செயற்கை நுண்ணறிவு உட்கட்டமைப்பு ஏன் அதிக முக்கியத்துவம் வாய்ந்தது? -பிரவீன் கௌஷல்

அரசாங்கத்தின் "செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புக்கான அணுகலை ஜனநாயகப்படுத்துதல்" (Democratising Access to AI Infrastructure) என்ற வெள்ளை அறிக்கையின் முக்கியக் கருத்து மிகவும் தெளிவானதாக மற்றும் வலிமையானதாகக் கருதப்படுகிறது. செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தும் வாய்ப்பே ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் என்றும் செயற்கை நுண்ணறிவுக்கான (AI) அடிப்படை வசதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்டு, அவற்றை அனைவருக்கும் பரவலாகக் கிடைக்கச் செய்யும் நாடுகள், கண்டுபிடிப்புகளில் முன்னிலை வகிக்கும் என்றும் கூறப்படுகிறது.  அவ்வாறு செய்யத் தவறும் நாடுகள் மற்றவர்களைச் சார்ந்து வாழவேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. 


இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு குறித்த விவாதங்கள் வழக்கமாக தானியங்கி செயல்பாடுகள், உற்பத்தித் திறன் கருவிகள், சாட்பாட்கள் (chatbots) மற்றும் செயல்திறன் ஆகியவற்றையே மையமாகக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்திய அரசின் சமீபத்திய வெள்ளை அறிக்கையான 'செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புக்கான அணுகலை அனைவருக்கும் கிடைக்கச் செய்தல்' (Democratising Access to AI Infrastructure) ஒரு முக்கியமான கருத்தை முன்வைக்கிறது. இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு எதிர்காலம் என்பது வெறும் நெறிமுறைகளை (algorithms) மட்டும் சார்ந்து இருக்காது என்றும் மாறாக அந்தத் தொழில்நுட்பத்திற்குப் பின்னால் உள்ள உள்கட்டமைப்பை யாரெல்லாம் பயன்படுத்த முடிகிறது என்பதைப் பொறுத்தே அமையும் என்றும் தெரிவிக்கின்றனர். 


கணினித் திறன், தரவுத்தொகுப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவு மாதிரி அமைப்புகள் ஆகியவை முக்கியமான பொருளாதார வளங்களாக மாறி வருகின்றன என்று இந்த ஆய்வு அறிக்கை விளக்குகிறது. செயற்கை நுண்ணறிவின் ஆற்றல் ஒரு சில உலகளாவிய நிறுவனங்களின் கட்டுப்பாட்டில் பெருகி வருவதால், இந்த உள்கட்டமைப்பைப் பயன்படுத்தும் வாய்ப்பே யார் புதிய கண்டுபிடிப்புகளை உருவாக்குவது, யார் விதிகளை வகுப்பது மற்றும் யார் வெறும் பயனாளிகளாக மட்டுமே இருப்பது என்பதைத் தீர்மானிப்பதாகக் கூறப்படுகிறது. 


இந்தியாவைப் பொறுத்தவரை, இது வெறும் தொழில்நுட்பம் சார்ந்தது மட்டுமல்ல. இது நாட்டின் போட்டித்திறன், உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் தேசிய இறையாண்மை போன்றவற்றை உள்ளடக்கிய விஷயமாகக் கருதப்படுகிறது.


பொதுப் பயன்பாட்டுப்பொருள்


செயற்கை நுண்ணறிவு (AI) உள்கட்டமைப்பை ஒரு டிஜிட்டல் பொதுப் பயன்பாட்டுச் சேவையாக (Digital Public Utility) கருதவேண்டும் என்று இந்தக் ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது. சாலைகள் எவ்வாறு வர்த்தகத்திற்கும், மின்சாரம் எவ்வாறு தொழில்துறைக்கும் உதவுகிறதோ, அதுபோல செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு நவீன கண்டுபிடிப்புகள், நிர்வாகம் மற்றும் ஆராய்ச்சிக்குத் துணையாக இருக்கிறது. இந்த உள்கட்டமைப்பு இரண்டு பகுதிகளைக் கொண்டது. அவை, புறநிலைசார்ந்த பகுதி (Physical): இதில் தரவு மையங்கள் (Data Centres), வரைகலை செயற்பகுதிகள் (Graphics Processing Unit (GPU)), அதிநவீன கணினி அமைப்புகள் மற்றும் மின்சார விநியோகம் ஆகியவை அடங்கும். டிஜிட்டல் பகுதி (Digital): இதில் தரவுத்தொகுப்புகள் (Datasets), மாதிரி நூலகங்கள் (Model Libraries), நிர்வாக விதிகள் மற்றும் அணுகல் முறைகள் ஆகியவை அடங்கும்.


இந்தியா தற்போது ஒரு பெரிய சமநிலையற்ற சூழலை எதிர்கொள்கிறது. உலகம் முழுவதும் உருவாகும் தரவுகளில் ஏறக்குறைய 20 சதவீதத்தை இந்தியா உற்பத்தி செய்தாலும், உலகளாவிய தரவு மையங்களின் (Data Centre) கொள்ளளவில் சுமார் 3 சதவீதத்தை மட்டுமே இந்தியா தன்வசம் கொண்டுள்ளது. இந்த இடைவெளியின் காரணமாக, இந்திய ஆராய்ச்சியாளர்கள், தொடக்கநிலை நிறுவனங்கள் மற்றும் பொது நிறுவனங்கள் பெரும்பாலும் வெளிநாட்டு கணினி வளங்களையும் தளங்களையுமே சார்ந்திருக்க வேண்டியுள்ளது.


இந்தியாவின் கொள்கை முடிவு மிகவும் தெளிவாகவும் வலுவாகவும் உள்ளது. இந்திய செயற்கை நுண்ணறிவு திட்டம் (IndiaAI Mission), தேசிய உயர்செயல்திறன் கணினி இயக்கம் (National Supercomputing Mission), செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சி, பகுப்பாய்வு மற்றும் அறிவு பரவல் தளம் (AI Research, Analytics and Knowledge Assimilation Platform (AIRAWAT)) மற்றும் புதிய தேசிய வரைகலை செயற்பகுதி குழுமங்கள் (national GPU clusters) போன்ற திட்டங்கள், செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை இந்தியா உணர்ந்துள்ளதைக் காட்டுகின்றன.


இந்த அணுகுமுறைக்கு டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு (DPI) மிக முக்கியமானது. AI கோஷ் (AI Kosh), பாஷினி (Bhashini) மற்றும் TGDeX போன்ற தளங்கள், பகிரப்பட்ட மற்றும் தரப்படுத்தப்பட்ட அமைப்புகள் எவ்வாறு தரவுகள் மற்றும் மாதிரிகளுக்கான அணுகலை விரிவுபடுத்துகின்றன என்பதையும், அதே நேரத்தில் ஒருவருக்கொருவர் இணைந்து செயல்படும் திறன் மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை எவ்வாறு பராமரிக்கின்றன என்பதையும் காட்டுகின்றன.


ஒருமுகப்படுத்தலினால் ஏற்படும் ஆபத்து


உலகளவில், செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு ஒரு சில நிறுவனங்களிடம் மட்டுமே குவிந்து வருகிறது. ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே மேம்பட்ட சிப்கள் (Advanced chips), அதிகப்படியான கணினித் திறன் மற்றும் முன்னணி செயற்கை நுண்ணறிவு மாதிரிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துள்ளன. இதனால் புதியவர்கள் இந்தத் துறைக்குள் நுழைவது கடினமாகிறது மற்றும் அந்த குறிப்பிட்ட நிறுவனங்களின் ஆதிக்கம் மேலும் அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது. 


இந்தியாவுக்கு இது வெறும் பொருளாதார ரீதியிலான விஷயம் மட்டுமல்ல, ஒரு வியூகம் சார்ந்த விஷயமாகும். வெளிநாட்டு செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பைச் சார்ந்திருப்பது உள்நாட்டு கண்டுபிடிப்புகளைக் கட்டுப்படுத்தலாம், பேச்சுவார்த்தை நடத்தும் வலிமையைக் குறைக்கலாம் மற்றும் முக்கியமான துறைகளில் பாதிப்புகளை ஏற்படுத்தலாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது. 


தன்னாட்சி பெற்ற செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டும் என்ற இந்த வெள்ளை அறிக்கையின் அழைப்பு, உலகத்துடனான தொடர்பைத் துண்டித்துக் கொள்வதைக் குறிக்கவில்லை என்றும் மாறாக, இது முக்கியமான அமைப்புகளின் மீதான கட்டுப்பாட்டை இந்தியா தக்க வைத்துக்கொண்டு, இந்திய கண்டுபிடிப்பாளர்கள் உலகளவில் போட்டியிடுவதற்குத் தேவையான 'பகிர்வு அணுகல் முறைகளை' ஆதரிப்பதாகவும் தெரிவிக்கின்றனர். 


இந்த ஆய்வறிக்கையின் முக்கிய நோக்கம் நிலைத்தன்மை (Sustainability) ஆகும். இந்தியா தனது செயற்கை நுண்ணறிவு திறனை மேம்படுத்தும்போது, ஆற்றல் திறன் மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் (Renewable energy) பயன்பாடு ஆகியவை மிகவும் அவசியமானவை. முறையான திட்டமிடல் இல்லையெனில், செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்புகள் சுற்றுச்சூழலுக்கு அழுத்தத்தை ஏற்படுத்தக்கூடும் என்றும் குறிப்பாக நீர் மற்றும் மின்சாரத் தட்டுப்பாடு உள்ள பகுதிகளில் இது பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என்கின்றனர். 


எனவே, ஆற்றல் திறன்மிக்க வடிவமைப்புகள், மேம்பட்ட குளிரூட்டும் அமைப்புகள் மற்றும் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளுக்கு ஏற்ப அமைவது மிக அவசியமானது  என்பதை இந்த ஆய்வறிக்கை வலியுறுத்துகிறது.


தேவையான அளவில் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை அரசாங்கத்தால் மட்டுமே உருவாக்கிவிட முடியாது. பிராந்திய தரவு மையங்கள், வரைகலை செயற்பகுதி (GPU) கிளவுட் சேவைகள் (cloud services) மற்றும் ஒரு நாட்டின் இறையாண்மை கொண்ட செயற்கை நுண்ணறிவு திறனை விரிவுபடுத்துவதற்கு, அரசு மற்றும் தனியார் துறைகளுக்கு இடையிலான கூட்டமைப்பு மிகவும் அவசியம் என்று இந்த வெள்ளை அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. தெளிவான மற்றும் வெளிப்படையான நிர்வாகம் இருக்கும்பட்சத்தில், இத்தகைய கூட்டமைப்புகள் அரசாங்கத்தின் மேற்பார்வையையும் தனியார் துறையின் செயல்திறனையும் ஒருங்கிணைத்து சிறந்த பலனைத் தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு சமமற்ற நிலையில் உள்ளது. நிதி, மின்-வணிகம் (E-commerce) மற்றும் தகவல் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் இதில் வேகமாக முன்னேறியுள்ளன. ஆனால், விவசாயம், மருத்துவம், கல்வி மற்றும் பொதுச் சேவைகள் ஆகிய துறைகளில் செயற்கை நுண்ணறிவு பயன்பாடு என்பது இன்னும் குறைந்த அளவிலேயே உள்ளது. இந்த இடைவெளியைக் குறைக்க, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பக் கட்டமைப்புகள் அனைவருக்கும் எளிதாகக் கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். மேலும், குறைந்த விலையில் கணினித் திறன் மற்றும் தரவுகள் கிடைத்தால், அது துல்லியமான விவசாயம், மருத்துவப் பரிசோதனைகள், மொழித் தொழில்நுட்பங்கள் மற்றும் பொதுச் சேவைகளை மேம்படுத்த உதவும் என்றும் குறிப்பாக, இந்த தொழில்நுட்ப மேம்பாடுகள் வட்டார மொழிகளில் அமைவது மிகமுக்கியம் என்பதையும் தெளிவுபடுத்துகின்றனர். 


இது இந்தியாவின் டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு (DPI) அணுகுமுறையைப் பிரதிபலிக்கிறது; இது பெரிய நிறுவனங்களுக்கு மட்டும் சாதகமாக இல்லாமல், புதிய கண்டுபிடிப்புகளை ஊக்குவிக்கும் விதமாக அனைவருக்கும் பொதுவான ஒரு கட்டமைப்பை வழங்குகிறது.


இறுதியாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவது நம்பிக்கையின் அடிப்படையில் அமைய வேண்டும் என்று இந்த வெள்ளை அறிக்கை வலியுறுத்துகிறது. தெளிவான நிர்வாக விதிகளுடன் கூடிய படிப்படியான கொள்கைத் திட்டமானது, பொதுமக்களின் நம்பிக்கையைத் தக்கவைத்துக் கொள்ளும் அதே வேளையில், செயற்கை நுண்ணறிவு கண்டுபிடிப்புகளின் மேம்பாட்டுக்கு வழிவகுக்கும் என்றும் எதிர்பார்க்கின்றனர். 




அணுகுமுறைதான் எதிர்காலத்தை தீர்மானிக்கும்


இந்த வெள்ளை அறிக்கை ஒரு தெளிவான மற்றும் வலிமையான கருத்தை முன்வைக்கிறது: செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கான வாய்ப்புதான் ஒரு நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கிறது. செயற்கை நுண்ணறிவுக்கான அடிப்படைக் கட்டமைப்பை விரிவுபடுத்தும் நாடுகள் புதுமைகளை உருவாக்கி முன்னிலை பெறும் என்றும் அதேசமயம், அவ்வாறு செய்யாத நாடுகள் மற்ற நாடுகளைச் சார்ந்தே இருக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் கூறப்படுகிறது. 


தனியார் நிறுவனங்களின் முழுமையான கட்டுப்பாட்டிலோ அல்லது அரசின் முழுக் கட்டுப்பாட்டிலோ மட்டும் சிக்கிக் கொள்ளாமல், இந்தியா ஒரு நடுத்தரமான பாதையைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புள்ளது. அதாவது, பொது உள்கட்டமைப்பு கூட்டமைப்பு (DPI), மற்றும் நம்பிக்கையான நிர்வாகம் ஆகியவற்றின் மூலம் செயற்கை நுண்ணறிவை உருவாக்குவதே தற்போது மேற்கொள்ளப்படவிருக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. 


இந்தியா செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துமா என்பது இப்போது கேள்வியல்ல, மாறாக, அது ஒரு சிலரிடம் மட்டுமே முடங்கிக் கிடக்குமா அல்லது அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வலுவான நிர்வாகம் மற்றும் டிஜிட்டல் சுதந்திரம் ஆகியவற்றை உறுதிப்படுத்த அனைவருக்கும் பரவலாகக் கிடைக்குமா என்பதுதான் முக்கியக் கேள்வியாக உள்ளது. 


இந்த முடிவு மென்பொருளை பொறுத்தது அல்ல என்றும் உட்கட்டமைப்பை  பொறுத்தே அமையும் என்றும் தெளிவுபடுத்துகின்றனர். 


பிரவீன் கௌஷல், ‘Mrikal’ (AI/Data Centre) நிறுவனத்தின் இயக்குநராகவும், IIT காரக்பூரின் அரசுத் தொடர்பு பணிக்குழுவின் இளம் முன்னாள் மாணவர் உறுப்பினராகவும் உள்ளார்.


 Original Article : Why AI infrastructure matters more? -Pravin Kaushal

Share: