சம்பாலில் உள்ள சட்டச் சிக்கல்கள் -அபூர்வா விஸ்வநாத்

 சம்பாலில் உள்ள மனு, வாரணாசியின் ஞானவாபி மசூதி (Varanasi’s Gyanvapi mosque) மற்றும் மதுராவின் ஷாஹி இத்கா (Mathura’s Shahi Idgah) வழக்குகளில் செய்யப்பட்ட மனுக்களைப் போன்றதாகும். இவைகளில், வழிபாட்டுத் தலச் சட்டம், 1991 (Places of Worship Act)-ன் விளக்கம் முக்கிய பிரச்சனையாக உள்ளது.


சம்பாலில் உள்ள ஒரு மாவட்ட நீதிமன்றம் ஷாஹி ஜமா மசூதியை (Shahi Jama Masjid) ஆய்வு செய்ய உத்தரவிட்டு கிட்டத்தட்ட ஒரு வாரத்திற்குப் பிறகு, மேற்கு உத்தரபிரதேசத்தில் உள்ள நகரம் கலவர வன்முறையால் அதிர்ந்துள்ளது. இதில், குறைந்தது நான்கு பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர்.


சம்பாலின் ஜமா மஸ்ஜித் மசூதியானது, இந்துக் கோயில் இருந்த இடத்தில் கட்டப்பட்டதாகக் கூறி தாக்கல் செய்யப்பட்ட மனுவில் நீதிமன்றத்தின் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இது வாரணாசியில் உள்ள கியான்வாபி மசூதி (Gyanvapi mosque), மதுராவில் உள்ள ஷாஹி இத்கா (Shahi Idgah) மற்றும் மத்தியப் பிரதேசத்தின் தாரில் உள்ள கமல்-மௌலா மசூதி (Kamal-Maula mosque) ஆகிய வழக்குகளில் கூறப்பட்ட கூற்றுகளுக்கு ஒத்ததாகும்.


இந்த அனைத்து சர்ச்சைகளிலும் உள்ள உரிமைகோரல்கள் அடிப்படையில் வழிபாட்டுத் தலத்தின் மதத்தின் மீதான தன்மையை மாற்ற முயல்கின்றன. இது வழிபாட்டுத் தலச் சட்டம், 1991 ஆல் (Place of Worship Act) தடைசெய்யப்பட்டுள்ளது.


நவம்பர் 19 அன்று, சந்தௌசியில் உள்ள சம்பலின் மாவட்ட மற்றும் செஷன்ஸ் நீதிமன்றத்தில் குடிமை நீதிபதி (மூத்த பிரிவு) ஆதித்யா சிங் ஒரு விண்ணப்பத்திற்கு ஒப்புதல் அளித்தார். வழக்கறிஞர் ஹரி சங்கர் ஜெயின் மற்றும் உள்ளூர் மஹந்த் உட்பட பலர் இந்த மனுவை தாக்கல் செய்தனர். இந்த மனுவில், மசூதிக்குள் நுழைவதற்கு உரிமை கோரினர்.


1526-ம் ஆண்டு முகலாய மன்னர் பாபரால் அங்கு இருந்த இந்து கோவிலை இடித்துவிட்டு மசூதி கட்டப்பட்டது என மனுதாரர்கள் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. மனுத் தாக்கல் செய்யப்பட்ட சில மணி நேரங்களில், மசூதியில் முதற்கட்ட கணக்கெடுப்பு நடத்த வழக்கறிஞர் ஆணையரை நியமித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அதே நாளில் முதல் ஆய்வு நடத்தப்பட்டது. நவம்பர் 29-ம் தேதிக்குள் ஆய்வுக்கான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


நவம்பர் 24 அன்று இரண்டாவது கட்ட ஆய்வு நடந்தது. இது சம்பாலில் போராட்டங்கள் வெடிக்க வழிவகுத்தது. பின்னர், இது காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்த வழிவகுத்தது.


ஆய்வுக்காக மசூதி நிர்வாகக் குழுவிடம் ஆலோசனை நடத்தப்பட்டது. ஆனால், நவம்பர் 29-ம் தேதிக்குள் ஆய்வுக்கான அறிக்கையை சமர்ப்பிக்க வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு தரப்பினரையும் கேட்காமல் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


சம்பாலின் ஜமா மஸ்ஜித் (Jama Masjid) என்பது ஒரு "பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னம்" (protected monument) ஆகும். இது, டிசம்பர் 22, 1920 அன்று பண்டைய நினைவுச்சின்னங்கள் பாதுகாப்பு சட்டம், 1904-ன் (Ancient Monuments Preservation Act) கீழ் அறிவிக்கப்பட்டது. இது தேசிய முக்கியத்துவம் வாய்ந்த நினைவுச்சின்னமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய தொல்லியல் துறையின் இணையதளத்தில் (Archaeological Survey of India's website) உள்ள புள்ளிவிவரங்கள் மத்திய பாதுகாக்கப்பட்ட நினைவுச்சின்னங்களின் பட்டியலில் குறிப்பிட்டுள்ளன.


மனுதாரர்களால் தாக்கல் செய்யும் ஒரு குடிமை வழக்கு, கேள்விக்குரிய சொத்தின் விவரத்தைத் தீர்மானிப்பதற்கு நீதிமன்றத்திற்கான ஒரு வழக்கை குறிப்பிடுகிறது. இது, சிவில் வழக்கில், மனுதாரர்கள் அளிக்கும் குறைகள் முதன்மையாக ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். மேலும், குடிமை நடைமுறைச் சட்டம் ஆரம்ப கட்டத்தில் குடிமை வழக்கில் செய்யப்பட்ட உரிமைகோரல்களை கடுமையான ஆய்வுக்கு தடை செய்கிறது. மனு ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் மட்டுமே ஆதாரங்களை நீதிமன்ற அமர்வுக்கு கொண்டுவர மனுதாரர்கள் அழைக்கப்படுகிறார்கள்.


இருப்பினும், வழிபாட்டுத் தலத்தைப் பொறுத்தவரை, வழிபாட்டுத் தலங்கள் சட்டம், 1991-ன் கீழ் அத்தகைய வழக்கு அனுமதிக்கப்படாது.


ஞானவாபி மற்றும் மதுரா ஆகிய இரண்டு வழக்குகளிலும், மாவட்ட நீதிமன்றங்கள் இந்து மனுதாரர்கள் தாக்கல் செய்த குடிமை வழக்குகளை "பராமரிக்கக்கூடியவை" என்று ஏற்றுக்கொண்டன. அதாவது, 1991ஆம் ஆண்டு சட்டம் இருந்தாலும், வழக்குகள் செல்லுபடியாகும் மற்றும் முடிவு செய்யப்படலாம். இந்த வழக்குகள் 1991 சட்டத்தின் வரம்புக்கு அப்பாற்பட்டவை என்று நீதிமன்றங்கள் தீர்ப்பளித்துள்ளன. 1947 ஆகஸ்ட் 15 அன்று எந்த வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையும் அப்படியே இருக்க வேண்டும் என்று வழிபாட்டுத் தலங்கள் சட்டம் கூறுகிறது.


இந்தச் சட்டத்தின் நீண்ட தலைப்பு: "எந்தவொரு வழிபாட்டுத் தலத்தையும் மாற்றுவதைத் தடுக்கும் சட்டம். ஆகஸ்ட் 15, 1947-ம் ஆண்டில் இருந்த எந்த வழிபாட்டுத் தலத்தின் மதத் தன்மையைப் பேணுவதையும், அது தொடர்பான விஷயங்களைத் தீர்ப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது."


சட்டத்தின் பிரிவு 3 எந்த ஒரு வழிபாட்டுத் தலத்தையும் முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஒரு மதப் பிரிவிலிருந்து மற்றொரு மதத்திற்கு மாற்றுவதைத் தடை செய்கிறது. வழிபாட்டுத் தலத்தை ஒரே மதப் பிரிவினருக்குள் வேறு பிரிவாக மாற்றுவதையும் இது தடை செய்கிறது.


இந்த சட்டம் காங்கிரஸின் 1991 தேர்தல் அறிக்கையில் ஒரு பகுதியாக இருந்தது. இது ஒரு வழிபாட்டு தலத்தின் வரலாற்று "மாற்றம்" (conversion) பற்றிய சர்ச்சைகளை முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கமாகக் கொண்டது. நாடாளுமன்றத்தில் சட்டத்தை அறிமுகப்படுத்தும் போது, ​​அப்போதைய உள்துறை அமைச்சர் எஸ்.பி.சவான் இந்த மசோதாவை நிறைவேற்றுவது வகுப்புவாத அமைதியையும் நல்லெண்ணத்தையும் மீட்டெடுக்க உதவும் என்று கூறினார்.


பாபர் மசூதி - ராம ஜென்மபூமி பிரச்சனைக்கு பதிலளிக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டு வரப்பட்டது. எவ்வாறாயினும், சட்டம் இயற்றப்பட்டபோது அது ஏற்கனவே சட்டப்பூர்வ பரிசீலனையில் இருந்ததால், சட்டத்தின் வரம்பிலிருந்து சர்ச்சையானது விலக்கப்பட்டது.


வாரணாசி மற்றும் மதுராவில் வழிபாடு செய்வதற்கான அணுகல் அல்லது உரிமை தொடர்பான வழக்குகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதே நேரத்தில், 1991-ம் ஆண்டு சட்டத்திற்கு எதிரான அரசியலமைப்பு தொடர்பான சவால்கள் இன்னும் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.


வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தற்போது நான்கு தனித்தனி மனுக்கள் உள்ளன. செப்டம்பர் 2022-ம் ஆண்டில், அப்போதைய இந்திய தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அமர்வு, இரண்டு வாரங்களுக்குள் பதில் அளிக்குமாறு அரசுக்கு உத்தரவிட்டது. ஆனால், இரண்டு ஆண்டுகள் ஆகியும், ஒன்றிய அரசு இன்னும் பிரமாணப் பத்திரத்தை தாக்கல் செய்யவில்லை.


ஆனால், ஞானவாபி வழக்கில் உச்சநீதிமன்றத்தின் தனி கருத்துகணிப்பு, மாவட்ட நீதிமன்றங்களுக்கு இதுபோன்ற மனுக்களை அனுமதிக்க அதிக இடங்களை அளித்துள்ளது.


மே 2022-ம் ஆண்டில், நீதிபதி டி.ஒய்.சந்திரசூட், 1991 சட்டத்தின் கீழ் ஒரு மதம் தொடர்பான இடத்தின் தன்மையை மாற்ற அனுமதிக்க முடியாது என்று கூறினார். எவ்வாறாயினும், ஒரு இடத்தின் மதத் தன்மையை தீர்மானிப்பது சட்டத்தின் 3 மற்றும் 4-வது பிரிவுகளை மீறாது என்று அவர் குறிப்பிட்டார்.


அதாவது ஆகஸ்ட் 15, 1947 அன்று ஒரு வழிபாட்டுத் தலத்தின் தன்மை பற்றிய விசாரணையை அனுமதிக்கலாம். பின்னர் அந்த இடத்தின் தன்மையை மாற்ற முடியாது.


மதுரா மற்றும் ஞானவாபி ஆகிய இரண்டு வழக்குகளிலும், மஸ்ஜித் தரப்பு வழிபாட்டுத் தலங்கள் சட்டத்தின் இந்த விளக்கத்தை சவால் செய்துள்ளது. 1991-ம் ஆண்டு சட்டம் அத்தகைய மனுவைத் தாக்கல் செய்வதைத் தடுக்கிறதா அல்லது வழிபாட்டுத் தன்மையின் இறுதி மாற்றத்தைக் கூடத் தடுக்கிறதா என்ற இந்த ஆரம்பப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான இறுதி வாதங்களை உச்சநீதிமன்றம் இன்னும் கேட்கவில்லை.


சம்பல் வழக்கில், இது தொடர்பான நிகழ்வுகள் விரைவாக முன்னேறியுள்ளன. குடிமை வழக்கு செல்லுபடியாகுமா என்பது குறித்து மாவட்ட நீதிமன்றம் இன்னும் முடிவு எடுக்கவில்லை. இந்து தரப்புக்கு சரியான உரிமைகோரல் இருப்பதாக பூர்வாங்க கண்டுபிடிப்பு செய்யப்படுவதற்கு முன்பு, கணக்கெடுப்பு உத்தரவு முதலில் வெளியிடப்பட்டது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடரும் முன்பே இந்த உத்தரவு நிறைவேற்றப்பட்டது.




Original article:

Share: