600 நாட்களுக்கும் மேலாக நடத்தப்பட்ட வைக்கம் சத்தியாகிரகம் இந்தியாவின் பல கோவில் நுழைவு இயக்கங்களில் முதன்மையானது. தேசிய இயக்கத்தின் மத்தியில், அது தீண்டாமை மற்றும் சாதிய ஒடுக்குமுறை பிரச்சினையை முன்வைத்தது.
திருவிதாங்கூர் சமஸ்தானத்தில், உள்ள கோயில் நகரமான ஒன்று ’வைக்கம்’ ஆகும். மார்ச் 30, 1924 இல், மக்கள் அங்கு அமைதியான முறையில் கோவில் நுழைவு போராட்டங்களில் பங்கேற்றனர். இந்தியாவில் நடைபெற்ற கோவில் நுழைவு போராட்டங்களில் இதுவே முதல் முறையாகும். தேசியவாத இயக்கம் வலுப்பெறும் போது, சமூக மாற்றங்களை மேற்கொள்வதில் சத்தியாகிரக இயக்கம் கவனம் செலுத்தியது. இது திருவிதாங்கூரில் காந்திய எதிர்ப்பு முறைகளை அறிமுகப்படுத்தியது. இப்போது, நூறு ஆண்டுகளுக்குப் பிறகு, நாம் அதை நினைவில் கொள்கிறோம்.
20 ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் திருவிதாங்கூர்
திருவிதாங்கூர் சமஸ்தானம் "நிலப்பிரபுத்துவ, இராணுவவாத மற்றும் இரக்கமற்ற ஆட்சி நிறைந்த அரசாங்க அமைப்பைக் கொண்டிருந்தது" என்று கலாச்சார மானுடவியலாளர் ஏ.ஐயப்பன் கேரள கிராமத்தில் சமூகப் புரட்சித் தொடர்பான, கலாச்சாரத்தில் ஒரு ஆய்வு-1965 (A Study in Culture (1965)) என்ற புத்தகத்தில் எழுதினார். சாதியப் பாகுபாடு என்ற கருத்து தொடுதலின் அடிப்படையில் மட்டுமல்ல, பார்வையின் அடிப்படையிலும் தீண்டாமையாக இருந்தது. கோயில்கள் மற்றும் அவற்றைச் சுற்றியுள்ள சாலைகள் போன்ற எந்த "தூய்மையான" (pure) இடத்திற்கும் தாழ்ந்த சாதிகள் நுழையத் தடை விதிக்கப்பட்டன.
19 ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியில் பல சமூக மற்றும் அரசியல் வளர்ச்சிகள் முன்னோடியில்லாத சமூக மாற்றத்திற்கு வழிவகுத்தது. முதலாவதாக, கிறிஸ்தவ மிஷனரிகள் சாதிய ஒடுக்குமுறையின் பிடியிலிருந்து தப்பிக்க முயன்று தாழ்த்தப்பட்ட சாதிகளில் பெரும் பகுதியினரை மதமாற்றம் செய்தனர். இரண்டாவதாக, 1860 முதல் 1880 வரை மஹாராஜா ஆயில்யம் திருநாள் ராமவர்மாவின் (Maharaja Ayilyam Thirunal Rama Varma) ஆட்சியில் பல முன்னேற்றங்கள் ஏற்பட்டன. ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றமான, தாழ்த்தப்பட்ட சாதியினர் உட்பட அனைவருக்கும் இலவச ஆரம்பக் கல்வியை அறிமுகப்படுத்தியது.
20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வரலாற்றாசிரியர் ராபின் ஜெஃப்ரியின் கூற்றுப்படி, ”சாதி இந்துக்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் கீழ்சாதி இந்துக்கள், குறிப்பாக ஈழவர்களிடையே ஒரு குறிப்பிடத்தக்க படித்த வர்க்கம் உருவானது." (1860 முதல் 1940 வரை திருவிதாங்கூரில் நடந்த கோவில் நுழைவு இயக்கம் 1976 இல் ’சோசியல் சைண்டிஸ்டில் (Social Scientist) வெளியான ஒரு கட்டுரையில் விவாதிக்கப்பட்டது).
மதம் மற்றும் பழக்கவழக்கங்கள் இன்னும் முக்கியமானவை ஆகும். ஆனால், கீழ் சாதியினர் அதே கடுமையான பொருள் மற்றும் அறிவுசார் போராட்டங்களை இனி எதிர்கொள்ளவில்லை. குறிப்பாக, வரலாற்றாசிரியர் மேரி எலிசபெத் கிங் தனது 2015-ல் வெளியான "காந்திய வன்முறையற்ற போராட்டம் மற்றும் தென்னிந்தியாவில் தீண்டாமை" (Gandhian Nonviolent Struggle and Untouchability in South India) என்ற புத்தகத்தில் ஈழவர்கள் திருவிதாங்கூரில் மிகவும் படித்த மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட தீண்டத்தகாத சமூகமாக மாறியுள்ளனர் என்று எழுதினார்.
ஆனால் அரசாங்க வேலைகள் இன்னும் உயர் சாதியினருக்கு ஒதுக்கப்பட்டன. 1918 ஆம் ஆண்டில், எண்ணிக்கை சிறுபான்மையினரான உயர் சாதி இந்துக்கள், மாநில வருவாய்த் துறையில் 4,000 வேலைகளில் 3,800 வேலைகளை வகித்தனர். இதன் பொருள் என்னவென்றால், கல்வி என்பதே சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கான வழிமுறையாக செயல்படவில்லை.
மேலும், ஒரு சிறிய ஈழவ உயரடுக்கு பிரிவினர் உருவாகத் தொடங்கியபோது, பல சந்தர்ப்பங்களில், சடங்கு பாகுபாடு, பொருள் மற்றும் கல்வி முன்னேற்றத்தை புறக்கணித்தது. உதாரணமாக, இருபதாம் நூற்றாண்டின் முற்பகுதியில் திருவிதாங்கூரில் கார் வைத்திருந்த வெகு சிலரில் ஒருவரான ஈழவரான அலும்மூட்டில் சன்னரின் (Aloommootil Channar) கதையை எடுத்துக் கொள்ளுங்கள். ஈழவர்கள் செல்ல அனுமதிக்கப்படாத சாலையில் வாகனம் சென்றடையும் போதெல்லாம், சன்னார் தனது வாகனத்திலிருந்து இறங்கி நடந்தே செல்ல வேண்டியிருந்தது.
ஈழவத் தலைவர் டி.கே. மாதவன் 1917இல் தனது தேசாபிமானியில் எழுதிய தலையங்கத்தில் ஆலயப் பிரவேசப் பிரச்சினையை முதன்முதலில் எழுப்பினார். காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தின் வெற்றியால் ஈர்க்கப்பட்டு, 1920 வாக்கில், அவர் மிகவும் நேரடி முறைகளுக்கு வாதிடத் தொடங்கினார். அந்த ஆண்டு, வைக்கம் கோவிலுக்கு அருகிலுள்ள சாலையில் உள்ள கட்டுப்பாட்டு அறிவிப்புப் பலகைகளை அவரே தாண்டிச் சென்றார்.
திருவிதாங்கூரில் உயர்சாதியினரின் போராட்டங்கள் கடுமையாக முன்னேறின. சாதி இந்துக்கள் எதிர்வினை விளைவை ஏற்படுத்துவார்கள் என்ற பயத்தின் காரணமாக மகாராஜா சீர்திருத்தங்களைத் தவிர்த்தார்.
இந்திய தேசிய காங்கிரசின் தொடக்கம் இதை முற்றிலும் மாற்றியது. மாதவன் 1921 இல் காந்தியைச் சந்தித்து, கோயில்களுக்குள் நுழைவதற்கான வெகுஜன போராட்டத்திற்கு மகாத்மாவின் ஆதரவைப் பெற்றார். 1923 ஆம் ஆண்டு காக்கிநாடாவில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரசின் அமர்வில், கேரள மாகாண காங்கிரஸ் கமிட்டியால் (Kerala Provincial Congress Committee) தீண்டாமை எதிர்ப்பை ஒரு முக்கிய பிரச்சினையாக எடுத்துக் கொள்ள ஒரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதைத் தொடர்ந்து ஒரு மாபெரும் பொதுச் செய்தி இயக்கமும், இந்து கோயில்களையும், எல்லாப் பொதுச் சாலைகளையும் அவர்ண இந்துகளுக்கு திறந்துவிட வேண்டுமென்ற இயக்கமும் தொடங்கின. மதிக்கப்படும் சிவன் கோயிலுடன் கூடிய வைக்கம் முதல் சத்தியாகிரகத்திற்கான இடமாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.
வைக்கம் சத்தியாகிரகம்
மாதவனும் பிற தலைவர்களும் ஆரம்பத்தில் கோயிலைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளை அவர்ணர்களுக்குத் திறப்பதில் கவனம் செலுத்த இராஜதந்திர முடிவை எடுத்தனர். மார்ச் 30, 1924 அதிகாலையில், "ஒரு நாயர், ஒரு ஈழவர் மற்றும் ஒரு புலையொருவர், கதர் சீருடை அணிந்து, மாலை அணிந்து, ஆயிரக்கணக்கான மக்கள் பின்தொடர்ந்து, சாலைகளைப் பயன்படுத்த முயன்றனர்" என்று ஜெஃப்ரி எழுதினார்.
அவர்கள் உடனடியாக தடுத்து நிறுத்தப்பட்டு கைது செய்யப்பட்டனர். எனவே, மறுநாள் காலை, மேலும் மூன்று பேர் தடைசெய்யப்பட்ட சாலைகளில் நுழைந்து கைது செய்யப்பட்டனர். ஏப்ரல் 10 அன்று காவல்துறையினர் கைது செய்வதை நிறுத்தி, அதற்கு பதிலாக முழு பகுதியையும் முற்றுகையிடும் வரை இது ஒவ்வொரு நாளும் தொடர்ந்தது.
அப்போதிருந்து, செப்டம்பர் வரை, எதிர்ப்பாளர்கள் தடுப்புகளுக்கு முன்னால் அமர்ந்து, உண்ணாவிரதம் இருந்தனர் மற்றும் தேசபக்தி பாடல்களைப் பாடினர். பலமுறை கைது செய்யப்பட்ட பெரியார், சி.ராஜகோபாலாச்சாரி போன்ற தலைவர்கள் வைக்கம் வந்து போராட்டக்காரர்களுக்கு ஆதரவு தெரிவித்தனர். அதே நேரத்தில், எதிர்ப்பு கிளர்ச்சிகள் தீவிரமடைந்தன. மேலும், சத்தியாகிரகிகள் சாதி இந்துக்களிடமிருந்து அடிக்கடி வன்முறையையும் அச்சுறுத்தலையும் எதிர்கொண்டனர்.
ஆகஸ்ட், 1924 இல், திருவிதாங்கூர் மகாராஜா இறந்தார். அதைத் தொடர்ந்து, இளம் மகாராணி சேது லக்ஷ்மிபாய் (Maharani Sethu Lakshmi Bai), அனைத்து கைதிகளையும் விடுவித்தார். ஆனால் ஒரு பெரிய போராட்டக் குழு திருவனந்தபுரத்தில் உள்ள அரச அரண்மனைக்கு அணிவகுத்துச் சென்றபோது, அனைத்து சாதியினரையும் கோயில்களுக்குள் அனுமதிக்க அவர் மறுத்துவிட்டார்.
மார்ச் 1925 இல், காந்தி இறுதியாக ஒரு சமரசத்தை ஏற்படுத்த முடிந்தது: கோயில்களைச் சுற்றியுள்ள நான்கு சாலைகளில் மூன்று அனைவருக்கும் திறக்கப்பட்டன. ஆனால், நான்காவது (கிழக்கு) சாலை பிராமணர்களுக்காக ஒதுக்கப்பட்டது. இது இறுதியாக 1925 நவம்பரில் செயல்படுத்தப்பட்டது. அப்போது அரசாங்கம் "கோயிலை மாசுபடுத்தாமல்" தாழ்ந்த சாதியினர் பயன்படுத்தக்கூடிய திசைதிருப்பும் சாலைகளை முடித்தது. கடைசி சத்தியாகிரகி 1925 நவம்பர் 23 அன்று வைக்கத்திலிருந்து திரும்ப அழைக்கப்பட்டார்.
மரபு மற்றும் பின்விளைவு
வைக்கம் சத்தியாகிரகம் ஒரு குறிப்பிடத்தக்க இயக்கமாகும், இது 600 நாட்களுக்கும் மேலாக தன்னை நிலைநிறுத்தியது, இது சமூக விரோத சக்திகள், காவல்துறை அடக்குமுறைகள் மற்றும் 1924 இல் நகர வரலாற்றில் மிக மோசமான வெள்ளங்களில் ஒன்றாகும். சத்தியாகிரகம் சாதிய வேறுபாடுகளுக்கு அப்பால் இதுவரை கண்டிராத ஒற்றுமையைக் கண்டது. அதன் தொடர்ச்சியான அணிதிரட்டலுக்கு முக்கியமானது.
ஆனால் இறுதி சமரசம் பலருக்கு ஏமாற்றத்தை அளித்தது. இதைவிட பிரம்மாண்டமான முடிவை எதிர்பார்த்திருந்த பெரியார், இந்த விவகாரத்தில் காந்தியுடன் கருத்து வேறுபாடு கொண்டார்.
நவம்பர் 1936 இல், திருவிதாங்கூர் மகாராஜா, வரலாற்று சிறப்புமிக்க கோயில் நுழைவு பிரகடனத்தில் (Temple Entry Proclamation) கையெழுத்திட்டார். இது மாநிலத்தின் கோயில்களுக்குள் கடைநிலை சாதிகள் நுழைவதற்கு நீண்ட காலமாக இருந்த தடையை நீக்கியது. இதுவும், காந்திய ஒத்துழையாமை முறைகளை எதிர்ப்புக்கான சக்திவாய்ந்த கருவிகள் என்று நிரூபித்துக் காட்டியதும் வைக்கம் சத்தியாக்கிரகத்தின் மாபெரும் வெற்றியாகும். கிங் எழுதியது போல்: "அதன் குறைபாடுகள் இருந்தபோதிலும், வைக்கம் சத்தியாகிரகம் தீண்டாமை, அணுக முடியாத தன்மை மற்றும் பார்க்க முடியாத தன்மை ஆகியவற்றை இந்தியாவின் அரசியல் பிரச்சினைகளில் முன்னணிக்கு கொண்டு வந்தது."