ஆயுஷ் மருத்துவர்கள் குறித்து, இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையத்தின் (NCISM) சமீபத்திய உத்தரவு என்ன குறிப்பிடுகிறது? -பிந்து ஷாஜன் பேரப்படன்

 


ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் சோவா-ரிக்பா மருத்துவர்களை “போலி மருத்துவர்கள்” (Quacks) என்று அழைக்கக்கூடாது என இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் (NCISM) ஏன் கூறுகிறது?.


தற்போதைய நிகழ்வு : இந்தியாவின் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளில் தகுதிபெற்ற மற்றும் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்கள், இந்திய மருத்துவ முறைகளைப் பின்பற்றுகிறார்கள் என்ற ஒரே காரணத்திற்காக, அவர்களை சட்டப்படி "போலி மருத்துவர்கள்" (Quacks) என்றோ அல்லது "கள்ள மருத்துவர்கள்" (bogus doctors) என்றோ கருத முடியாது என்று இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம் (National Commission for Indian System of Medicine (NCISM)) ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டு தெளிவுபடுத்தியுள்ளது. பல மருத்துவர்கள் துன்புறுத்தலுக்கும் அவதூறான பொதுப் பிரச்சாரங்களுக்கும் உள்ளாக்கப்படுவதாக இந்த ஒழுங்குமுறை ஆணையம் கூறியதைத் தொடர்ந்து இந்த விளக்கத்தை வெளியிட்டுள்ளது.


அந்தச் சுற்றறிக்கையில் என்ன சொல்கிறது?


ஜூலை 29, 2026 அன்று வெளியிடப்பட்ட சுற்றறிக்கையின்படி, இளங்கலை ஆயுர்வேத மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (Bachelor of Ayurvedic Medicine and Surgery(BAMS)), இளங்கலை யுனானி மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (Bachelor of Unani Medicine and Surgery(BUMS)), இளங்கலை சித்த மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (Bachelor of Siddha Medicine and Surgery(BSMS)) அல்லது இளங்கலை சோவா-ரிக்பா மருத்துவம் மற்றும் அறுவை சிகிச்சை (Bachelor of Sowa-Rigpa Medicine and Surgery(BSRMS)) போன்ற அங்கீகரிக்கப்பட்ட தகுதிகளைப் பெற்று, இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையச் சட்டம்-2020 விதிகளின்கீழ் பதிவு செய்யப்பட்ட மருத்துவர்கள், சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவப் பயிற்சியாளர்கள் ஆவர். அவ்வாறு பதிவுசெய்யப்பட்ட பயிற்சியாளர்கள் இந்திய மருத்துவ முறையைச் (Indian System of Medicine (ISM)) சேர்ந்தவர்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்களை "போலி மருத்துவர்கள்" அல்லது "கள்ள மருத்துவர்கள்" என்று அழைப்பதற்கு எந்த சட்டப்பூர்வ அடிப்படையும் இல்லை என்று ஒழுங்குமுறை ஆணையம் கூறுகிறது.


இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் (NCISM) ஏன் இந்த விளக்கத்தை வெளியிட்டது?


பதிவுசெய்யப்பட்ட இந்திய மருத்துவ முறைப் பயிற்சியாளர்கள் “போலி மருத்துவர்கள்” அல்லது “கள்ள மருத்துவர்கள்” என முத்திரை குத்தப்படுவதாகவும், பொது அறிவிப்புகள் மூலம் இத்தகைய மருத்துவர்கள் குறிவைக்கப்படுவதாகவும், அச்சு மற்றும் மின்னணு ஊடகங்களில் விமர்சிக்கப்படுவதாகவும், சமூக ஊடகங்களில் தாக்கப்படுவதாகவும், மேலும் சில பொது இடங்களிலும் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்படுவதாகவும் தங்களுக்குப் புகார்கள் வந்துள்ளதாக இந்த ஆணையம் தெரிவித்துள்ளது. இந்தச் சுற்றறிக்கையானது, அவர்களின் சட்டப்பூர்வ நிலையைத் தெளிவுபடுத்துவதையும், இதுபோன்ற சித்தரிப்புகளைத் தடுப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.


இதன் பொருள் இந்திய மருத்துவ முறை (ISM) மருத்துவர்கள் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்குச் சமமானவர்களா?


இல்லை. இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையச் (NCISM) சட்டத்தின்கீழ் பதிவுசெய்யப்பட்ட மருத்துவர்கள், தத்தமது மருத்துவ முறைகளுக்குள் சட்டப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட மருத்துவர்கள் என்பதை இந்தச் சுற்றறிக்கை ஏற்றுக்கொள்கிறது. இது வெவ்வேறு மருத்துவக் கல்வி முறைகளுக்கு இடையிலான வேறுபாட்டை நீக்குவதோ அல்லது எல்லாச் சூழ்நிலைகளிலும் நவீன மருத்துவத்தைப் பயிற்சி செய்வதற்கான சட்டப்பூர்வ அதிகாரத்தை மருத்துவர்களுக்குத் தானாகவே வழங்குவதோ இல்லை.


ஒரு ஆயுர்வேத, யுனானி, சித்தா அல்லது சோவா-ரிக்பா மருத்துவர் அலோபதி மருந்துகளைப் பரிந்துரைக்கலாமா அல்லது நவீன மருத்துவத்தைப் பயிற்சி செய்யலாமா என்பது, சம்பந்தப்பட்ட மாநிலத்தின் சட்டங்கள், குறிப்பிட்ட சட்ட விதிகள், அரசாங்க அறிவிப்புகள் மற்றும் அந்த அதிகார வரம்பில் பொருந்தக்கூடிய நீதிமன்றத் தீர்ப்புகளைப் பொறுத்தது.


சட்டப்படி “போலி மருத்துவர்” (quack) என்பதன் பொருள் என்ன?


பொதுப் பயன்பாட்டில், "போலி மருத்துவர்" (quack) என்பது பொதுவாக, மருத்துவத் தகுதி பெற்றவர் என்று பொய்யாகக் கூறிக்கொள்பவர் அல்லது தேவையான தகுதிகள் அல்லது சட்டப்பூர்வப் பதிவு இல்லாமல் மருத்துவம் செய்பவரைக் குறிக்கிறது. அங்கீகரிக்கப்பட்ட இந்திய மருத்துவ முறை (ISM) பட்டங்களைப் பெற்று, சட்டத்தின்கீழ் முறையாகப் பதிவுசெய்துள்ள மருத்துவர்களுக்கு இந்தப் பட்டத்தைப் பயன்படுத்த முடியாது என்பதே இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையத்தின் (NCISM) நிலைப்பாடாகும். ஏனெனில், அவர்கள் அங்கீகரிக்கப்பட்ட மருத்துவ முறைகளின் அங்கீகரிக்கப்பட்ட பயிற்சியாளர்கள் ஆவர்.


இது ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?


இந்த விளக்கம் முக்கியத்துவம் வாய்ந்தது. ஏனெனில், இது இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையச் (NCISM) சட்டத்தின்கீழ் ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் சோவா-ரிக்பா பயிற்சியாளர்களின் சட்டப்பூர்வ அங்கீகாரத்தை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. மேலும், பதிவுசெய்யப்பட்ட பயிற்சியாளர்களை அவதூறான அல்லது தவறான பொது சித்தரிப்புகளிலிருந்து பாதுகாக்க முயல்கிறது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட இந்திய மருத்துவ முறைகளின் தகுதிவாய்ந்த பயிற்சியாளர்களுக்கும், மருத்துவம் செய்வதாகப் பொய்யாகக் கூறும் தகுதியற்ற நபர்களுக்கும் இடையே வேறுபடுத்திக் காட்டுகிறது.


இதற்கிடையில், இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையம் (NCISM) என்பது, இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய மருத்துவ முறைகளான ஆயுர்வேதம், யுனானி, சித்தா மற்றும் சோவா-ரிக்பா ஆகியவற்றில் மருத்துவக் கல்வி, தொழில்முறைத் தரநிலைகள் மற்றும் பயிற்சியாளர்களின் பதிவை மேற்பார்வையிடுவதற்காக, 2020-ம் ஆண்டின் இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையச் சட்டத்தின்கீழ் நிறுவப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான ஒழுங்குமுறை அமைப்பாகும். இது இந்திய மருத்துவத்தின் மத்திய மன்றத்திற்கு (Central Council of Indian Medicine (CCIM)) மாற்றாக அமைக்கப்பட்டதுடன், இந்த மருத்துவ முறைகளின் கல்வித் தரங்களைப் பராமரித்தல், தகுதிகளை அங்கீகரித்தல் மற்றும் தொழில்முறைப் பயிற்சியை ஒழுங்குபடுத்துதல் ஆகியவற்றுக்குப் பொறுப்பாகும்.


Original Link : What does NSCIM’s latest order say about AYUSH doctors? -Bindu Shajan Perappadan

Share: