ஷேக் ஹசீனா மக்கள் ஆதரவைப் பெற்றுள்ளார், ஆனால் அவர் மிகவும் இணக்கமாக இருக்க வேண்டும்
ஜனவரி 7 அன்று நடைபெற்ற வங்காளதேச தேசியத் தேர்தலை பிரதான எதிர்க்கட்சி புறக்கணித்தது. முதற்கட்ட முடிவுகளில், பிரதமர் ஷேக் ஹசீனாவின் கட்சியான அவாமி லீக் (Awami League) நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 300 இடங்களில் 222 இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய எதிர்க்கட்சியான ஜாதியா கட்சி (Jatiya Party) 11 இடங்களைப் பெற்றது, மீதமுள்ள இடங்களில் பெரும்பாலானவை சுயேட்சை வேட்பாளர்களுக்கு சென்றன. பங்களாதேஷ் தேசியவாதக் கட்சி (Bangladesh Nationalist Party (BNP)) மோசமான தேர்தல் என்று கூறியதற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் பொது வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது மற்றும் பிரதமர் ஹசீனாவின் பதவி விலகக் கோரியது. அவர்கள் ஒரு நடுநிலையான காபந்து அரசாங்கத்தின் (caretaker government) கீழ் தேர்தல்களை விரும்பினர். ஆனால் ஹசீனா இதை நிராகரித்தார், எதிர்ப்புகள் மற்றும் எதிர்க்கட்சிகள் மீது ஒடுக்குமுறைக்கு வழிவகுத்தது.
தேர்தல்கள் சுதந்திரமாகவும் நியாயமாகவும் நடந்ததாக பிரதமர் ஹசீனா கூறுகிறார், ஆனால் பங்களாதேஷ் தேசியவாதக் கட்சிகளை பலவீனப்படுத்த அரசு நிறுவனங்களைப் பயன்படுத்துவதாக குற்றச்சாட்டுகள் உள்ளன. முன்னாள் பிரதமரும், பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் தலைவருமான கலிதா ஜியா, ஊழல் குற்றச்சாட்டில் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். கட்சியின் செயல் தலைவர் தாரிக் ரஹ்மான், லண்டனில் புலம்பெயர்ந்து வாழ்கிறார். மேலும், பல மூத்த தலைவர்கள் சிறையில் உள்ளனர். பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் வேலைநிறுத்தத்தின் போது நடந்த தேர்தல்களில், ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு 80% க்கும் அதிகமாக இருந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 40% ஆக குறைந்துள்ளது.
பிரதமர் ஷேக் ஹசீனா தனது வாழ்க்கையில் பல சவால்களை சந்தித்துள்ளார். அவரது தந்தை ஷேக் முஜிபுர் ரஹ்மான் உட்பட அவரது குடும்பத்தினர் 1975 இல் பரிதாபமாக கொல்லப்பட்டனர். ஜனநாயகத்தை மீட்டெடுக்க 1980 மற்றும் 1990 களில் எர்ஷாத்தின் சர்வாதிகாரத்திற்கு (Ershad’s dictatorship) எதிராக அவர் போராடினார். 2000-மாவது ஆண்டுகளின் முற்பகுதியில், அவரது பேரணியின் போது ஒரு கைக்குண்டு தாக்குதலில் அவரது ஆதரவாளர்கள் 20 பேர் உயிரிழந்தனர். 2009 இல் தனது இரண்டாவது பதவிக் காலத்தில், வங்காளதேசம் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டது. மேலும், அவர் உறுதித்தன்மை, தீவிரவாதிகளை எதிர்த்தல், 1971 இனப்படுகொலைக்கு தீர்வு காண்பது மற்றும் பொருளாதார வளர்ச்சியை வளர்ப்பதில் கவனம் செலுத்தினார்.
பெரும்பாலான பங்களாதேஷ் மக்கள் அவரது செயல்பாட்டை அங்கீகரிப்பதாக சுதந்திர கருத்துக்கணிப்புகள் குறிப்பிடுகின்றன. இருப்பினும், நாட்டை ஒரு கட்சி அரசாக மாற்றும் திறனுக்காகவும் அவர் விமர்சனங்களை எதிர்கொள்கிறார். தற்போது, வங்காளதேசம், அதிக பணவீக்கம், வெளிநாட்டு கையிருப்பு குறைதல் மற்றும் கோவிட்-19க்கு பிந்தைய சூழ்நிலையின் காரணமாக அதிகரித்த கடன் போன்ற பொருளாதார சவால்களை எதிர்கொள்கிறது. ஹசீனாவின் வலுவான அணுகுமுறையோ அல்லது எதிர்க்கட்சிகளின் வன்முறையோ நாட்டுக்கு உதவவில்லை. நான்காவது முறையாக பிரதமராக பதவி வகித்த அவர், எதிர்காலத்திற்கான ஜனநாயக மற்றும் வளமான வங்காளதேசத்தை கட்டியெழுப்ப வேண்டுமானால் அவர் மிகவும் இணக்கமாகவும், ஒத்துழைப்பவராகவும் இருக்க வேண்டும்.