ரிசர்வ் வங்கியின் பணவியல் கொள்கை கருவிகள் -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி:


ரிசர்வ் வங்கியின் ஆறு உறுப்பினர்களைக் கொண்ட நாணயக் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)), ரெப்போ விகிதத்தை எதிர்பார்த்ததை விட 50 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 5.50 சதவீதமாகக் குறைத்துள்ளது. இது பிப்ரவரி 2025 முதல் தொடர்ந்து 3-வது குறைப்பாகும். மத்திய வங்கி வங்கிகளின் ரொக்க இருப்பு விகிதத்தையும் 100 அடிப்படைப் புள்ளிகள் குறைத்து 3 சதவீதமாகக் குறைத்து, ரூ.2.5 லட்சம் கோடி கடன் வளங்களை வங்கி அமைப்புக்கு விடுவித்துள்ளது.


முக்கிய அம்சங்கள்:


1. வணிக வங்கிகள் ரிசர்வ் வங்கியிலிருந்து பணம் கடன் வாங்கும்போது ரிசர்வ் வங்கி வசூலிக்கும் வட்டி விகிதம் ரெப்போ வட்டி விகிதம் (repo rate) என்று அழைக்கப்படுகிறது. வணிக வங்கிகள் தங்களின் கூடுதல் பணத்தை பெறும் போது மத்திய வங்கி கொடுக்கும் வட்டி விகிதம் ரிவர்ஸ் ரெப்போ வட்டி விகிதம் (reverse repo rate) என்று அழைக்கப்படுகிறது.


2. ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைப்பதன் தாக்கம்: பொருளாதாரத்தில் பொருளாதார நடவடிக்கையை ஊக்குவிக்க ரிசர்வ் வங்கி விரும்பும்போது, அது ரெப்போ வட்டி விகிதத்தைக் குறைக்கிறது. இது செய்வதால் வணிக வங்கிகள் தங்கள் கடன்களுக்கு வசூலிக்கும் வட்டி விகிதங்களையும், வைப்புத் தொகைகளுக்கு கொடுக்கும் வட்டி விகிதத்தையும் குறைக்க முடிகிறது. இதன் விளைவாக, மக்கள் பணத்தை செலவழிக்க ஊக்குவிக்கப்படுகின்றனர். ஏனெனில், வங்கியில் தங்கள் சேமிப்பை வைப்பது இப்போது சற்று குறைவான வருமானம் தருகிறது. மேலும், புதிய கடன்கள் இப்போது சற்று குறைவான செலவாகும் என்பதால் வணிகங்கள் புதிய முதலீடுகளுக்காக புதிய கடன்களை எடுக்க ஊக்குவிக்கப்படுகின்றன.


3. ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரிப்பதன் தாக்கம்: பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி விரும்பும்போது, அது ரெப்போ வட்டி விகிதத்தை அதிகரிக்கிறது. இதனால் வங்கிகள் ரிசர்வ் வங்கியிலிருந்து கடன் வாங்க அதிக வட்டி கொடுக்க வேண்டியிருக்கும். அவை தங்கள் கடன் வாங்குபவர்களிடம் அதிக வட்டி வசூலிக்கும். அடிமட்ட அளவில், இது மக்கள் பணம் கடன் வாங்குவதையும் செலவழிப்பதையும் தடுக்கிறது. இது சந்தையில் பணத்தின் அளவைக் குறைக்கிறது. இதனால் பணவீக்கத்தை எதிர்த்து போராடுகிறது.


ரிசர்வ் வங்கியின் கொள்கை நிலைப்பாடு என்ன?


பணவியல் கொள்கைக் குழு (Monetary Policy Committee (MPC)), தனது கொள்கை நிலைப்பாட்டை 'ஆதரவளிக்கும்' (Accommodative) நிலையிலிருந்து 'நடுநிலை' (Neutral) நிலைக்கு மாற்றுவதன் மூலம் மறுசீரமைக்கப்பட்ட அணுகுமுறையை அடையாளம் காட்டியுள்ளது. நடுநிலை நிலைப்பாடு என்பது பணவீக்கம் மற்றும் பொருளாதார வளர்ச்சி தொடர்பான தரவுகளைப் பொறுத்து ரிசர்வ் வங்கியின் வட்டி விகிதங்களை அதிகரிக்கவோ அல்லது குறைக்கவோ முடியும் என்பதாகும். பணவீக்கக் கட்டுப்பாடு மற்றும் பொருளாதார வளர்ச்சி இரண்டையும் சமநிலைப்படுத்த ரிசர்வ் வங்கி விரும்பும்போது இந்த அணுகுமுறை பயன்படுத்தப்படுகிறது. சமீபத்திய பொருளாதாரத் தரவுகள் காட்டும் அடிப்படையில் வட்டி விகிதங்களை உயர்த்தவோ அல்லது குறைக்கவோ ரிசர்வ் வங்கியை இது அனுமதிக்கிறது.


பணவியல் கொள்கையின் கருவிகள்


ரெப்போ விகிதம் (Repo rate) மற்றும் தலைகீழ் ரெப்போ விகிதம் (reverse repo rate) தவிர, வளர்ச்சியின் நோக்கத்தை வைத்துக்கொண்டு விலை நிலைத்தன்மையை பராமரிக்க ரிசர்வ் வங்கி பல நேரடி மற்றும் மறைமுக கருவிகளைப் பயன்படுத்துகிறது.


(i) நிலையான வைப்பு வசதி விகிதம் (Standing Deposit Facility (SDF Rate)): இது எந்தவொரு பாதுகாப்பையும் கேட்காமல், ஒரு இரவுக்கு வங்கிகளிடமிருந்து பணத்தை ரிசர்வ் வங்கி ஏற்றுக்கொள்ளும் விகிதமாகும். இது வங்கி அமைப்பில் பணப்புழக்கத்தை நிர்வகிக்க ரிசர்வ் வங்கிக்கு உதவுகிறது மற்றும் நிதி நிலைத்தன்மையையும் ஆதரிக்கிறது. ரிசர்வ் வங்கியின் வட்டி விகித அமைப்பில் மிகக் குறைந்த விகிதமாக நிலையான தலைகீழ் ரெப்போ விகிதம் (fixed rate reverse repo (FRRR)) என்று அழைக்கப்படும் முந்தைய முறையை மாற்றுவதற்காக நிலையான வைப்பு வசதி விகிதம் 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டது.


(ii) குறைந்தபட்ச நிலையான வசதி விகிதம் (Marginal Standing Facility (MSF Rate)): மற்ற வங்கிகளிடம் கடன் கொடுக்க போதுமான பணம் இல்லாதபோது, ​​அவசர காலங்களில் ஒரு இரவுக்கு ரிசர்வ் வங்கியிடமிருந்து கடன் வாங்க வங்கி செலுத்தும் வட்டி விகிதம் இது. இந்த விகிதம் பொதுவாக பிரதான ரெப்போ விகிதத்தை விட 0.25% அதிகமாக நிர்ணயிக்கப்படுகிறது.


(iii) பணப்புழக்க சரிசெய்தல் வசதி (Liquidity Adjustment Facility (LAF)): LAF என்பது திட்டமிடப்பட்ட வணிக வங்கிகள் (பிராந்திய கிராமப்புற வங்கிகள் தவிர) மற்றும் முதன்மை வணிகர்களுக்கு RBI வழங்கும் ஒரு சேவையாகும். இது அவர்களுக்குத் தேவைப்படும்போது விரைவாகப் பணத்தைப் பெற உதவுகிறது அல்லது தேவைக்கு அதிகமாக இருந்தால் RBI-யில் கூடுதல் பணத்தை வைத்திருக்க உதவுகிறது. இது அரசாங்கப் பத்திரங்கள் அல்லது மாநில மேம்பாட்டுக் கடன்களை பிணையமாகப் பயன்படுத்தி ஒரே இரவில் செய்யப்படுகிறது.


(iv) முக்கியப் பணப்புழக்கம் மேலாண்மை கருவி (Main Liquidity Management Tool:): குறுகிய கால பணத்  தேவைகளைக் கையாள, ரிசர்வ் வங்கி 14 நாள் ஏலத்தை நடத்துகிறது. அங்கு வங்கிகள் மாறிவரும் வட்டி விகிதங்களில் பணத்தைக் கடன் வாங்கலாம் அல்லது கடன் கொடுக்கலாம். வங்கிகள் தங்கள் தேவையான ரொக்க இருப்புக்களை (cash reserve ratio (CRR)) பராமரிக்க வேண்டிய நேரத்தில் இது நிகழ்கிறது.


(v) வங்கி விகிதம் (Bank Rate): வங்கிகள் இருப்பு தேவைகளை (பண இருப்பு விகிதம் மற்றும் சட்டப்பூர்வ திரவத்தன்மை விகிதம்) பூர்த்தி செய்வதில் குறைபாடுகள் ஏற்பட்டால், மாற்றுச் சீட்டுகள் அல்லது பிற வணிகத் தாள்களை வாங்க அல்லது மீண்டும் தள்ளுபடி செய்வதற்கு ரிசர்வ் வங்கி வழங்கும் விகிதம் வங்கி விகிதம் என்று அழைக்கப்படுகிறது.


(vi) பண இருப்பு விகிதம் (Cash Reserve Ratio (CRR)): இது ஒரு வங்கியின் நிகர தேவை மற்றும் கால பொறுப்புகளின் (Net Demand and Time Liabilities (NDTL)) சதவீதமாகும். ரிசர்வ் வங்கியில் இருப்பாக பணப்புழக்கம் மேலாண்மை கருவி பராமரிக்கப்பட வேண்டும். பண இருப்பு விகிதம் சதவீதம் காலத்திற்கு காலம் ரிசர்வ் வங்கியால்  தீர்மானிக்கப்படுகிறது.


(vii) சட்டப்பூர்வ பணப்புழக்க விகிதம் (Statutory Liquidity Ratio (SLR)): ஒவ்வொரு வங்கியும் இந்திய சொத்துகளில், இரண்டாவது முந்தைய பதினைந்து நாள்களின் கடைசி வெள்ளிக்கிழமையன்று இந்தியாவில் அதன் தேவை மற்றும் கால பொறுப்புகளின் மொத்தத்தின் அத்தகைய சதவீதத்திற்கு குறையாமல் இருக்கும் மதிப்பை திரவப் பணம், தங்கம், அரசு மற்றும் மாநில அரசு பத்திரங்கள் வடிவில் பராமரிக்க வேண்டும்.


(vii) திறந்த சந்தை நடவடிக்கைகள் (Open Market Operations (OMOs)): இதன் பொருள், வங்கி அமைப்பிலிருந்து நீண்டகாலப் பணத்தைச் சேர்க்க அல்லது நீக்க ரிசர்வ் வங்கி அரசாங்கப் பத்திரங்களை வாங்குகிறது அல்லது விற்கிறது.


நெகிழ்வான பணவீக்க இலக்கு (Flexible Inflation Target (FIT))


1. மே 2016ஆம் ஆண்டில், நாட்டின் பணநீதி கட்டமைப்பை இயக்க மத்திய வங்கிக்கு சட்டமன்ற அதிகாரம் வழங்க ரிசர்வ் வங்கி சட்டம் திருத்தப்பட்டது.


2. 2013ஆம் ஆண்டில் உர்ஜித் படேல் தலைமையில் ரிசர்வ் வங்கி 'பணநீதிக் கட்டமைப்பை திருத்த மற்றும் வலுப்படுத்த நிபுணர் குழுவை’ அமைத்தது. இது ரிசர்வ் வங்கிக்கு நெகிழ்வான பணவீக்க இலக்கை (flexible inflation target (FIT)) பரிந்துரைத்தது. மே 2016ஆம் ஆண்டில், நெகிழ்வான பணவீக்க இலக்கு கட்டமைப்பை செயல்படுத்துவதற்கு சட்டப்பூர்வ அடிப்படையை வழங்க 1934ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி சட்டம் திருத்தப்பட்டது.


2. பிரிவு 45ZA கீழ், ஒன்றிய அரசு, ரிசர்வ் வங்கி உடன் ஆலோசித்து, நுகர்வோர் விலை குறியீட்டின் (Consumer Price Index (CPI)) அடிப்படையில் பணவீக்க இலக்கை ஐந்து ஆண்டுகளுக்கு ஒருமுறை தீர்மானித்து அதிகாரப்பூர்வ வர்த்தமானியில் அறிவித்துக் காட்டுகிறது. ஆகஸ்ட் 5, 2016 அன்று, ஒன்றிய அரசு நுகர்வோர் விலை குறியீட்டை (CPI) 4 சதவீதமாக +/-2 சதவீத வரம்புடன் அறிவித்தது. மார்ச் 31, 2021 அன்று, ஒன்றிய அரசு அடுத்த 5ஆண்டு காலத்திற்கு ஏப்ரல் 1, 2021 முதல் மார்ச் 31, 2026 வரை பணவீக்க இலக்கு மற்றும் சகிப்புத்தன்மை வரம்பை தக்கவைத்துக் கொண்டது.


பணவீக்கம் (Inflation) என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான பொது விலை நிலை அதிகரிக்கும் விகிதத்தைக் குறிக்கிறது.  இது பணத்தின் வாங்கும் திறன் அல்லது உண்மையான வருமானத்தில் குறைவை ஏற்படுத்துகிறது. வேறு வார்த்தைகளில் கூறினால், பணவீக்கம் அதிகரிக்கும்போது, ஒவ்வொரு பண அலகும் முன்பை விட குறைவான பொருட்கள் மற்றும் சேவைகளை பெற முடியும்.


Original article:
Share: