பட்டியலிடப்பட்ட வகுப்பினர், இதர பிற்படுத்தப்பபட்ட வகுப்பினர் இட ஒதுக்கீட்டில் மதத்தின் முக்கியத்துவத்தை உச்சநீதிமன்றமும் மத்திய அரசும் எவ்வாறு வரையறுக்க முயன்றன? - அஜய் சிஹ்னா கற்பூரம்

 முஸ்லிம்கள் போன்ற ஒரு மத சமூகத்தை மதத்தின் அடிப்படையில் இதர பிற்படுத்தப்பபட்ட வகுப்பினராக (OBC) அங்கீகரிப்பது சர்ச்சைக்குரிய விவாதங்களுக்கு வழிவகுத்தது. மதம் மாறிய ஆதிதிராவிடர்கள் இடஒதுக்கீட்டுக்கு தகுதியுடையவர்களா? என்பது நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்ட மற்றொரு பிரச்சினை. 


திங்களன்று (டிசம்பர் 9), உச்சநீதிமன்றம் "இடஒதுக்கீடு மதத்தின் அடிப்படையில் இருக்க முடியாது" என்று வாய்மொழியாக அறிவித்தது. இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான (OBC) இடஒதுக்கீட்டில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 77 வகுப்பினருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை ரத்து செய்யும் கொல்கத்தா உயர் நீதிமன்றத்தின் வெளிட்ட தீர்ப்பின் வழக்கை மே மாதம் நீதிபதிகள் பி.ஆர்.கவாய் மற்றும் கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் விசாரித்தனர். 


சில வாரங்களுக்கு முன்பு, நவம்பர் 26 அன்று, ஒரு பெண்ணும் அவரது குடும்பத்தினரும் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதாகக் கூறி, ஒரு பெண்ணின் பட்டியல் சாதி (Scheduled Caste (SC)) அந்தஸ்தை அங்கீகரிக்க உச்சநீதிமன்றம் மறுத்துவிட்டது.  


இந்த நிகழ்வுகள் மூலம், மதத்திற்கும் இடஒதுக்கீட்டிற்கும் இடையிலான உறவு மீண்டும் ஒருமுறை கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது. 1950- ஆம் ஆண்டில் இந்திய அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்ததிலிருந்து, இடஒதுக்கீடு சலுகைகளை வழங்குவதற்கு மதத்தை எந்த அளவிற்கு பரிசீலிக்க முடியும் என்பதை வரையறுக்க மத்திய அரசும் உச்ச நீதிமன்றமும் முயற்சித்துள்ளன. 





OBC இடஒதுக்கீட்டுக்கான அளவுகோலாக மதம் 


மதக் குழுக்களை OBC அல்லது பட்டியல் பழங்குடியினர் (SC) இடஒதுக்கீட்டின் பயனாளிகளாக அடையாளம் காண்பதற்கு எதிராக வெளிப்படையான தடை எதுவும் இல்லை. இருப்பினும், இடஒதுக்கீட்டின் எல்லைக்குள் மதக் குழுக்கள் அல்லது சமூகங்களை சேர்ப்பதற்கான முயற்சிகள் பெரும்பாலும் OBC பிரிவில் உள்ளன. 


அரசியலமைப்பின் பிரிவு 16 (4) மாநிலங்களுக்கு "எந்தவொரு பிற்படுத்தப்பட்ட வகுப்பு குடிமக்களுக்கும் ஆதரவாக" இடஒதுக்கீடு வழங்குவதற்கான அதிகாரத்தை மாநிலங்களுக்கு வழங்குகிறது.  மாநிலத்தின் கீழ் உள்ள சேவைகளில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லையெனில் இத்தகைய இடஒதுக்கீடுகள் வழங்கப்படலாம். உதாரணமாக, கேரளா 1956-ஆம் ஆண்டு முதல் OBC ஒதுக்கீட்டிற்குள் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கியுள்ளது. கர்நாடகா (1995-ல்) மற்றும் தமிழ்நாடு (2007-ல்) உள்ளிட்ட பிற மாநிலங்களும் முஸ்லீம் சமூகத்திற்குள் உள்ள குழுக்களுக்கு OBC  இடஒதுக்கீட்டை வழங்கியுள்ளன. 


நீதிபதி ஓ.சின்னப்பா ரெட்டி தலைமையிலான மாநிலத்தின் மூன்றாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் 1990-ஆம் ஆண்டில் தனது அறிக்கையை சமர்ப்பித்த பின்னர் கர்நாடகாவில் முஸ்லிம்களுக்கு இடஒதுக்கீடு வழங்கப்பட்டது. முஸ்லிம்கள் "ஒட்டுமொத்தமாக" சமூக மற்றும் பொருளாதார ரீதியாக பின்தங்கிய வகுப்பினராக கருதப்படலாம் என்று ஆணையம் கண்டறிந்தது. 2006-ஆம் ஆண்டில் நீதிபதி ராஜேந்தர் சச்சார் குழுவானது முஸ்லிம்களின் சமூக, பொருளாதார மற்றும் கல்வி நிலை குறித்த அறிக்கையை தயாரிக்க மத்திய அரசால் அமைக்கப்பட்டது. மத்திய அரசுத் துறைகள் மற்றும் நிறுவனங்களில் முஸ்லீம் OBC பிரதிநிதித்துவம் "மிகக் குறைவு" என்பதைக் கண்டறிந்தது. 


இந்திரா சஹானி vs  இந்திய ஒன்றியம் ( Indra Sawhney vs Union of India) (1992) வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு இந்த விவகாரத்தில் ஒரு புதிய பரிமாணத்தை சேர்த்தது. OBC  இடஒதுக்கீட்டின் நோக்கம் வெவ்வேறு குழுக்கள் எதிர்கொள்ளும் வரலாற்று பாகுபாட்டை நிவர்த்தி செய்வதாகும் என்றும், "மதம், இனம், சாதி, பாலினம், வம்சாவளி, பிறந்த இடம், குடியிருப்பு அல்லது அவற்றில் ஏதேனும் காரணத்தால் மட்டுமே எந்தவொரு வகுப்பினரையும் பின்தங்கியவர்களாக வகைப்படுத்த முடியாது" என்றும் நீதிமன்றம் கூறியது. அடிப்படையில், மதம் மற்றும் பிற குழு அடையாளங்கள் பொருத்தமானவை என்று நீதிமன்றம் கூறியது. ஆனால், OBC ஒதுக்கீட்டிற்குள் இடஒதுக்கீடு வழங்குவதற்கான ஒரே அளவுகோலாக இருக்க முடியாது. 


இந்த தீர்ப்பின் அடிப்படையில், கொல்கத்தா உயர் நீதிமன்றம் மே 22, 2024 அன்று, முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 77 வகுப்புகளுக்கு வழங்கப்பட்ட OBC இடஒதுக்கீட்டை ரத்து செய்தது. இந்த வகுப்புகளின் பின்தங்கிய நிலையை தீர்மானிக்க எந்தவொரு "புறநிலை அளவுகோல்களையும்" (“objective criteria”) பயன்படுத்தாமல் இடஒதுக்கீடு வழங்கப்பட்டதாகக் கூறியது. "இந்த சமூகங்களை OBC பிரிவுகளாக அறிவிப்பதற்கான ஒரே அளவுகோலாக மதம் உண்மையில் இருப்பதாகத் தெரிகிறது" என்றும் அது கூறியது. 


SC  இட ஒதுக்கீட்டில் மதம் ஒரு தடையாக 


அரசியலமைப்பின் பிரிவு 341 (1) "இந்த அரசியலமைப்பின் நோக்கங்களுக்காக பட்டியல் சாதிகள் என்று கருதப்படும் சாதிகள், இனங்கள் அல்லது பழங்குடிகள் அல்லது சாதிகள், இனங்கள் அல்லது பழங்குடிகளுக்குள் உள்ள பகுதிகள் அல்லது குழுக்களைக் குறிப்பிடுவதற்கு" ஜனாதிபதிக்கு அதிகாரம் அளிக்கிறது. அரசியலமைப்பு நடைமுறைக்கு வந்த சிறிது காலத்திலேயே, குடியரசுத் தலைவர் அரசியலமைப்பு (பட்டியல் சாதிகள்) ஆணையினை (1950) வெளியிட்டார். அதில் ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள பட்டியல் சாதி சமூகங்களின் விவரங்கள் உள்ளது. 


பிரிவு 3, "இந்து, சீக்கியர் அல்லது பௌத்த மதத்திலிருந்து வேறுபட்ட மதத்தைப் பின்பற்றும் எந்தவொரு நபரும் பட்டியல் சாதியைச் சேர்ந்தவராக கருதப்படமாட்டார்" என்று கூறுகிறது. இந்த உத்தரவு ஆரம்பத்தில் இந்துக்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டது. ஆனால், சீக்கிய மதத்திற்கு மாறிய SC  இந்துக்கள் (1956 இல்) மற்றும் பௌத்த மதத்திற்கு மாறியோருக்கும் (1990 இல்) விரிவுபடுத்தப்பட்டது. 


1983-ஆம் ஆண்டில் பட்டியல் சாதி ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்த சூசை என்ற செருப்பு தைக்கும் தொழிலாளியால் இந்த உத்தரவு முறையீடு செய்யப்பட்டது. ஆனால், அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதால் SC பிரிவுகளுக்கான அரசாங்க திட்டத்திற்கு அணுகல் மறுக்கப்பட்டது. அவர் கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய போதிலும், தான் இன்னும் ஆதி திராவிட சமூகத்தைச் சேர்ந்தவர் என்று அவர் வாதிட்டார். 


சூசை வழக்கில் நீதிமன்றம்  vs இந்திய ஒன்றியம் (Soosai vs Union of India ) (1985) மதம் மாறிய ஒருவர் மதம் மாறிய பிறகு தங்கள் சாதி அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்வாரா? என்பது பற்றி பதிலளிக்கவில்லை. ஆனால், SC பிரிவினரின் சலுகைகளைப் பெற மதம் மாறுவது மட்டும் போதாது என்று தீர்ப்பளித்தது. மதம் மாறிய பிறகும், அவர்கள் எதிர்கொண்ட பிரச்சனைகள், அவர்களின் புதிய மதச் சமூகத்தில் அதே கடுமையுடன் இன்னும் இருக்கின்றன என்பதையும்  வெளிப்படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டது. 


இந்த முடிவிற்குப் பிறகு, பிற மதங்களிலிருந்து மதம் மாறியவர்களை, முக்கியமாக கிறிஸ்தவம் அல்லது இஸ்லாம் மதத்திற்கு மாறிய இந்துக்களை, SC இடஒதுக்கீடுகளில் சேர்க்கும் முயற்சிகள் வெவ்வேறு காலங்களில் வேகம் பெற்றன. 1996-ஆம் ஆண்டில், பி.வி. நரசிம்ம ராவ் அரசாங்கம், கிறிஸ்தவ மதம் மாறியவர்களைச் சேர்க்கும் வகையில், பட்டியல் சாதிகள் ஒழுங்கைத் திருத்துவதற்கான மசோதாவை முன்மொழிந்தார். ஆனால், அந்த மசோதா நாடாளுமன்றத்தில்  நிறைவேற்றப்படவில்லை.


2007-ஆம் ஆண்டில், ரங்கநாத் மிஸ்ரா குழு (2004 இல் மத்திய அரசால் உருவாக்கப்பட்டது) "கிடைக்கக்கூடிய அனைத்து ஆதாரங்களின்படியும் சாதி அமைப்பு என்பது மத தூண்டுதல்களைப் பொருட்படுத்தாமல் கிட்டத்தட்ட அனைத்து இந்திய சமூகங்களாலும் பகிர்ந்து கொள்ளப்பட்ட இந்தியாவின் எங்கும் பரவியுள்ள சமூக நிகழ்வாக இருப்பதை நாங்கள் காண்கிறோம்" என்று கண்டறிந்தது. "ஒரு நபர் பட்டியல் சாதியினர் பட்டியலில் சேர்க்கப்பட்டவுடன், அவர் வேண்டுமென்றே மத மாற்றம் செய்வது அவரது பட்டியல் சாதி அந்தஸ்தை மோசமாக பாதிக்கக்கூடாது" என்று அது பரிந்துரைத்தது. இருப்பினும், சமீபத்திய ஆண்டுகளில் ஆணையத்தின் கண்டுபிடிப்புகளை மத்திய அரசு மறுத்துள்ளது. 


SC  இட ஒதுக்கீட்டில் மாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. காஜி சாதுதீன்  vs மகாராஷ்டிரா மாநிலம்  (Ghazi Saaduddin vs State of Maharashtra) வழக்கில், 1950-ஆம் ஆண்டு வெளியான உத்தரவின் அரசியலமைப்பு செல்லுபடியாகும் தன்மை மீண்டும் சவால் செய்யப்பட்டது.  2011-ஆம் ஆண்டில், நீதிமன்றம் அதன் பிரிவு 3 மற்றும் பௌத்தர்கள் மற்றும் சீக்கியர்களுடன் கிறிஸ்தவர்கள் மற்றும் முஸ்லிம்களை சேர்க்காததன் அரசியலமைப்புத்தன்மையை ஆராயும் என்று கூறி ஒரு உத்தரவை வழங்கியது. 


ஏப்ரல் 2024-ஆம் ஆண்டில், மனுதாரர்களின் ஆட்சேபனைகள் இருந்தபோதிலும், மதரீதியாக மதம் மாறியவர்கள் தங்கள் SC அந்தஸ்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டுமா? என்பதை ஆராய மத்திய அரசு ஒரு ஆணையத்தை அமைத்துள்ளதைக் குறிப்பிட்டு, இந்த வழக்கில் வாதங்களை விசாரிப்பதை தாமதப்படுத்த நீதிமன்றம் முடிவு செய்தது. ரங்கநாத் மிஸ்ரா கமிஷனின் 2007-ஆம் ஆண்டு அறிக்கையை ஏற்கவில்லை என்றும், உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையில் புதிய ஆணையத்தை உருவாக்கியதாகவும் மத்திய அரசு தெரிவித்தது. இந்தக் குழு பல்வேறு மாநிலங்களில் பொது விசாரணைகளை நடத்தியுள்ளது மற்றும் நவம்பர் 2024-ஆம் ஆண்டில், அதன் இறுதி அறிக்கையை சமர்ப்பிக்க அக்டோபர் 2025-ஆம் ஆண்டு  வரை நீட்டிக்கப்பட்டது. 


OBC இட ஒதுக்கீட்டை ஒட்டுமொத்தமாக ஒரு மதக் குழுவிற்கு வழங்க முடியுமா?  என்பதையும் உச்சநீதிமன்றம் தற்போது பரிசீலித்து வருகிறது. 2005-ஆம் ஆண்டில், OBC இடஒதுக்கீட்டில் முஸ்லிம்களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்க ஆந்திர அரசு ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தியது. பின்னர், அதே ஆண்டு ஆந்திர உயர் நீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது. கல்கத்தா உயர்நீதிமன்ற தீர்ப்பைப் போலவே, முஸ்லிம்கள் ஒட்டுமொத்தமாக பின்தங்கிய வர்க்கம் என்று முத்திரை குத்த அரசாங்கம் "புறநிலை அளவுகோல்களை" பயன்படுத்தவில்லை என்று நீதிமன்றம் கூறியது. பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவினருக்கான இடஒதுக்கீட்டை எதிர்த்து நவம்பர் 7, 2022-ஆம் ஆண்டு இந்த வழக்கை விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் கூறியிருந்தாலும், இந்த விஷயத்தில் இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை. 




Original article:

Share: