“ஒரு வேட்பாளர், பல தொகுதிகள்” நடைமுறை குறித்து… - சந்தோஷ் குமார் தாஷ், சந்தோஷ் குமார் பாண்டா

 ஒரு நபர், ஒரு ஓட்டு" (‘one person, one vote’) என்பது வாக்காளர்களுக்கான முக்கிய கொள்கை என்றால், "ஒரு வேட்பாளர், ஒரு தொகுதி" (‘one candidate, one constituency’) என்பது அரசியல்வாதிகளுக்கு விதியாக இருக்க வேண்டும்.


முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான “ஒரே நாடு ஒரே தேர்தல்” (‘One Nation One Election’) குழு, மக்களவை மற்றும் மாநிலச் சட்டப் பேரவைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த பரிந்துரைத்தது. அப்போதிருந்து, இந்த யோசனையின் நேர்மறை மற்றும் எதிர்மறை அம்சங்கள், நடைமுறை சவால்கள் மற்றும் அதைச் சுற்றியுள்ள அரசியல் பற்றி அதிகம் விவாதிக்கப்பட்டது. எவ்வாறாயினும், அனைத்து அரசியல் குற்றச்சாட்டுகள் மற்றும் எதிர்குற்றச்சாட்டுகளுக்கு மத்தியில், ஒரு முக்கியமான பிரச்சினை கவனிக்கப்படாமல் உள்ளது. ஒரே வேட்பாளர் பல தொகுதிகளில் (one candidate contesting from multiple constituencies (OCMC)), ஒரே பதவிக்கு போட்டியிடுவதுதான் பிரச்சனையாக உள்ளது.


பின்னணி, சவால்கள் 


இந்திய அரசியலமைப்பு சட்டப் பேரவை மற்றும் நாடாளுமன்றத்தின் கீழ்சபைக்கு ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்த அனுமதிக்கிறது. இந்திய தேர்தல் ஆணையத்தை (ECI) நிறுவுவதைத் தவிர்த்து, இந்தத் தேர்தல்களை நடத்துவதற்கான விதிகளை அமைக்கும் அதிகாரத்தையும் இது நாடாளுமன்றத்திற்கு வழங்குகிறது. 1951ஆம் ஆண்டின் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் (Representation of the People Act 1951) "பல தொகுதிகளில் போட்டியிடுவது" என்ற பிரச்சினை குறிப்பிடப்பட்டுள்ளது. தொடக்கத்தில், ஒரு வேட்பாளர் எத்தனை தொகுதிகளில் போட்டியிடலாம் என்பதற்கு வரம்பு இல்லை. இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 70வது பிரிவின்படி, பல தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள், சில சமயங்களில் இரண்டிற்கு மேல், அனைத்திலும் வெற்றி பெற்று, ஒரு இடத்தைத் தவிர மற்ற அனைத்திலும் ராஜினாமா செய்யவேண்டிய சூழல் உருவானது. இதனால் அடிக்கடி இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. 


1996ஆம் ஆண்டில், நாடாளுமன்றம் இரண்டு தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும் வேட்பாளர்களைக் கட்டுப்படுத்தும் சட்டத்தை மாற்றியது. பல தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை நிறுத்துவதற்காக இந்த மாற்றம் செய்யப்பட்டது. இருப்பினும், நடைமுறை தொடர்ந்தது. குறிப்பாக, அடிக்கடி இடைத்தேர்தல் நடத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டது. நவம்பர் 2024-ல், மாநில சட்டசபைகளுக்கு 44 இடைத்தேர்தல்கள் நடந்தன. தற்போதைய, சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ததால் இந்த இடைத்தேர்தல் நடைபெற்றது.

 

பல தொகுதிகளில் வெற்றி பெறும் வேட்பாளர்களால் அடிக்கடி இடைத்தேர்தல்கள் பல பிரச்சனைகளை உருவாக்குகின்றன. முதலாவதாக, அவர்கள் வரி செலுத்துவோரின் செலவுகளை அதிகரிக்கிறார்கள். மக்களவைத் தேர்தலுக்கான நிர்வாகச் செலவை ஒன்றிய அரசு ஏற்கிறது. அதே, நேரத்தில் மாநில அரசுகள் சட்டப் பேரவைத் தேர்தல்களுக்குப் பணம் செலுத்துகின்றன. 2014 பொதுத் தேர்தலில், ₹3,870 கோடி செலவானது. 6% ஆண்டு பணவீக்கத்திற்கு ஏற்ப, 2024 பொதுத் தேர்தலுக்கு ₹6,931 கோடி அல்லது ஒரு இடத்துக்கு ₹12.76 கோடி செலவாகியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இரண்டு தொகுதிகளில் 10 அரசியல்வாதிகள் வெற்றி பெற்றால், இடைத்தேர்தலுக்கான கூடுதல் செலவு ₹130 கோடியாகும். இது ஒட்டுமொத்த தேர்தல் செலவீனத்துடன் ஒப்பிடும் போது சிறியதாக இருந்தாலும், உண்மையான பிரச்சினை அரசியல் கட்சிகளின் பெரிய செலவினமாகும். சமீபத்திய, பொதுத் தேர்தலில் அரசியல் கட்சிகள் ₹1,35,000 கோடி அல்லது ஒரு தொகுதிக்கு ₹250 கோடி செலவிட்டதாக ஊடக ஆய்வு மையம் மதிப்பிட்டுள்ளது. இந்தச் சுமை இறுதியில் பொதுமக்கள் மீதுதான் விழுகிறது. கறுப்புப் பணத்தில் இருந்து அதிக நிதி கிடைக்கிறது. இது நிதி வெளிப்படைத்தன்மைக்கு தீங்கு விளைவிக்கும்.


இரண்டாவதாக, வெற்றிபெறும் வேட்பாளர் முதல் ஆறு மாதங்களுக்குள் ராஜினாமா செய்யும்போது இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்படுகிறது. இந்த நிலை ஆளும் கட்சிக்கு சாதகமாக மாறுகிறது. இது பல மாநிலங்களில் இடைத்தேர்தல் தேர்தல் முடிவுகளில் நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆளும் கட்சி அதிக வளங்களைக் கொண்டுள்ளது மற்றும் அந்த கட்சி தனது தொண்டர்களுக்கு தேவையான ஆதரவை வழங்க முடியும். இத்தகைய சூழல் ஆளும் கட்சிக்கு பல்வேறு நன்மைகளை வழங்குகிறது. இது எதிர்க்கட்சிகளுக்கு பாதகத்தை ஏற்படுத்துகிறது. இது நாடாளுமன்ற ஜனநாயகத்தில் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்துகிறது. 


மூன்றாவதாக, ஒரு இடைத்தேர்தலை ஏற்பாடு செய்வதற்கான நிதிச் சுமை ஏற்கனவே தோற்கடிக்கப்பட்ட வேட்பாளர் மற்றும் அவரது கட்சியின் மீது விழுகிறது. இது அவர்களை மீண்டும் செலவிட கட்டாயப்படுத்துகிறது. 


நான்காவதாக, "ஜனநாயகம் என்பது மக்களுக்காகவும் மக்களால் நடத்தப்படும் ஆட்சி" என்ற பழமொழி, தேர்தல்கள் மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்துகிறது. எவ்வாறாயினும், ஒரு வேட்பாளர் பல இடங்களில் போட்டியிடும் போது, ​​அவர்கள் நிச்சயமற்ற தன்மையை எதிர்கொள்கின்றனர். இது பெரும்பாலும் மக்களின் நலன்களைவிட தலைவரின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கிறது. ஜனநாயகக் கோட்பாடுகளுக்கு எதிரானது மற்றும் பொதுமக்களின் தேவைகளுக்கு மேலாக அரசியலை வைக்கிறது.


ஐந்தாவது,  ஒரே வேட்பாளர் பல தொகுதிகளில் (one candidate contesting from multiple constituencies (OCMC)), சில நேரங்களில் தலைவர்களால் தங்கள் செல்வாக்கை விரிவுபடுத்த பயன்படுத்தப்படுகிறது. தேர்தலில் வெற்றி பெற அவர்களின் பிரபலத்தை நம்பியிருக்கிறது. இது கட்சியின் மீது தலைவரின் கட்டுப்பாட்டை காட்டுகிறது. குறிப்பாக, குடும்பம் அல்லது தலைவர் இயக்கும் கட்சிகளில். இது குடிமக்களின் பேச்சு சுதந்திர உரிமைக்கு எதிரானது. 2023-ல் ஒரு மனு (அஷ்வினி குமார் உபாத்யாய் vs யூனியன் ஆஃப் இந்தியா) வாதிடப்பட்டது. மக்கள் ஒரு பிரதிநிதியைத் தேர்ந்தெடுக்கும் போது, ​​அந்த நபர் தங்களை உண்மையிலேயே பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். பல இடங்களில் போட்டியிட்டு வெற்றி பெறுவதும், இடைத்தேர்தலுக்கு ஒன்றை விட்டுக் கொடுப்பதும் அரசியலமைப்பின் 19(1)(a) பிரிவை மீறுவதாகும். இந்த நடைமுறை வாக்காளர்களைக் குழப்பி ஏமாற்றமடையச் செய்கிறது. உதாரணமாக, 2024-ல் கேரளாவின் வயநாட்டில் ராகுல் காந்தி ராஜினாமா செய்தபோது, ​​பொதுத் தேர்தலில் 72.92% ஆக இருந்த வாக்குப்பதிவு இடைத்தேர்தலில் 64.24% ஆகக் குறைந்தது.


சில நன்மைகள் 


ஒரு வேட்பாளர் பல தொகுதிகளில் (OCMC) போட்டியிடும் நடைமுறை பல நாடுகளில் பொதுவானது மற்றும் சில நடைமுறை காரணங்களும் உள்ளன. முதலாவதாக, சில பகுதிகளில் வெற்றி பெறுவது உறுதியில்லாமல் வேட்பாளர்களுக்கு காப்புப்பிரதியை அளிக்கிறது. இரண்டாவதாக, இந்தியா போன்ற நாடுகளில், அரசியல் பெரும்பாலும் தலைவர் அல்லது குடும்பத்தைச் சுற்றியே சுழலும், அது தலைவர் அதிகாரத்தில் இருக்க அல்லது சுமுகமாக மாற உதவுகிறது. உதாரணமாக, 2021 மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலில் மம்தா பானர்ஜி தனது நந்திகிராம் தொகுதியை ராஜினாமாவேண்டிய சூழல் ஏற்பட்டது. மேலும், மற்றொரு தலைவர் பபானிபூரில் இருந்து ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. இதேபோல், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமியும் 2022 தேர்தலில் இதேபோன்ற சூழ்நிலையை எதிர்கொண்டார்.


சர்வதேச அனுபவம் 


ஒரு வேட்பாளர் பல தொகுதிகளில் (one candidate contesting multiple constituencies (OCMC)) போட்டியிடும் நடைமுறை இந்தியாவுக்கு தனித்துவமானது அல்ல. பாகிஸ்தானும் வங்களதேசமும் வேட்பாளர்கள் பல தொகுதிகளில் போட்டியிட அனுமதிக்கின்றன. ஆனால், அவர்கள் ஒரு இடத்தைத் தவிர மற்ற அனைத்தையும் ராஜினாமா வேண்டும். ஒரு வேட்பாளர் போட்டியிடக்கூடிய தொகுதிகளின் எண்ணிக்கையில் பாகிஸ்தான் எந்த வரம்பையும் வைக்கவில்லை. 2018 தேர்தலில் முன்னாள் பிரதமர் ஐந்து இடங்களில் போட்டியிட்டு நான்கு இடங்களை ராஜினாமா செய்தார். இதேபோல் பங்களாதேஷ், வேட்பாளர்கள் 2008 வரை ஐந்து தொகுதிகள் வரை போட்டியிட அனுமதித்தது, ஆனால் இப்போது அதை மூன்று ஆக மட்டுப்படுத்தியுள்ளது. இந்த நடைமுறை ஒரு காலத்தில் ஐக்கிய இராஜ்ஜியத்தில் (UK) பொதுவானதாக இருந்தது, ஆனால் 1983 முதல் தடை செய்யப்பட்டுள்ளது. பெரும்பாலான ஐரோப்பிய ஜனநாயக நாடுகள் தெளிவான பிரதிநிதித்துவம் மற்றும் பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதற்காக அதை படிப்படியாக அகற்றியுள்ளன. 


ஒரு வேட்பாளர் பல தொகுதிகளில் போட்டிடுவது நன்மைகளைவிட அதிக தீங்கு விளைவிக்கும். சீர்திருத்தங்களுக்கான கோரிக்கைகள் உள்ளன. சாத்தியமான தீர்வுகள் பரிசீலிக்கப்படலாம். முதலாவதாக, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951-ன் பிரிவு 33 (7)ஐ திருத்தி ஒரே பதவிக்கு பல தொகுதிகளில் இருந்து ஒரு வேட்பாளர் போட்டியிடுவதைத் தடை செய்ய வேண்டும். 2004ஆம் ஆண்டில் தேர்தல் ஆணையம் இந்த நடைமுறையை தடை செய்ய அரசாங்கத்துக்கு பரிந்துரைத்தது. 2015 ஆம் ஆண்டில் 255வது சட்ட ஆணைய அறிக்கையும் இதே பரிந்துரையை அளித்தது. 


இரண்டாவதாக, இடைத்தேர்தலுக்கான முழு செலவையும், ராஜினாமா செய்யும் வேட்பாளரிடம் இருந்து வசூலிக்க வேண்டும். இது பல தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை தடுக்கலாம். இந்திய தேர்தல் ஆணையம் (ECI) 2004-ல் இதைப் பரிந்துரைத்தது. இருப்பினும், வெற்றி பெறும் வேட்பாளர்கள் அல்லது அரசியல் கட்சிகள் செலவை ஏற்க முடியும் என்பதால் இந்த நடைமுறை தொடரலாம்.


மூன்றாவதாக, ஓராண்டுக்குப் பிறகு இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். இது வாக்காளர்களுக்கு தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு அதிக அவகாசத்தை அளிக்கிறது மற்றும் தோல்வியடைந்த வேட்பாளர் மீண்டும் மற்றொரு போட்டிக்கு தயாராக அனுமதிக்கிறது. இது செயல்முறையை மிகவும் நியாயமானதாக மாற்றும். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் 1951-ன் பிரிவு 151A ஐ மாற்றுவதன் மூலம் இதைச் செய்யலாம். தற்போதுள்ள சட்டத்தின்படி காலியாக உள்ள தொகுதியில் ஆறு மாதங்களுக்குள் இடைத்தேர்தல்களை நடத்த வேண்டும்.


தேர்தலை நடத்துவதால் அரசுக்கு அதிக பணம் செலவாகிறது. இந்தியாவில், ஆண்டு முழுவதும் தேர்தல்கள் நடக்கின்றன. இடைத்தேர்தல் அடிக்கடி தேவைப்படுவதால் நேரத்தையும் பணத்தையும் வீணடிக்கிறது. இந்த வளங்களை நாட்டின் வளர்ச்சிக்கு சிறப்பாக பயன்படுத்த முடியும். “ஒரு வேட்பாளர், ஒரு தொகுதி" (‘one candidate, one constituency’ (OCOC)) பிரச்சினையை மாற்ற முக்கிய அரசியல் கட்சிகளின் ஆதரவு தேவை. “ஒரே நாடு ஒரே தேர்தல்” (‘One Nation One Election’) யோசனையைப் போல் பல அரசியல் கட்சிகள் “ஒரு வேட்பாளர், ஒரு தொகுதி”யை ஆதரிக்கவில்லை. "ஒரு நபர், ஒரு வாக்கு" என்பது முக்கிய ஜனநாயகக் கொள்கை என்றால், அரசியல்வாதிகளுக்கு "ஒரு வேட்பாளர், ஒரு தொகுதி" என்பதை அமல்படுத்த வேண்டிய நேரம் இது.


சந்தோஷ் குமார் தாஷ், குஜராத்தின் ஆனந்தில் உள்ள இன்ஸ்டிடியூட் ஆஃப் ரூரல் மேனேஜ்மென்ட், ஆனந்த் (Institute of Rural Management Anand (IRMA))-யில் உதவி பேராசிரியர். சந்தோஷ் குமார் பாண்டா ஹைதராபாத் பல்கலைக்கழகத்தில் அரசியல் அறிவியலில் பி.எச்.டி ஆய்வாளர்.




Original article:

Share: