அதிகாரத்தில் இருப்பவர்கள் அண்டை நாடுகளுடனான உறவுகளை பாதிக்கும் பிரச்சினைகளை எழுப்பக்கூடாது.
மார்ச் 31 அன்று, X தளத்தில் திரு. மோடி ஒரு பதிவை பதிவிட்டார். அதில் எப்படி காங்கிரஸ் கட்சி அலட்சியமாக கச்சத்தீவைக் இலங்கைக்கு கொடுத்தது என்பதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார். தமிழ்நாட்டின் மற்ற கட்சிகளைப் போலவே மாநில பா.ஜ.க.வும் கச்சத்தீவை மீட்பது பற்றி பேசி வருகிறது. ஆனால், பா.ஜ.க. வின் தேசிய தலைவர்களும் இதுபற்றி பேசுவதால், பிரச்னை மேலும் சிக்கலாகியுள்ளது.
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு அரசாங்கமும் (UPA), பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக (NDA) அரசாங்கமும் இந்த தீவை இலங்கையின் ஒரு பகுதியாகவே பார்த்துள்ளன. 2022 ஆம் ஆண்டில், வெளியுறவு அமைச்சகம், ராஜ்யசபாவில், கச்சத்தீவு இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டில் (International Maritime Boundary Line (IMBL)) இலங்கைக்கு அருகில் உள்ளது என்று கூறியது. 2013 இல், ஐக்கிய முற்போக்கு அரசாங்கம், உச்ச நீதிமன்றத்தில், கச்சத்தீவை திரும்பப் பெறுவது பற்றிய கேள்வியே இல்லை என்றுக் கூறியது. இந்தியாவுக்குச் சொந்தமான எந்தப் பகுதியும் இலங்கைக்கு வழங்கப்படவில்லை என்பதாலேயே இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
கச்சத்தீவு, பிரிட்டிஷ் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் சர்ச்சைக்குள்ளான பகுதியாகும். 1974 மற்றும் 1976 ஆம் ஆண்டுகளில், எல்லைப் பிரச்சனையைத் தீர்ப்பதற்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. இது இந்தியா-இலங்கை சர்வதேச கடல் எல்லைக் கோட்டிற்க்கு (International Maritime Boundary Line (IMBL)) வழிவகுத்தது. பிரதமர் மோடி பதவியேற்ற பிறகு, கச்சத்தீவு மீதான இறையாண்மைக்கு தீர்வு காணப்பட்டதாக வெளியுறவுத்துறை அமைச்சகம் நீதிமன்றத்தில் அளித்த வாக்குமூலத்தில் இதை உறுதி செய்தது. எவ்வாறாயினும், இந்த விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், இது நீதித்துறை மறுஆய்வில் உள்ளதாகவும் அரசாங்கம் நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது.
ஜவஹர்லால் நேரு மற்றும் இந்திரா காந்தி தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கம் இந்த விஷயத்தை தவறாகக் கையாண்டதா என்பதுதான் தற்போதைய சர்ச்சை. 1974 மற்றும் 1976 ஒப்பந்தங்களுக்கு முன், இந்தியத் தலைவர்கள், கச்சத்தீவு மீதான தங்கள் உரிமைக்கு வலுவான ஆதாரம் இல்லை என்பதை ஒப்புக்கொண்டதாக, பாஜக மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் (Right to Information (RTI)) மூலம் பெறப்பட்ட ஆவணங்கள் காட்டுகின்றன. 1803 ஆம் ஆண்டு முதல் ராமநாதபுர ஜமீன்தாரி ராஜாவின் ஒரு பகுதியாக இருந்த போதிலும், வரலாற்று ஆவணங்கள் இந்தியாவின் வழக்கை உறுதியாக ஆதரிக்கவில்லை. மார்ச் 1972 இல் தி இந்து நாளிதழின் ஒரு அறிக்கை, வருடாந்திர தேவாலய திருவிழா 90 ஆண்டுகளுக்கு முன்பு தொடங்கியது என்று குறிப்பிடுகிறது. 1974 இல் வெளியுறவுச் செயலர் கேவல் சிங் மற்றும் முதல்வர் மு. கருணாநிதி ஆகியோருக்கு இடையே சென்னையில் நடந்த சந்திப்பு, வரலாற்று உண்மைகள் இலங்கைக்கு சாதகமாக இருந்ததை சுட்டிக்காட்டுகின்றன. இது இந்திய அதிகாரிகளுக்கு கவலையாக இருக்கலாம்.
கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி என்ற கருத்தை பல உண்மைகள் ஆதரிக்கின்றன. 1874-76ல் இந்திய ஆய்வுக் குழு (Indian survey team) ஒன்று கச்சத்தீவு இலங்கையின் ஒரு பகுதி என்று குறிப்பிட்டது. 1921 ஆம் ஆண்டு முதல் இலங்கை தீவின் மீது இறையாண்மையைக் கோருகிறது. பாக் வளைகுடாவில் மீன்பிடி பாதையை குறிக்கும் பேச்சுவார்த்தை தொடங்கியது. சென்னை மாகாணத்தால் இந்தத் தீவு இந்தியாவுக்குச் சொந்தமானது என்பதை நிரூபிக்க முடியவில்லை. மேலும், 1920களின் நடுப்பகுதியில் இருந்து கச்சத்தீவு இலங்கையின் கட்டுப்பாட்டில் இருந்துள்ளது. இந்தக் கட்டுப்பாட்டை இந்தியா எதிர்க்கவில்லை.
காங்கிரஸ் கட்சி மற்றும் தி.மு.க.வை விமர்சிப்பவர்கள் நேருவின் கருத்தை "எங்கள் கோரிக்கையை கைவிடுகிறோம்" (giving up our claim) என்பதைப் பற்றி அடிக்கடிக் குறிப்பிடுகின்றனர் அல்லது அரசியலமைப்பு நிபுணர் எம்.சி. செட்டவால்டினின் (M.C. Setavald's) சாதகமானக் கருத்தை காங்கிரஸ் மற்றும் தி.மு.க. கட்சிகள் குறிப்பிடுகின்றன. எவ்வாறாயினும், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆவணங்கள் இந்த முடிவு நன்கு அடிப்படையானது என்பதை வெளிப்படுத்துகின்றன. தமிழக அரசியல் தலைவர்கள் கச்சத்தீவை மீட்பதற்காக அவ்வப்போது குரல் கொடுப்பதில் அர்த்தமுள்ளது. ஆனால், பிரதமர் அதையே செய்ய ஆரம்பித்தால் அது மிகவும் கவலைக்குரியதாக இருக்கும்.