நாடுகளுக்கு இடையிலான மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (Central Bank Digital Currency (CBDC)) பணப்பரிமாற்றங்களின் நன்மைகள், அதற்கான செலவுகளைவிட அதிகமாக இருக்கலாம்.
இந்தியாவின் டிஜிட்டல் நாணயங்களுடன் (CBDC), மற்ற பிரிக்ஸ் (BRICS) நாடுகளின் டிஜிட்டல் நாணயங்களை இணைக்க ரிசர்வ் வங்கி முயற்சி எடுத்து வருவதாகத் தெரிகிறது. இந்த முயற்சி பயனளிக்கக் கூடியதாக இருந்தாலும், இதில் சில ஆபத்துகளும் உள்ளன. 2026-ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் நிகழ்ச்சி நிரலில், இந்த டிஜிட்டல் நாணயங்களை இணைப்பது குறித்த விவாதத்தைச் சேர்க்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி மத்திய அரசுக்கு பரிந்துரைத்துள்ளது. கடந்த 2023-ஆம் ஆண்டு G-20 தலைமைப் பொறுப்பின்போது, மெய்நிகர் நாணயங்கள் (Cryptocurrency) தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு மற்றும் மேம்படுத்தலை இந்தியா வலியுறுத்தியதன் விளைவாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. தனியார் மெய்நிகர் நாணயங்கள் (Private Cryptocurrencies) குறித்து இந்திய ரிசர்வ் வங்கி எப்போதும் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட்டு வருகிறது. பெரும்பாலும் அவற்றிற்குத் தடை விதிக்க வேண்டும் என்றும் கூறி வருகிறது. அதே சமயம், மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணயங்களுக்கு ((Central Bank Digital Currency (CBDC)) ஆதரவு அளிப்பதோடு, அவற்றால் பல பயன்கள் உள்ளதாகவும் தெரிவிக்கிறது. இந்த நிலைப்பாடு பெரும்பாலும் சரியானதாகவே பார்க்கப்படுகிறது. மெய்நிகர் நாணயங்களை முதலீட்டு சொத்துகளாகக் கருதுவதில் உள்ள அபாயங்களை ரிசர்வ் வங்கி உணர்ந்துள்ளது. அதேவேளையில், பணப்பரிமாற்ற அமைப்புகளில் பிளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பத்தினால் கிடைக்கும் நன்மைகளையும் ரிசர்வ் வங்கி சுட்டிக்காட்டுகிறது. தனியார் கிரிப்டோகரன்சிகளைத் தடை செய்வது என்பது சற்று தீவிரமான முடிவாக இருந்தாலும், அவற்றின் பரவலான பயன்பாடு மக்களை அதிக ஏற்ற இறக்கங்கள், மோசடிகள் மற்றும் பணஇழப்புகள் ஆகியவற்றிற்கு வழிவகுப்பதாகவும் குற்றம்சாட்டப்படுகிறது. மறுபுறம், மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்கள் ((Central Bank Digital Currency (CBDC)) அரசாங்கத்தின் உத்தரவாதத்துடன் வருகின்றன. ஆனால், அவற்றிற்கு வட்டி வழங்கப்படுவதில்லை. இதனால் அவை பாதுகாப்பானவை, அதே சமயம் ஊக வணிக முதலீட்டாளர்களுக்கு (Speculative Investors) லாபகரமாகத் தெரிவதில்லை. இருப்பினும், இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப்பரிமாற்ற கட்டமைப்பு Unified Payment Interface (UPI)) ஏற்கனவே மிகச்சிறப்பாகச் செயல்படுவதால், உள்நாட்டுப் பயன்பாட்டிற்கு ஒரு புதிய மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களின் தேவை குறைவாகவே உள்ளது. மேலும், மற்ற புதிய அமைப்புகளைவிட ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற கட்டமைப்பு ஒரு முக்கிய நன்மையைக் கொண்டுள்ளது. இதனால்தான், சர்வதேச பணப்பரிமாற்றங்களுக்காக மத்திய வங்கி டிஜிட்டல் நாணயங்களைப் பயன்படுத்துவதில் இந்திய ரிசர்வ் வங்கி கவனம் செலுத்துவது சரியான முடிவாகப் பார்க்கப்படுகிறது.
நாடுகளுக்கு இடையிலான பணப் பரிமாற்றங்கள் பெரும்பாலும் கருப்புப் பணத்தை மாற்றவும், சட்டவிரோத பணத்தை சட்டப்பூர்வமாக மாற்றவும் (Money Laundering) பயன்படுத்தப்படுகின்றன. எனவே, இத்தகைய பணப் பரிமாற்றங்களை வெளிப்படையானதாக மாற்ற எடுக்கும் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை. பிளாக்செயின் (Blockchain) தொழில்நுட்பம் இதற்கு மிகவும் ஏற்றது. ஏனெனில், இது பணப்பரிமாற்றங்கள் குறித்த வெளிப்படையான மற்றும் நிலையான பதிவுகளை உருவாக்குகிறது. மேலும், பணம் எங்கிருந்து வருகிறது, யாருக்குச் செல்கிறது போன்ற விவரங்களைக் காட்டும் வகையில் இதை வடிவமைக்க முடியும். இத்தகைய ஒரு பணப் பரிமாற்ற முறை குறித்து பிரிக்ஸ் (BRICS) கூட்டமைப்பு நாடுகள் ஒப்பந்தம் செய்துகொண்டால், அந்தப் பணப்பரிமாற்றங்களை அந்தந்த நாட்டு அடையாள எண்கள் (National ID) அல்லது வரித் துறையோடு இணைப்பதைக் கட்டாயமாக்க முடியும் என்கின்றனர். மத்திய வங்கி டிஜிட்டல் நாணயம் (CBDC) அடிப்படையிலான பணப்பரிமாற்றங்கள், இந்தியாவின் கடினமான சர்வதேசப் பணப்பரிமாற்றச் சிக்கல்கள் சிலவற்றைத் தீர்க்க உதவும். உதாரணமாக, ரஷ்யா மற்றும் ஈரான் ஆகிய நாடுகள் SWIFT கட்டமைப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளதால், அவற்றுக்கான பணப்பரிமாற்றங்கள் இனி எளிதாகும் என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இத்தகைய பணப்பரிமாற்றங்கள் மற்றும் டாலருக்குப் பதில் மாற்று வழிகளைப் பயன்படுத்துவது அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பிற்கு அதிருப்தியை ஏற்படுத்தக்கூடும் என்றும் தெரிவிக்கின்றனர். ஏனெனில், டாலரின் பயன்பாட்டைக் குறைத்தால் பிரிக்ஸ் (BRICS) நாடுகள் மீது கூடுதல் வரிகள் விதிக்கப்படும் என்று அவர் ஏற்கனவே எச்சரிக்கைவிடுத்துள்ளார். இருந்தபோதிலும், ஏற்கனவே 50% இறக்குமதி வரி அமலில் உள்ள நெருக்கடியான நிலையில், கூடுதல் வரிகள் உண்மையிலேயே பெரிய பாதிப்பை ஏற்படுத்துமா என்பதை இந்தியா ஆராய்ந்து பார்க்க வேண்டும். ஒட்டுமொத்தமாகப் பார்க்கும்போது, நாடுகளுக்கு இடையிலான மத்திய வங்கியின் டிஜிட்டல் நாணய (Central Bank Digital Currency (CBDC)) பணப்பரிமாற்றங்களின் நன்மைகள் அதன் செலவுகளைவிட அதிகமாகவே இருக்கும் என்று நம்பிக்கை தெரிவிக்கின்றனர்.
Original Article : Building bridges: On Central Bank Digital Currency and BRICS.