தற்போதைய செய்தி : பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா பாகிஸ்தானுக்கு எதிராக ராஜதந்திர நடவடிக்கைகளை எடுத்த மறுநாள், சிம்லா ஒப்பந்தம் உட்பட இந்தியாவுடனான அனைத்து ஒப்பந்தங்களையும் இடைநிறுத்தக்கூடும் என்று பாகிஸ்தான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.
முக்கிய அம்சங்கள் :
• இந்தியா சிந்து நதி உடன்படிக்கையை (Indus Waters Treaty) நிறுத்தி வைத்துள்ளது. பாகிஸ்தானுடனான அரசியல் உறவுகளை நிறுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இருந்து இராணுவ அதிகாரிகள் மற்றும் உயர் அதிகாரிகளை வெளியேற்றியுள்ளது. பாகிஸ்தான் குடிமக்களுக்கு வழங்கப்பட்ட அனைத்து விசாக்களையும் ரத்து செய்து 48 மணி நேரத்தில் நாட்டைவிட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டுள்ளது. மேலும், அட்டாரி-வாகா எல்லையை மூடியுள்ளது.
• பாகிஸ்தானின் பிரதமர் முகமது ஷெபாஸ் ஷெரீப் தேசிய பாதுகாப்பு குழு (National Security Committee (NSC)) கூட்டத்திற்கு தலைமை தாங்கிய பிறகு பாகிஸ்தானின் எதிர்வினை வெளிப்பட்டது.
• பாகிஸ்தான் பிரதமர் அலுவலகத்தின் அறிக்கையில், "சிந்து நதி ஒப்பந்தத்தை நிறுத்தி வைக்க இந்தியா எடுத்த முடிவை பாகிஸ்தான் வன்மையாக நிராகரிக்கிறது" என்றும், சிந்து நதிகள் உடன்படிக்கையின்படி பாகிஸ்தானுக்குச் சொந்தமான நீரை நிறுத்துவதற்கோ அல்லது திசை திருப்புவதற்கோ செய்யப்படும் எந்த முயற்சியும், கீழ்நிலை ஆற்றின் கரையில் (lower riparian) உரிமைகளை பறிப்பது "போர் நடவடிக்கையாக" (Act of War) கருதப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
• இந்தியாவிற்குச் சொந்தமான அல்லது இந்தியாவால் இயக்கப்படும் அனைத்து விமான நிறுவனங்களுக்கும் பாகிஸ்தானின் வான்வெளி உடனடியாக மூடப்படும் என்றும் பாகிஸ்தான் வழியாக எந்தவொரு 3-வது நாட்டிற்கும் மற்றும் இந்தியாவிலிருந்து வரும் அனைத்து வர்த்தகமும் உட்பட, இந்தியாவுடனான அனைத்து வர்த்தகமும் உடனடியாக நிறுத்தப்படும் என்று பாகிஸ்தான் தெரிவித்துள்ளது.
• மேலும், பதிலடி நடவடிக்கையாக வாகா எல்லைப் பகுதியை மூடுவதாகவும், தூதரகத்தின் பலத்தை 30-ஆக குறைப்பதாகவும், இந்திய தூதரகத்தில் இருந்து பாதுகாப்பு சேவை அதிகாரிகளை வெளியேற்றுவதாகவும் கூறியுள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
• வியாழக்கிழமை பாகிஸ்தான் தனது வான்வெளியை இந்திய விமான நிறுவனங்களுக்கு மூடியதால், வட இந்தியாவில் இருந்து புறப்படும் மேற்கு நோக்கிய சர்வதேச விமானங்கள் இப்போது நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளவும், அதிக எரிபொருள் செலவிடவும் வேண்டியுள்ளது. இந்த காரணிகள் விமான கட்டணங்கள் உயர்வுக்கு வழிவகுக்கக்கூடும்.
• டெல்லி விமான நிலையத்தில் இருந்து புறப்படும் பல சர்வதேச விமானங்களின் சமீபத்திய பயண பாதைகளை இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆய்வு செய்ததில், பாகிஸ்தானின் பதிலடி நடவடிக்கை இந்திய விமான நிறுவனங்களின் மத்திய ஆசியா, காக்கசஸ், மேற்கு ஆசியா, ஐரோப்பா, ஐக்கிய இராச்சியம் மற்றும் வட அமெரிக்காவுக்கான பயணங்களை பாதிக்கும் என்று தெரிகிறது.
• தொழில்துறை நிபுணர்களின் கூற்றுப்படி, பாதிப்பை மதிப்பிட இன்னும் நேரம் ஆனாலும், விமான நிறுவனங்களின் செலவுகள் உயரும் என்பதும், இது விமான கட்டணங்கள் உயர்வுக்கு வழிவகுக்கும். கூடுதலாக, பிற நாடுகளின் விமான நிறுவனங்கள் தொடர்ந்து பாகிஸ்தான் மேல் பறக்க முடியும் என்பதால், பாதிக்கப்பட்ட வழித்தடங்களில் அவர்களுக்கு இந்திய விமான நிறுவனங்களைவிட செலவு சார்ந்த நன்மை கிடைக்கலாம்.
• கடைசியாக பாகிஸ்தான் தனது வான்வெளியை நீண்ட காலத்திற்கு மூடியது 2019ஆம் ஆண்டு, பாலகோட் வான்வழித் தாக்குதல்களைத் தொடர்ந்து- அதிக எரிபொருள் செலவுகள் மற்றும் நீண்ட வழித்தடங்களில் ஏற்பட்ட செயல்பாட்டு சிக்கல்கள் காரணமாக இந்திய விமான நிறுவனங்கள் சுமார் ₹700 கோடியை இழந்தன.
• அப்போது ஏர் இந்தியாமிகவும் பாதிக்கப்பட்ட இந்திய விமான நிறுவனமாக இருந்தது. ஏனெனில், அது மற்ற விமான நிறுவனங்களைவிட அதிக மேற்கை நோக்கி சர்வதேச விமானங்களை இயக்கியது. ஐரோப்பா மற்றும் வட அமெரிக்காவிற்கு நீண்டதூர மற்றும் மிக நீண்டதூர விமானங்களை இயக்கும் ஒரே இந்திய விமான நிறுவனமாக அது இருந்தது மற்றும் தொடர்ந்து இருக்கிறது.
• இந்திய விமானப்படையின் பாலகோட் வான் தாக்குதல்களுக்குப் பிறகு, பாகிஸ்தான் 2019 பிப்ரவரி 26 அன்று தனது வான்வெளியை முழுமையாக மூடியது. இறுதியில் ஜூலை 2019-ல் பாகிஸ்தான் தனது வான்வெளியை முழுவதுமாக திறந்தது. ஜூன் மாதத்திற்குள், வான்வெளி மூடப்பட்டதால் இந்திய விமான நிறுவனங்களின் மொத்த இழப்பு ₹550 கோடிக்கும் அதிகமாக இருக்கும் என்று அப்போதைய குடிமை விமானப் போக்குவரத்து அமைச்சகம் வழங்கிய தரவுகள் தெரிவிக்கின்றன. தொழில்துறை வட்டாரங்களின் கூற்றுப்படி, அந்த ஆண்டு ஜூலை நடுப்பகுதி வரை பாகிஸ்தான் கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கியபோது இந்த எண்ணிக்கை சுமார் ₹700 கோடியாக இருந்தது.
• 2019-ஆம் ஆண்டில், பாகிஸ்தான் வழித்தடங்களை மூடியதால், பெரும்பாலான விமானங்களின் பயண நேரம் குறைந்தது 70-80 நிமிடங்கள் அதிகரித்தது. டெல்லியில் இருந்து சிகாகோவிற்கு செல்லும் ஏர் இந்தியாவின் விமானங்கள் எரிபொருள் நிரப்புவதற்காக ஐரோப்பாவில் நிறுத்த வேண்டியிருந்தது. மேலும், டெல்லியிலிருந்து இஸ்தான்புல்லுக்குச் சென்ற இண்டிகோவின் விமானம் சிறிய விமானத்தைப் பயன்படுத்தியதால், எரிபொருள் நிரப்ப தோஹாவில் நிறுத்த வேண்டியிருந்தது.