உயிரியல் மறுசீரமைப்பின் இரண்டு வெவ்வேறு வகைகள் யாவை? பாரம்பரிய நுண்ணுயிரியல் எவ்வாறு அதிநவீன உயிரித்தொழில்நுட்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது? உயிரியல் மறுசீரமைப்புத் திட்டங்களை மேலும் முன்னெடுப்பதற்காக அரசாங்கம் திட்டங்களைத் தொடங்கியுள்ளதா? இத்தகைய தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதில் நாடு எதிர்கொள்ளும் சவால்கள் யாவை?
மனிதக் கழிவுகளால் காற்று, நீர், மண் எல்லாம் அசுத்தமாகி, தூய்மையான உலகம் இனி இல்லாத நிலைக்குச் செல்கிறோம். இனி கழிவுகளை உண்டாக்குவதை நிறுத்த வேண்டும். ஏற்கெனவே உள்ள கழிவுகளைச் சுத்தம் செய்யவேண்டும் ஆகியன இதற்கான தீர்வுகளாகக் கூறப்படுகின்றன.
உயிரியல் மறுசீரமைப்பு என்றால் என்ன?
உயிரியல் மறுசீரமைப்பு என்பது, 'உயிரியல் மூலம் வாழ்க்கையை மீட்டெடுப்பது' என்று பொருள். எண்ணெய், பூச்சிக்கொல்லிகள், நெகிழிகள், அல்லது கன உலோகங்கள் போன்ற நச்சுப் பொருட்களைப் பிரித்தெடுக்கவோ அல்லது
மாற்றியமைக்கவோ (transform) இது பாக்டீரியா, பூஞ்சை, பாசி மற்றும் தாவரங்கள் போன்ற நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துகிறது.
இந்த உயிரினங்கள் மாசுபாட்டுப் பொருட்களை உணவாக உட்கொண்டு, அவற்றை நீர், கார்பன்-டை-ஆக்சைடு அல்லது கரிம அமிலங்கள் போன்ற பாதிப்பில்லாத பொருட்களாக மாற்றி உடைத்துவிடும் என்கின்றனர். சில சமயங்களில், நச்சு உலோகங்களையும் மண்ணிலோ நிலத்தடி நீரிலோ பரவாமல் தடுக்கும் வகையில், குறைந்த ஆபத்து உடைய வடிவங்களாக மாற்றிவிடும் என்றும் கூறப்படுகிறது.
இரண்டு வகைகள் உள்ளன
மாசுபட்ட இடத்திலேயே நேரடியாக உயிரித்தீர்வு, (In situ bioremediation): மாசுபட்ட இடத்தை அகற்றாமல், அதே இடத்தில் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தி மாசை நீக்குவது. உதாரணமாக, கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டால், அதன் மேலேயே எண்ணெயை உண்ணும் பாக்டீரியாக்களைத் தெளித்து சுத்தம் செய்யும் முறை ஆகும்.
வெளிப்புற உயிரியல் சீரமைப்பு (Ex situ bioremediation): மாசுபட்ட மண் அல்லது நீர் அகற்றப்பட்டு, ஒரு கட்டுப்படுத்தப்பட்ட நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்டு, சுத்தம் செய்யப்பட்டவுடன் திரும்ப அனுப்பப்படுவது ஆகும்.
நவீன உயிரி மறுசீரமைப்பு பாரம்பரிய நுண்ணுயிரியலை அதிநவீன உயிரித் தொழில்நுட்பத்துடன் ஒருங்கிணைக்கிறது. முதலாவதாக, புதிய உயிரித்தொழில்நுட்பங்கள் மனிதர்கள் உயிரியல் பற்றிய முன்எப்போதும் இல்லாத நுண்ணறிவைப் பெற உதவுகின்றன. இது பயனுள்ள குணாதிசயங்களைக் கொண்ட உயிரி மூலக்கூறுகளை அடையாளம் காண உதவுகிறது. இரண்டாவதாக, இந்த தொழில்நுட்பங்கள் மூலம், கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் அல்லது வேளாண் நிலங்கள் போன்ற இடங்களில் இயற்கையாக நடக்கும் உயிரியல் செயல்முறைகளை (உயிரி மூலக்கூறுகள் செய்யும் வேலையை) மனிதர்கள் துல்லியமாகப் பிரதிபலித்து செய்ய முடியும் என்று தெரிவிக்கின்றனர்.
எடுத்துக்காட்டாக, மரபணு மாற்றப்பட்ட நுண்ணுயிரிகள் (genetically modified (GM microbes)) நெகிழி அல்லது எண்ணெய்க் கசிவு போன்ற கடினமான இரசாயனங்களை இயற்கையான உயிரினங்கள் சிதைக்க முடியாதவற்றை எளிதாகச் சிதைக்கும்படி வடிவமைக்கப்பட்டுள்ளன. செயற்கை உயிரியல் மாசுக்களைக் கண்டறியும் “உயிரி உணரிகளையும்” (biosensors) உருவாக்க உதவுகிறது. அதாவது, நச்சுப் பொருள்கள் இருந்தால் நிறம் மாற்றும் அல்லது ஒளிரும் உயிரினங்கள் மூலம் மாசு ஏற்படுவதற்கு முன்பே எச்சரிக்கை அளிக்கும் என்று கூறப்படுகிறது.
இந்தியாவிற்கு உயிரியல் மறுசீரமைப்பு ஏன் தேவைப்படுகிறது?
இந்தியாவின் வேகமான தொழிற்சாலை வளர்ச்சி சுற்றுச்சூழலை பெரிதும் பாதித்துள்ளது. மாசுபாடு சற்று குறைந்தாலும், கங்கை, யமுனை போன்ற ஆறுகளில் தினமும் சுத்தம் செய்யப்படாத கழிவுநீரும் தொழிற்சாலை கழிவுகளும் கலக்கின்றன. எண்ணெய் கசிவு, பூச்சிக்கொல்லிகள், கன உலோகங்கள் ஆகியவை இயற்கைக்கும் மனித ஆரோக்கியத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்துகின்றன.
பாரம்பரிய மாசு நீக்கும் முறைகள் விலை அதிகம், மின்சாரம்/ஆற்றல் அதிகம் தேவைப்படும், பெரும்பாலும் புதிய மாசையும் உருவாக்கும். உயிரி மறுசீரமைப்பு அதைவிடவும் விலை குறைவானது, எளிதில் பெரிய அளவில் பயனளிக்கப் கூடியது, சுற்றுச்சூழலுக்கு ஏற்ற நிலையான தீர்வு. குறிப்பாக நிலமும் நீரும் பரவலாக மாசடைந்து, பணமும் வளமும் குறைவாக உள்ள நாடுகளுக்கு இது மிகவும் பொருத்தமான மாற்று முறையாகக் கருதப்படுகிறது.
மேலும், இந்தியாவின் பன்முகத்தன்மை கொண்ட பல்லுயிர் பெருக்கம் ஒரு மிகப்பெரிய நன்மையாகும். இங்குள்ள உள்ளூர் நுண்ணுயிரிகள், அதிக வெப்பம், உப்பு, அமிலம் போன்ற கடுமையான சூழல்களுக்கு ஏற்கெனவே பழகியவை. அதனால், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்பட்ட நுண்ணுயிரிகளைவிட சுற்றுச்சூழலை மீட்டெடுப்பதில் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா இப்போது எந்த நிலையில் உள்ளது?
உயிரியல் மறுசீரமைப்பு என்பது இந்தியாவில் படிப்படியாக கவனம் பெற்று வருகிறது. ஆனால், இது இன்னும் பெரும்பாலும் சோதனை நிலையில்தான் உள்ளது. உயிரித் தொழில்நுட்பத் துறை (Department of Biotechnology (DBT)) தன் “தூய்மைத் தொழில்நுட்பத் திட்டம்” மூலம் பல திட்டங்களுக்கு நிதி உதவி அளித்துள்ளது மற்றும் பல்கலைக்கழகங்கள், ஆராய்ச்சி நிறுவனங்கள், தொழிற்துறை ஆகியவற்றுக்கு இடையே ஒத்துழைப்பை ஊக்குவித்து வருகிறது என்றும் தெரிவிக்கப்படுகிறது.
அறிவியல் மற்றும் தொழில்துறை ஆராய்ச்சிக் கூட்டமைப்பின் (Council of Scientific and Industrial Research (CSIR))-தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவவனத்திற்கு (National Environmental Engineering Research Institute (NEERI)) உயிரியல் மறுசீரமைப்பு தொடர்பான திட்டங்களைத் திட்டமிடவும் செயல்படுத்தவும் அதிகாரம் உள்ளது. இந்திய தொழில்நுட்பக் கழக (IIT) ஆராய்ச்சியாளர்கள் பருத்தியிலிருந்து தயாரித்த நானோ கலவைப் பொருளை உருவாக்கியுள்ளனர். இது கடலில் ஏற்படும் எண்ணெய்க் கசிவை எளிதாக அகற்ற உதவும் என்று கூறப்படுகிறது. மற்ற சில ஆராய்ச்சியாளர்கள் மண்ணில் உள்ள நச்சுப்பொருட்களை “சாப்பிட்டு” சுத்தம் செய்யும் பாக்டீரியாக்களைக் கண்டுபிடித்துள்ளனர்.
புதிய தொழில் நிறுவனங்களும் (Startups) இந்தத் துறையில் பங்களிப்பை வழங்குகின்றன. உயிரித் தொழில்நுட்ப கூட்டமைப்பு இந்தியா லிமிடெட் (Biotechnology Consortium India Limited (BCIL)) மற்றும் Econirmal உயிரித் தொழில்நுட்ப நிறுவனம் போன்ற நிறுவனங்கள் மண் மற்றும் கழிவுநீர் சுத்திகரிப்புக்காக நுண்ணுயிர் உருவாக்கங்களை (microbial formulations) வழங்குகின்றன.
ஆனால், இந்தத் தொழில்நுட்பத்தின் பரவலான பயன்பாடு பல சவால்களை எதிர்கொள்கிறது. குறிப்பிட்ட இடத்திற்கேற்ற தன்மை இல்லாமல் இருப்பது, மாசுபடுத்திகளின் சிக்கலான தன்மை தொழில்நுட்ப சவால்களாக வரையறுக்கப்படுகின்றன. ஒரே மாதிரியான உயிரியல் சீர்திருத்த தரநிலைகள் இல்லாதது போன்றவை ஒழுங்குமுறை சவால்களாக வரையறுக்கப்படுகின்றன.
மற்ற நாடுகள் என்ன செய்கின்றன?
பல வளர்ந்த நாடுகளில், உயிரியல் மறுசீரமைப்பு என்பது சுற்றுச்சூழல் நிர்வாகத்தின் முக்கியமான பகுதியாகும். உதாரணமாக, ஜப்பான், நகரக் கழிவுகளைச் சுத்தம் செய்ய நுண்ணுயிரிகளையும் தாவரங்களையும் ஒன்றாகப் பயன்படுத்துகிறது. ஐரோப்பிய ஒன்றியம் எண்ணெய்க் கசிவுகளையும் பழைய சுரங்க இடங்களையும் சுத்தம்செய்ய நுண்ணுயிரிகளைப் பயன்படுத்தும் திட்டங்களுக்கு நிதிஉதவி அளிக்கிறது. சீனா, மண் மாசுபாட்டைக் கட்டுப்படுத்தும் திட்டத்தில் உயிரியல் சுத்திகரிப்பை முக்கியமாக்கியுள்ளது. தொழிற்சாலை தரிசு நிலங்களை மீட்டெடுக்க மரபணு மாற்றப்பட்ட பாக்டீரியாக்களைப் பயன்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.
வாய்ப்புகளும் அபாயங்களும்
இந்தியாவுக்கான வாய்ப்புகள் மிக ஏராளமாக உள்ளன. உயிரியல் மறுசீரமைப்பு மூலம் ஆறுகளையும் நிலத்தையும் தூய்மையாக்கலாம், மாசடைந்த தொழிற்சாலை நிலங்களை மீட்டெடுக்கலாம். அதே நேரத்தில் உயிரித் தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் ஆலோசனை, கழிவு மேலாண்மை போன்ற துறைகளில் புதிய வேலைவாய்ப்புகளையும் உருவாக்க முடியும். இதை அரசின் தூய்மை இந்தியா திட்டம் (Swachh Bharat Mission), கங்கையை வணங்குகிறோம் (Namami Gange) மற்றும் பிற பசுமைத் திட்டங்களுடன் எளிதாக இணைத்துச் செயல்படுத்தலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆனால், இன்னும் சில ஆபத்துகள் உள்ளன. மரபணு மாற்றப்பட்ட உயிரினங்களை (GMO) திறந்த சூழலில் விடுவதை மிகத்தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும். ஏனெனில், போதிய சோதனை இல்லாவிட்டாலோ, கட்டுப்பாடு மோசமாக இருந்தாலோ, பழைய பிரச்சனைகளைத் தீர்க்கும்போது புதிய பிரச்சனைகள் ஏற்படும் வாய்ப்புகளும் உள்ளது என்று எச்சரிக்கின்றனர். இந்தப் புதிய தொழில்நுட்பத்தை பாதுகாப்பாக ஏற்றுக்கொள்ளவும், தொடர்ந்து கண்காணிக்கவும் பொதுமக்களின் பங்கேற்பும் அவசியமாகிறது.
இந்தத் தொழில்நுட்பத்தை பொறுப்புடன் பயன்படுத்த, இந்தியாவுக்கு புதிய உயிரியல் பாதுகாப்பு விதிகள், சான்றிதழ் முறைகள் மற்றும் பயிற்சிபெற்ற ஊழியர்கள் தேவை என்றும் வலியுறுத்தப்படுகிறது.
முன்னோக்கி செல்லும் வழி
உயிரியல் மறுசீரமைப்பின் முழுத் திறனை இந்தியா அடைய வேண்டுமானால், மூன்று முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்த வேண்டும். உயிரியல் மறுசீரமைப்பு முறைகளுக்கும் நுண்ணுயிரிகளைப் பயன்படுத்துவதற்கும் தெளிவான தேசிய விதிமுறைகளையும் தரநிலைகளையும் உருவாக்க வேண்டும். பல்கலைக்கழகங்கள், தொழிற்சாலைகள், உள்ளாட்சி அமைப்புகள் ஆகியவற்றை இணைக்கும் வகையில் பிராந்திய உயிரியல் மறுசீரமைப்பு மையங்களை (bioremediation hubs) அமைக்க வேண்டும். இவை, உள்ளூர் மாசுபாட்டுப் பிரச்சினைகளை நன்றாகப் புரிந்துகொண்டு, அதற்கேற்ற தொழில்நுட்பங்களை உருவாக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. இதை உயிரித் தொழில்நுட்பத் துறையின்கீழ் இயங்கும் உயிரித் தொழில்நுட்ப ஆராய்ச்சி உதவிக் கழகம் (Department of Biotechnology (DBT)-(Biotechnology Industry Research Assistance Council (BIRAC)) போன்ற அமைப்புகளின் சுற்றுச்சூழல் திட்டங்கள் மூலம் புதிய தொழில் நிறுவனங்களுக்கும் (startups) சமூகத் திட்டங்களுக்கும் நிதி மற்றும் ஆதரவு அளித்து செயல்படுத்தலாம் என்றும் வலியுறுத்தப்படுகிறது. பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். இந்த நுண்ணுயிரிகள் ஆபத்தானவை அல்ல என்றும் மாறாக அவை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் நண்பர்கள் என்பதை எடுத்துச் சொல்ல வேண்டும். இந்த மூன்று நடவடிக்கைகளால் இந்தியாவில் உயிரியல் மறுசீரமைப்பு தொழில்நுட்பம் வேகமாகவும் பயனுள்ள வகையிலும் வளரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சம்பவி நாயக், தக்ஷஷிலா நிறுவனத்தின் (Takshashila Institution) உடல்நலம் மற்றும் வாழ்க்கை அறிவியல் கொள்கையின் (Health & Life Sciences Policy) தலைவராகவும், CloudKrate நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாகவும் உள்ளார்.
Original link:
Why does India need bioremediation?