ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, வங்காள விரிகுடா பகுதியைவிட அரபிக்கடல் பகுதியில் வீசும் பருவக்காற்று இந்த ஆண்டு மிகவும் மெதுவாகவே தீவிரமடைவது போல் தெரிகிறது.
தென்மேற்குப் பருவமழை காலம் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டன. ஆனால், அதன் செயல்பாடு இதுவரை இயல்பான அளவைவிடக் குறைவாகவே உள்ளது. ஜூன் மாதம் 1-ஆம் தேதி முதல் ஜூன் மாதம் 17-ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில், இந்தியா முழுவதும் மழைப்பொழிவின் அளவு சராசரியைவிட 38% குறைவாகவே இருந்தது.
ஜூன் மாதம் முதல் செப்டம்பர் மாதம் வரை பொழியும் தென்மேற்குப் பருவமழை, இந்தியாவின் ஒட்டுமொத்த ஆண்டு மழையளவில் 70%-க்கும் அதிகமான மழையைக் கொண்டுவருகிறது. இந்தப் பருவமழை மே மாதத்தின் மூன்றாவது வாரத்தில் அந்தமான் கடல் பகுதியில் தொடங்கி, பொதுவாக ஜூன் மாதம் 1-ஆம் தேதிக்குள் கேரளா வழியாக இந்தியாவின் முக்கிய நிலப்பகுதிக்குள் நுழைகிறது.
அதன் பிறகு, பருவமழை வெவ்வேறு கட்டங்களாக முன்னேறி, ஜூன் மாத இறுதிக்குள் வட உத்திரப் பிரதேசம், டெல்லி மற்றும் அதன் அருகிலுள்ள பகுதிகளுக்குச் சென்றடைகிறது. மேலும், ஜூலை மாதம் 15-ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் சென்றடைகிறது. இருப்பினும், பருவமழை முன்கூட்டியோ அல்லது சரியான நேரத்திலோ தொடங்குவது என்பது, நல்ல மழையையோ அல்லது நாடு முழுவதும் அது சரியான அளவில் பரவிப் பொழிவதையோ உறுதிப்படுத்துவதில்லை. அதேபோல, மழை தாமதமாகத் தொடங்கினாலும் நல்ல மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுவரை பருவமழையின் முன்னேற்றம் எவ்வாறு உள்ளது?
இந்த ஆண்டு, கேரளாவில் தென்மேற்கு பருவமழை ஜூன் மாதம் 4-ஆம் தேதி தொடங்கியது, மேலும் அது அடுத்தடுத்து நான்கு நாட்களுக்கு தீவிரம் அடைந்தது. இது கர்நாடகா மற்றும் கோவா உள்ளிட்ட மேற்கு கடற்கரைப் பகுதிகளுக்கு முன்கூட்டியே நகர்ந்தது. ஆனால், வடகிழக்கு இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் இந்த மழை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.
கேரளா, தெற்கு கர்நாடகா, தமிழ்நாடு, லட்சத்தீவு மற்றும் வடகிழக்கு இந்தியா முழுவதிலும் ஜூன் மாத தொடக்கத்தில் மழையின் தீவிரம் அதிகரித்தது, ஆனால் அது நீண்ட காலத்திற்கு நீடிக்கவில்லை. தென்மேற்கு இந்தியப் பகுதி ஜூன் மாதம் 10-ஆம் தேதி வரை 8% கூடுதல் மழைப்பொழிவைப் பெற்றுள்ளது.
மஹாராஷ்டிராவில் பருவமழை எப்போது தொடங்கும் என்பதற்கான தெளிவான அறிகுறிகள் இதுவரை தென்படவில்லை. கடைசியாக ஜூன் மாதம் 8-ஆம் தேதி தெற்கு கொங்கன் (South Konkan) மற்றும் அதனை ஒட்டிய தெற்கு மத்திய மஹாராஷ்டிராவின் சில பகுதிகளில் மட்டுமே பருவமழை தீவிரமடைந்தது.
ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, இந்த ஆண்டு வங்காள விரிகுடா கிளையுடன் ஒப்பிடுகையில், அரபிக்கடல் கிளையின் பருவமழையின் தீவிரம் மிகவும் மெதுவாக உள்ளது. வங்காள விரிகுடா கிளையானது ஜூன் மாதம் 17 நிலவரப்படி கோராபுட் (Koraput), புல்பானி (Phulbani), ராஞ்சி (Ranchi), ஜமுய் (Jamui) மற்றும் முசாபர்பூர் (Muzaffarpur) ஆகிய பகுதிகள் வரை பரவியுள்ளது.
ஜூன் மாதம் 8-ஆம் தேதிக்குப் பிறகு, பருவமழையின் தீவிரம் முக்கியமாகக் கிழக்கு இந்தியப் பகுதிகளை நோக்கியே நீடித்தது. ஜூன் மாதம் 15-ஆம் தேதி, ஆந்திரப் பிரதேசம், மேற்கு வங்கம், தெலுங்கானா, ஒடிசா, ஜார்கண்ட் மற்றும் பீகார் ஆகிய மாநிலங்களின் மீதமுள்ள பகுதிகளுக்கும் பருவமழை தொடர்ந்தது.
மகாராஷ்டிராவில் தென்மேற்குப் பருவமழை ஏன் வேகம் குறைந்துள்ளது?
முதலாவதாக, இந்த பருவமழைக் காலத்தின் தொடக்கத்திலிருந்தே அரபிக்கடலில் இருந்து வீசும் தென்மேற்கு பருவக்காற்று பலவீனமடைந்துள்ளது. இதன் விளைவாக, மகாராஷ்டிராவின் கடலோரப் பகுதிகள் மற்றும் அதன் அருகிலுள்ள உள்நாட்டுப் பகுதிகளுக்குக் கொண்டு செல்லப்படும் ஈரப்பதத்தின் அளவு குறைந்துள்ளது.
அதேநேரத்தில், வடக்கு மற்றும் வடமேற்கு திசையிலிருந்து வீசும் வறண்ட பலத்த காற்று இப்பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்த வறண்ட காற்றானது பலவீனமாக இருக்கும் பருவக்காற்றுக்கு ஒரு தடையாக மாறி, அதைத் தடுக்கிறது. இதுமட்டுமல்லாமல், அரபிக்கடலில் இருந்து பருவக்காற்றை முன்னோக்கித் தள்ளும் வலுவான உந்துதலும் கிடைக்கவில்லை. பொதுவாக, இதுபோன்ற உந்துதல்கள்தான் அதிக ஈரப்பதத்தைக் கொண்டுவந்து, பரவலான மழையைத் தந்து, பருவமழை மேலும் முன்னேறிச் செல்ல உதவுகின்றன.
இரண்டாவதாக, மேற்கு இந்தியப் பெருங்கடல் மற்றும் அரபிக்கடல் பகுதிகளுக்கு மேலே நிலநடுக்கோட்டைக் கடந்து வீசும் காற்றுகளும் பலவீனமடைந்துள்ளன. இந்தக் காற்றுகளும் ஈரப்பதத்தைக் கடத்துவதற்கும், தென்மேற்குப் பருவமழை நாடு முழுவதும் முன்னேறுவதற்கும் பெரிதும் உதவக்கூடியவை ஆகும்.
மூன்றாவதாக, பருவமழை தொடர்ந்து பெய்வதற்கும் அடுத்தடுத்த இடங்களுக்கு முன்னேறிச் செல்வதற்கும் மற்ற வானிலை அமைப்புகளின் ஆதரவு தேவைப்படுகிறது. அரபிக்கடல் அல்லது வங்காள விரிகுடாவில் உருவாகும் குறைந்த அழுத்தப் பகுதிகள், சூறாவளி சுழற்சிகள் மற்றும் மேற்கு கடற்கரையை ஒட்டி உருவாகும் கடலோரக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலங்கள் ஆகியவை இதில் அடங்கும். பொதுவாக இந்த வானிலை அமைப்புகள் பருவமழை முன்னேற உதவும், ஆனால் தற்போதைய சூழலில் இவை எதுவும் உருவாகவில்லை.
இறுதியாக, உள்ளூர் வானிலை நிலவரங்களைத் தவிர, தென்மேற்கு பருவமழையானது சாதகமான உலகளாவிய வானிலை வடிவங்களையும் சார்ந்துள்ளது. அப்படிப்பட்ட ஒரு வானிலை அமைப்புதான் 'மேடன்-ஜூலியன் அலைவு' (Madden–Julian Oscillation (MJO)) ஆகும். இது மத்திய தரைக்கடல் பகுதியில் உருவாகி கிழக்கு நோக்கி நகரும் ஒரு காற்று மற்றும் மேகங்களின் கூட்டமைப்பாகும். இந்த 'மேடன்-ஜூலியன் அலைவு' (MJO) சாதகமான கட்டத்தில் இருக்கும்போது, அது இந்தியாவில் மழையளவை அதிகரிக்கும். ஆனால், தற்போது இது நமக்குச் சாதகமான கட்டத்தில் இல்லை என்கின்றனர்.
இந்தக் காரணங்கள் அனைத்தும் சேர்ந்து, பருவமழையின் அரபிக்கடல் கிளையின் வேகத்தைக் குறைத்துள்ளன. இதனால் மகாராஷ்டிர மாநிலம் குறிப்பாகப் பாதிக்கப்பட்டுள்ளது. அங்குள்ள பல பகுதிகளில் இயல்பான அளவைவிட 60% முதல் 99% வரையிலும், சில இடங்களில் 99%-க்கும் அதிகமாகவும் மழைக் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அடுத்ததாகப் பருவமழை எப்போது தீவிரமடைய வாய்ப்புள்ளது?
ஜூன் மாதம் 16-ஆம் தேதி முதல், இந்திய வானிலை ஆய்வு மையம் (India Meteorological Department (IMD)) மகாராஷ்டிராவில் பருவமழையின் தீவிரம் குறித்த எந்தவொரு புதிய தகவலையும் வெளியிடவில்லை. இது பருவமழை தொடங்குவதில் ஏற்பட்டுள்ள தாமதத்தை மட்டுமல்லாமல், அது எப்போது அடுத்த கட்டத்திற்கு நகரும் என்ற நிச்சயமற்றத் தன்மையையும் காட்டுகிறது.
ஜூன் மாதம் 17-ஆம் தேதி, மும்பை இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD Mumbai) வெளியிட்ட தகவலின்படி, வானிலை மாதிரிகள் ஜூன் மாதம் 24 மற்றும் 25-ஆம் தேதிகளில் கொங்கன் (Konkan) பிராந்தியத்தில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் காட்டுகின்றன. இருப்பினும், மகாராஷ்டிராவின் பிற பகுதிகளில் பருவமழையின் தீவிரம் குறித்து எந்தவொரு தகவலையும் வழங்கவில்லை.
இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (IMD) தகவல்படி, அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்குள் பருவமழையானது தெலுங்கானா, ஒடிசா, ஜார்கண்ட், பீகார் மற்றும் சத்தீஸ்கரின் சில பகுதிகளுக்குள் அடுத்ததாக முன்னேறிச் செல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Original article : Why has monsoon progress stalled, and when can rains be expected next? -Anjali Marar