ஊட்டச்சத்து குறைபாட்டை எவ்வாறு திறம்பட சமாளிப்பது -துலிகா சேத்

 உணவுப் பொருட்களை செறிவூட்டுவதற்கான அரசாங்கத் திட்டங்களுடன் சரிவிகித உணவுகள் குறித்த முன்முயற்சிகளும் இணைக்கப்பட வேண்டும்


ஒரு ரத்தவியல் நிபுனர் (haematologist) என்ற முறையில், இரும்புச்சத்து குறைபாடு உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் ஏற்படக்கூடிய இரத்த சோகை நோயாளிகளை நான் அடிக்கடி பார்க்கிறேன். இரும்புச்சத்து குறைபாடு முதன்மையாக குழந்தைகள் மற்றும் பெண்களை பாதிக்கிறது. ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நல்ல ஊட்டச்சத்து முக்கியமானது, ஆனால் ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கும் சில உடல்நலப் பிரச்சினைகளுக்கும் இடையிலான இருவழி உறவு பற்றி அனைவருக்கும் தெரியாது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இல்லாத உணவை தொடர்ந்து சாப்பிடுவது இரும்புச்சத்து குறைபாடு (iron deficiency) இரத்த சோகை (anaemia), வைட்டமின் ஏ குறைபாடு, துத்தநாக குறைபாடு (zinc deficiency) மற்றும் பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி (impair immunity) போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். மறுபுறம், செலியாக் நோய் (celiac disease), எச் பைலோரி (h. pylori) அல்லது புழு (worm infestations) தொற்று போன்ற நிலைமைகள் செரிமான அமைப்பை சீர்குலைத்து, ஊட்டச்சத்து குறைபாடுகளை ஏற்படுத்தும். நுண்ணூட்டச்சத்து குறைபாட்டால் (micronutrients)  தூண்டப்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு தலைமுறைகளுக்கு இடையேயான தாக்கங்களை ஏற்படுத்துகிறது, ஏனெனில் இரத்த சோகை உள்ள தாய்மார்களுக்கு இரத்த சோகை குழந்தைகள் பிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.


இரத்த சோகை இல்லாத இந்தியா (Anaemia Mukt Bharat (AMB)) போன்ற அரசாங்க திட்டங்கள் இரும்பு மற்றும் ஃபோலிக் அமிலம் (iron and folic acid (IFA)) மாத்திரைகள் மற்றும் பிற தடுப்பு நடவடிக்கைகளை வழங்குவதன் மூலம் இந்த பிரச்சினையை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளன. பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம் அத்தகைய மற்றொரு முயற்சியாகும். இருப்பினும், இந்த திட்டங்களை திறம்பட செயல்படுத்துவதில் இன்னும் பல சவால்கள் உள்ளன.


ஊட்டச்சத்து குறைபாட்டை நிவர்த்தி செய்வது ஒரு சிக்கலான பிரச்சினையாகும், இதில் பல தலையீடுகள் தேவைப்படுகிறது. உணவு ஒரு குறிப்பிடத்தக்க பாத்திரத்தை வகிக்கிறது. கடந்த காலத்தில், மக்கள் பொதுவாக தானியங்கள், பருப்பு வகைகள், காய்கறிகள், மசாலாப் பொருட்கள், மூலிகைகள், பழங்கள், விதைகள், கொட்டைகள் மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்ட மாறுபட்ட மற்றும் சீரான உணவை உட்கொண்டனர். இப்போதெல்லாம், உணவு முறைகள் பதப்படுத்தப்பட்ட மற்றும் சர்க்கரை உணவுகளை நோக்கி மாறிவிட்டன. அவை கலோரிகள் அதிகம் ஆனால் ஊட்டச்சத்து இல்லாதவை. பதப்படுத்தப்பட்ட உணவுகளின் நுகர்வு குறைப்பது சிறந்த ஆரோக்கியத்தை நோக்கிய ஒரு முக்கியமான படியாகும் என்பதை தனிநபர்கள் அங்கீகரிப்பது முக்கியம்.


தெற்காசியாவின் மக்கள்தொகையில் சுமார் 46% பேருக்கு மலிவு விலையில் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்று உணவு மற்றும் விவசாய அமைப்பு (Food and Agriculture Organization (FAO)) தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில், சுமார் 74% மக்கள் ஆரோக்கியமான உணவை வாங்க முடியாமலும், 39% பேர் போதுமான ஊட்டச்சத்துக்கள் இல்லாமல் இருப்பதாக, உலகில் உணவு பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை, 2023 கூறுகிறது.


பெரிய அளவிலான உணவு செறிவூட்டல் (Large-Scale Food Fortification (LSFF)) போன்ற சமீபத்திய அரசாங்க முயற்சிகள் முக்கியமானவை. நுண்ணூட்டச் சத்து நிரப்புதல் திட்டங்கள், உணவுப் பன்முகத்தன்மை ஊக்குவிப்பு மற்றும் நடத்தை மாற்றத்தைத் தூண்டுவதற்கான நடவடிக்கைகள் ஆகியவற்றுடன் இணைந்திருக்கும் போது, தற்போதுள்ள முயற்சிகளின் செயல்திறனை மேம்படுத்துவதற்கான மகத்தான ஆற்றலைக் கொண்டுள்ளது. உணவு வலுவூட்டல் சிறந்த தீர்வாக இருக்காது. இருப்பினும், இது ஒரு முக்கியமான முதல் படியாகும். பல நாடுகள் பல ஆண்டுகளுக்கு முன்பு உலகளாவிய உணவு வலுவூட்டலை ஏற்றுக்கொண்டன. இந்தியா இங்கு பின்தங்கியுள்ளது. 


1992 ஆம் ஆண்டில் தேசிய அயோடின் குறைபாடு கட்டுப்பாட்டுத் திட்டத்தின் (National Iodine Deficiency Disorders Control Programme) மூலம் செறிவூட்டலில் இந்தியா ஏற்கனவே அனுபவம் பெற்றுள்ளது. இது, முன்கழுத்துக் கழலை வீதத்தை வெற்றிகரமாக குறைத்தது. இன்று, இந்தியாவின் உணவு வலுவூட்டல் திட்டத்தில் கோதுமை மாவு, அரிசி, சமையல் எண்ணெய்கள் மற்றும் உப்பு போன்ற அத்தியாவசியப் பொருட்களில் நுண்ணூட்டச்சத்துக்களைச் சேர்ப்பது அடங்கும்.


செறிவூட்டப்பட்ட உணவுகளை ஏற்றுக்கொள்வதற்கு பயனாளிகளிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது அவசியம். சில நேரங்களில், வலுவூட்டப்பட்ட உணவுகளின் தோற்றமும் அமைப்பும் கவலைகளை எழுப்பக்கூடும். இதை நிவர்த்தி செய்ய, பயனாளிகளுக்கு தகவல், கல்வி மற்றும் தொடர்பு (information, education and communication (IEC)) பிரச்சாரம் தேவை. வலுவூட்டப்பட்ட உணவுகள் இரும்பு நச்சுத்தன்மைக்கு வழிவகுக்காது என்பதையும் ஆராய்ச்சி காட்டுகிறது. ஏனெனில், இரும்பின் அளவு இயற்கையாக நிகழும் ஊட்டச்சத்துக்களுக்கு ஒத்திருக்கிறது. உடலின் இயல்பான சுகாதார செயல்முறைகள் அதிகப்படியான இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கின்றன.


விழிப்புணர்வை அதிகரிக்க, சமூக வானொலி, வீடியோக்கள் மற்றும் வீடு வீடாகச் சென்று விழிப்புனர்வை ஏற்படுத்துதல் போன்ற பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தலாம். இவை அனைத்தும் வட்டார மொழிகளில் புரிதலை உறுதிப்படுத்தவும், தவறான கருத்துக்களை அகற்றவும், நம்பிக்கையை வளர்க்கவும் உதவும். முன்னோக்கி செல்லும் வழி என்பது தனிநபர் மற்றும் சமூக மட்டங்களில் ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்களை ஏற்றுக்கொள்வது மட்டுமல்லாமல், பெரிய அளவிலான உணவு செறிவூட்டல் (Large-Scale Food Fortification (LSFF)) போன்ற அரசின் உத்திகளையும் உள்ளடக்கியது.


கட்டுரையாளர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் ரத்தவியல் பேராசிரியர்




Original article:

Share: