இவ்வாறு செய்வதன் மூலம், விளம்பரத்திற்கும் பரிவர்த்தனைப் பொறுப்பிற்கும் இடையே ஒரு எல்லையை வகுப்பது குறித்த நுகர்வோர் சட்டத்தில் அடிக்கடி எழும் ஒரு கவலையை நீதிமன்றம் கையாண்டது.
இந்த உத்தரவு, மணப்புரம் ஃபைனான்ஸ் நிறுவனத்திற்கு எதிரான புகார்களிலிருந்து எழுந்த ஒரு பிரச்சனை தொடர்பானது. அதில், கடன் வாங்கியவர்கள், விளம்பரப்படுத்தப்பட்டதைவிட அதிக வட்டி விகிதம் வசூலிக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டினர்.
இந்த விவகாரம் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த இரண்டு கடன் வாங்கியவர்கள் பெற்ற தங்கக் கடன்கள் தொடர்பானது. ஆரம்பத்தில், அவர்கள் கத்தோலிக்க சிரியன் வங்கியில் 15% வட்டிக்குத் தங்க நகைகளை அடமானம் வைத்திருந்தனர். பின்னர் 2018-ல், ஒரு வங்கி மேலாளர் குறைந்த வட்டி விகிதத்தை வழங்குவதாக உறுதியளித்ததைத் தொடர்ந்து, மணப்புரம் ஃபைனான்ஸ் அந்தக் கடன்களை ஏற்றுக்கொண்டது.
கடன் வாங்கியவர்கள், அப்போது அந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதராக இருந்த மோகன்லால் இடம்பெற்ற ஒரு விளம்பரத்தால் தாங்கள் ஈர்க்கப்பட்டதாகக் கூறினர்.
இருப்பினும், கடன் வாங்கியவர்கள் கடனைத் திருப்பிச் செலுத்தி, அடகு வைத்த தங்கத்தை மீட்க முயன்றபோது, மணப்புரம் நிறுவனம் விளம்பரத்தில் குறிப்பிட்டிருந்ததைவிட அதிக வட்டி விகிதத்தைக் வழங்க வேண்டும் என்று வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது.
பின்னர், அவர்கள் சேவை குறைபாடு மற்றும் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகளைக் கூறி, செலுத்தப்பட்ட கூடுதல் வட்டித் தொகையைத் திரும்பப் பெறுமாறும், ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கக் கோரியும் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தை அணுகினர்.
நிறுவனம் மற்றும் அதன் மேலாளருடன் சேர்த்து, மோகன்லால் விளம்பரங்களில் நடித்ததன் காரணமாக மட்டுமே அவர் 2-வது பிரதிவாதியாகப் சேர்க்கப்பட்டார்.
ஒரு பொருளின் விளம்பரத் தூதராக இருப்பதாலேயே தன்னை ஒரு சேவை வழங்குநராகக் கருத முடியாது என்று மோகன்லால் வாதிட்டார். ஆனால், மாவட்ட ஆணையம் 2019-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் (Consumer Protection Act) சட்டத்தில் உள்ள 'ஆதரவு தெரிவித்தல்’ (endorsement) என்பதற்கான வரையறையைப் பயன்படுத்தி, இந்த வாதத்தை ஏற்க மறுத்ததுடன், விசாரணையைத் தொடரலாம் என்றும் கூறியது.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின் பிரிவு 2(18), ‘ஆதரவு தெரிவித்தல்’ (endorsement) என்பதை விரிவாக வரையறுக்கிறது. இது, ஒரு விளம்பரத்தில் இடம்பெறும் நபரின் கருத்து அல்லது அனுபவத்தையே அந்த விளம்பரம் பிரதிபலிக்கிறது என்று நுகர்வோர் நம்பும்படி செய்யக்கூடிய செய்திகள் அல்லது சித்தரிப்புகளையும் தனக்குள் கொண்டுள்ளது. பிரிவு 2(47) ‘நியாயமற்ற வர்த்தக நடைமுறை’ (unfair trade practice) என்பதற்கு ஒரு பரந்த வரையறையை வழங்குகிறது. இதில் விலை அல்லது தரம் குறித்த தவறான சித்தரிப்புகளும் அடங்கும்.
'உத்தரவாதம் அளிப்பவர்' (endorser) என்ற சொல், தவறான அல்லது திசைதிருப்பும் விளம்பரங்களைக் கையாளும் பிரிவு 21-ல் மட்டுமே வெளிப்படையாகக் காணப்படுகிறது. மேலும், அது மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு அதிகாரங்களை வழங்குகிறது. பிரிவு 21, உற்பத்தியாளர்கள் மற்றும் விளம்பரதாரர்கள் ஆகிய இருவருக்கும் அபராதம் விதிக்கவும், விளம்பர ஒப்பந்தங்களுக்கு தற்காலிகத் தடை விதிக்கவும் அனுமதிக்கிறது.
— அதே நேரத்தில், பிரிவு 21(5), "தன்னால் விளம்பரப்படுத்தப்படும் தயாரிப்பு அல்லது சேவை தொடர்பான விளம்பரத்தில் கூறப்பட்ட உரிமைகோரல்களின் உண்மைத்தன்மையை சரிபார்க்க உரிய முயற்சியை மேற்கொண்ட" விளம்பரதாரர்களைப் பாதுகாக்கிறது.
இருப்பினும், நுகர்வோர் ஆணையங்களில் சேவை குறைபாடு அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் தொடர்பான நுகர்வோர் தகராறுகள் வரும்போது, அந்தச் சட்டம் விளம்பரதாரர்களைப் பற்றி மேலும் குறிப்பிடவில்லை. அது தற்செயலாக நடந்ததல்ல என்று நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்தது.
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு (Central Consumer Protection Authority) ஆணையத்தால் வெளியிடப்பட்ட தவறான விளம்பரங்கள் தொடர்பான 2022-ஆம் ஆண்டு வழிகாட்டுதல்களின் அடிப்படையிலான வாதங்களையும் நீதிமன்றம் பரிசீலித்தது. இந்த வழிகாட்டுதல்கள் ‘உத்தரவாதம் அளிப்பவர்’ (endorser) என்பதை வரையறுத்து, உரிய விடாமுயற்சியைக் கோரினாலும், நீதிமன்றம் அவற்றை பிரிவு 21-ன் சட்டக் கட்டமைப்புக்குள் செயல்படுவதாகவே கருதியது. மாறாக, அனைத்து வகையான நுகர்வோர் தகராறுகளுக்கும் ஆதரவளிப்பவர்களைப் பொறுப்பாக்குவதில்லை என்றும் நீதிமன்றம் கூறியது.
நடிகருக்கும் கடன் வாங்கியவர்களின் பரிவர்த்தனைக்கும் இடையே ஏதேனும் நேரடித் தொடர்பு குறிப்பிடப்பட்டுள்ளதா என்பதைப் பார்ப்பதற்காக நீதிமன்றம் அந்தப் புகாரை பரிசீலனை செய்தது. அதில் மோகன்லால் பற்றிய இரண்டு குறிப்புகளை மட்டுமே நீதிமன்றம் கண்டறிந்தது: ஒன்று, அவர் அந்த நிறுவனத்தின் விளம்பரத் தூதர் என்று குறிப்பிடுவது; மற்றொன்று, அவரை வைத்து வெளிவந்த விளம்பரங்களில் வாக்குறுதியளிக்கப்பட்டபடியே வட்டி விகிதம் இருக்கும் என்று நிறுவனத்தின் மேலாளர் கடன் வாங்கியவர்களுக்கு உறுதியளித்தார் என்று பதிவு செய்யப்பட்டிருந்தது.
இந்த வழக்கில் தொடர்புடைய நிகழ்வுகளின் ஒரு பகுதியாக விளம்பரங்கள் இருந்தாலும், விளம்பரப்படுத்தப்பட்டபடி சேவை வழங்குநர் சேவையை வழங்கத் தவறும்போது தான் நியாயமற்ற வர்த்தக நடைமுறை தொடர்பான பிரச்சனை எழுகிறது என்பதையும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியது.
வழக்கு ஆவணங்களின்படி, அந்தத் தோல்விக்கு நிறுவனம் மட்டுமே பொறுப்பு, விளம்பரதாரர் பொறுப்பு அல்ல என்ற தெரியவந்துள்ளது. சேவைக் குறைபாடு அல்லது நியாயமற்ற வர்த்தக நடைமுறைக்கான பொறுப்பை, அவர் அந்த நிறுவன விளம்பரப்படுத்தினார் என்ற ஒரே காரணத்திற்காக, விளம்பரதாரர்மீது குற்றம் சுமத்த முடியாது என்று அந்த உத்தரவில் கூறப்பட்டிருந்தது.
உங்களுக்குத் தெரியுமா?
மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (Central Consumer Protection Authority (CCPA)) இந்தியாவின் உச்சபட்ச நுகர்வோர் கண்காணிப்பு அமைப்பாகும். இது நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019-ன் பிரிவு 10(1)-ன் கீழ் உருவாக்கப்பட்டது மற்றும் 2020-ஆம் ஆண்டு ஜூலை 24-ஆம் தேதி முதல் செயல்படத் தொடங்கியது.
இது நுகர்வோர் உரிமைகள் மீறல், நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள், மற்றும் ஒரு பிரிவினராக நுகர்வோரின் நலன்களுக்கும் பொதுமக்களுக்கும் தீங்கு விளைவிக்கும் தவறான அல்லது திசைதிருப்பும் விளம்பரங்கள் தொடர்பான விவகாரங்களைக் கட்டுப்படுத்தும் பணியைக் கொண்டுள்ளது.
2019-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் (Consumer Protection Act) சட்டம், 1986-ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தை மாற்றி அமைத்தது. இந்தச் சட்டம், ஒரு பொருள் அல்லது சேவையின் தரம் அல்லது அளவு குறித்து தவறான தகவல்களை வழங்குதல் மற்றும் தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் போன்ற குற்றங்களை அங்கீகரிக்கிறது. மேலும், பொருட்கள் மற்றும் சேவைகள் "ஆபத்தானவை, தீங்கு விளைவிப்பவை அல்லது பாதுகாப்பற்றவை" என்று கண்டறியப்பட்டால் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளையும் சட்டம் சுட்டிக்காட்டுகிறது.
Original Article : Who is a endorser? -Roshni Yadav , Khushboo Kumari