அடிமட்ட ஜனநாயகத்தில் கவனத்தை செலுத்துதல் -ஸ்ரீகாந்த் விஸ்வநாதன், சந்தோஷ் நர்குண்ட்

 உண்மையான ஜனநாயகத்திற்கு உள்ளாட்சி மன்றங்களின் நியாயமான தேர்தல்கள் அவசியம்.


இந்திய தேர்தல் ஆணையம் (The Election Commission of India (ECI)), சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல்களை சரியான நேரத்தில் நாடாளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களுக்கு நடத்துவதில், இந்தியாவின் மிகவும் நம்பகமான அமைப்புகளில் ஒன்றாக உருவெடுத்துள்ளது. இருப்பினும், 34 மாநில தேர்தல் ஆணையங்கள் (State Election Commissions (SECs)) தீவிர கவனம் செலுத்தி அவற்றை வலுப்படுத்த வேண்டும்.


மாநில தேர்தல் ஆணையங்களின் அதிகாரமின்மை


மாநில தேர்தல் ஆணையங்கள்  அரசியலமைப்பின்  243K and 243ZA  பிரிவுகளால் (1993 இல் 73 வது மற்றும் 74 வது திருத்தங்களால் அறிமுகப்படுத்தப்பட்டது) நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டன. அவை பஞ்சாயத்துகள் மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்களுக்கான அனைத்து தேர்தல்களுக்கும் வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதற்கான மேற்பார்வை, வழிகாட்டுதல் மற்றும் கட்டுப்பாட்டை வழங்கின. எவ்வாறாயினும், மாநில தேர்தல் ஆணையங்கள் அதிகாரமற்றவையாக உள்ளன. 


அண்மையில் நடந்த ஒரு வழக்கில், பஞ்சாயத்து ராஜ் அமைப்புகளின் எல்லைகளை நிர்ணயிப்பதைத் தொடரவும், தேர்தல்களை நடத்தவும் மாநில தேர்தல் ஆணையம் தாக்கல் செய்த முந்தைய மனுவுக்கு பதிலளிக்கும் விதமாக உயர்நீதிமன்றத்தில் அளித்த வாக்குறுதியை மீறியதற்காக கர்நாடக அரசு நீதிமன்ற அவமதிப்பு மனுவை தாக்கல் செய்தது. தேர்தல் ஆணையம் தேர்தலை நடத்த ஏதுவாக இரண்டு வாரங்களுக்குள் இடஒதுக்கீடு விவரங்களை வெளியிடுவதாக கர்நாடக அரசு 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்திருந்தது. 2020-ஆம் ஆண்டில் ஆந்திர மாநில தேர்தல் ஆணையம் மற்றும் பலர் தாக்கல் செய்த மற்றொரு வழக்குகளில், பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களுக்கான தேர்தலுக்கு இடையூறு விளைவிக்கும் ஆந்திராவின் அவசர சட்டத்தை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது.


18 மாநிலங்களில் இந்தியாவின் தலைமை தணிக்கையாளர் (Comptroller and Auditor General (CAG) ) 74வது அரசியலமைப்பு (திருத்த) சட்டத்தை அமல்படுத்துவது குறித்த செயல்திறன் பகுப்பாய்வு ஒன்றில், 2,240 நகர்ப்புற உள்ளாட்சி அரசாங்கங்களில் 1,560 (70%) தேர்ந்தெடுக்கப்பட்ட கவுன்சில் இல்லை என்பதைக் காட்டுகிறது. மேலும் இவ்வறிக்கையில், மாநிலத் தேர்தல் ஆணையங்களின் அதிகாரமின்மை, பெரும்பாலும் சரியான நேரத்தில் தேர்தல்கள் நடத்த  தாமதமாவதற்கான காரணம் என்று குறிப்பிட்டுள்ளது. இத்தகைய தாமதங்கள் உள்ளூர் அரசாங்கங்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துகின்றன. 


ஜனக்ரஹாவின் இந்திய நகர அமைப்புகள் பற்றிய வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of India’s City Systems (ASICS)), 2023 படி, 34 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 11 மட்டுமே வார்டு மறுவரையறை செய்ய மாநில தேர்தல் ஆணையங்களுக்கு அதிகாரம் அளித்துள்ளன என்பதைக் காட்டுகிறது. இந்த மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் (அதாவது அந்தமான் மற்றும் நிக்கோபார் தீவுகள், அருணாச்சல பிரதேசம், பீகார், தாத்ரா மற்றும் நகர் ஹவேலி, டாமன் மற்றும் டையூ, குஜராத், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு-காஷ்மீர், கேரளா, லடாக், மகாராஷ்டிரா மற்றும் மேற்கு வங்கம்) 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவின் மக்கள் தொகையில் 35% மட்டுமே உள்ளனர்.


மூன்றாம் அடுக்கை வலுப்படுத்த தேர்தல் சீர்திருத்தங்கள்


உள்ளூராட்சி மன்றங்களுக்கான முறையான மற்றும் நியாயமான தேர்தல்கள் நாட்டின் ஜனநாயகத்திற்கும், நாட்டின் நகரங்கள் மற்றும் கிராமங்களில் பயனுள்ள சேவை வழங்கலை உறுதி செய்வதற்கும் பயன்படும். 


தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களின் ஐந்தாண்டு பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னர் தேர்தல்களை நடத்த வேண்டும் என்பது அரசியலமைப்பு ஆணை மற்றும் மக்களவை மற்றும் சட்டமன்றத் தேர்தல்களைப் போலவே முறையாக இருக்க வேண்டும். இதை உறுதி செய்ய, கிஷன் சிங் தோமர் vs அகமதாபாத் நகர மாநகராட்சி  2006) (Kishan Singh Tomar vs Municipal Corporation of the City of Ahmedabad) வழக்கில் உச்சநீதிமன்றம் கூறியுள்ளபடி, இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இணையாக உள்ளாட்சி தேர்தல் ஆணையங்கள் அனைத்து விஷயங்களிலும் மாநில தேர்தல் ஆணையங்களுக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட வேண்டும். 


இந்த மாற்றத்தைக் கொண்டுவருவதற்கு பின்வரும் சீர்திருத்தங்கள் அவசியம்:


முதலாவதாக, அரசியலமைப்பு மற்றும் நியமனத்தில் வெளிப்படைத்தன்மை மற்றும் சுதந்திரத்தின் அடிப்படையில் மாநில தேர்தல் ஆணையங்களை இந்திய தேர்தல் ஆணையத்திற்கு இணையாகக் கொண்டு வரவேண்டிய அவசியம் உள்ளது. முதலமைச்சர், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் (சட்டமன்றம்) மற்றும் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவால் நியமிக்கப்படும் மாநில தேர்தல் ஆணையம் செயல்பட முடியவில்லை. இந்த சூழலில் 74-வது அரசியல் சட்டத் திருத்தச் சட்டத்தில் மத்திய அரசு திருத்தம் செய்ய வேண்டும்.


இரண்டாவதாக, வார்டு எல்லைகளை வரையறுப்பதும், இடங்களை ஒதுக்குவதும் குறிப்பிட்ட இடைவெளியில், அதாவது 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே கட்டாயமாக்கப்பட வேண்டும். இந்த கட்டுப்பாடு இல்லாததால், மாநில அரசுகள் தன்னிச்சையாக செயல்படுவதால், உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல்களில் தேவையற்ற தாமதம் ஏற்படும்.


மூன்றாவதாக, வார்டு மறுவரையறை மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கான இடங்களை ஒதுக்கும் அதிகாரங்கள் மாநில தேர்தல் ஆணையங்களுக்கு வழங்கப்பட வேண்டும். மேலும், உள்ளூராட்சி மன்றங்களின் மேயர் / துணை மேயர் / துணைத் தலைவர்கள் பதவிகளுக்கு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை இடஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மாநில அரசுகள் இந்த பதவிகளுக்கான இட ஒதுக்கீட்டுப் பட்டியலை உரிய நேரத்தில் வெளியிடத் தவறுவதால், உள்ளாட்சித் தேர்தல்களுக்குப் பிறகு இந்த பதவிகளுக்கான தேர்தல்கள் மிகவும் தாமதமாகின்றன.


இறுதியாக, மாநில அரசுகளால் நியமிக்கப்பட்ட தலைமை அதிகாரிகளின் முறைகேடுகளும் வெளிவந்துள்ளன. 2024-இல் சண்டிகர் முனிசிபல் கார்ப்பரேஷன் கவுன்சிலில் மேயர் தேர்ந்தெடுக்கப்பட்டது ஒரு உதாரணம். எனவே, மேயர்கள், தலைவர்கள், நிலைக்குழுக்களைத் தேர்ந்தெடுக்கும் பொறுப்பு மாநில தேர்தல் ஆணையங்களிடம் ஒப்படைக்கப்பட வேண்டும்.


ஸ்ரீகாந்த் விஸ்வநாதன், குடியுரிமை மற்றும் ஜனநாயகத்திற்கான ஜனக்கிரக மையத்தின் தலைமை நிர்வாக அதிகாரி. 

சந்தோஷ் நர்குண்ட், குடியுரிமை மற்றும் ஜனநாயகத்திற்கான ஜனக்கிரகா மையத்தின் பங்கேற்பு ஆளுகை பிரிவின் தலைவர்.



Original article:

Share: