முக்கிய குறிப்புகள்:
— உலகின் அதிக மாசுபாடு அடைந்த நகரங்களில் ஒன்றாக இருந்த பெய்ஜிங், இப்போது மிகவும் சுத்தமான காற்றைக் கொண்ட நகரமாக மாறியதற்கு வலுவான கொள்கைகளும் மற்றும் பல்வேறு துறைகளின் ஒருங்கிணைந்த முயற்சிகளுமே காரணமாகும்.
— 2008-ஆம் ஆண்டு ஒலிம்பிக்கிற்கு முன்னதாக, பெய்ஜிங் அரசாங்கம் அவசர மாசுபாட்டுக் குறைப்பு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தியது. வாராந்திர காற்றின் தர அறிக்கைகளை வெளியிட்டது, மேலும் மாசுபாட்டின் மூலங்களை உன்னிப்பாகக் கண்காணிக்க அமைப்புகளை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
— முக்கியமாக, ஒலிம்பிக் போட்டிகளுக்குப் பின்னரும் கூட சீனா இந்த சுற்றுச்சூழல் மாசு தடுப்பு முயற்சிகளைத் தொடர்ந்தது. செப்டம்பர் 2013-ஆம் ஆண்டில், பெய்ஜிங் ஒரு ஐந்தாண்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியது, அதில் நகரின் காற்று மாசுபாடு "தீவிரமானதாக" ஆகிவிட்டது என்பதை ஒப்புக்கொண்டது — இதுவே தொடர் நடவடிக்கைகளுக்கான ஒரு முக்கிய முதல் படியாகக் கருதப்படுகிறது.
— தேசியத் திட்டம் தெளிவான இலக்குகளை, கடுமையான கார்பன் உமிழ்வுத் தரநிலைகள், மற்றும் வலுவான அமலாக்கத்தை நிர்ணயித்தது, இதில் போக்குவரத்துத் துறையில் ஆரம்பத்திலேயே கவனம் செலுத்தப்பட்டது.
— பெய்ஜிங் நகரம், குறிப்பாகப் பொதுப் போக்குவரத்தில், மின்சார வாகனங்களுக்கான சீனாவின் மாற்றத்திற்கு வழிகாட்டியது. மற்ற நகரங்களும் அதைப் பின்பற்றத் தூண்டியது. 2017-ஆம் ஆண்டில், ஷென்சென் நகரம் தனது 16,000 பொதுப்போக்குவரத்துப் பேருந்துகள் அனைத்தையும் மின்மயமாக்கிய உலகின் முதல் நகரமாக ஆனது. ஷாங்காய் மற்றும் ஹாங்க்சோ நகரங்கள் இந்த நடவடிக்கையைப் பின்பற்றின.
— பெய்ஜிங்கில், புதிய பெட்ரோல் அல்லது டீசல் கார் வாங்க விரும்புவோர் உரிமத்திற்காக நகர அளவில் நடக்கும் குலுக்கல் முறையில் பங்கேற்க வேண்டியிருந்தது. அதேசமயம், மின்சாரக் கார் வாங்குபவர்கள் இலகுவாக உரிமத் தகடுகளைப் பெற முடிந்தது, இது அவர்களுக்கு ஓர் ஊக்கத்தை அளித்தது. மேலும், இந்தத் திட்டம் பழைய கார்களைப் பயன்படுத்தாமல் அப்புறப்படுத்தவும், பயன்பாட்டில் உள்ள கார்களுக்கு ஆய்வுகளை அதிகரிக்கவும் கட்டாயப்படுத்தியது.
— போக்குவரத்து கட்டுப்பாடுகளை முதன்மையாகக் கொண்ட, சீனாவின் திட்டமானது மேலும் நிலக்கரி மூலம் இயங்கும் கொதிகலன்களையும், தெளிவான ஊக்கத்தொகைகள் மற்றும் அபராதங்களுடன் கூடிய மறுசீரமைக்கப்பட்ட தொழில்துறைகளையும் குறிவைத்து, கார்பன் உமிழ்வுகளைக் குறைக்க திட்டமிட்டது. மேலும், இது பெய்ஜிங்கைச் சுற்றியுள்ள நகர்ப்புறப் பகுதிகளை மேம்படுத்துவதன் மூலமும், நகரத்தில் பசுமையான இடங்களை அதிகரிப்பதன் மூலமும் காற்று மாசுபாட்டைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது.
— காற்று மாசுபாட்டை எதிர்த்துப் போராடுவது அதிக செலவை ஏற்படுத்தியுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன. ஐக்கியநாடுகள் சுற்றுச்சூழல் திட்டத்தின்படி (United Nations Environment Programme), பெய்ஜிங்கின் செலவு 2013-ஆம் ஆண்டில் வெறும் 450 மில்லியன் டாலரிலிருந்து 2017-ஆம் ஆண்டில் 2.5 பில்லியன் டாலருக்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
— மின்சாரம் மற்றும் தொழில்துறைக்காக நிலக்கரியை நம்பியிருப்பதைச் சீனா குறைத்துள்ளதுடன், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டையும் அதிகரித்துள்ளது, என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் லீ குறிப்பிட்டுள்ளார். பல தொழில்களுக்கான மாசுபாடு விதிகள் கடுமையாக்கப்பட்டுள்ளன. மேலும், கனரகத் தொழில்கள் பொதுவாக தலைநகருக்கு வெளியே இயங்க ஊக்குவிக்கப்படுகின்றன என்றும் தெரிவித்தார்.
— இந்தியாவில் நிலைமை தலைகீழாக உள்ளது. டெல்லியில் காற்றுமாசு மோசமடைந்து வரும் நிலையிலும், 300 கி.மீ. சுற்றளவுக்குள் உள்ள பல அனல் மின் நிலையங்கள், சல்ஃபர் டை ஆக்சைடு (sulphur dioxide) வெளியேற்றத்தைக் குறைக்க அத்தியாவசியமான, 'ஃப்ளூ வாயு கந்தகநீக்கம் (flue gas desulphurisation (FGD))' கருவிகள் இல்லாமல் இன்னும் இயங்கி வருவதாகத் தெரிவிக்கின்றனர்.
— சல்ஃபர் டை ஆக்சைடு (Sulphur dioxide) மற்ற காற்றுச் சேர்மங்களுடன் (air compounds) இணைந்து, மிகநுண் துகள்கள் (Particulate Matter 2.5 (PM 2.5)) எனப்படும் மிகச்சிறிய துகள்களை உருவாக்குகிறது. இந்தத் துகள்கள் 2.5 மைக்ரோமீட்டருக்கும் குறைவாக இருப்பதால், வெறும் கண்ணுக்குத் தெரிய வாய்ப்பில்லை.
— அக்டோபர் மாதத்தில், பிரதமரின் அலுவலகத்தில் நடைபெற்ற ஒரு உயர்மட்டக் கூட்டத்தில், தேசிய தலைநகர் பகுதியில் நீடித்திருக்கும் பனிப்புகை (smog) ஏற்படுவதற்கு வாகனப் புகையே ஒரு முக்கியக் காரணம் எனச் சுட்டிக்காட்டப்பட்டது. மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் மின்சார வாகனங்களுக்கு மாறுவதைத் துரிதப்படுத்தவும், மின்னேற்று நிலையங்களை விரிவாக்கவும், மற்றும் அமலாக்கத்தை வலுப்படுத்தவும் வலியுறுத்தப்பட்டன என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழானது கடந்த மாதம் செய்தி வெளியிட்டுள்ளது.
— காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்துவதற்கான சீனாவின் முயற்சிகள் இதுவரை நாட்டின் கிழக்குப் பகுதிகளில் கவனம் செலுத்தி வருகின்றன. 2013-ஆம் ஆண்டு நாட்டின் மாநில கூட்டமைப்பு வெளியிட்ட தேசிய காற்று மாசுபாட்டு செயல் திட்டம், பெய்ஜிங்-தியான்ஜின்-ஹெபே பகுதியில் உள்ள நகரங்களுக்கும், யாங்சே மற்றும் பேர்ல் நதிகளின் டெல்டாக்களுக்கும் PM 2.5 வரம்புகளை நிர்ணயித்தது.
உங்களுக்குத் தெரியுமா?
— உலகின் பெரும்பாலான மின்சார உற்பத்தியானது இன்னும் நிலக்கரியில் இருந்தே வருகிறது. இந்தியாவில், 70 சதவீதத்துக்கும் அதிகமான மின்சாரம் நிலக்கரி மூலமே தயாரிக்கப்படுகிறது. உலக அளவில் மிகக்குறைந்த மின்சாரக் கட்டணங்களைக் கொண்டிருந்தாலும், இந்தியாவின் தனிநபர் மின்சாரப் பயன்பாடு குறைவாகவே உள்ளது எனக் கூறப்படுகிறது.
— கால அட்டவணையின் குழு 16-ல் உள்ள உலோகம் அல்லாத சல்பர், அமில ஆக்சைடுகளை உருவாக்குகிறது. குறிப்பாக சல்பர்-டை-ஆக்சைடு (SO₂), இது முக்கியமாக நிலக்கரி எரி மின்உற்பத்தி நிலையங்களிலிருந்து வெளிப்படும் ஒரு முக்கிய காற்று மாசுபடுத்தியாகும். சல்பர்-டை-ஆக்சைடானது (SO₂) அமிலப் புகைமூட்டம், அமில மழை மற்றும் இரண்டாம் நிலை ஏரோசோல்களை (secondary aerosols) ஏற்படுத்துகிறது என்று கூறப்படுகிறது.
— அமெரிக்காவில், சல்பர்-டை-ஆக்சைடு (SO₂) என்பது தூய காற்றுச் சட்டத்தின்கீழ் (Clean Air Act) ஒரு அளவுகோல் மாசுபடுத்தியாக வரையறுக்கப்படுகிறது. மேலும், இது சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிறுவனம் (Environmental Protection Agency (EPA)) மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது. இந்தியாவில், காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டமானது, 1981 (Air (Prevention and Control of Pollution) Act, 1981), குடியிருப்பு/தொழில்துறை பகுதிகளுக்கு ஆண்டு சராசரி சல்பர்-டை-ஆக்சைடு (SO₂) வரம்பை 50 µg/m³ ஆகவும், சூழலியல்ரீதியாக உணர்திறன் மண்டலங்களுக்கு 20 µg/m³ ஆகவும் நிர்ணயித்துள்ளது. இரண்டு பகுதிகளுக்கும் 24-மணி நேர சராசரி வரம்பு 80 µg/m³ ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
— நிலக்கரியில் 0.5–6 சதவீதம் சல்பர் உள்ளது. இது கரிம (organic) சல்பர் (கார்பனுடன் பிணைக்கப்பட்டது) மற்றும் கனிம (inorganic) சல்பர் முதன்மையாக இரும்புப் பைரைட்டுகளாக (FeS2) உள்ளது. கனிம (inorganic) சல்பரை பகுதியளவில் கழுவுதல் மற்றும் தூளாக்குதல் மூலம் அகற்றலாம். மற்ற முக்கிய SO2 ஆதாரங்களில் பெட்ரோலிய சுத்திகரிப்பு, தாமிரத்தை உருக்குதல் மற்றும் சிமென்ட் உற்பத்தி ஆகியவை அடங்கும்.
Original article : What are the steps taken by the government to curb air pollution? -Khushboo Kumari