நீதிபதி நீக்கம் - குறைபாடுடன் கூடிய கடுமையான சட்டம் -பி.டி.டி. ஆச்சாரி

 தகுதியற்ற நீதிபதியை நீக்குவதற்கான ஒரு முக்கியமான அரசியலமைப்பு விதியின் செயல்பாட்டை இன்னும் முறியடிக்க முடியும்.


டிசம்பர் 2025-ல் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி G.R. சுவாமிநாதனைப் பதவி நீக்கம் செய்யக் கோரி அறிவிப்பாணை அளித்த 'இந்தியா' கூட்டணியைச் சேர்ந்த 107 மக்களவை உறுப்பினர்கள் மீது அதிக கவனம் குவிந்துள்ளது. அரசியலமைப்பின் மதச்சார்பற்ற கொள்கைகளுக்கு எதிராகச் செயல்படுதல் மற்றும் ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வழக்கறிஞர்களுக்குச் சாதகமாக நடந்துகொள்ளுதல் உள்ளிட்ட 13 குற்றச்சாட்டுகளை அவர்கள் நீதிபதி G.R. சுவாமிநாதன்மீது சுமத்தியுள்ளனர். இந்த அறிவிப்பாணை (notice) டிசம்பர் 9 அன்று மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள்


ஒரு நீதிபதியை எவ்வாறு பதவி நீக்கம் செய்வது என்பதை அரசியலமைப்புச் சட்டம் விளக்குகிறது. அதன்படி, உச்சநீதிமன்ற நீதிபதிகளைப் பற்றி பிரிவுகள்  124(4) மற்றும் 124(5) குறிப்பிடுகின்றன. அதே சமயம் உயர்நீதிமன்ற நீதிபதிகளைப் பற்றி பிரிவுகள் 217(1)(b) மற்றும் 218 குறிப்பிடுகின்றன. அரசியலமைப்பில் தகுதி நீக்கம் (‘impeachment’) என்ற சொல் பயன்படுத்தப்படவில்லை. அதற்குப் பதிலாக நீதிபதிகள் விவகாரத்தில் நீக்கம் (‘removal’) என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. குடியரசுத்தலைவரை பதவியில் இருந்து நீக்கும் சூழலில் மட்டுமே 'தகுதி நீக்கம்' என்ற சொல் பயன்படுத்தப்படுகிறது என்று பிரிவு 61 குறிப்பிடுகிறது. உச்சநீதிமன்ற நீதிபதியை பதவி நீக்கம் (removal) செய்வதற்கு பிரிவு 124-ல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறை உயர்நீதிமன்ற நீதிபதிக்கும் பொருந்தும்.


பிரிவு 124(5), நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பதற்கான நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்கு (law to regulate the procedure for the investigation) நாடாளுமன்றம் சட்டம் இயற்றலாம் என்ற அதிகாரத்தை வழங்குகிறது. அதன்படி, நாடாளுமன்றம் 1968-ஆம் ஆண்டில் நீதிபதிகள் விசாரணை (udges (Inquiry) Act) சட்டத்தை இயற்றியது. இந்தச் சட்டம், நீதிபதிகள் விசாரணை விதிகளுடன் சேர்ந்து, நீதிபதிகளைப் பதவிநீக்கம் செய்வதற்கான முழுமையான நடைமுறையை வகுத்துள்ளது.


உச்சநீதிமன்ற அல்லது உயர்நீதிமன்ற நீதிபதி தவறாக நடந்து கொண்டது நிரூபிக்கப்பட்டாலோ அல்லது தனது கடமைகளைச் செய்ய இயலாதவராக இருந்தாலோ, அவர் பதவியிலிருந்து நீக்கப்படலாம். 'தவறான நடத்தை' (Misbehaviour) என்பதன் பொருள் என்ன என்பதை அரசியலமைப்புச் சட்டம் தெளிவாக வரையறுக்கவில்லை. இருப்பினும், நீதித்துறையை அவமதிக்கும் செயல்கள், வேண்டுமென்றே செய்யப்படும் தவறுகள், ஊழல், நேர்மையின்மை, மோசமான செய்யப்படும் குற்றங்கள் மற்றும் நீதித்துறை அதிகாரத்தை வேண்டுமென்றே தவறாகப் பயன்படுத்துதல் ஆகியவை ‘தவறான நடத்தை' என்பதில் அடங்கும் என்று நீதிமன்றம் விளக்கியுள்ளது.


நீதிபதிகள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்பது குறித்து உச்சநீதிமன்றம் கடுமையான கருத்துக்களைத் தெரிவித்துள்ளது. 1991-ஆம் ஆண்டு K. வீரசாமி vs இந்திய யூனியன் மற்றும் மற்றவர்கள்  (K. Veeraswami vs Union Of India And Others) வழக்கில், நீதிபதிகள் முழுமையான நேர்மையுடன் இருக்க வேண்டும் என்று நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாக நீதிமன்றம் கூறியது. நீதிபதிகள் நீதிமன்றத்திலும் தனிப்பட்ட வாழ்விலும் நேர்மை மற்றும் நியாயத்தின் மிக உயர்ந்த தரங்களைப் பின்பற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு நீதிபதி இதைச் செய்யத் தவறினால், அவர்கள் தங்கள் மீது வைக்கப்பட்ட நம்பிக்கையை மீறுகிறார்கள் என்ற எண்ணம் ஏற்பட்டுவிடும். எந்தவொரு விளக்கங்களோ   அல்லது சட்ட நுணுக்கமோ (legal relativity) இத்தகைய துரோகத்தை நியாயப்படுத்த முடியாது.


1992-ஆம் ஆண்டு M.கிருஷ்ணசாமி vs இந்திய யூனியன் (M. Krishna Swami vs Union of India) வழக்கில், ஒரு நீதிபதியால் செய்யப்படும் ஒவ்வொரு தவறும் அல்லது பிழையும் தவறான நடத்தை ஆகாது என்று நீதிமன்றம் விளக்கியது. தவறான நடத்தை என்பது நீதித்துறை அதிகாரத்தை வேண்டுமென்றே தவறாகப் பயன்படுத்துதல், உள்நோக்கத்துடன் தவறாகச் செயல்படுதல், ஊழல் செய்தல், நேர்மையற்றவராக இருத்தல் அல்லது மோசமான ஒழுக்கத்தைக் காட்டும் ஒரு குற்றத்தைச் செய்தல் ஆகியவற்றைக் குறிக்கும். தவறான நடத்தை (misconducts) என்பது, அதைச் செய்பவரால் ஒரு குறிப்பிட்ட அளவிலான குற்ற எண்ணத்துடன் செயல்படுவதைக் குறிக்கிறது.


தீர்மானத்தின் நடைமுறைகள் (Procedures of the motion)


சட்டப்பிரிவுகள் 124(4) மற்றும் (5), 1968-ஆம் ஆண்டின் நீதிபதிகள் (விசாரணை) சட்டம் மற்றும் அதன் விதிகளைப் பார்க்கும்போது, ​​சட்டமியற்றுபவர்கள் நீதித்துறையின் சுதந்திரத்தைப் பாதுகாக்க விரும்பினார்கள் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே, உயர்நீதிமன்ற நீதிபதியை பதவியில் இருந்து நீக்குவதற்கான சட்டம் மிகவும் கடுமையாக்கப்பட்டது. சட்டப்பிரிவுகள் 124(4) மற்றும் 124(5)-ன் முக்கிய விதிகள் பின்வருமாறு: ‘நாடாளுமன்றத்தின் ஒவ்வொரு அவையின் மொத்த உறுப்பினர்களில் பெரும்பான்மையோராலும், அவையில் கலந்துகொண்டு வாக்களிக்கும் உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்குக்குக் குறையாத பெரும்பான்மையோராலும் நிறைவேற்றப்படும் ஒரு தீர்மானம், நீதிபதியை நீக்குமாறு கோரி குடியரசுத் தலைவருக்கு அனுப்பப்பட வேண்டும். அதன்பேரில் குடியரசுத் தலைவர் அந்த நீதிபதியை அவரது பதவியிலிருந்து நீக்குவதற்கான ஒரு உத்தரவைப் பிறப்பிப்பார்’ என்று குறிப்பிடுகிறது. நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிப்பது தொடர்பான நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்கும், அவரைப் பதவியிலிருந்து நீக்குமாறு கோரி குடியரசுத் தலைவருக்குத் தீர்மானம் அனுப்புவதற்கும் நாடாளுமன்றம் ஒரு சட்டத்தை இயற்றுவதற்கும் (enactment of a law) இது வழிவகை செய்கிறது.


இந்தச் சட்டம், ஒரு நீதிபதியை நீக்குவதற்கான தீர்மானம் மக்களவை சபாநாயகர் அல்லது மாநிலங்களவைத் தலைவரிடம் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கூறுகிறது. மேலும் சட்டம் அந்த அவையின் உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்டிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 100 மக்களவை உறுப்பினர்களோ அல்லது 50 மாநிலங்களவை உறுப்பினர்களோ அதில் கையொப்பமிட வேண்டும்  என்று கூறுகிறது. அந்தத் தீர்மானம் நீதிபதியை பதவியில் இருந்து நீக்குமாறு குடியரசுத் தலைவரைக்கு பரிந்துரை செய்கிறது.


இந்தச் சட்டம், அறிவிப்பு வழங்கப்பட்ட ஒரு தீர்மானம் சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவரால் முதலில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்ற ஒரு செயல்முறையை உருவாக்குகிறது. மேலும், அந்தத் தீர்மானத்தை நிராகரிக்கும் அதிகாரத்தையும் இது சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவருக்கு வழங்குகிறது.


நிச்சயமாக, சபாநாயகர் அல்லது மாநிலங்களவை தலைவர் தனக்குக் கிடைக்கும் ஆவணங்களைக் கருத்தில் கொள்வார். மேலும், தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கு அல்லது நிராகரிப்பதற்கு முன்பு, சட்ட நிபுணர்களாக கருதும் நபர்களிடமும் ஆலோசனை கேட்கலாம். இந்த நடைமுறையின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால், சபாநாயகரோ அல்லது தலைவரோ அந்தத் தீர்மானத்தை நிராகரித்தால், வேறு எதுவும் செய்ய முடியாது. அந்தத் தீர்மானம் காலாவதியாகிவிடும்.


இந்த நடைமுறையை உன்னிப்பாக ஆராய வேண்டும். மசோதாவை ஏற்றுக்கொள்வதற்கான நிபந்தனைகள் இந்த சட்டம் குறிப்பிடவில்லை. ஏனெனில், நாடாளுமன்ற அவைகளின் நடைமுறை விதிகளின்கீழ் உள்ள அனைத்து தீர்மானங்களுக்கும் இந்த நடைமுறை பொருந்தும். இந்தச் சட்டத்தின்கீழ் மசோதாவை ஏற்றுக்கொள்வதோ அல்லது நிராகரிப்பதோ சபாநாயகர்/தலைவர் அவையின் தலைமை அதிகாரியாக கடமையைச் செய்யவில்லை என்பதை இங்கே கவனத்தில் கொள்ளலாம். மாறாக, அவர் ஒரு சட்டப்பூர்வ அதிகாரியாகச் (statutory authority) செயல்பட்டு, ஒரு சட்டக் கடமையை நிறைவேற்றுகிறார். இருப்பினும், ஒரு தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதற்கான அல்லது நிராகரிப்பதற்கான விதிகள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். இல்லையெனில், அந்தத் தீர்மானத்தை நிராகரிப்பது நியாயமற்றதாகக் கருதப்படலாம். தீர்மானத்தை நிராகரிப்பது என்பது ஒரு சட்டமியற்றும் முடிவு மட்டுமல்லாமல், ஒரு சட்டப்பூர்வச் செயல் என்பதால், அதை நீதிமன்றத்தில் சவால் செய்ய முடியும்.


குறை எங்கே இருக்கிறது


உண்மையில், ஒரு நீதிபதிக்கு எதிரான குற்றச்சாட்டுகள், சபாநாயகர்/தலைவர் நியமித்த, உச்சநீதிமன்ற நீதிபதி, உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு அனுபவம் வாய்ந்த நீதிபதியைக் கொண்ட குழுவால் முழுமையாக விசாரிக்கப்படுகின்றன. தீர்மானத்தை சபாநாயகர்/தலைவர் ஏற்றுக்கொண்ட பிறகு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இது மிகவும் அனுபவம் வாய்ந்த நீதித்துறை அதிகாரிகளால் செய்யப்படும் விரிவான விசாரணையாக இருக்கும். அப்படியானால், முதல் கட்டத்தில் சபாநாயகர்/தலைவர் மேற்கொள்ளும் அந்த செயல்முறைகள் சரியாக என்னவாக இருக்கும்? சட்டத்தின்கீழ், சபாநாயகர்/தலைவரால் செய்யப்படும் ஆரம்பகட்டப் நடவடிக்கையானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்பதை இங்கு குறிப்பிடலாம். ஏனெனில், 100 அல்லது அதற்கு மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட தீர்மான அறிவிப்பு, எந்தக் காரணமும் குறிப்பிடப்படாமல் நிராகரிக்கப்பட்டால், ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்வதற்காக அரசியலமைப்பு விதியின்கீழ் நாடாளுமன்றத்தால் மேற்கொள்ளப்படும் முழு நடவடிக்கையும் பயனற்றதாகிவிடும். ஏனெனில், அந்தத் தீர்மானம் காலாவதியாகிவிடும். இது சட்டத்தில் உள்ள ஒரு கடுமையான குறைபாட்டைச் சுட்டிக்காட்டுகிறது. சட்டப்பிரிவு124(5), சபாநாயகர் அல்லது தலைவரால் ஏற்றுக்கொள்ளப்படவோ அல்லது நிராகரிக்கப்படவோ வேண்டிய எந்தவொரு குறிப்பிட்ட தீர்மானத்தைப் பற்றியும் (does not refer to any specific motion) குறிப்பிடவில்லை. இதற்கு மாறாக, சட்டப்பிரிவு 61 ஒரு தீர்மானம் முன்மொழியப்பட வேண்டும் என்று கோருகிறது. மேலும் சபாநாயகரோ அல்லது தலைவரோ எந்தக் காரணத்திற்காகவும் தீர்மானத்தை ஏற்க மறுக்க முடியாது.


உண்மையில், "ஒரு தீர்மானத்தை முன்வைப்பதற்கான நடைமுறையை ஒழுங்குபடுத்துவதற்கும்" மற்றும் "ஒரு நீதிபதியின் தவறான நடத்தை அல்லது இயலாமையை விசாரித்து நிரூபிப்பதற்கும்" சட்டம் இயற்ற நாடாளுமன்றத்திற்கு அதிகாரம் அளிக்கும் சட்டப்பிரிவு 124(5), தீர்மானத்தை அனுமதி மறுக்க சபாநாயகர்/தலைவருக்கு எந்த அதிகாரத்தையும் வழங்கவில்லை. தவறான நடத்தைக்கான ஆதாரம், சபாநாயகர்/தலைவரால் நியமிக்கப்படும் உயர்மட்டக் குழுவால் நடத்தப்படும் விசாரணை மூலம் அவை செய்யப்பட வேண்டும்.


எனவே, 100 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்ட ஒரு தீர்மானத்தை தொடக்கத்திலேயே நிராகரிக்க எந்த அடிப்படையும் காரணமும் இல்லை என்பது தெளிவாக தெரிகிறது.


ஒரு நீதிபதியை பதவி நீக்கம் (impeaching a judge) செய்வதற்கான தீர்மானத்தைக் கொண்டுவரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், அதைத் தீவிரமாகப் பரிசீலிக்காமல் செய்வார்கள் என்று நினைக்க எந்தக் காரணமும் இல்லை. ஆனால், அந்தத் தீர்மானத்தை அரசாங்கம் விரும்பவில்லை என்றால், அதை ஆரம்பத்திலேயே எளிதாக நிராகரித்துவிட முடியும். இவ்வாறு, தகுதியற்ற ஒரு நீதிபதியை நீக்குவதற்கான ஒரு முக்கியமான அரசியலமைப்புச் சட்டப் பிரிவின் செயல்பாடு, ஒரு அரசாங்கத்தின் விருப்பங்களால் முறியடிக்கப்படலாம்.


எனவே, சபாநாயகர் அல்லது தலைவருக்குத் தீர்மானத்தை நிராகரிக்க அனுமதிக்கும் விதி மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்.


P.D.T. ஆச்சாரி மக்களவையின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார்.


Original Article : Judicial removal — tough law with a loophole -P.D.T. Achary

Share: