வாக்காளர் பட்டியலைத் திருத்துவதும் சரிபார்ப்பதும் இயல்பான, தவறாமல் செய்யவேண்டிய வழக்கமான வேலையாகும். இந்தத் திருத்தங்கள் தானாகவே யாருடைய வாக்களிக்கும் உரிமையையும் பறிப்பதாகவோ அல்லது குறிப்பிட்ட நபர்களை/குழுக்களை வேண்டுமென்றே இலக்கு வைப்பதாகவோ அர்த்தம் ஆகாது.
1950-ஆம் ஆண்டு ஏப்ரல் 12-ஆம் தேதி, பாராளுமன்றத்தில், மக்கள் பிரதிநிதித்துவ மசோதாவை (Representation of the People Bill) அறிமுகப்படுத்தியபோது, டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் அவர்கள், தேர்தலை நடத்துவதற்கு வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பது அத்தியாவசியம் என்று வலியுறுத்தினார். எனவே, வாக்காளர் பட்டியலைத் துல்லியமாக வைத்திருக்க, இந்தியாவில் உள்ள சட்டங்கள் வழக்கமான மற்றும் சிறப்பு புதுப்பித்தல்களுக்கு (regular and special updates) அனுமதிக்கின்றன.
இருப்பினும், சில மாநிலங்களில் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision - SIR) மேற்கொள்ள இந்தியத் தேர்தல் ஆணையம் (Election Commission of India - ECI) எடுத்த முடிவு குறித்துக் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன. இது ஒரு முக்கியமான கேள்வியை எழுப்புகிறது: தேர்தல் ஆணையத்தின் இந்த முயற்சி ஜனநாயகத்தின் மீதான பொதுநம்பிக்கையை வலுப்படுத்துகிறதா அல்லது பலவீனப்படுத்துகிறதா?
அடித்தளத்தை மீட்டமைத்தல்
வாக்காளர் பட்டியலைப் புதுப்பிக்க இரண்டு வழிகள் உள்ளன: பட்டியலை முழுமையாகப் புதிதாக உருவாக்கும் தீவிர திருத்தங்கள் (intensive revisions) மற்றும் சிறிய அளவிலான புதுப்பித்தல்களைச் செய்யும் சுருக்கமான திருத்தங்கள் (summary revisions). கடைசியாக முக்கிய தீவிர திருத்தம் 2002-03ஆண்டில் நடந்தது. அண்மைக் காலங்களில், இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) பெரும்பாலும் சிறப்புச் சுருக்கத் திருத்தங்களையே (special summary revisions) பயன்படுத்தி வருகிறது. இவற்றில், மக்கள் வரைவுப் பட்டியலில் (draft list) உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபணைகளைச் சமர்ப்பிக்கலாம். இதற்கிடையில், விரைவான இடப்பெயர்வு, நகரங்களின் வளர்ச்சி மற்றும் அடிக்கடி நிகழும் குடியிருப்பு மாற்றங்கள் ஆகியவை பட்டியலில் பல போலிப் பதிவுகள், காலாவதியான பதிவுகள் மற்றும் பிழைகளை ஏற்படுத்தியுள்ளன. இதனால்தான் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் 2025 அவசியமானது.
ஜூன் 2025-ல் பீகாரில் SIR (Special Intensive Revision) செயல்படுத்தப்பட்டதன் விளைவாக, இந்த திருத்தப் பணியை அரசியலமைப்புக்கு எதிரானது மற்றும் சட்டவிரோதம் என்று குற்றஞ்சாட்டி உச்ச நீதிமன்றத்தில் பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த சவால், ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களிடம் புதிய எண்ணிக்கை மற்றும் ஆவணங்களை கட்டாயப்படுத்துவது உலகளாவிய வயது வந்தோர் வாக்குரிமை என்ற அரசியலமைப்பு உரிமைக்கு முரணானது மற்றும் வாக்காளர் பட்டியலில் இருந்து பெருமளவு வாக்காளர்களை நீக்குவதற்கு வழிவகுக்கும் என்ற அடிப்படையில் முன்வைக்கப்படுகிறது.இருப்பினும், குறிப்பிடத்தக்க வகையில், இத்தகைய பணியை மேற்கொள்ளும் அதிகாரம் நேரடியாக அரசியலமைப்புத் திட்டத்திலிருந்தே உருவாகிறது; அது வாக்காளர் பட்டியல் தயாரிப்பிற்கான மேற்பார்வை, இயக்குதல் மற்றும் கட்டுப்பாட்டை தேர்தல் ஆணையத்திடம் (ECI) ஒப்படைக்கிறது. இந்தப் பணியின் மையத்தில், அரசியலமைப்பின் 326-வது பிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளபடி, தகுதியுள்ள குடிமக்கள் மட்டுமே வாக்களிப்பதை உறுதி செய்வதற்கான ECI-யின் முயற்சி உள்ளது.வாக்காளர் பட்டியலின் திருத்தம் மற்றும் சரிபார்ப்பு என்பது வழக்கமான மற்றும் அவசியமான செயல்முறையாகும். இத்தகைய திருத்தங்கள் தாமாகவே வாக்குரிமை பறிப்பு அல்லது இலக்கு வைத்தல் என்று பொருள்படுத்துவதில்லை. ஜெர்மனி, கனடா போன்ற நாடுகள் வாக்காளர் பட்டியலைப் புதுப்பிப்பதற்கு சிவில் பதிவேடுகள் அல்லது பல்வேறு அரசு அமைப்புகளுக்கு இடையே தகவல் பகிர்வை நம்பியுள்ளன; இந்தியாவில் அத்தகைய வழிமுறை இல்லை. எனவே ECI தகுதியை தானாகவே, தனித்தனியாக சரிபார்க்க வேண்டிய கட்டாயம் உள்ளது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் 2025 மீதான விமர்சனம், யார் வாக்களிக்கலாம் என்பதைத் தீர்மானிக்கும் குடியுரிமையைச் சரிபார்ப்பதில் உள்ள அடிப்படைக் குறைபாடுகளை கவனிக்கத் தவறிவிட்டது. இந்திய சட்டமன்றம் இந்தக் குறைபாடுகளை எதிர்பார்த்து, இந்தியத் தேர்தல் ஆணையத்திற்கு பொருத்தமானதாகத் தோன்றும் விதத்தில் ஒரு சிறப்புத் திருத்தம் மேற்கொள்ள அதிகாரத்தை வழங்கியது. தகுதியுள்ள அனைத்து குடிமக்களும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதையும், தகுதியற்றவர்கள் நீக்கப்படுவதையும் உறுதி செய்வதற்காக, வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணி 2025 இந்த அரசியலமைப்பு ஆணையத்தின்கீழ் மேற்கொள்ளப்படுகிறது.
தேர்தல் ஆணையத்தின் விரிவான சிறப்புத் தீவிர திருத்தப்பணி 2025 வழிகாட்டுதல்கள் புதிய நிர்வாக முறைகள், சிறந்த தொழில்நுட்பம் மற்றும் அதிக வெளிப்படைத்தன்மை மற்றும் பங்கேற்பை அறிமுகப்படுத்துகின்றன. தற்போதைய சிறப்புத் தீவிர திருத்தப்பணி செயல்முறையின் ஒரு பகுதியாக, தேர்தல் ஆணையம் ஒவ்வொரு வாக்காளருக்கும் வீடுவீடாகச் சென்று சரிபார்ப்புப் பணியை மேற்கொள்கிறது. விண்ணப்பதாரர்கள் இப்போதும் தங்கள் குடியுரிமையை நிரூபிக்க வேண்டும், ஆனால் ஏற்றுக்கொள்ளக்கூடிய ஆவணங்களின் எண்ணிக்கை 2003-ஆம் ஆண்டில் இருந்த நான்கிலிருந்து இப்போது பதினொன்றாக அதிகரித்துள்ளது, இது வாக்காளர்களுக்கு செயல்முறையை எளிதாக்குகிறது. உச்சநீதிமன்றத்தின் பரிந்துரையைப் பின்பற்றி, தேர்தல் ஆணையம் தற்போது ஆதார் அடையாள அட்டையை அடையாளச் சான்றாக ஏற்றுக்கொள்கிறது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வாக்காளர்கள் தங்கள் தகுதியைக் கண்டறியவும் தேவையான ஆவணங்களைச் சேகரிக்கவும் உதவுகிறார்கள்.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப்பணி செயல்முறையானது தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதில் ஒரு பெரிய முன்னேற்றத்தைக் காட்டுகிறது. முதல் முறையாக, அனைத்து ஆதரவு ஆவணங்களும் டிஜிட்டல் வடிவில் உள்ளன. வாக்காளர் பட்டியல் படிவங்களும் இணையதளத்தில் கிடைக்கின்றன. வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, யார் வேண்டுமானாலும் இணையதளம் வழியாக உரிமைகோரல்கள் அல்லது குறைகளைச் சமர்ப்பிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தேர்தல் ஆணையமானது திறன் மேம்பாட்டை தனது ஊழியர்களுடன் மட்டும் நிறுத்தவில்லை; அது அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் வாக்குச்சாவடி நிலை முகவர்களுக்கும் பயிற்சி அளித்தது. சிறப்புத் தீவிர திருத்தப்பணி குறித்த வழிகாட்டுதல்கள் கட்சிகளுடன் இணைந்து பணியாற்றுவதையும், வாக்காளர் பட்டியல்களைப் பகிர்வதையும் அனுமதிக்கின்றன.
தரவுகள் என்ன காட்டுகின்றன
பீகாரில் நடந்த சிறப்பு சுருக்கத் திருத்தத்தின் போது 7.5 கோடிக்கும் அதிகமான பதிவுகள் சரிபார்க்கப்பட்டு, வரைவுப் பட்டியலிலிருந்து 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர். 1,60,813 கட்சிகளின் வாக்குச் சாவடி நிலை அலுவலர்களுடன் சேர்த்து, இணையவழி உரிமைகோரல்கள், ஆட்சேபனைகள் மற்றும் திருத்தங்களைச் சமர்ப்பிக்க உதவுவதற்காக மாநில சட்ட சேவைகள் ஆணையத்தின் தன்னார்வலர்களையும் உச்சநீதிமன்றம் நியமித்தது. இருந்தபோதிலும், வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்டபிறகு 2,53,524 உரிமைகோரல்கள் மற்றும் ஆட்சேபனைகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டன. இவற்றில் 36,500 மட்டுமே சேர்க்கப்படுவதற்கான கோரிக்கைகளாக இருந்தன. இது மொத்த நீக்கங்களில் வெறும் 0.56 சதவீதம் மட்டுமே என்கின்றனர். எந்தவொரு நீக்கத்திற்கும் எதிராக ஒரு முறையீடும்கூட முறையீடு செய்யப்படவில்லை. இந்தத் தரவுகள் சிறப்புத் தீவிர திருத்தச் செயல்முறை பெரும்பாலும் கவனமாகவும், பொறுப்புள்ளதாகவும் இருந்தது என்பதைக் காட்டுகின்றன.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த செயல்முறையை ஏற்றுக்கொண்டதன்மூலம், தேர்தல் ஆணையம் அதன் அரசியலமைப்பு கடமைகளை வசதிக்காகவோ அல்லது அரசியல் அழுத்தங்களுக்காகவோ விட்டுக்கொடுக்காது என்பதைக் காட்டியுள்ளது. அதற்குப் பதிலாக, அது அவற்றைத் தெளிவு, துணிச்சல் மற்றும் பொறுப்புணர்வுடன் நிறைவேற்றுகிறது என்கின்றனர். கடினமான பணிகளைத் தவிர்ப்பதன் மூலம் எதுவும் மாறப்போவதில்லை, மாறாக அவை மிகவும் தேவைப்படும்போது அவற்றைப் பொறுப்பேற்று செய்வதன் மூலம் ஒரு ஜனநாயகம் வலுப்பெறுகிறது. வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் 2025 என்பது அத்தகையதொரு முயற்சியாகக் கருதப்படுகிறது.
நைரா ஜீஜீபாய் மற்றும் குமார் உத்சவ், ஆகியோர் தேர்தல் சட்டத்தில் நிபுணத்துவம் பெற்ற வழக்கறிஞர்கள் ஆவர், மேலும் அவர்கள் சட்ட நடவடிக்கைகளில் இந்திய தேர்தல் ஆணையத்தை பிரதிநிதித்துவப்படுத்தியுள்ளனர்.
Original article : A deep cleaning of India’s electoral rolls -Naira Jejeebhoy, Kumar Utsav