நலத்திட்ட அடிப்படையிலான உதவியிலிருந்து, மக்கள் பங்கேற்பு மிக்க கட்டமைப்பை நோக்கி படிப்படியாகவும் உறுதியாகவும் மாற்றம் நிகழ்ந்துள்ளது.
இந்தியாவில் அதிகரித்துவரும் வயதான மக்கள்தொகை ஒரு பெரிய ஓய்வூதிய சவாலாக மாறியுள்ளது. இன்று, 153 மில்லியனுக்கும் அதிகமான இந்தியர்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மேலும் இந்த எண்ணிக்கை 2050-ஆம் ஆண்டுக்குள் 347 மில்லியனை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சில வயதான இந்தியர்கள் முறையான ஓய்வூதிய அமைப்புகளால் பயனடைந்தாலும், 88 சாதவீதத்துக்கும் அதிகமான மூத்த குடிமக்கள் இன்னமும் பெரிய முறைசாரா பொருளாதாரத்தில் பணிபுரிகிறார்கள், அவர்களுக்கு ஓய்வூதியங்கள் அல்லது நம்பகமான சமூக பாதுகாப்பு இல்லை (விளக்கப்படம் 1). இந்தக் கட்டுரை, முறைசாரா துறையில் நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்த ஓய்வூதிய திட்டங்கள் எவ்வாறு வளர்ச்சியடைந்துள்ளன என்பதை ஆராய்கிறது.
இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (Indira Gandhi National Old Age Pension Scheme (IGNOAPS)), 1995-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது, வறுமைக் கோட்டிற்குக்கீழ் வாழும் 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு நிதியுதவி வழங்குகிறது. பிந்தைய சீர்திருத்தங்கள் தகுதியை விரிவுபடுத்தி ஆதரவை அதிகரித்தன. இது அதிக எண்ணிக்கையிலானோர் திட்டத்தில் சேர வழிவகுத்தது. முறைசாரா மற்றும் பொருளாதாரரீதியில் பாதிக்கப்படக்கூடிய பிரிவுகளில் உள்ள வயதானவர்களுக்கு ஒரு வழக்கமான வருமானத்தை வழங்கிய முதல் பெரிய தேசிய முயற்சியாகக் கருதப்படுகிறது. இதற்கிடையில், அமைப்புசார்ந்த துறையில் பணிபுரியும் அரசு ஊழியர்கள் பழைய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் (Old Pension Scheme (OPS)) கொண்டு வரப்பட்டனர்.
ஆராய்ச்சியின்படி, நலத்திட்டங்களைப் போலல்லாமல், பங்களிப்பு ஓய்வூதியத் திட்டங்கள் (contributory pension schemes) வளரும் நாடுகளில் முறையான சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிக்க உதவுகின்றன. 2015-16-ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிமுகப்படுத்தப்பட்ட அடல் ஓய்வூதிய திட்டம் (Atal Pension Yojana - APY), 18 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் ஓய்வூதியக் கணக்கில் தொடர்ந்து பணம் செலுத்தும் ஒரு பங்களிப்புத் திட்டமாகும். ஓய்வுபெறும்போது, அவர்கள் திரட்டப்பட்ட தொகையை வட்டியுடன் பெறுவார்கள்; வருமானம் (returns) குறைவாக இருந்தால், அரசாங்கம் குறைந்தபட்ச ஓய்வூதியத்திற்கு உத்தரவாதம் அளிக்கிறது. முறைசாரா துறையில், குறிப்பாக விவசாயத்தில், அவ்வப்போது வருமானம் வரும் முறையைக் கருத்தில் கொண்டு, அடல் ஓய்வூதியத் திட்டத்தில் மாதந்தோறும் பங்களிப்பு செலுத்த வேண்டிய அவசியமில்லை – மாதாந்திரம், காலாண்டு அல்லது அரையாண்டுக்கு ஒருமுறை என்று விருப்பப்படி பங்களிப்பு செலுத்தலாம் என்கிற முறை பின்பற்றப்படுகிறது.
முறைப்படுத்தப்பட்ட துறைக்கு, பங்களிப்புத் திட்டமான புதிய ஓய்வூதியத் திட்டத்தால் (New Pension Scheme (NPS)) பழைய ஓய்வூதியத் திட்டம் (Old Pension Scheme (OPS)) 2004-ஆம் ஆண்டில் மாற்றப்பட்டது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டமானது, அனைத்து பெருநிறுவன ஊழியர்களுக்கும் சேமிப்புக் கணக்குடன் கூடிய ஒரு பெருநிறுவன மாதிரியையும் உள்ளடக்கியது. சமீபத்தில், புதிய ஓய்வூதியத் திட்டம் 2.0 அறிமுகப்படுத்தப்பட்டது. இது 100 சதவீதப் பங்கு முதலீட்டை அனுமதிக்கிறது மற்றும் நெகிழ்வான பல-திட்ட விருப்பங்களைத் தருகிறது – இது இளம் வயது, அதிக ஆபத்தை ஏற்கத் துணியும் அதிகம் கவரும் ஒரு அம்சமாகும். அடல் ஓய்வூதியத் திட்டம் (APY) மற்றும் புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) இரண்டும் துறைகள் முழுவதும் உள்ளடக்கத்தை ஊக்குவிக்கும் ஒரு வலுவான நீண்டகால நிதிப் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குகின்றன.
புதிய தொழிலாளர் சட்டங்கள் 'ஊதியம்' என்பதற்கு ஒரு சீரான வரையறையை அறிமுகப்படுத்தியுள்ளன. அதன்படி, அடிப்படை ஊதியம் (basic pay) மொத்த வருவாயில் (total earnings) குறைந்தது 50 சதவீதமாக இருக்க வேண்டும். இதன் மூலம், நிறுவனங்கள் சலுகைகளை (allowances) அதிகரிப்பதன் மூலம் அடிப்படை ஊதியத்தைக் குறைக்கும் பழைய முறை மாற்றப்பட்டுள்ளது. ஓய்வூதியம், பணிக்கொடை (gratuity), மற்றும் பிற சமூகப் பாதுகாப்பு பணபலன்கள் ஆகியவை இப்போது ஒரு உயர்வான அடிப்படைத் தொகையின் (higher base) அடிப்படையில் கணக்கிடப்படுவதால், தொழிலாளர்கள் வலுவான நிதிப் பாதுகாப்பைப் பெறுகிறார்கள்.
இந்தியாவின் ஓய்வூதிய சீர்திருத்தங்கள் ஒரு தெளிவான முன்னேற்றத்தைக் காட்டுகின்றன, ஒவ்வொரு கட்டத்திலும் முன்னர் கண்டறியப்பட்ட தேவைகளை அவை நிவர்த்தி செய்கின்றன. ஒரு சமூக நலக் கண்ணோட்டத்தின் (social-welfare lens) வழியாகப் பார்க்கும்போது, அரசாங்கம் முதலில் மூத்த குடிமக்களின் அடிப்படைத் தேவைகளுக்கு ஆதரவளிக்க இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம் (IGNOAPS) மற்றும் பழைய ஓய்வூதியத் திட்டம் (OPS) ஆகியவற்றை அறிமுகப்படுத்தியது. அடிப்படைப் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டபிறகு, கவனம் நிதிசார் உள்ளடக்கத்தை நோக்கியும், புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் பின்னர் புதிய ஓய்வூதியத் திட்டம் 2.0 (NPS 2.0) மூலம் சேமிப்பு மற்றும் முதலீட்டுப் பழக்கங்களை மேம்படுத்துவதை நோக்கியும் மாறியது. துறைசார் இடைவெளியைக் குறைக்க (sectoral gap), இதே போன்ற நடத்தை ஊக்கத் திட்டங்கள் அடல் ஓய்வூதியத் திட்டத்தின் (APY) மூலம் முறைசாராத் துறை தொழிலாளர்களுக்கும் விரிவுபடுத்தப்பட்டன.
இந்தத் திட்டங்களில் பல வறுமைக் கோட்டிற்கு கீழே (Below Poverty Line (BPL)) உள்ள நபர்களை இலக்காகக் கொண்டுள்ளன. மேலும், முறைப்படுத்தப்பட்ட ஓய்வூதிய பலன்கள் கிடைக்காத அமைப்புசாரா துறையில் பணிபுரிபவர்களை உள்ளடக்குவதற்காக இவை உருவாக்கப்பட்டுள்ளன. இருப்பினும், பல தகுதியான நபர்களுக்கு இன்னும் இந்தத் திட்டங்களைப் பற்றித் தெரியவில்லை. இந்தியாவின் நெடுங்கால முதுமை ஆய்வின்படி (Longitudinal Ageing Survey of India (LASI), 2017–18 ஆம் ஆண்டில், 55 வயதுக்கு மேற்பட்டவர்களில் 42 சதவீதம் அளவிலான தகுதி வாய்ந்த முதியவர்கள் புதிய ஓய்வூதியத் திட்டம் (NPS) மற்றும் அதன் தகுதி விதிகளைப் பற்றி அறிந்திருக்கவில்லை என்று தரவுகள் தெரிவிக்கின்றன. (விளக்கப்படம் 2).
சமூகநலத் திட்டங்கள் குறித்த குறைந்த விழிப்புணர்வையும் மற்றும் துண்டிக்கப்பட்ட அணுகலையும் நிவர்த்தி செய்ய, அரசு அமைப்பு சாரா துறை தொழிலாளர்களுக்கான தேசிய தரவுத்தளமாக 'இ-ஸ்ரம்' (e-SHRAM) இணையதளத்தை அறிமுகப்படுத்தியது. இது, தொழிலாளர்கள் தங்களைப் பதிவு செய்யவும், அவர்கள் தகுதி பெறும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள் பற்றிய தகவல்களை அணுகவும் உதவுகிறது. மேலும், 55 வயதுக்கு மேற்பட்டவர்களில், சுமார் 75.6 சதவீதம் பெண்கள் மற்றும் 68 சதவீதம் ஆண்கள் அமைப்பு சாரா துறையில் பணிபுரிகின்றனர் என்று இந்தியாவின் நெடுங்கால முதுமை ஆய்வின் (LASI) தரவுகள் தெரிவிக்கின்றன.
இ-ஸ்ரம்' (E-SHRAM) என்பது முறைசாரா தொழிலாளர்களை நாட்டின் முறையான சமூகப் பாதுகாப்பு அமைப்பின்கீழ் கொண்டு வருவதற்கான ஒரு முக்கியமான படி என்றாலும், அதன் வெற்றி என்பது முறையான பதிவு, விழிப்புணர்வு, மற்றும் சரியான பலன்களை வழங்குதல் போன்ற முக்கியமான சிக்கல்களைத் தீர்ப்பதில்தான் உள்ளது என்கின்றனர். உதாரணமாக, பதிவு செய்ய ஆதார் அடையாள அட்டை இணைப்புடன் கூடிய தொலைபேசி எண் மற்றும் ஒரு சேமிப்பு வங்கி கணக்கு தேவைப்படுகிறது, இது சிலர் விடுபட வழிவகுக்கும். மேலும், இந்தியாவின் விரிவான ஆண்டு தொகுதி ஆய்வுவின்படி (Comprehensive Annual Modular Survey of India) (2022-23), முதியவர்களில் 63 சதவீதம் பேருக்கு இணையத்தைப் பயன்படுத்தத் தெரியவில்லை, இது மிகவும் பாதிக்கப்படக்கூடிய பிரிவினர் ஒதுக்கிவைக்கப்படுவாதற்கான அபாயத்தை ஏற்படுத்துகிறது.
இந்தியாவின் ஓய்வூதியத் திட்டங்கள் பழைய நலத்திட்ட அடிப்படையிலான உதவியிலிருந்து, பங்களிப்பு அடிப்படையிலான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய முறைக்கு படிப்படியாக மாறி வருகின்றன. திட்டம் சார்ந்த விழிப்புணர்வு இன்னும் குறைவாக இருந்தாலும், e-SHRAM போன்ற திட்டங்கள் முதியோருக்கான தரவு அடிப்படையிலான கொள்கைகளை நோக்கி நகர்வதைக் காட்டுகின்றன. இந்தத் தொடர்ச்சியான சீர்திருத்தங்கள் அனைவரையும் உள்ளடக்கிய ஓய்வூதியக் கொள்கைகளை உருவாக்கவும், முதியவர்களின் பங்களிப்பை மதிக்கவும் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Original article : The evolution of pension reforms in India. -Shreya Bhattacharya and Akshaya Ranganath