இந்தியாவில் அடிக்கடி தேர்தல்களை நடத்துவதால் பல்வேறு நன்மைகள் ஏற்படுகின்றன.
மக்களவை, மாநில சட்டமன்றங்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தும் யோசனையை பிரதமர் நரேந்திர மோடி சில ஆண்டுகளுக்கு முன்பு முன்மொழிந்தார். நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து தேர்தல்கள் நடந்து வருவதால் அவர் அடிக்கடி பிரச்சாரத்தில் ஈடுபட்டார். இந்த அனுபவம் எல்லாத் தேர்தலையும் ஒரே நேரத்தில் நடத்த வேண்டும் என்ற எண்ணத்தை பிரதமருக்கு ஏற்படுத்திருக்கலாம்.
இது, இந்தியாவின் முன்னாள் குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரே நேரத்தில் தேர்தல்கள் குறித்த உயர்மட்டக் குழுவை அமைக்க வழிவகுத்தது. இந்த குழுவில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, முன்னாள் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், 15-வது நிதி ஆணையத்தின் முன்னாள் தலைவர் என்.கே.சிங், மக்களவை முன்னாள் செயலாளர் ஜெனரல் சுபாஷ் சி காஷ்யப், மூத்த வழக்கறிஞர் ஹரிஷ் சால்வே, முன்னாள் தலைமை ஊழல் கண்காணிப்பு ஆணையர் சஞ்சய் கோத்தாரி ஆகியோர் இடம் பெற்றிருந்தனர். சிறப்பு அழைப்பாளராக சட்டம் மற்றும் நீதித்துறை இணை அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்து கொண்டார். இந்த குழு தனது அறிக்கையை 2024 பொதுத் தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்பு குடியரசுத்தலைவரிடம் தனது பரிந்துரையை வழங்கியது.
ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வேண்டும் என்ற யோசனையும் இந்த தேர்தலுக்கான ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக இருந்தது. பாரதிய ஜனதா கட்சிக்கு பெரும்பான்மை கிடைத்திருந்தால், இந்த யோசனையை வாக்காளர்கள் தங்களை முழுமையாக ஆதரித்ததாக கூறியிருக்க முடியும். ஆனால், பெரும்பான்மை இல்லாமல் இருப்பதால், வாக்காளர்கள் ஏற்றுக்கொண்டார்கள் என்று சொல்வது கடினம்.
இக்குழு குறுகிய காலத்தில் 18,626 பக்கங்கள் கொண்ட ஒரு பெரிய அறிக்கையைத் தயாரித்தது குறிப்பிடத்தக்கது. “ஒரே நாடு, ஒரே தேர்தல்” (‘one nation one election’) என்ற யோசனையை அமல்படுத்துவதற்கு ஒன்றிய அமைச்சரவை தயாராக உள்ளது. முதல்கட்டமாக மக்களவை மற்றும் சட்டசபை தேர்தல்கள் ஒரே நேரத்தில் நடைபெறும், பொதுத்தேர்தல் முடிந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடக்கும்.
ஒரு திருத்த மசோதாவும் (amendment Bill) அதன் தலைவிதியும்
ஒரே நேரத்தில் தேர்தலை அமல்படுத்த அரசியலமைப்பின் பல்வேறு பகுதிகளில் மாற்றங்கள் தேவைப்படுகிறது. ஒரு முக்கிய திருத்தம் மாநில சட்டமன்றங்களின் பதவிக்காலம் பற்றியது, இனி நிலையான விதிமுறைகள் இருக்காது. மக்களவையின் பதவிக்காலத்துடன் மாநில சட்டசபைகள் சட்டசபைகளின் காலம் பொருந்த வேண்டும் என்பதால், சட்டப்பிரிவு 172-ன் கீழ் தற்போது ஐந்தாண்டு கால அளவைக் கொண்ட மாநில சட்டசபைகள் அந்த நிலையான காலத்தை இழக்கும்.
18-வது மக்களவையில் அறிமுகப்படுத்தப்படும் அரசியலமைப்பு திருத்த மசோதாவுக்கு என்ன நடக்கும் என்று பார்ப்போம். மசோதா அறிமுகப்படுத்தப்பட்டதும், அடுத்த கட்டமாக அதைப் பற்றிய பொதுவான விவாதம் நடக்கும். விவாதத்திற்கு பிறகு வாக்கெடுப்பு நடத்தப்படும். மசோதாவை நிறைவேற்ற, சிறப்புப் பெரும்பான்மை (special majority) தேவை. அனைத்து உறுப்பினர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்களிடமிருந்தும், குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் மசோதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க வேண்டும். பரிசீலனைக்கான தீர்மானத்திற்கு சிறப்புப் பெரும்பான்மை ஆதரவு கிடைத்தால் மட்டுமே சபை அடுத்த கட்ட நடவடிக்கைகளுக்குச் சென்று மசோதாவை நிறைவேற்றும் .அனைத்து 543 உறுப்பினர்களும் இருந்தால், அது நிறைவேற குறைந்தபட்சம் 362 உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும். எதிர்க்கட்சிகளின் ஆதரவு இல்லாமல், எந்த அரசியலமைப்பு திருத்த மசோதாவும் இன்றைய நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முடியாது.
வாதங்கள் பலவீனமானவை.
இரண்டு காரணங்களுக்காக ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த உயர்மட்டக் குழு பரிந்துரைக்கிறது. முதலாவதாக, ஒவ்வொரு தேர்தலுக்கும் பெரிய தொகைகள் செலவழிக்கப்படுவதால் நிறைய பணத்தை சேமிக்க முடியும். அனைத்து தேர்தல்களும் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடந்தால், குறிப்பிடத்தக்கதாக சேமிப்பு இருக்கும். இருப்பினும், இந்த வாதம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும். பிரிவு 324-ன் கீழ், இந்திய தேர்தல் ஆணையம் தேர்தல்களை நடத்துகிறது. மேலும், செலவுகள் குறித்து நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டது. 2023-24 நிதியாண்டில், தேர்தல் ஆணையத்திற்கு ரூ.466 கோடி ஒதுக்கப்பட்டது. இந்த பணம் 2024 பொதுத் தேர்தலுக்கான செலவுகளை ஈடுசெய்யும் நோக்கம் கொண்டது. 2022-23 ஆம் ஆண்டில், ஒதுக்கீடு ₹320 கோடியாக இருந்தது. பொதுத் தேர்தலுக்கு ஒதுக்கப்பட்ட ரூ.466 கோடி என்பது பெரிய தொகை அல்ல.
தேர்தலுக்காக மாநில அரசுகளும் பணத்தைச் செலவிடுகின்றன. பிரிவு 324(6)-ன் படி, இந்திய தேர்தல் ஆணையம் பணியாளர்களை தேர்தலுக்கு கோரலாம். மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951, பிரிவு 160-ன் கீழ், மாநில அரசுகள் தேர்தல் பயன்பாட்டிற்கு கட்டிடங்கள் மற்றும் வாகனங்களை பயன்படுத்திக் கொள்ளலாம். அனைத்து நடவடிக்கைகளுக்கும் நிதி தேவைப்படுகிறது அதை மாநிலங்கள் வழங்க வேண்டும். இருப்பினும், இந்த செலவுகள் அனைத்தையும் கருத்தில் கொண்டாலும், ஒன்றிய மற்றும் மாநில அரசுகளுக்கான மொத்த செலவுகள் பெரிதாக இல்லை.
அரசியல் கட்சிகள் தேர்தல் காலங்களில் பெரும் தொகையை செலவு செய்கின்றன. இருப்பினும், ஒவ்வொரு ஐந்து வருடங்களுகு ஒரு முறை தேர்தல் நடத்துவதன் மூலம் சேமிக்கப்படும் பணம் சாலைகள், பாலங்கள் அல்லது மருத்துவமனைகள் போன்ற பொது திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவில்லை என்பதுதான் உண்மை. 1951-52-ஆம் ஆண்டு முதல் 1967-ஆம் ஆண்டு வரை ஒரே நேரத்தில் தேர்தல்கள் நடந்த காலகட்டத்தில் கூட, அரசியல் கட்சிகள் சேமித்த பணத்தை உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு பயன்படுத்தியதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
இரண்டாவது வாதம், மாதிரி நடத்தை விதிகள் (model code of conduct) அமல்படுத்தப்படுவதால் அடிக்கடி தேர்தல்கள் நடத்தப்படுவதால் அரசாங்க வளர்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் சிக்கல் எழுகிறது. இருப்பினும், இந்த கூற்றை ஆதரிக்க உண்மையான ஆதாரம் இல்லை. 1967-ஆம் ஆண்டு முதல் இந்தியாவில் தேர்தல்கள் அடிக்கடி நடைபெற்று வருகிறது. மேலும், இந்த தேர்தல்கள் வளர்ச்சியை நிறுத்தியதாகக் தெரியவில்லை. இந்தியாவின் 85% பணமதிப்பிழப்பு (demonetisation) நடைமுறை உத்தரப்பிரதேச சட்டசபை தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர் நடந்தது.
கூட்டாட்சிக்கு எதிரான நடவடிக்கை (A move against federalism)
மக்களவையின் பதவிக்காலத்திற்கு ஏற்ப மாநில சட்டப்பேரவைகளின் பதவிக்காலத்தை குறைப்பது கூட்டாட்சி முறைக்கு எதிரானது. மாநில சட்டமன்றங்கள் தன்னாட்சி அதிகாரம் கொண்டவை. கூட்டாட்சி நாடாளுமன்றத்திலிருந்து சுதந்திரமானவை. சட்டசபைகளுக்கு ஒரு நிலையான பதவிக்காலம் என்பது இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பின் முக்கிய அம்சமாகும். அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பை நாடாளுமன்றத்தால் மாற்ற முடியாது என்றும், கூட்டாட்சி அந்த கட்டமைப்பின் ஒரு பகுதியாகும் என்றும் கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பில் தெளிவாக சுட்டிக்காட்டப்பட்டது. சட்டசபைகளுக்கான நிலையான பதவிக்காலத்தை நீக்கும் உத்தேச திருத்தங்கள், அடிப்படை கட்டமைப்பை மாற்றும். சட்டமன்றங்களின் ஒப்புதல் தேவையா என்பது முக்கிய பிரச்சினை அல்ல. திருத்தம் நிறைவேற்றப்பட்டால், சில சட்டமன்றங்களின் பதவிக்காலம் மூன்று ஆண்டுகள் அல்லது இரண்டு ஆண்டுகள் வரை இருக்கலாம்.
அடிக்கடி தேர்தல்கள் பிரதிநிதிகள் பொதுமக்களுடன் தொடர்ந்து தொடர்பு கொள்ள கட்டாயப்படுத்துகின்றன. ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே தேர்தல்கள் நடந்தால், பிரதிநிதிகள் மக்களுடன் அடிக்கடி ஈடுபட வேண்டிய அவசியத்தை உணராமல் போகலாம். மேலும், அவர்கள் தேர்தல் காலங்களில் மட்டுமே மக்களை சந்திக்கலாம். அதேபோல், தேர்தல்கள் எப்போதாவது நடந்தால், அரசியல் கட்சிகள், மக்களின் தேவைகளை பிரதிநிதித்துவப்படுத்துவதை நிறுத்திவிடலாம். அரசாங்கங்களைப் பொறுத்தவரை, அடிக்கடி தேர்தல்கள் பொதுக் கருத்தைப் புரிந்துகொள்ள உதவுகின்றன. தேவையான மாற்றங்களைச் செய்ய அனுமதிக்கின்றன.
முடிவில், ஒரே நேரத்தில் தேர்தல்கள் அரசியலமைப்பின் கூட்டாட்சி சமநிலையை மாற்றும். மேலும், இது இந்திய மக்களுக்கு போதிய வாய்ப்புகளை வழங்காது.
பி.டி.டி. ஆச்சாரி, மக்களவை முன்னாள் பொதுச் செயலாளர்.