நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல் (AMR) குறித்த புதிய செயல் திட்டத்திற்கு ஒரு புது உத்வேகம் தேவை. -அப்துல் கஃபூர்

 இந்தியாவின் தேசிய செயல் திட்டம் - நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல் 2.0 (National Action Plan on Antimicrobial Resistance 2.0 (NAP-AMR 2.0)) திட்டத்தின் வெற்றி, தேசிய மற்றும் மாநில அமைப்புகள் எவ்வளவு சிறப்பாக ஒன்றிணைந்து செயல்படுகின்றன என்பதைப் பொறுத்தது என்கின்றனர்.


இந்தியாவின் புதிய நுண்ணுயிர் எதிர்ப்பு தேசிய செயல் திட்டம் (NAP-AMR 2.0) - (2025-29) - மனித ஆரோக்கியம், கால்நடை நடைமுறைகள், மீன்வளர்ப்பு, விவசாயம், கழிவு அமைப்புகள் மற்றும் முழு உணவுச் சங்கிலியையும் நுண்ணுயிர் எதிர்ப்பு (Antimicrobial Resistance (AMR)) பாதித்துவரும் நிலையில் வெளியிடப்பட்டுள்ளது. நுண்ணுயிர் எதிர்ப்பு எச்சங்கள், எதிர்ப்பு உயிரினங்கள் மற்றும் சுற்றுச்சூழல் வெளியேற்றம் இந்தத் துறைகளை சக்திவாய்ந்த வழிகளில் இணைக்கின்றன. நுண்ணுயிர் எதிர்ப்பு (AMR) என்பது மருத்துவமனைகளில் மட்டும் இல்லை. அது மண், நீர், விலங்குகள், சந்தைகள், உணவுச் சங்கிலி ஆகியவற்றின் வழியாகவும் பரவுகிறது. எனவே இது ஒரு முக்கியமான “ஒருங்கிணைந்த ஆரோக்கிய” பிரச்சினை. அதனால், தேசியத் திட்டத்தை வெற்றிகரமாகச்  செயல்படுத்த ஒவ்வொரு அரசு அமைப்பும் ஒருங்கிணைந்து வலுவாகச் செயல்பட வேண்டும் என்று தெரிவிக்கின்றனர்.

முதல் செயல் திட்டத்திலிருந்து வந்த பரிணாமம்


2017-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல் (AMR) குறித்த முதல் தேசிய செயல் திட்டம் ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஆகும். இது நாடு முழுவதும் உள்ள மக்கள் மத்தியில் நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தியது. மேலும், பல்வேறு துறைகளை ஒன்றிணைத்தது, ஆய்வக அமைப்புகளை பலப்படுத்தியது, தேசிய கண்காணிப்பை விரிவுபடுத்தியது, மற்றும் நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் (antibiotics) பயன்பாட்டை ஊக்குவித்தது. மேலும், மனித ஆரோக்கியம், விலங்குகளின் ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் ஆகியவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்பதை அங்கீகரித்தது. இது 'ஒருங்கிணைந்த ஆரோக்கியம்' (One Health) அணுகுமுறையைத் தெளிவாக ஏற்றுக்கொண்டது என்கின்றனர்.


முன்னேற்றம் இருந்தபோதிலும், முதல் திட்ட காலத்தில் பெரும்பாலான மாநிலங்கள் குறைவாகவே செயல்பட்டன. கேரளா, மத்தியப் பிரதேசம், டெல்லி, ஆந்திரப் பிரதேசம், குஜராத், சிக்கிம் மற்றும் பஞ்சாப் ஆகிய ஒரு சில மாநிலங்கள் மட்டுமே முறையான மாநில செயல் திட்டங்களைத் தயாரித்தன. மேலும், அவற்றில் சில மட்டுமே உண்மையான திட்ட அமலாக்கத்தைத் தொடங்கின. மற்ற பெரும்பாலான மாநிலங்கள் சிறிய, துறைரீதியான முயற்சிகளைத் தொடர்ந்தன, மேலும், மாநில அளவிலான, பல்துறை சார்ந்த 'ஒருங்கிணைந்த ஆரோக்கியம்' (One Health) அமைப்புகளை உருவாக்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

 

குறைந்த அளவிலான முன்னேற்றத்திற்குக் காரணம் ஒன்றிய அரசு முயற்சிக்கவில்லை என்பதல்ல, மாறாக, நுண்ணுயிர் எதிர்ப்புத்திறனை (AMR) இயக்கக்கூடிய முக்கிய காரணிகள் மாநிலங்களின் கட்டுப்பாட்டில் உள்ளன என்பதே ஆகும். சுகாதார சேவைகள், மருத்துவமனைகள், மருந்தகங்கள், கால்நடைப் பணிகள், பண்ணை நுண்ணுயிர் எதிர்ப்பிகளின் பயன்பாடு, உணவுப் பாதுகாப்புச் சோதனைகள் மற்றும் கழிவு மேலாண்மை ஆகியவை அனைத்தும் மாநிலத் துறைகளால் நடத்தப்படுகின்றன. எனவே, உண்மையான அதிகாரம் மாநிலங்களிடம் இருக்கும்போது, தேசிய வழிகாட்டுதல்கள் மட்டுமே ஒரே மாதிரியான நடவடிக்கையை உறுதி செய்ய முடியாது என்று தெரிவிக்கின்றனர். 


இந்தியாவின் பொது சுகாதார வரலாறு ஒன்றை தெளிவாகக் காட்டுகிறது. ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் ஒரு தெளிவான, பொறுப்புகூறும் அமைப்பில் ஒன்றாக இணைந்து செயல்படும்போதுதான் உண்மையான முன்னேற்றம் ஏற்படும்.

இதற்கு சிறந்த உதாரணங்கள்: தேசிய காசநோய் ஒழிப்புத் திட்டம் (National Tuberculosis Elimination Programme (NTEP)) – கூட்டு ஆய்வு, பகிர்ந்த கண்காணிப்பு, தெளிவான பொறுப்புகள் ஆகியவை மூலம் வெற்றி பெறுகிறது. தேசிய சுகாதார இயக்கம் (National Health Mission (NHM)) – ஒருங்கிணைந்த திட்டமிடல், தனி நிதி, வழக்கமான செயல்திறன் மறுஆய்வு மூலம் மாநிலங்களுக்கு உதவுகிறது. புதிய நுண்ணுயிர் எதிர்ப்புத் திறனுக்கான தேசிய செயல்திட்டம்-2 (NAP-AMR 2.0) முந்தைய திட்டத்தைவிட வலுவானதும் நடைமுறைக்கு ஏற்றதும் ஆகும். இதன் சிறப்பம்சங்கள்: தெளிவான காலக்கெடு, பொறுப்புகள், நிதி ஒதுக்கீடு தனியார் துறையை (மனித & கால்நடை சுகாதாரத்தில் பெரும்பங்கு வகிப்பது) முழுமையாக இணைப்பது, விரைவான பரிசோதனைகள், பாயிண்ட்-ஆஃப்-கேர் கருவிகள், மாற்று சிகிச்சைகள், சுற்றுச்சூழல் கண்காணிப்பு போன்ற புதுமையான அறிவியல் அணுகுமுறைகள் ஆகியன முக்கிய அம்சங்களாகக் கருதப்படுகின்றன. 


உணவு அமைப்புகள், கழிவு மேலாண்மை மற்றும் சுற்றுச்சூழல் மாசுபாடு ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துவதன் மூலம் இது ஒருங்கிணைந்த ஆரோக்கியம் (One Health) சார்ந்த அணுகுமுறையைப் பலப்படுத்துகிறது. இது மனிதர்கள், விலங்குகள், பண்ணைகள் மற்றும் சுற்றுச்சூழல் துறைகளில் உள்ள கண்காணிப்பை ஒருங்கிணைத்து, மிகவும் ஒருங்கிணைந்த தேசிய அமைப்பை உருவாக்க உதவுகிறது.


இந்தியாவின் தேசிய செயல் திட்டம் - நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல் 2.0 (NAP-AMR 2.0) திட்டமானது, துறைசார் மேற்பார்வையை நிதி ஆயோக்கின் கீழ் ஒரு சிறப்பு ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழு மூலம் வைப்பதன் மூலம் தேசியக் கட்டுப்பாட்டை வலுப்படுத்துகிறது. எல்லா மாநிலங்களும் மற்றும் யூனியன் பிரதேசங்களும் மாநில நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல் (AMR) மையங்களை அமைத்து, தேசியத் திட்டத்துடன் பொருந்தக்கூடிய மாநில செயல்திட்டங்களை உருவாக்க வேண்டும் என்று அது தெளிவாகக் கூறுகிறது. மேலும், முன்னேற்றத்தைக் கண்காணிக்க ஒரு தேசியத் தகவல் பலகையும் (dashboard) இருக்கும். இந்த நடவடிக்கைகள், நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல் (AMR) என்பது ஒரு சுகாதாரப்

பிரச்சினை மட்டுமல்ல, பல துறைகளிலும் ஒருங்கிணைப்பு தேவைப்படும் ஒரு தேசிய மேம்பாட்டு முன்னுரிமை என்பதைக் காட்டுகிறது.


புதிய திட்டம் எங்கே பின்தங்கியுள்ளது


இந்த முக்கிய மேம்பாடுகளும், மாநில அளவில் நடவடிக்கைக்கான வலுவான உந்துதலும் இருந்தபோதிலும், முதல் திட்டத்தின் அடிப்படை பலவீனம் இன்னும் உள்ளது. இத்திட்டம், மாநிலங்கள் நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் (AMR) செயல் திட்டங்களை உருவாக்கவும், நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் பிரிவுகளை அமைக்கவும் கோருகிறது. ஆனால், அவை உண்மையில் அவ்வாறு செய்வதை உறுதிசெய்ய எந்த ஒரு அமைப்பையும் வழங்கவில்லை. மத்திய-மாநில நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் தளமோ, கூட்டு மறுஆய்வு அமைப்போ, மாநிலங்கள் தங்கள் திட்டங்களை அறிவிக்கவோ அல்லது செயல்படுத்தவோ சட்டரீதியான தேவையோ, மற்றும் மாநிலங்களின் உறுதிப்பாட்டைக் காப்பாற்ற நிதியுதவி அல்லது ஊக்கத்தொகைகளோ தேசிய சுகாதார இயக்கத்துடன் இணைக்கப்பட்ட நிதி போன்றவை எதுவும் வழங்கப்படவில்லை. இந்தியாவின் கூட்டாட்சி முறையில், நுண்ணுயிர் எதிர்ப்புத்திறனைத் தூண்டும் முக்கிய காரணிகள் – சுகாதார சேவைகள், கால்நடைக் கட்டுப்பாடு, விவசாயத்தில் நுண்ணுயிர் எதிர்ப்பின் பயன்பாடு, உணவுப் பாதுகாப்பு மற்றும் கழிவு மேலாண்மை – ஆகியவை பெரும்பாலும் மாநிலக் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன. இது ஒரு முக்கியமான இடைவெளி ஆகும். அரசியல் ஒத்துழைப்பு, நிர்வாகத் தொடர் நடவடிக்கை மற்றும் பகிர்ந்து அளிக்கப்பட்ட பொறுப்புணர்ச்சி ஆகியவற்றுக்கான ஒரு தெளிவான வழிமுறை இல்லாமல், ஒரு வலுவான தேசியத் திட்டம்கூட ஒரு பயனுள்ள தேசியத் திட்டமாக மாறுவதற்குப் பதிலாக, வெறுமனே பெயரளவிலான திட்டங்களாக இருக்கவும் வாய்ப்புள்ளது என்று எச்சரிக்கின்றனர்.


நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் குறித்த வழிகாட்டுதல் மட்டும், கொள்கையை வெற்றிபெறச் செய்ய முடியாது என்று தெரிவிக்கின்றனர். ஒன்றிய மற்றும் மாநில அரசுகளைப் பகிரப்பட்ட ஒரு செயலாக்கக் கட்டமைப்புக்குள் கொண்டுவரும் ஒரு அமைப்பு இல்லாவிட்டால், தேசிய நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் குறித்த செயல் திட்டம் 2.0 (NAP-AMR 2.0), தேசிய இலக்குகளை உண்மையான, அளவிடக்கூடிய விளைவுகளாக மாற்றுவது கடினமாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. 


ஒருங்கிணைந்த ஒரு பொறிமுறையின் தேவை


இந்தியாவின் தேசிய செயல் திட்டம் - நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல் 2.0 (NAP-AMR 2.0) செயல்பட, இந்தியாவுக்கு அரசியல் தலைவர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் அனைத்து மாநில அளவிலான துறைகளையும் ஒன்றிணைக்கும் ஒரு வலுவான கட்டமைப்பு தேவை என்கின்றனர்.  மத்திய சுகாதார அமைச்சரின் தலைமையில், நிதி ஆயோக்கின் ஆதரவுடன் செயல்படும் ஒரு தேசிய – மாநில நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல் திட்டக் கூட்டமைப்பின் , மனித ஆரோக்கியம், கால்நடைப் பராமரிப்பு, விவசாயம், நீர்வாழ் உயிரின வளர்ப்பு, உணவு அமைப்புகள் மற்றும் சுற்றுச்சூழல் ஒழுங்குமுறை ஆகியவற்றில் வழக்கமான ஆய்வுகள், கூட்டு முடிவுகள் மற்றும் ஒருங்கிணைந்த நடவடிக்கைக்காக ஒரு பொதுவான தளத்தை வழங்க முடியும் என்றும் கூறப்படுகிறது. 


ஒவ்வொரு மாநிலமும் அதன் நுண்ணுயிர் எதிர்ப்பாற்றல் செயல் திட்டத்தை (AMR Action Plan) தெளிவான காலக்கெடு மற்றும் ஆண்டுதோறும் மதிப்பாய்வுகளுடன் உருவாக்கி அறிவிக்குமாறு ஒன்றிய அரசு முறையாகக் கேட்டால், மாநிலத்தின் ஈடுபாடு மேம்பட வாய்ப்புள்ளது என்கின்றனர். தேசிய சுகாதார இயக்கம் மற்றும் காசநோய் திட்டங்களின் அனுபவம் என்னவென்றால், உயர் அதிகாரிகளிடமிருந்து, குறிப்பாக தலைமைச் செயலாளர்களிடமிருந்து (Chief Secretaries) வரும் வலுவான தகவல் தொடர்பு, நிர்வாகத்தின் கவனத்தை விரைவாக ஈர்க்க முடியும் என்று வலியுறுத்தப்படுகிறது. 


நிதியளிப்பு வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்பட வேண்டும். தேசிய சுகாதார இயக்கத்தின்கீழ் (NHM) வழங்கப்படும் சிறிய நிபந்தனைக்குட்பட்ட மானியங்கள்கூட கண்காணிப்பு, பராமரிப்பு, நோய்த்தொற்று கட்டுப்பாடு மற்றும் ஆய்வகத்தை வலுப்படுத்துவதில் மேம்பாடுகளை ஏற்படுத்த முடியும். நிதி முன்னுரிமையாக இருக்கும்போது, மாநிலங்கள் அதிக நிர்வாகத் திறனுடனும் கொள்கைக் கவனத்துடனும் செயல்படுகின்றன என்றும் தெரிவிக்கின்றனர்.


தேசியச் செயல் திட்டம்-நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் 2.0 (NAP-AMR 2.0) இந்தியாவிற்குத் தேவையான அறிவியல் மற்றும் உத்திமுறை ரீதியிலான அடித்தளத்தை அளிக்கிறது. ஆனால், அதன் வெற்றி, தேசிய மற்றும் மாநில அமைப்புகள் எந்தளவுக்கு இணைந்து செயல்படுகின்றன என்பதைப் பொறுத்து அமைகிறது. மருத்துவமனைகள், பண்ணைகள், சந்தைகள், உணவுச் சங்கிலிகள் மற்றும் கழிவுநீர் என 'ஒருங்கிணைந்த ஆரோக்கியம்' (One Health) என்ற முழுஅளவிலான அன்றாட நடைமுறைகளினால் நுண்ணுயிர் எதிர்ப்புத்திறன் (AMR) ஏற்படுகிறது. மாநிலங்களின் வலுவான ஈடுபாடு இல்லாமல், ஒரு தேசியத் திட்டத்தால் தேசிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியாது என்றும் உறுதிபடுத்துகின்றனர். 


இந்தியாவிற்கு இப்போது நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் (AMR) கட்டுப்பாடுக்காக ஒருங்கமைக்கப்பட்ட மற்றும் பொறுப்பான மத்திய-மாநில மாதிரியை உருவாக்க ஒரு வாய்ப்பு உள்ளது. இந்த அமைப்பு உருவாக்கப்பட்டால், நாடு உண்மையான முன்னேற்றத்தைக் காண முடியும் மற்றும் உலகளாவிய முன்மாதிரியை அமைக்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சிறந்த ஒருங்கிணைப்பு, அரசியல் உறுதி மற்றும் மாநிலங்கள் மற்றும் துறைகள் முழுவதும் தொடர்ச்சியான ஆதரவுடன், NAP-AMR 2.0 நுண்ணுயிர் எதிர்ப்புத் திறனுக்கான தேசிய செயல் திட்டம் 2.0) இந்தியாவின் நுண்ணுயிர் எதிர்ப்பாற்றலுக்கு எதிரான போராட்டத்தில் ஒரு முக்கிய திருப்புமுனையாக அமையும் என்று தெரிவிக்கின்றனர்.


டாக்டர் அப்துல் கஃபூர் சென்னை அப்போலோ மருத்துவமனையில் மூத்த தொற்றுநோய்கள் பிரிவின் ஆலோசகராகவும், ‘நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் (AMR) குறித்த சென்னை பிரகடனம்’ அமைப்பின் ஒருங்கிணைப்பாளராகவும் உள்ளார். 


Original link:

The new action plan on AMR needs a shot in the arm 

Share: