரையறுக்கிறது என்றும், இதில் இரண்டாவதாகக் கூறப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மட்டும் பெற்றிருப்பது தனியாக எந்தப் பயனும் தராது என்றும் வாதிட்டது.
அவரது கடிதத்தில், கட்சியின் கொறடா (Whip) மற்றும் கட்சியின் தலைவர் ஆகியோர் கட்சி அமைப்பால் மட்டுமே நியமிக்கப்படுகிறார்கள். அவையில் எந்தக் குழுவிடம் அதிக உறுப்பினர்கள் இருக்கிறார்கள் என்பதைப் பொறுத்து அது முடிவு செய்யப்படுவதில்லை என்று கூடுதல் தகவல் சேர்க்கப்பட்டுள்ளது. பிரிந்து சென்ற எந்தவொரு குழுவும் தங்களுக்குப் போட்டியாக ஒரு கொறடாவை நியமிக்கவோ அல்லது தங்களுக்குத் தனி அங்கீகாரம் கோரவோ முடியாது. அப்படிச் செய்தால் அது அவர்களையே தகுதி நீக்கம் செய்ய வழிவகுக்கும் என்றும் அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் இந்தியாவின் நீதிமன்றங்கள் மற்றும் அவைத் தலைவர்களிடையே பல ஆண்டுகளாகக் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்திப் பிரித்து வைத்துள்ளது. இந்தத் தற்கருத்து வேறுபாட்டிற்குக் காரணமே பத்தாவது அட்டவணைதான் (கட்சித் தாவல் தடைச் சட்டம்). ஏனெனில், இது ஒரு "அரசியல் கட்சி" மற்றும் ஒரு "சட்டமன்ற/நாடாளுமன்றக் கட்சி" ஆகிய இரண்டையும் ஒன்றோடொன்று தொடர்புடைய, ஆனால் தனித்தனியான அமைப்புகளாகக் கருதுகிறது.
கட்சிகள் இணைவதற்கான விதிவிலக்கின்படி, மிக முக்கியமான கேள்வி என்னவென்றால்: உண்மையான மூல அரசியல் கட்சி முழுமையாக மற்றொன்றுடன் இணைந்துவிட்டது என்பதற்கான ஆதாரம் தேவையா, அல்லது அவையிலுள்ள மூன்றில் இரண்டு பங்கு மக்கள் பிரதிநிதிகளின் ஆதரவு மட்டுமே இந்த விதிவிலக்கைப் பெற போதுமானதா என்பதுதான்.
சிவசேனா கட்சி உடைந்தது குறித்து (சுபாஷ் தேசாய் வழக்கு) 2023-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில், அவையில் இருக்கும் பெரும்பான்மை நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்ட குழுவிற்கு கொறடா (Whip) மற்றும் தலைவரை நியமிக்கும் அதிகாரம் இல்லை, மாறாக ஒட்டுமொத்த மூல அரசியல் கட்சிக்குத்தான் அந்த அதிகாரம் உள்ளது என்று தீர்ப்பளித்தது.
இருப்பினும், அதிருப்தி குழுவினர் கோவா நீதிமன்ற முன்னுதாரணத்தை நம்பியிருக்கின்றனர். கிரிஷ் சோடன்கர் vs அவைத் தலைவர் (Girish Chodankar vs Speaker), கோவா மாநில சட்டப்பேரவை (2022) என்ற வழக்கில், கோவா சட்டமன்ற காங்கிரஸ் கட்சியின் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களாக இருந்த 10 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள்), 2019-ஆம் ஆண்டில் பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணைந்தனர்.
மக்களவைத் தலைவர் அவர்களுக்கு எதிரான தகுதிநீக்க மனுவை நிராகரித்தார், மேலும் பம்பாய் உயர்நீதிமன்றத்தின் கோவா அமர்வும் அந்த முடிவை உறுதி செய்தது. சட்டமன்றக் கட்சிக்குள் மூன்றில் இரண்டு பங்கு (2/3) உறுப்பினர்களின் ஆதரவு இருந்தாலே, அது மூல அரசியல் கட்சி வேறொரு கட்சியுடன் இணைந்ததாகக் கருதப்படும் என்றும், அவைக்கு வெளியே உள்ள காங்கிரஸ் கட்சி அமைப்பு பாஜகவுடன் இணைந்ததற்கான தனியான ஆதாரம் எதுவும் தேவையில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
மமதா பானர்ஜியின் கடிதம் கோவா நீதிமன்றத் தீர்ப்புகளைப் பற்றி நேரடியாக எதுவும் பேசவில்லை. அதற்குப் பதிலாக, சிவசேனா (Shiv Sena) கட்சிக்குள் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே இடையே ஏற்பட்ட பிளவிலிருந்து உருவான 'சுபாஷ் தேசாய்' வழக்கில், உச்சநீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு வழங்கிய தீர்ப்பின் கொள்கைகளையே நம்பியிருக்கிறது.
அந்த வழக்கு ஒரு கட்சி இணைப்பைப் பற்றியது அல்ல. இங்கு, ஷிண்டே தரப்பினர் தங்களை மற்றொரு கட்சியுடன் இணைந்த அமைப்பாகக் காட்டாமல், தங்களது தரப்புதான் உண்மையான சிவசேனா என்று உரிமை கோரினர். ஆனால், உச்சநீதிமன்ற அமர்வு, "ஒரு சட்டமன்ற/நாடாளுமன்றக் கட்சி, அதை உருவாக்கிய மூல அரசியல் கட்சியிடமிருந்து தன்னைத் துண்டித்துக் கொள்ள முடியாது. கொறடா (Whip) மற்றும் தலைவரை நியமிக்கும் அதிகாரம் கட்சி நிறுவனத்திற்கே உரியது, மாறாக நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்லது சட்டமன்ற உறுப்பினர்கள் இடையில் யாருக்குப் பெரும்பான்மை இருக்கிறது என்பதைப் பொறுத்தது அல்ல என்றும், இந்தக் கேள்வி வெறும் எண்களை மட்டும் மையமாகக் கொண்ட விளையாட்டு அல்ல, அதையும் தாண்டிய ஒன்று எனவும் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினர்கள் வெறும் பெரும்பான்மையின் பலத்தை மட்டும் வைத்துக்கொண்டு, ஒரு கட்சி இணைப்பு நடந்துவிட்டதாகத் தன்னிச்சையாக அறிவிக்க முடியாது என்று வாதிடுவதற்கு பானர்ஜியின் கடிதம் அதே வாதத்தைப் பயன்படுத்துகிறது.
ஆனால், மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இருந்தால் கட்சி இணைப்பு செல்லுபடியாகும் என்ற வாதம், ஏற்கனவே ஒரு உயர்நீதிமன்றத்தால் மட்டும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை, அது நடைமுறையிலும் செயல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில், ஆம் ஆத்மி கட்சியின் (AAP) 10 மாநிலங்களவை உறுப்பினர்களில் 7 பேர், இதே மூன்றில் இரண்டு பங்கு விதியைப் பயன்படுத்தி தாங்கள் பாரதிய ஜனதா கட்சியுடன் இணைந்துவிட்டதாக அறிவித்தனர். அவர்களுக்கு எதிராக ஆம் ஆத்மி கட்சி (AAP), மாநிலங்களவைத் தலைவரிடம் தகுதி நீக்க மனுவைத் தாக்கல் செய்தது. ஆனால், சில நாட்களிலேயே, மாநிலங்களவைத் தலைவர் அந்த இணைப்பை ஏற்றுக்கொண்டார், மேலும் அந்த 7 நாடாளுமன்ற உறுப்பினர்களும் (MPs) முறைப்படி பாரதிய ஜனதா கட்சியில் (BJP) இணைந்தனர். கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் 4-வது பத்தி தொடர்பான மாறுபட்ட கருத்துக்கள் எவ்வாறு பரிசீலிக்கப்பட்டன என்பது குறித்த விரிவான விளக்க ஆணை எதுவும் இதுவரை பொதுமக்களுக்கு வெளியிடப்படவில்லை.
அவைத் தலைவரின் பங்கு
வரலாற்றுச் சிறப்புமிக்க கீஹோட்டோ ஹொல்லோஹன் vs சாகில்ஹு (Kihoto Hollohan vs Zachillhu - 1992) வழக்குத் தீர்ப்பு, பத்தாவது அட்டவணையின் (கட்சித் தாவல் தடைச் சட்டம்) செல்லுபடியாகும் தன்மையை உறுதி செய்தது. மேலும், மக்கள் பிரதிநிதிகளைத் தகுதி நீக்கம் செய்யும் வழக்குகளை விசாரித்து முடிவெடுக்கும் போது, அவைத் தலைவர் நாடாளுமன்ற அல்லது சட்டமன்றத்தின் சாதாரண சலுகைகளைப் பயன்படுத்தும் ஒரு உறுப்பினராகச் செயல்படாமல், ஒரு நீதிமன்றத் தீர்ப்பாயம் போலச் செயல்படுகிறார் என்றும் அந்தத் தீர்ப்பு கூறியது.
இது அவைத் தலைவரின் முடிவுகளை நீதிமன்றங்கள் மறுபரிசீலனை செய்ய அனுமதிக்கிறது. இருப்பினும், இந்தத் தீர்ப்பானது, நீதிமன்றங்களின் இத்தகைய மறுபரிசீலனை அதிகாரத்தை, அதிகார வரம்பு மீறல், இயற்கை நீதிக்கான கோட்பாடுகளை மீறுதல் அல்லது சட்டப் பிழைகள் போன்ற குறிப்பிட்ட காரணங்கள் உள்ள வழக்குகளுக்கு மட்டுமே என்று வரம்பிற்குள் கொண்டு வந்தது. மேலும், அவைத் தலைவர் ஒரு இறுதி முடிவை எடுப்பதற்கு முன்பாக நீதிமன்றங்களின் தலையீட்டை தடுத்தது.
Original article : When is a party merger valid? With TMC split, here is what the defection law says — and omits -Amaal Sheikh