அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a)-ல் இருந்துவரும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமையையும், பிரிவு 21-ன் உள்ளார்ந்த பகுதியாகக் கருதப்படும் தனியுரிமைக்கான உரிமையையும் சமநிலைப்படுத்துவதன் அவசியம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்க்கப்பட்ட கொள்கைக்கு இது முரணானது.
ஒரு மாதத்திற்கும் மேலாக, மஸ்தூர் கிசான் சக்தி சங்கதன் (Mazdoor Kisan Shakti Sangathan (MKSS)), காமன் காஸ், தேசிய மக்கள் தகவல் உரிமை பிரச்சாரம் (National Campaign for People’s Right to Information (NCPRI)), சதார்க் நாக்ரிக் சங்கதன் (Satark Nagrik Sangathan (SNS)) மற்றும் இணைய சுதந்திர அறக்கட்டளை (Internet Freedom Foundation (IFF)) போன்ற 30-க்கும் மேற்பட்ட சிவில் உரிமை அமைப்புகள், டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், 2023 (Digital Personal Data Protection Act (DPDPA))-ல் அறிமுகப்படுத்தப்பட்ட திருத்தங்கள் மூலம் தகவல் உரிமை சட்டம், 2005 பலவீனப்படுத்தப்படுவது குறித்து எச்சரிக்கை எழுப்பி வருகின்றன.
மேலே, குறிப்பிடப்பட்ட பலவீனப்படுத்தல், DPDPA-வின் பிரிவு 44(3) மூலம் RTI சட்டத்தின் பிரிவு 8(1)(j)-க்கு செய்யப்பட்ட திருத்தமாகும். தற்போதைய தகவல் உரிமை அறியும் சட்டத்தின் பிரிவு 8(1)(j), "தேவையற்ற தனியுரிமை மீறல்" (an unwarranted invasion of privacy) ஏற்பட்டால் தகவல் வெளியிடுவதில் இருந்து விலக்கு அளிக்கிறது. அத்தகைய தகவலை வெளியிடுவதை பெரிய பொதுநலன் நியாயப்படுத்தினால் மட்டுமே ஒருவரின் தனியுரிமையை மீறக்கூடிய தனிப்பட்ட தகவலை வெளியிடலாம். பிரிவு 44(3) இந்த விதியை மாற்றி "தனிப்பட்ட தகவலுடன் தொடர்புடைய எந்த தகவலும்" என்று மட்டுமே கூற முன்மொழிகிறது.
இதன் பொருள், தகவல் உரிமை அறியும் சட்டத்தின் மூலம் "எந்த தனிப்பட்ட தகவலையும்" வெளியிடுவதற்கு முழுமையான கட்டுப்பாடு இருக்கும் என்பதாகும். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் இங்கிலாந்து போன்ற வலுவான தரவு தனியுரிமை சட்டங்களைக் கொண்ட மற்ற நாடுகளில் உள்ள வெளிப்படைத்தன்மை குறித்த சட்டங்களில் இருந்து இது ஒரு குறிப்பிடத்தக்க விலகலாகும். ஒன்றிய பொது தகவல் அதிகாரி, உச்ச நீதிமன்றம் VS சுபாஷ் சந்திர அகர்வால் (Central Public Information Officer, Supreme Court of India v Subhash Chandra Agarwal) வழக்கில் அரசியலமைப்பின் பிரிவு 19(1)(a)-ல் இருந்து வரும் வெளிப்படைத்தன்மைக்கான உரிமையையும் (right to transparency), பிரிவு 21-ன் உள்ளார்ந்த பகுதியாகக் கருதப்படும் தனியுரிமைக்கான உரிமையையும் (right to privacy) சமநிலைப்படுத்துவதன் அவசியம் குறித்த உச்சநீதிமன்றத்தின் தீர்க்கப்பட்ட கொள்கையையும் இந்தத் திருத்தம் எதிர்க்கிறது.
இத்தகைய திருத்தத்தின் தாக்கம் குறித்து பல உடனடி மற்றும் வெளிப்படையான கவலைகள் உள்ளன. உதாரணமாக, பொதுத்துறை கொள்முதலில் இருந்து லாபம் அடைந்திருக்கக்கூடிய வணிகங்களை உறுதிப்படுத்த அல்லது பயனாளிகளை சரிபார்க்க தகவல் உரிமை அறியும் சட்டத்தின் விசாரணைகள் மூலம் கடந்தகால வெற்றிகள் இந்த திருத்தம் அமல்படுத்தப்பட்ட பிறகு சாத்தியமில்லாமல் போகலாம்.
எனினும், இந்தக் கதையில் ஒரு வழக்கத்திற்கு மாறான திருப்பம் உள்ளது. டிஜிட்டல் தனிநபர் தரவு பாதுகாப்புச் சட்டம், (Digital Personal Data Protection Act (DPDPA)) அதிகாரத்தில் உள்ளவர்களின் தனியுரிமையைப் பாதுகாக்க விரும்பும் அதே வேளையில், தகவல் உரிமை அறியும் சட்டத்தின் செயல்முறை மூலம் தகவலைப் பெற விரும்பும் விண்ணப்பதாரர்கள் அதிகாரத்தில் உள்ளவர்களிடம் முற்றிலும் வெளிப்படையாக இருக்க வேண்டும்.
தகவல் உரிமை அறியும் சட்டத்தின் பிரிவு 6(1), குடிமக்கள் மின்னணு வடிவில் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் கோரிக்கை விண்ணப்பங்களைச் சமர்ப்பிக்க சட்டப்பூர்வ உரிமை வழங்குகிறது. 2023-ல், அனைத்து மாநிலங்கள், நீதிமன்றங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் இணையதளத்தைக் கொண்டிருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது. 2025-ல், சிக்கிம், நாகாலாந்து மற்றும் மணிப்பூர் மாநிலங்கள் தங்கள் தகவல் உரிமை அறியும் சட்டத்தின் இணையதளங்களை உருவாக்கின. இருப்பினும், இந்த இணையதளங்கள் ஆதார் அட்டை அல்லது வேறு அடையாளச் சான்றை கட்டாயமாக வெளியிடுவதை கோருகின்றன. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு முன்பே பீகார் மற்றும் ஒடிசா தகவல் உரிமை அறியும் சட்டத்தின் இணையதளங்களைக் கொண்டிருந்தன. அவையும் தங்கள் இணையதளங்களில் ஆதார் அட்டை அல்லது அடையாளச் சான்று வெளியிடுவதை கட்டாயமாக்குகின்றன.
இந்தியாவில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மீதான தாக்குதல்கள் என்ற விக்கிபீடியா பக்கத்தைப் பார்வையிட்ட எவருக்கும் இது உடனடி கவலைக்குரியது. எனினும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training (DoPT)) பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின் கீழ் ஜூன் 20, 2017 அன்று வெளியிடப்பட்ட அலுவலக குறிப்பாணை (Office Memorandum (OM)) காரணமாக இந்த கவலை அதிகரிக்கிறது. அந்த குறிப்பாணை, விண்ணப்பங்களைக் கையாளும்போது ஆதார் எண் போன்ற தனிப்பட்ட தகவல் விவரங்களை கேட்கக்கூடாது என்று கூறுகிறது.
விவகாரங்களை மோசமாக்க, ஒன்றிய தகவல் ஆணையம் ("Central Information Commission (CIC)) விஸ்வாஸ் பம்புர்கர் VS பொது தகவல் அலுவலர் வழக்கில், "ஆதார் அட்டை இல்லாததால் தகவல் மறுப்பது, தகவல் உரிமை அறியும் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்ட உரிமையின் கடுமையான மீறலாகும் மற்றும் விண்ணப்பதாரருக்கு துன்புறுத்தலாக கருதப்படும் என்று குறிப்பிட்டது.
CIC-ன் தீர்ப்பு மற்றும் DoPT-ன் அலுவலக குறிப்பாணை ஆகியவற்றின் அடிப்படையில், தகவல் அறியும் உரிமை விண்ணப்பங்களுக்கு ஆதார் அட்டைகள் கட்டாயமாக்குவது தனியுரிமையின் கடுமையான மீறலாகும். இது நாகாலாந்து, மணிப்பூர், சிக்கிம், பீகார் அல்லது ஒடிசாவின் தகவல் அறியும் உரிமை இணையதள உருவாக்குநர்களை இந்த நடைமுறையில் ஈடுபடுவதில் இருந்து தடுக்கவில்லை. ஐந்து மாநிலங்களில், சிக்கிம் மட்டுமே தேசிய தகவலியல் மையம், சிக்கிம் (National Informatics Centre, Sikkim) வடிவமைத்த ஒரே இணையதளம் ஆகும். மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்துடன் நேரடியாக இணைக்கப்பட்டுள்ள ஒரு அமைப்பு, இந்த விவகாரம் தொடர்பாக மற்றொரு ஒன்றிய அமைச்சகத்தின் ஏழு ஆண்டு பழமையான அலுவலக குறிப்பாணை பற்றி தனக்குத் தெரியாது என்று வாதிடுவதற்கு இன்னும் குறைவான காரணமே இருக்க வேண்டும். தகவல் அறியும் உரிமை சட்டத்தின் விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான செயல்முறை குறித்த வழிமுறைகளுடன் குறிப்பாக வழங்கப்பட்ட அலுவலக குறிப்பாணை பற்றி எந்த மாநில அரசும் வாதிடுவதற்கு ஒரு நல்ல காரணத்தைக் கண்டுபிடிப்பது கடினம். அதே, நேரத்தில் விண்ணப்பங்களை தாக்கல் செய்வதற்கான ஒரு வலை தரவுத்தளத்தை உருவாக்குவதும் கடினம்.
இருப்பினும், தனியுரிமை தொடர்பான மிகவும் வழக்கத்திற்கு மாறான கவலைகள் பஞ்சாபிற்கான தகவல் அறியும் உரிமை சட்டத்தின் இணையதளத்தில் இருந்து எழுகின்றன. பஞ்சாப் மாநிலம், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் இணையதளத்தில் உள்நுழைய பயனர் தங்கள் சாதனத்தின் இருப்பிடத்தைப் பகிர வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. இந்த கட்டாய இருப்பிட பகிர்வு கே. புட்டசுவாமி VS இந்திய யூனியன் வழக்கில் உச்சநீதிமன்றம் அங்கீகரித்த அடிப்படை தனியுரிமை உரிமையை மீறக்கூடும்.
புட்டசுவாமி வழக்கில், "ஒரு தனிநபரின் தனியுரிமை மீறல் சட்டபூர்வம், அவசியம் மற்றும் விகிதாச்சாரம் ஆகிய மூன்று மடங்கு சோதனையை கடக்க வேண்டும்" என்று உச்சநீதிமன்றம் தெளிவாகக் கூறியுள்ளது. சாதன இருப்பிட தரவுக்கான கோரிக்கை, "ஏற்றுக்கொள் அல்லது விட்டுவிடு" முறையில் வழங்கப்படுவதுடன் விகிதாச்சார சோதனையை கடக்கிறது என்பதை கற்பனை செய்வது கடினம். சட்டப்பூர்வ உரிமையைப் பெற சாதன இருப்பிட வெளிப்பாடு கட்டாயமாக்கப்படுவது கவலைக்குரியது.
பஞ்சாப் RTI இணையதளத்தின் தனியுரிமைக் கொள்கையும் நாட்டிலுள்ள மற்ற தகவல் அறியும் உரிமை சட்டத்தின் இணையதளங்களில் இருந்து ஒரு குறிப்பிடத்தக்க விலகலாகும். "இணைய நெறிமுறை முகவரிகள், டொமைன் பெயர், உலாவி வகை, இயக்க முறைமை, வருகை தேதி மற்றும் நேரம் போன்ற" பயனர் பற்றிய சில தகவல்களைச் சேகரிக்க இந்த தளம் உரிமை கொண்டுள்ளது. இருப்பினும், தளத்தை சேதப்படுத்த முயற்சி கண்டறியப்பட்டால் மட்டுமே இந்த தரவை செயலாக்காது என்று இணையதளம் கூறுகிறது.
மிகவும் வினோதமாக, அரசாங்கத்தின் முழு விருப்பப்படி இந்த தரவுகளை "ஒழுங்குமுறை அமைப்புகள், சட்ட அமலாக்கம் அல்லது எந்த மூன்றாம் தரப்பினருக்கும்" அணுகல் வழங்கப்படலாம் என்று அரசு கூறுகிறது.
இங்கு நல்ல விவகாரம் என்னவென்றால், தகவல் அறியும் உரிமை இணையதளங்களில் தேவையற்ற தனியுரிமை மீறல்கள் பற்றிய பிரச்சினை பஞ்சாப், ஒடிசா, பீகார், நாகாலாந்து, சிக்கிம் மற்றும் மணிப்பூருக்கு மட்டுமே வரையறுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், நாட்டிலுள்ள ஏறக்குறைய ஒவ்வொரு தகவல் அறியும் உரிமை இணையதளமும் அனைத்து பொது அதிகாரிகளையும் சேர்ப்பதில் முழுமையற்றதாக உள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். சில அதிகாரிகளை நேரில் அல்லது அஞ்சல் மூலம் சமர்ப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் மூலம் மட்டுமே தொடர்பு கொள்ள முடியும்.
எனவே, பொது தகவல் அலுவலர்கள் அடையாளச் சான்றுகளுக்கான கோரிக்கைகள் பெரும்பாலும் இந்த வழக்குகளில் ஆவணப்படுத்தப்படாமல் இருக்கலாம். மாநில மற்றும் ஒன்றிய தகவல் ஆணையங்கள் வருடாந்திர அறிக்கைகளில் இந்த நடைமுறை குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படாவிட்டால், இந்த அடையாளச் சான்று கோரும் நடைமுறை முற்றிலும் கண்டறிய முடியாததாக இருக்கலாம். இன்றைய தேதி வரை, ஒன்றிய தகவல் ஆணையம் மற்றும் மாநில தகவல் ஆணையங்கள் வெளியிட்ட ஆண்டு அறிக்கைகள் இந்த விவகாரத்தில் முற்றிலும் அமைதியாக உள்ளன. ஒரு நாள் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் வெளிப்படைத்தன்மை சட்டங்களை சீராக செயல்படுத்துவதிலும், தங்கள் அடிப்படை மற்றும் சட்டப்பூர்வ உரிமைகளைப் பயன்படுத்தும் விண்ணப்பதாரர்களின் தனியுரிமையைப் பாதுகாப்பதிலும் ஒரே மாதிரியாக இருப்பார்கள் என்று நம்புகிறோம்.
எழுத்தாளர் வெளிப்படைத்தன்மை சட்டத்தில் அனுபவமுள்ள ஒரு வழக்கறிஞர், மேலும் இந்தியாவின் மாநிலங்களுக்கான RTI வலைத்தள இணக்க கண்காணிப்பாளரான nagrikproject.in-ஐ உருவாக்கியவர்.