கலவையான பொருளாதாரக் கண்ணோட்டம். -சச்சின் குப்தா

வளர்ச்சி வலுவாக உள்ளது. ஆனால், உலகளாவிய பின்னடைவுகள் கவலைக்குரியதாக இருக்கின்றன.


2026-ஆம் ஆண்டிற்குள் இந்தியா அடிெயடுத்து வைக்கும்போது, அதன் பொருளாதார சூழல்கள் மிகவும் சாதகமாகத் தெரிகிறது. பொருளாதார வளர்ச்சி வலுவாக உள்ளது; நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 2026-ஆம் நிதியாண்டில் 7 சதவீதத்திற்கு அதிகமாகவும், 2027-ஆம் நிதியாண்டில் சுமார் 6.5 முதல் 7 சதவீதம் வரையிலும் வளர்ச்சியடையக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. பணவீக்கம் பெரும்பாலும் கட்டுப்பாட்டில் உள்ளது என்றும் வட்டி விகிதங்கள் சீராக இருபபதாகவும் தெரிவிக்கின்றனர். மேலும், வங்கிகளின் வாராக்கடன் குறைந்துள்ளதாலும் நிறுவனங்களின் கடன் தரம் உயர்ந்துள்ளதாலும், கடந்த பத்தாண்டுகளில் இல்லாத அளவிற்கு வங்கித்துறையானது தற்போது மிகச்சிறந்த நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது. 


தொடர்ந்து குறைந்துவரும் நிதிப்பற்றாக்குறை, நிலையான பொதுக் கடன் சூழல், அரசியல் தொடர்ச்சி மற்றும் கட்டமைப்பு சீர்திருத்தங்களில் கூடுதல் கவனம் ஆகியவற்றுடன், ஒட்டுமொத்த நிலைமை மிகவும் ஊக்கமளிப்பதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர். 


இருப்பினும், கவனிக்கப்பட வேண்டிய புதிய சவால்கள் உருவாகி வருவதாகவும் கூறப்படுகிறது.


இந்திய ரூபாயின் மதிப்பு அமெரிக்க டாலருக்கு எதிராக மட்டுமல்லாமல், மற்ற முக்கிய நாடுகளின் பண மதிப்புகளுக்கு எதிராகவும் பலவீனமடைந்து வருவது கவலையளிப்பதாகக் கூறுகின்றனர். கடந்த ஓராண்டில், பிரிட்டிஷ் பவுண்ட் மற்றும் யூரோவிற்கு எதிராக இந்தியா ரூபாயின் மதிப்பு 15%-க்கும் மேல் வீழ்ச்சியடைந்துள்ளது. நாட்டின் நடப்புக் கணக்குப் பற்றாக்குறை (Current Account Deficit) கட்டுக்குள் இருந்தபோதிலும் இந்த வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது, ரூபாய் மீதான அழுத்தம் வர்த்தக சமநிலையின்மையால் (Trade Imbalance) ஏற்படவில்லை என்பதையும் மாறாக மூலதன வெளியேற்றத்தால் (Capital Flows) ஏற்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக்காட்டுகிறது.


வீழ்ச்சியடைந்துவரும் அந்நிய நேரடி முதலீடு


வெளிநாட்டு முதலீட்டுப் போக்குகள் கவலையளிக்கும் வகையில் உள்ளன. 2025-ஆம் ஆண்டில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் (Foreign Portfolio Investors (FPI)) சுமார் $18 பில்லியன் நிதியைத் திரும்பப் பெற்றுள்ளனர். நேரடி வெளிநாட்டு முதலீடும் (Foreign Direct Investment (FDI)) கடந்த நான்கு ஆண்டுகளில் கடுமையாகக் குறைந்துள்ளதாகத் தரவுகள் காட்டுகின்றன. அதன்படி, 2022-ஆம் நிதியாண்டில்  $44 பில்லியனாக இருந்தது என்றும் நிதியாண்டு 2023-ஆம் நிதியாண்டில் $28 பில்லியனாகவும், 2024-ஆம் நிதியாண்டில் $10 பில்லியனாகவும், 2025-ஆம் நிதியாண்டில் வெறும் $0.5 பில்லியனாகவும் சரிந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர். 


இந்த வீழ்ச்சி தற்காலிகமானதா அல்லது ஏதோ ஒரு ஆழமான கட்டமைப்பு பிரச்சனையை குறிக்கிறதா என்பதுதான் தற்போது முக்கியப் பிரச்சனையாகக் பார்க்கப்படுகிறது. 


இது ஒரு தற்காலிக மாற்றம் அல்ல, மாறாக ஒரு அடிப்படை மாற்றம் என்று பல ஆதாரங்கள் தெரிவிக்கின்றன. உலகளவில், நீண்டகால முதலீடுகள் வளர்ந்த நாடுகளை நோக்கி, குறிப்பாக அமெரிக்காவை நோக்கி அதிக அளவில் செல்கின்றன. புவிசார் அரசியல் பதற்றங்கள் மற்றும் சொந்த நாட்டிலேயே தொழில்களை அமைத்தல் (reshoring) போன்ற காரணங்களால், ஐரோப்பிய நாடுகளும் ஜப்பானும் இப்போது தங்கள் நாட்டுக்குள்ளேயே முதலீடு செய்வதில் அதிக கவனம் செலுத்துகின்றன. இந்தியாவைப் போன்ற வளர்ந்து வரும் நாடுகளுக்கு இது ஒரு சவாலான சூழலாகும். ஏனெனில், உற்பத்தித் துறையின் வளர்ச்சிக்கும் தொழில்நுட்ப மேம்பாட்டிற்கும் பெருமளவிலான வெளிநாட்டு முதலீடுகள் தேவைப்படும் வேளையில், உலகளாவிய முதலீடுகளை ஈர்ப்பதில் தற்போது கடும் போட்டி நிலவுவதாகக் கூறப்படுகிறது. 


அதே நேரத்தில், உலகளாவிய வர்த்தக சூழல் மோசமடைந்து வருகிறது. கடந்த ஆண்டு நிலவிய வரி விதிப்புப் போர் (Tariff war), தற்போது ‘பொருளாதார தேசியம்’ (Economic nationalism) என்ற நிலைக்கு மாறியுள்ளது. சுமார் ஒரு ஆண்டிற்கு முன்பு வரை, இந்தியா அமெரிக்காவுடன் சாதகமான வர்த்தக ஒப்பந்தத்தைப் பெறும் என்றும், ‘சீனா+1’ (China+1) உத்தியால் அதிக பயனடைய வாய்ப்புள்ளதாகவும்  நம்பிக்கை தெரிவித்தனர். இருந்தபோதிலும், 2026-ஆம் ஆண்டிற்குள் இந்த நம்பிக்கை குறைந்துவிட்டது. ஏற்றுமதி பங்கைப் பெறுவதற்குப் பதிலாக, வர்த்தகத் தடைகள் அதிகரிப்பதாலும் மற்றும் விநியோகச் சங்கிலிகள் அந்தந்த  நாடுகளின் பிராந்திய பகுதிகளுக்குள் அதிக கவனம் செலுத்துவதாலும், தற்போது இந்தியா தனது போட்டித்திறனை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.


உள்நாட்டு வணிகப் பாதுகாப்பு


உள்நாட்டு ரீதியாக, கொள்கை நடவடிக்கைகள் 'பாதுகாப்புவாதத்தை' (protectionism) நோக்கி நகர்வதைக் காட்டுகின்றன. இரும்பு மற்றும் ரசாயனம் போன்ற துறைகளின் மீது விதிக்கப்படும் அதிக இறக்குமதி வரிகள், மலிவான சீன இறக்குமதியிலிருந்து இந்திய உற்பத்தியாளர்களைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன. இந்த நடவடிக்கைகள் குறுகிய காலத்தில் உள்ளூர் தொழில்களுக்கு உதவினாலும், அவை இந்தியாவின் போட்டித்தன்மையைக் குறைத்து, உலகளாவிய விநியோகச் சங்கிலியில் இந்தியாவின் பங்கைக் குறைக்கக்கூடும் என்றும் எச்சரிக்கப்படுகிறது. இந்தியா கையெழுத்திட்டு வரும் பல இலவச தடையற்ற ஒப்பந்தங்களின் (Free Trade Agreement (FTAs)) பலன்கள் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை என்றும் கூறப்படுகிறது. 


இந்தியா உலக நாடுகளுடன் இணைந்து செயல்படுவதற்குப் பதிலாக, தனிமைப்பட்டுப் போவதை நோக்கிய ஒரு சுயசார்பு கொள்கையை நோக்கி நகர்கிறதோ என்பதே பெரிய கவலையாக உள்ளது. வலுவான ஏற்றுமதி உத்திகள் மற்றும் உலகளாவிய சந்தைகளுக்கான வாய்ப்புகள் இல்லாமல் 'ஆத்மநிர்பார்' (சுயசார்பு) போன்ற கொள்கைகள் பின்பற்றப்பட்டால், அது வெளிநாடுகளைப் புறக்கணித்து உள்நாட்டு உற்பத்தி மாற்றும் சிறிய அளவிலான வளர்ச்சியை மட்டுமே உள்ளடக்கிய ஒரு கொள்கையாக மாறிவிடும் என்று எச்சரிக்கின்றனர். வர்த்தகம் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளைத் தவிர்ப்பதன் மூலம் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் வெற்றி பெறுவதில்லை என்றும் மாறாக, அவற்றைப் பயன்படுத்தித் தங்கள் உள்நாட்டுத் திறன்களைக் கட்டமைத்து விரிவுபடுத்துவதன் மூலமே வெற்றி பெறுகின்றன என்பதைப் பொருளாதார வரலாறு காட்டுகிறது.


இந்தியாவின் வளர்ச்சி என்பது அதன் வலுவான உள்நாட்டுக் கட்டமைப்புகளை மட்டும் சார்ந்திருக்கவில்லை, மாறாக,  நீண்டகால முதலீடுகளை ஈர்ப்பது மற்றும் உலகளாவிய முதலீட்டு சந்தைகளில் போட்டித்தன்மையை அதிகரிப்பது ஆகியவற்றையும் சார்ந்துள்ளது. இந்தியாவின் வளர்ச்சிப் பயணம் தற்போது வலுவாக இருந்தாலும், குறைவான மூலதன வரத்து, ரூபாய் மதிப்பின் மீதான அழுத்தம் மற்றும் அதிகரித்து வரும் வர்த்தகத் தடைகள் போன்ற எச்சரிக்கை அறிகுறிகள், நமது பொருளாதார உத்திகளை மறுபரிசீலனைக்கு உட்படுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துகின்றன.


எழுத்தாளர் CareEdge Ratings அமைப்பின் தலைமை மதிப்பீட்டு அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராக உள்ளார்.


 Original Article :  Mixed economic outlook. -Sachin Gupta

Share: