மன மற்றும் உடல் குறைபாடுகள் குறித்த சமீபத்திய இரண்டு சட்டங்கள் சுயநிர்ணயம், உள்ளடக்கம் மற்றும் பாகுபாடின்மை ஆகியவற்றை வலியுறுத்துகின்றன. இருப்பினும், அறிவுசார் மற்றும் மனநலக் குறைபாடுகள் என இரண்டையும் கொண்டவர்கள் அல்லது அறிவாற்றல் சிக்கல்களால் தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளவோ, முடிவுகளை எடுக்கவோ முடியாதவர்களுக்கு ஆதரவளிக்க இந்தச் சட்டங்களின் ஒருங்கிணைந்த செயல்பாடு என்பது அரிதாகவே உள்ளது.
மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலம் சார்ந்த சட்டங்கள் குறித்த இந்தியாவின் விவாதங்கள், ஒருபுறம் அரசியலமைப்புச் சட்டத்தின் உயர்ந்த நோக்கங்களையும், மறுபுறம் அவை தீவிரமாகப் புறக்கணிக்கப்படுவதையும் காட்டுகின்றன. கடந்த 20 ஆண்டுகளில், மனநலப் பாதுகாப்புச் சட்டம், 2017 (Mental Healthcare Act, 2017) மற்றும் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம், 2016 (Rights of Persons with Disabilities Act, 2016) ஆகிய இரண்டு முக்கிய சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. இவை, அரசு உதவிகள் தேவைப்படும் மாற்றுத்திறனாளிகளை வெறும் 'தர்மம்' தேவைப்படுபவர்களாகப் பார்க்காமல், 'உரிமை' உள்ளவர்களாக மாற்றவும், அவர்களைக் காப்பகங்களில் அடைத்து வைக்காமல் சமூகத்தோடு இணைக்கவும் வழிவகை செய்கின்றன. இருப்பினும், நடைமுறையில் இந்தச் சட்டங்கள் அளிக்கும் வாக்குறுதிகளுக்கும், மக்கள் அனுபவிக்கும் உண்மை நிலைக்கும் இடையே பெரும் இடைவெளி உள்ளது. அறிவுசார் மற்றும் மனநல பாதிப்புடைய பெரியவர்களுக்கு நீண்டகாலப் பராமரிப்பு அளிக்கும் மையங்களில் மேற்கொள்ளப்பட்ட நேரடி ஆய்வின் அடிப்படையில், இந்தச் சட்டங்களை ஆய்வு செய்தபோது, இந்தியாவின் அணுகுமுறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களும், இன்னும் நீடிக்கும் நடைமுறை சார்ந்த சிக்கல்களும் தெளிவாகத் தெரிகின்றன
மாறிவரும் சட்டச் சூழல்
1912-ஆம் ஆண்டின் பழைய காலனித்துவ 'மனநலக் குறைபாடு சட்டத்திற்கு' (Lunacy Act) பதிலாக, 1987-ஆம் ஆண்டு 'மனநலச் சட்டம்' (Mental Health Act of 1987) கொண்டுவரப்பட்டது. அந்தச் சட்டம் கொண்டுவரப்பட்ட காலத்தில், மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் முக்கியமாக ஒரு ஆபத்தானவர்களாகவும், அவர்களைக் கட்டுப்பாட்டில் வைக்க வேண்டும் என்ற நோக்கத்திலுமே பார்க்கப்பட்டனர். 2006-ஆம் ஆண்டில், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளுக்கான ஐக்கிய நாடுகள் சபையின் உடன்படிக்கையில் (United Nations Convention on the Rights of Persons with Disabilities (UNCRPD)) இந்தியா கையெழுத்திட்ட பிறகு, இந்தப் பழைய சட்டமானது நீக்கப்பட்டு 'மனநலப் பாதுகாப்புச் சட்டம், 2017' (Mental Healthcare Act, 2017) கொண்டுவரப்பட்டது. இந்தப் புதிய சட்டம், மனநலம் பாதிக்கப்பட்டவர்களை உரிமை கொண்ட குடிமக்களாகப் பார்க்கத் தொடங்கியது. அவர்களுக்கு தகுந்த மரியாதை, சிகிச்சைக்கு முறையான ஒப்புதல் மற்றும் அரசின் ஆதரவு பெறுவதற்கான உரிமைகள் வழங்கப்பட்டன. மேலும், இது 'மனநல மறுஆய்வு வாரியங்களை' (Mental Health Review Boards) அமைத்ததுடன், பாதிக்கப்பட்ட அனைவருக்கும் மனநலச் சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தது மற்றும் கட்டாயச் சிகிச்சைகளைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டது.
1995-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை விரிவுபடுத்தி உருவாக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டம் (Rights of Persons with Disabilities (RPwD)) Act, 2016, உடல் ரீதியான, புலன் சார்ந்த, அறிவுசார்ந்த மற்றும் மனநலரீதியான குறைபாடுகள் உட்பட 21 வகையான குறைபாடுகளை அங்கீகரித்துள்ளது. இது கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் அவர்களுக்கான இடஒதுக்கீட்டை வழங்கியதோடு, பொது இடங்களை அவர்கள் எளிதாக அணுகும் வகையில் மாற்றுவதிலும் கவனம் செலுத்துகிறது. மேலும், மாற்றுத்திறனாளிகள் தங்களின் முடிவுகளைத் தாங்களே எடுக்கும் உரிமையை இச்சட்டம் உறுதி செய்கிறது; அதாவது, மற்றவர்கள் அவர்களுக்குப் பதிலாக முடிவெடுக்கும் முறைக்கு மாற்றாக, அவர்களுக்குத் தேவையான ஆதரவுடன் கூடிய முடிவெடுக்கும் முறையை இந்தச் சட்டம் உறுதிபடுத்துகிறது.
இந்த இரண்டு சட்டங்களுமே ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் உடன்படிக்கையின் ((United Nations Convention on the Rights of Persons with Disabilities (UNCRPD)) விழுமியங்களான சுயநிர்ணயம் (autonomy), உள்ளடக்கம் (inclusion) மற்றும் சமத்துவம் (equality) ஆகியவற்றை பிரதிபலிக்கின்றன. இருப்பினும், இவை இரண்டும் இணைந்து இந்திய மாற்றுத்திறனாளிகள் சட்டத்தில் உள்ள ஒரு முக்கிய சிக்கலை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன. அதாவது, ஒருங்கிணைப்பு தேவைப்படும் இடங்களில், இரண்டு தனித்தனி சட்டங்கள் அரிதாகவே இணைந்து செயல்படுவதாகக் கூறப்படுகிறது.
தெளிவற்ற நிலை
இந்தச் சட்டங்களுக்கு இடையே உள்ள சட்டரீதியான மற்றும் நடைமுறைச் சிக்கல்களால் அறிவுசார் குறைபாடு மற்றும் மனநல பாதிப்பு ஆகிய இரண்டையும் கொண்டவர்கள், அல்லது தங்களைத் தாங்களே கவனித்துக் கொள்ளவும், முடிவுகளை எடுக்கவும் முடியாத அளவுக்கு அறிவாற்றல் குறைபாடுகள் உள்ளவர்களே மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளதாகக் கூறப்படுகிறது.
மனநலப் பாதுகாப்புச் சட்டம் (Mental Healthcare Act (MHA), 2017), ஒரு நபர் உடல்நலக் குறைவின் போது தற்காலிகமாக முடிவெடுக்க முடியாமல் இருக்கும் சூழல்களைக் கையாள்கிறது. ஆனால், மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் (RPwD), 2016 - அறிவுசார் குறைபாடு அல்லது மனநல கோளாறுகள் போன்ற நிரந்தரமான பாதிப்புகள் உள்ளவர்களின் நிலையைப் பற்றித் தெளிவாகக் கூறவில்லை. ஒரு நபரின் சுயாதீனமான முடிவெடுக்கும் திறன் நிரந்தரமாகப் பாதிக்கப்படும்போது, அவர்களுக்கான பாதுகாவலர் நியமனம், சொத்து மேலாண்மை அல்லது அவர்களுக்கு முடிவெடுக்க உதவும் முறைகள் (Supported Decision-making) எப்படிச் செயல்பட வேண்டும் என்பதைப் பற்றியும் இந்தச் சட்டம் தெளிவுபடுத்தவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
இது ஒரு கொள்கை இடைவெளியை உருவாக்கியுள்ளது. மனநலம் மற்றும் அறிவுசார் குறைபாடு ஆகிய இரண்டையும் கொண்ட நபர்களை ஆதரிக்கும் குடும்பங்கள், பராமரிப்பாளர்கள் மற்றும் நிறுவனங்கள், தெளிவான சட்ட வழிகாட்டுதல் இன்றி பல அதிகார அமைப்புகளை அணுக வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். நிபுணர்களுடனான நேர்காணல்கள் ஒரு பொதுவான கவலையை வெளிப்படுத்தின: சட்டங்கள் உரிமைகளுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றன, ஆனால் நடைமுறைக்குத் தேவையான வழிகாட்டுதல்களை மிகக் குறைவாகவே வழங்குகின்றன. தனிமனித சுதந்திரம் சரியாக மதிக்கப்படுகிறது. ஆனால், நிரந்தரமாக சுதந்திரமாக முடிவெடுக்க முடியாத நிலையில் இருப்பவர்களுக்குத் தெளிவான, செயல்படக்கூடிய கட்டமைப்பு எதுவும் இல்லை என்றும் கவலை தெரிவிக்கின்றனர்.
உள்ளடக்கம் பற்றிய மாயை
2017-ஆம் ஆண்டு மனநலப் பாதுகாப்புச் சட்டம் (MHA) மற்றும் 2016-ஆம் ஆண்டு மாற்றுத்திறனாளிகள் உரிமைச் சட்டம் (RPwD) ஆகிய இரண்டுமே, பாதிக்கப்பட்டவர்கள் பொதுச் சமூகத்தோடு இணைந்து வாழ்வதற்கான மறுவாழ்வு முறையை ஆதரிக்கின்றன. இருப்பினும், இதற்கான வசதிகள் இன்னும் மிக ஆரம்ப நிலையிலேயே உள்ளன. இதன் விளைவாக, பல குடும்பங்கள் மனநல காப்பகங்களையே சார்ந்திருக்க வேண்டியுள்ளது. இது அவர்கள் தங்கள் உறவினர்களைப் புறக்கணிப்பதால் ஏற்படும் சிக்கல்கள் அல்ல என்றும் மாறாக அவர்களுக்கு வேறு வழி இல்லாததாலேயே இந்நிலை ஏற்படுவதாகவும் தெளிவுபடுத்துகின்றனர்.
சுவாமி தயானந்தா கிருபா பராமரிப்பு மையம் (Swami Dayananda Krupa Care) என்பது அறிவுசார் குறைபாடுகள் கொண்ட 40-க்கும் மேற்பட்ட வயது வந்த ஆண்களுக்காகத் பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஒரு மையமாகும். இது அவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தங்கியிருந்து சிகிச்சை பெறும் வசதியை வழங்குகிறது. இங்குள்ளவர்களுக்கு அன்றாட சுய பராமரிப்பு முதல் அவர்களின் நடத்தையை கையாளுதல் வரை பல்வேறு நிலைகளில் ஆதரவு தேவைப்படுகிறது. அவர்களது குடும்பத்தினர் இயலும்போது வந்து பார்க்கிறார்கள். மேலும், சிலர் பல ஆண்டுகளாக அங்கேயே தங்கியுள்ளனர். அவர்களுக்கு, இந்த நிறுவனமே அவர்களது இல்லமாக மாறியிருப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.
நிபுணர்கள், மனநலக் காப்பகங்களை முழுவதுமாக அகற்றிவிட்டு (Deinstitutionalization) சமூகப் பராமரிப்பிற்கு மாறுவதை மிகைப்படுத்திப் பார்ப்பதற்கு எச்சரிக்கை விடுக்கின்றனர். முறையான அரசு நிதி, பயிற்சி பெற்ற வல்லுநர்கள் மற்றும் சமூக அங்கீகாரம் இல்லாமல், பெரிய அளவிலான சமூகப் பராமரிப்பு முறைக்கு இந்தியா இன்னும் தயாராகவில்லை என்று டாக்டர் கிஷோர் கூறுகிறார். உண்மையான உள்ளடக்கம் என்பது அணுகல் முறை, அனுதாபம் மற்றும் சமூகக் களங்கத்தை நீக்குவதன் மூலம் - மக்களின் மனப்பான்மையை மாற்றுவதிலிருந்து தொடங்குகிறது என்று டாக்டர் தீபக் போன்ற சமூகஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். சமூகநடைமுறை என்னவென்றால், இதில் ஒரு சமநிலை இருக்க வேண்டும்: சிலருக்கு மனநலக் காப்பகங்கள் இன்னும் அவசியமாக இருக்கும் என்றும் ஆனால் அது மனிதத்தன்மையுடனும், வெளிப்படையானதாகவும், உரிமைகளை மதிப்பதாகவும் இருக்க வேண்டும் என்றும் வாதிடுகின்றனர்.
ஐரோப்பிய நாடுகளிடமிருந்து கற்றுக்கொள்வோம்
ஐரோப்பிய சட்டங்களை, குறிப்பாக ஸ்வீடன் நாட்டுச் சட்டத்தை ஒப்பிட்டுப் பார்ப்பது பயனுள்ள புரிதலை வழங்குகிறது. ஸ்வீடனின் சமூக சேவைச் சட்டம் (Sweden’s Social Services Act (SFS 2001:453)), ஒரு நபரின் தனிநபர் சுதந்திரம், குறைந்தபட்ச கட்டுப்பாடுகளுடன் கூடிய பராமரிப்பு மற்றும் அரசின் பொறுப்பு ஆகியவற்றை உறுதி செய்கிறது. சமூக அளவிலான அனைத்துப் பராமரிப்பு முயற்சிகளும் தோல்வியடைந்த பின்னரே ஒருவரை மனநல விடுதிகளில் அல்லது காப்பகங்களில் (Institutionalisation) சேர்ப்பது அனுமதிக்கப்படுகிறது. மேலும், எடுக்கப்படும் முடிவுகள் அந்த நபரின் நலனை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். ஸ்வீடன் நாடு சமூக நலன், பாதுகாவலர் முறை மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆதரவு ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரே உரிமை சார்ந்த அமைப்பாக மாற்றியுள்ளது—இந்த ஒருமைப்பாடு இந்தியாவின் பிளவுபட்ட சட்டங்களில் இன்னும் தெளிவாக வரையறுக்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர்.
ஐரோப்பிய ஒன்றியத்திற்கு என்று தனியான, ஒருங்கிணைந்த மனநலச் சட்டம் ஏதுமில்லை. இருப்பினும், அது அடிப்படை உரிமைகளுக்கான சாசனம் (Charter of Fundamental Rights) மற்றும் ஐக்கிய நாடுகளின் மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் உடன்படிக்கை (UNCRPD) ஆகியவற்றைப் பின்பற்றுகிறது. இவை தனிமனித கண்ணியம், உரிமை மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய சமூக அமைப்பைப் பாதுகாக்கின்றன. இதற்கு நேர்மாறாக, இந்தியாவின் சட்டங்கள் பெரும்பாலும் வெறுமனே பெயரளவில் லட்சியங்களாக மட்டுமே உள்ளன. அவை எழுத்துப்பூர்வமாக முற்போக்கானவையாக இருந்தாலும், போதிய நிதி ஒதுக்கீடு இல்லாமலும், மாநிலங்களுக்கு இடையே சீரற்ற முறையிலும் செயல்படுத்தப்படுகின்றன.
பாதுகாவலர் உரிமை, தகுதி மற்றும் சட்டம்
பாதுகாவலர் உரிமை (Guardianship) என்பது ஒருவேளை மிகவும் சிக்கலான விஷயமாக இருக்கலாம். 1890-ஆம் ஆண்டின் பாதுகாவலர்கள் மற்றும் பரமரிப்பாளர்கள் சட்டம் (The Guardians and Wards Act) இன்றும் நடைமுறையில் உள்ளது, ஆனால் அது தன்னாட்சி மற்றும் உரிமைகள் பற்றிய நவீன கருத்துக்கள் உருவாவதற்கு முன்பே உருவாக்கப்பட்டது. நீதிமன்றங்கள் குறிப்பிட்ட எல்லைக்குட்பட்ட பாதுகாவலர்களை நியமிக்க முடியும் என்றாலும், அந்த நடைமுறை மிகவும் மெதுவாகவும், இடத்திற்கு இடம் மாறுபட்டு சீரற்ற முறையில் உள்ளது. பல குடும்பங்கள் தங்களுக்குப் பிறகு என்ன நடக்கும்? என்று கவலைப்படுகிறார்கள். ஆனால், தற்போதைய சட்டமோ அல்லது நவீன சட்டங்களோ இதற்குத் தெளிவான பதிலைத் தருவதில்லை. பாதுகாவலர்களை நியமிப்பதற்கோ, மறுஆய்வு செய்வதற்கோ அல்லது மாற்றுவதற்கோ முறையான மற்றும் எளிமையான வழிமுறைகள் இல்லாததால், ஆயிரக்கணக்கான குடும்பங்கள் தீர்வுகாண முடியாத சூழல்களில் சிக்கித் தவிக்கின்றன.
இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளுக்கான சட்டம், அரசியலமைப்பின் அடிப்படை உரிமைகள் (Fundamental Rights) பிரிவின்கீழ் வராமல், அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்கீழ் (Directive Principles of State Policy) வைக்கப்பட்டுள்ளது. இதன் பொருள், இச்சட்டங்களைச் செயல்படுத்துவது என்பது அரசாங்கத்தின் விருப்பத்தைப் பொறுத்ததே தவிர, நீதிமன்றத்தின் அதிகாரத்தைப் பொறுத்தது அல்ல என்கிற ஒரு ஆழமான சிக்கலை பிரபாகரன் சுட்டிக்காட்டுகிறார்.
சட்ட நடைமுறையிலிருந்து நடைமுறை வாழ்க்கை வரை
எனது விடுமுறை காலப் பயிற்சியின்போது, கள ஆய்வுகள் மற்றும் நிபுணர்களின் சாட்சியங்கள் மூன்று அவசர சவால்களை வெளிப்படுத்துகின்றன:
சமூகக் கட்டமைப்பு வசதிகள் இல்லாமை: ஆதரவுடன் கூடிய தங்குமிடங்கள், தொழிற்பயிற்சி மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய பணியிடங்கள் ஆகியவை இல்லையென்றால், "சமூகத்தோடு இணைந்து வாழ்வது" என்பது வெறும் பேச்சாகவே நின்றுவிடும் என்கின்றனர்.
முறையான கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் இல்லாமை: முறையான மேற்பார்வை இல்லையென்றால், நிறுவனங்கள் மக்களைப் புறக்கணிக்கலாம் அல்லது துஷ்பிரயோகம் செய்யலாம் என்றும் கூறப்படுகிறது.
பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு மற்றும் சட்ட அறிவு இல்லாமை: பல குடும்பங்களும், நிபுணர்களும் தங்களுக்குரிய உரிமைகள், சட்ட நடைமுறைகள் மற்றும் சலுகைகள் குறித்து இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளவில்லை.
இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க நமக்கு புதிய சட்டங்கள் தேவையில்லை என்றும் மாறாக, இருக்கின்ற சட்டங்களுக்கிடையே ஒருமைப்பாடு, முறையான அமலாக்கம் மற்றும் சரியான தகவல் பரிமாற்றம் மட்டுமே அவசியம் என்றும் தெரிவிக்கின்றனர். சட்டங்கள் ஒன்றையொன்று புறக்கணிக்காமல், ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.
புதிய சட்டம்
2024-ஆம் ஆண்டில், இந்தியாவில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் நிலையில் ஒரு முக்கிய மாற்றம் ஏற்பட்டது. அரசு கொள்கைகளில் புறக்கணிக்கப்பட்ட நிலை மாறி, நீதிமன்றங்கள் மூலம் அந்த உரிமைகள் கட்டாயமாக நிலைநாட்டப்படும் சூழல் உருவானது. ராஜீவ் ரதுரி vs இந்திய ஒன்றியம்' (Rajive Raturi vs Union of India) என்ற வழக்கில், உச்சநீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியது. அதில், "மாற்றுத்திறனாளிகளுக்கான அணுகல் வசதிகள் (Accessibility) என்பது வெறும் ஆலோசனைகள் அல்ல, அவை கண்டிப்பாகப் பின்பற்றப்பட வேண்டிய விதிகள்" என்று தீர்ப்பளித்தது. மேலும், நிறுவனங்கள் தாங்களாகவே விதிகளை உருவாக்கிக்கொள்ள அனுமதிக்கும் முறையையும் நீதிமன்றம் ரத்து செய்தது. அதேபோல, 'சீமா கிரிஜா லால்' வழக்கில் (Seema Girija Lal case), சட்டங்கள் சரியாகச் செயல்படுத்தப்படாததை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. இதற்காக ஒவ்வொரு மாநிலமும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஆணையர்களை நியமிக்கவும், சிறப்பு நீதிமன்றங்களை உருவாக்கவும் காலக்கெடுவை விதித்து உத்தரவிட்டது. தேசிய மனித உரிமைகள் ஆணையம் (National Human Rights Commission (NHRC)), மனநலக் காப்பகங்களில் உள்ள "மனிதத்தன்மையற்ற" சூழலை வெளிச்சத்திற்கு கொண்டு வந்தது. மேலும், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் என்பது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 14 மற்றும் 21-வது பிரிவுகளின்கீழ் வழங்கப்பட்ட அடிப்படை உரிமைகளை நீதிமன்றம் உறுதிப்படுத்தியது. இவ்வளவு முன்னேற்றங்கள் இருந்தாலும், 'பூஜா கேட்கர்' (Puja Khedkar fake certificate scandal) போலி சான்றிதழ் விவகாரத்தால் பின்னடைவு ஏற்பட்டது. இந்த முறைகேடு காரணமாக அரசு நிர்வாகம் சான்றிதழ் வழங்கும் முறையில் கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இதனால் உண்மையான மாற்றுத்திறனாளிகள் சான்றிதழ் பெறுவதில் காலதாமதம் ஏற்பட்டும் சூழல் உருவாகியுள்ளது. 2024-ஆம் ஆண்டில் மாற்றுத்திறனாளிகளின் உரிமைகள் 'மனித உரிமைகளாக' சட்டப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளன. இருப்பினும், அரசு நிர்வாகத்தில் உள்ள தடைகள் உண்மையான முன்னேற்றத்திற்கு இன்னும் பெரும் சிக்கலாகவே உள்ளன.
வெறும் அடையாள அரசியலிலிருந்து வெளியேறுதல்
இந்தியாவின் மாற்றுத்திறனாளிகள் மற்றும் மனநலச் சட்டங்கள், அவர்களைப் 'பாதுகாப்பதில்' இருந்து 'அதிகாரப்படுத்துதல்' என்ற அறநெறி சார்ந்த மாற்றத்தை நோக்கி நகர்வதைக் காட்டுகின்றன. இருப்பினும், முறையான கட்டமைப்புகள் இல்லாத அதிகாரப்படுத்துதல் வெறும் அடையாளமாக மட்டுமே இருக்கும் என்று வேதனை தெரிவிக்கின்றனர். தங்களைத் தாங்களே தற்காத்துப் பேச முடியாதவர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் சட்ட, நிர்வாக மற்றும் சமூகக் கட்டமைப்புகளை உருவாக்குவதன் மூலமே, அவர்களின் கண்ணியத்தைச் செயல்பாட்டிற்கு கொண்டு வருவது ஒரு உண்மையான சவாலாகும். உண்மையான அனைவரையும் உள்ளடக்கிய சமூகம் என்பது வெறும் முன்னேற்றகரமான சட்டங்களை இயற்றுவதில் மட்டுமல்ல என்றும் அந்தச் சட்டங்கள் மிகச் சாதாரண நிலையில் உள்ள மக்களையும், வெவ்வேறு திறன்களைக் கொண்டிருப்பவர்களையும் சமூகத்தால் பெரும்பாலும் புறக்கணிக்கப்பட்டு நம்பிக்கை இழந்தவர்களையும் ஆகியோரை சென்று சேருவதை உறுதி செய்வதே ஆகும்.
யஜுர் கிருஷ்ணமூர்த்தி, சோனிபட்டில் உள்ள ஜிந்தால் குளோபல் லா ஸ்கூலில் பி.பி.ஏ. எல்.எல்.பி. (ஹானர்ஸ்) மூன்றாம் ஆண்டு மாணவர் ஆவார்.
Original Article : Rethinking disability and mental health law in India -Yajur Krishnamoorthy