அரசியலமைப்புப் பிரிவு 67-ன் விதிமுறையானது விரிவானது. இது, மாநிலங்களவைத் தலைவரை நீக்குவதற்கான தீர்மானத்தை 'அனைத்து உறுப்பினர்களிலும் பெரும்பான்மை' மூலம் நிறைவேற்ற வேண்டும். மேலும், மக்களவை 'ஒப்புக்கொள்ள வேண்டும்'. இதுவரை எந்த குடியரசுத் துணைத்தலைவரும் இப்படி பதவியில் இருந்து நீக்கப்படவில்லை.
மாநிலங்களவைத் தலைவர் ஜகதீப் தங்கருக்கு எதிராக செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) அன்று நம்பிக்கையில்லா தீர்மானத்திற்கான (no-confidence motion) அறிவிப்பை எதிர்க்கட்சிகள் தாக்கல் செய்தன. இது இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இதுவே முதல் நடவடிக்கையாகும்.
ஆகஸ்ட் மாதம் நடந்த வரவுசெலவு திட்டக் கூட்டத்தொடரின்போது இதேபோன்ற தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் பரிசீலித்து வந்தன. ஆனால், அந்த சந்தர்ப்பத்தில் அது பின்பற்றப்படவில்லை.
இந்தியாவின் குடியரசுத் துணைத்தலைவராக இருக்கும் மாநிலங்களவை தலைவரை பதவி நீக்கம் செய்வதற்கான செயல்முறை மற்றும் தேவைகள் என்ன? அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் இந்த நடவடிக்கையை எவ்வாறு பரிந்துரைக்கிறார்கள்? என்று சில கேள்விகள் முன்வைக்கப்படுகிறது.
இந்திய அரசியலமைப்பின் 64-வது பிரிவு, குடியரசுத் துணைத்தலைவர் "மாநிலங்கள் குழுவின் அலுவல் சார்ந்த தலைவராக இருப்பார்" என்று குறிப்பிடுகிறது.
குடியரசுத் துணைத்தலைவரும், மாநிலங்களவைத் தலைவரும் ஒரே நபராக இருக்க வேண்டும் என்பதால், அவர்களை நீக்குவதற்கான செயல்முறையும் ஒரே மாதிரியாக இருக்கும் என்று அரசியலமைப்புப் பிரிவு 67-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த விதியின் கீழ், குடியரசுத் துணைத்தலைவர் "அவர் பதவியேற்ற தேதியிலிருந்து ஐந்து ஆண்டு காலத்திற்கு பதவியில் இருப்பார்". அதற்கு முன்னர் குடியரசுத் துணைத்தலைவரானவர், குடியரசுத் தலைவருக்கு ஒரு கடிதத்தை அனுப்புவதன் மூலம் பதவி விலகலாம்.
குடியரசுத் துணைத்தலைவரை நீக்குவதற்கான அல்லது குற்றஞ்சாட்டுவதற்கான தேவைகள் அரசியலமைப்புப் பிரிவு 67(b)-ன் கீழ் வழங்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவையில் உள்ள அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானோர் பதவி நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை நிறைவேற்றினால், குடியரசுத் துணைத்தலைவர் பதவி நீக்கம் செய்யலாம் என அதில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த தீர்மானம் மக்களவையில் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும்.
இந்த விதியின் கீழ், 14 நாள்களுக்கு முன்பு அறிவிப்பு வழங்கப்படாவிட்டால், தீர்மானத்தை நகர்த்த முடியாது. மேலும், இந்த அறிவிப்பானது தீர்மானத்தை முன்வைப்பதற்கான நோக்கம் என்ன என்பதை குறிப்பிட வேண்டும்.
14 நாட்கள் அவகாசம் முடிவடைந்ததும், மாநிலங்களவை தீர்மானத்தை விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளும். பின்னர், அரசியலமைப்புப் பிரிவு 67 (பி) இல் குறிப்பிடப்பட்டுள்ள நடைமுறை பின்பற்றப்படும்.
தற்போதைய வழக்கில், தீர்மானத்தை நாடாளுமன்ற அவையில் எடுத்துக் கொள்ளப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஏனென்றால், நாடாளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் 20-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. இது 14 நாட்களுக்கும் குறைவாகவே உள்ளது. இதே தீர்மானத்தை அடுத்த கூட்டத் தொடரில் பரிசீலிக்க முடியுமா என்பதை தீர்மானிக்க எந்த முன்னுதாரணங்களும் இல்லை.
எது எவ்வாறாயினும், நாடாளுமன்றத்தில் உள்ள கணக்குகளைப் பார்க்கும்போது, தீர்மானம் தோற்கடிக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. குடியரசுத் துணைத்தலைவர் நாடாளுமன்ற அவையை நடத்தும் விதத்தில் நியாயமற்றவர் மற்றும் பாரபட்சமாக நடந்து கொள்கிறார் என்று குற்றம் சாட்டும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பின் அடையாளமாக இந்த நம்பிக்கையில்லா தீர்மான நடவடிக்கை உள்ளது.
அரசியல் நிர்ணய சபையில் நடந்த விவாதங்களின் போது, பல உறுப்பினர்கள் அரசியலமைப்புப் பிரிவு 67 குறித்து கவலைகளை எழுப்பினர். இது, குடியரசுத் துணைத்தலைவர் நீக்கும் செயல்முறையை தெளிவாக்குவதற்கு அவர்கள் திருத்தங்களை முன்மொழிந்தனர்.
மாநிலங்களவை தீர்மானம் மக்களவையால் "ஒப்புக் கொள்ளப்பட வேண்டும்" என்ற தேவை "மிகவும் தெளிவற்றது" என்று எச்.வி.காமத் சுட்டிக்காட்டினார். மேலும், தீர்மானமானது பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டுமா என்பதைக் கூட குறிப்பிடவில்லை.
மக்களவையும் பெரும்பான்மையுடன் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்பதை தெளிவாகக் காட்ட "இதேபோன்ற தீர்மானத்தால் ஒப்புக்கொள்ளப்பட்டது" (agreed to by a similar resolution) என்று வாசிக்க வேண்டும் என்று காமத் முன்மொழிந்தார்.
மக்களவை உண்மையில் ஒரு தனிப் பெரும்பான்மையுடன் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் என்று டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் தெளிவுபடுத்தினார். இதன் பொருள் அனைத்து உறுப்பினர்களில் 50% நபர்கள் கலந்துகொண்டு வாக்களிக்கும் தீர்மானத்திற்கு உடன்பட வேண்டும்.
ஆனால், மாநிலங்களவையில் தீர்மானம் நிறைவேற்றுவதற்கான தேவையும் வேறுவிதமாக இருப்பதால் இதில் குறிப்பிட்டுள்ள காரணங்களும் வேறு என்று அவர் விளக்கினார். இந்த தீர்மானம் மாநிலங்களவையில் காலியாக உள்ள இடங்களைத் தவிர்த்து, பெரும்பான்மையான அனைத்து உறுப்பினர்களாலும் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அவையில் கலந்துகொண்டு வாக்களிப்பவர்களை மட்டும் அடிப்படையாகக் கொண்டதல்ல.
குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத்தலைவர் பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறைகளை ஒப்பிடும்போது இதில் எழும் கேள்விகள் "புதிவிதமான முரண்பாட்டை" (strange anomaly) காமத் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பு பிரிவு 61 ஆனது, குடியரசுத் தலைவர் பதவி நீக்கம் செய்வதற்கான நடைமுறையை கோடிட்டுக் காட்டுகிறது. இவர்களின் குற்றச்சாட்டுடன் கூடிய தீர்மானம், குற்றம் சுமத்தப்படும் அவையில் உள்ள மொத்த உறுப்பினர்களில் குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மையினரால் நிறைவேற்றப்பட வேண்டும்.
"நாடாளுமன்றத்தின் இரு அவைகளில் ஏதேனும் ஒன்றில் ஒரு குற்றச்சாட்டு அவ்வாறு முன்வைக்கப்பட்டால், மற்ற அவை அந்தக் குற்றச்சாட்டை விசாரிக்கும் அல்லது குற்றச்சாட்டு விசாரிக்கப்படுவதற்கு காரணமாக இருக்கும். மேலும், அத்தகைய விசாரணையில் ஆஜராகவும் பிரதிநிதித்துவப்படுத்தவும் குடியரசுத் தலைவருக்கு உரிமை உண்டு".
விசாரணைக்குப் பிறகு, குற்றச்சாட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அல்லது விசாரிக்கப்பட வேண்டிய நாடாளுமன்ற அவையானது "அவையின் மொத்த உறுப்பினர்களில் மூன்றில் இரண்டு பங்கிற்குக் குறையாத பெரும்பான்மையால்" ஒரு தீர்மானத்தை நிறைவேற்றினால்... குடியரசுத் தலைவருக்கு எதிராக முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டு நிலைநிறுத்தப்பட்டுள்ளது என்று அறிவிக்கும் தீர்மானம், "தீர்மானம் நிறைவேற்றப்பட்ட தேதியிலிருந்து குடியரசுத் தலைவரை அவரது பதவியிலிருந்து நீக்கும் விளைவைக் கொண்டிருக்கும்".
டாக்டர் அம்பேத்கர், அரசியலமைப்புச் சட்டம் குடியரசுத் துணைத்தலைவரைக் குறிப்பிடுகிறது என்றாலும், அவர் உண்மையில் மாநிலங்களவையின் தலைவர் என்று விளக்கினார். அவரது கடமைகளைப் பொறுத்தவரை, அவர் மக்களவை சபாநாயகருக்கு இணையானவர் என்று குறிப்பிட்டிருந்தார்.
குடியரசுத் துணைத்தலைவர் மற்றும் சபாநாயகரை (அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 94ன் கீழ்) நீக்குவதற்கான செயல்முறைகள் ஒன்றுதான் என்றும் டாக்டர் அம்பேத்கர் குறிப்பிட்டிருந்தார்.