மாநிலங்களவையின் ஒப்புதல் இல்லாமல் இயற்றப்படும் சட்டங்கள் இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பைப் பாதிக்கிறது. உச்ச நீதிமன்றம் வழங்கவுள்ள தீர்ப்பு சட்டம் இயற்றுவதில் குறிப்பிட்ட தாக்கத்தை ஏற்படுத்தும்.
வரும் வாரங்களில், உச்ச நீதிமன்றத்தின் ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, பண மசோதாவின் வரையறைகளை நிர்வகிக்கும் முக்கியமான கேள்விகள் மீதான வாதங்களைக் கேட்க உள்ளது. நீதிமன்றத்தின் இறுதித் தீர்ப்பு, கடந்த சில ஆண்டுகளாக மாநிலங்களவையின் ஒப்புதலின்றி இயற்றப்படும் சட்டங்கள் மீது தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த வழக்கு இந்தியாவின் கூட்டாட்சி அமைப்பின் எதிர்காலத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தால் வழங்கப்பட்டுள்ள அதிகார சமநிலையையும் பாதிக்கும்.
ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு, நவம்பர் 2019-ல், ரோஜர் மேத்யூ vs சவுத் இந்தியன் பேங்க் லிமிடெட் (Rojer Mathew vs South Indian Bank Ltd) வழக்கில், 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிதிச் சட்டம் (Finance Act, 2017), விசாரணைக்கு உகந்தது என்று கூறியது. பண மசோதாவாக அங்கீகரிக்கப்பட்ட பிறகு நிறைவேற்றப்பட்ட சட்டம், 26 வெவ்வேறு நீதிமன்றங்களின் அதிகாரத்தையும் அதிகார வரம்பையும் மாற்றியது. இது அமைப்புகளில் சிலவற்றை நீக்கியது, மற்றவற்றை ஒன்றிணைத்தது, தீர்ப்பயங்களில் உறுப்பினர்களை நியமிப்பதற்கான தகுதிகளை நிர்ணயித்தது மற்றும் புதிய விதிகள் உருவாக்கம் உட்பட பல்வேறு நிபந்தனைகளை விதித்தது.
பிரிவுகள் (Articles) மற்றும் வரையறைகள்
ரோஜர் மேத்யூ வழக்கில், மனுதாரர்கள் இந்த மாற்றங்கள் பண மசோதாவாகக் கருத முடியாத அளவுக்கு விரிவாகிவிட்டதாக வாதிட்டனர். இந்தியாவின் அரசியலமைப்பு கட்டமைப்பின் கீழ், ஒரு மசோதா சட்டமாக மாற, அது பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அனுமதி பெற வேண்டும். அரசியலமைப்பு சட்ட விதி 109-ல் மட்டும் சில விதிவிலக்கு வழங்கப்பட்டுள்ளது. மக்களவையின் ஒப்புதலுடன் பண மசோதாக்கள் சட்டமாக மாற அரசியலமைப்பு சட்ட விதி 109-ல் அனுமதிக்கிறது. இந்த மசோதா மீது மாநிலங்கவை பரிந்துரை செய்யலாம். இருப்பினும், இந்த பரிந்துரைகள் மக்களவையை எந்த வகையிலும் கட்டுப்படுத்தாது.
சட்டப்பிரிவு 110(1) பண மசோதா என்றால் என்ன என்பதை வரையறுக்கிறது. வரி விதித்தல் அல்லது ரத்து செய்தல், பணம் கடன் வாங்குவதை ஒழுங்குபடுத்துதல், இந்தியாவின் ஒருங்கிணைந்த நிதியிலிருந்து (Consolidated Fund of India) பணத்தைப் பயன்படுத்துதல் போன்ற நடைமுறைகளை மட்டுமே ஒரு வரைவுச் சட்டம் கையாள்கிறது என்றால், அது பண மசோதாவாகக் கருதப்படும். அரசியலமைப்பு சட்டப்பிரிவு 110(3)-ன் படி, முன்மொழியப்பட்ட சட்டம் பண மசோதாவா இல்லையா என்பதை மக்களவையின் சபாநாயகர் முடிவு செய்வார்.
ஒரு மசோதா ஒரு பண மசோதாவாக இருக்க, சட்டப்பிரிவு 110(1)-ல் குறிப்பிடப்பட்டுள்ள வரைமுறைகளை மட்டுமே கொண்டிருக்க வேண்டும் என்று அரசியலமைப்பு சட்ட வரையறை தெளிவாகக் கூறுகிறது. ஒரு மசோதா இவற்றைத் தாண்டிய வரைமுறைகளை கொண்டிருந்தால், அது பண மசோதாவாக கருத முடியாது. இருப்பினும், 2017-ஆம் ஆண்டு நிதிச் சட்டம், கூடுதல் வரைமுறைகளை சேர்க்க முயற்சித்தது.
வழக்கமாக, மாநிலத்தின் நிதித் திட்டங்களைக் கோடிட்டுக் காட்ட ஒவ்வொரு ஆண்டும் தொடக்கத்தில் நிதிச் சட்டம் இயற்றப்படும். இருப்பினும், 2017-ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நிதிச் சட்டம், தீர்ப்பாயங்கள் செயல்படும் விதத்தில் பெரிய மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. இது நீதித்துறையின் சுதந்திரத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. தீர்ப்பாயங்கள் எவ்வாறு ஒழுங்கமைக்கப்படுகின்றன என்பதை சட்டம் மாற்றியது. அவற்றை நிர்வகிப்பதற்கான விதிகளை உருவாக்க ஒன்றிய அரசின் அதிகாரிக்கு முழு அதிகாரத்தையும் வழங்கியது.
அரசியலமைப்பு பிரிவு 110(1), நிதிச் சட்டம் தொடர்பான சில பகுதிகளை உள்ளடக்கியது. எடுத்துக்காட்டாக, இந்தியத் திரள் நிதியிலிருந்து (Consolidated Fund of India) தீர்ப்பாய உறுப்பினர்களின் சம்பளத்தை நிர்ணயித்தது. நிதிச் சட்டத்தின் சில பகுதிகள் பண மசோதா எனக் கருதப்படலாம். இருப்பினும், பெரும்பாலான சட்டங்கள் மற்ற முக்கிய சட்டங்களில் பெரிய மாற்றங்களைச் செய்தது.
அதிகாரத்தை தவறாக பயன்படுத்துதல்
ரோஜர் மேத்யூ வழக்கில், நீதிமன்றத்தின் பணி மிகவும் எளிமையாக இருந்திருக்க வேண்டும். ஒரு பண மசோதா மூலம் செய்யப்படும் மாற்றங்கள், அலுவலக விதிமுறைகளை மாற்றுவது அல்லது தீர்ப்பாயங்களை ஒழுங்குபடுத்த நிர்வாகத்திற்கு சரிபார்க்கப்படாத அதிகாரம் வழங்குவது போன்றவை முறையற்றதாகக் கருதப்பட வேண்டும். 2017-ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட நிதிச் சட்டம், அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது என்பது தெளிவாகத் தெரிந்தது. அரசியலமைப்பின் அடிப்படைக் கோட்பாட்டைச் சிதைக்கும் வகையில் இந்த சட்டம் கொண்டுவரப்பட்டது.
இருப்பினும், ஐந்து நீதிபதிகளில் பெரும்பாலானவர்கள் இந்த சட்டத்தை பற்றி நன்றாக புரிந்து கொண்டனர். அவர்கள் குறிப்பிட்டது ஆதார் அட்டையில் காலத்தை (Aadhaar regime) சவால் செய்த கே.எஸ். புட்டசாமி vs யூனியன் ஆஃப் இந்தியா (2018) (K.S. Puttaswamy vs Union of India (2018)) வழக்கில், முந்தைய அமர்வு ஒரு வரைவு சட்டத்தை பண மசோதாவாக அங்கீகரிக்கும் சபாநாயகரின் முடிவை மறுஆய்வு செய்வதற்கான தெளிவான விதிகளை வழங்கவில்லை. குறிப்பாக, சட்டப்பிரிவு 110(1)-ல் உள்ள "மட்டும்" என்ற வார்த்தையின் அர்த்தத்தை புட்டசாமி வழக்கில் தவறவிட்டதாக அமர்வு கூறியது.
நீதிபதி ஏ.கே. சிக்ரி பெரும்பான்மையானோரின் கருத்தை கே.எஸ். புட்டசாமி வழக்கில் ஏற்றார். ஆதார் சட்டத்தின் பிரிவு 7 ஒரு பண மசோதா என்று கருத்துக்கூறி வழக்கை முடித்தார். ஏனெனில், இது மானியங்கள், சலுகைகள் மற்றும் இந்தியாவின் திரள் நிதியிலிருந்து (Consolidated Fund of India) நிதியளிக்கப்பட்ட சேவைகளைக் கையாள்கிறது. இதில் மக்கள்தொகை மற்றும் பயோமெட்ரிக் தகவலின் அடிப்படையில் பதிவு செய்தல், தகவல்களைச் சேகரிப்பதற்கு முன் தனிநபர்களிடமிருந்து ஒப்புதல் பெறுதல், குற்றங்கள் மற்றும் தண்டனைகளை உருவாக்குதல், செயல்முறையை நிர்வகிக்க ஒரு சட்டப்பூர்வ அதிகாரத்தை நிறுவுதல் போன்ற ஆதார் சட்டத்தின் பல பகுதிகளை நீதிபதி ஏ.கே. சிக்ரி கருத்தில் கொள்ளவில்லை.
சரியாகப் புரிந்து கொள்ளப்பட்டால், இந்த விஷயங்கள் பிரிவு 110(1) இல் குறிப்பிடப்பட்டுள்ள தலைப்புகளுடன் நெருக்கமாக தொடர்புடையவை. ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வு இப்போது "மட்டும்" என்ற வார்த்தையின் அர்த்தத்தை ஆராய வேண்டும். அவர்கள் வழங்க உள்ள தீர்ப்பு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும். ஏனென்றால், ரோஜர் மேத்யூவு வழக்கிற்கு முன்னும் பின்னும், ராஜ்யசபா புறக்கணிக்கப்பட்ட மற்ற பல வழக்குகள் உள்ளன.
நிதிச் சட்டம், 2019 (Finance Act, 2019), பண மசோதாவைப் பயன்படுத்தி பணமோசடி தடுப்புச் சட்டம், 2002 (Prevention of Money Laundering Act, (PMLA) 2002)-ல் பெரிய மாற்றங்களைச் செய்தது. இந்த மாற்றங்கள்: ”குற்றத்தின் வருமானம்" (proceeds of crime) என்பதன் வரையறையை மாற்றுதல், அமலாக்க இயக்குனரகத்திற்கு கைது, தேடுதல் மற்றும் பறிமுதல் போன்ற கடுமையான அதிகாரங்களை வழங்குதல், விஜய் மதன்லால் சவுத்ரி vs யூனியன் ஆஃப் இந்தியா (2022) (Vijay Madanlal Choudhary vs Union of India) வழக்கில், இந்த மாற்றங்கள் பலவற்றை உச்ச நீதிமன்றம் அங்கீகரித்துள்ளது. இருப்பினும், செய்யப்பட்ட மாற்றங்கள் பண மசோதா மூலம் செல்லுபடியாகுமா என்பதை நீதிமன்றம் முடிவு செய்யவில்லை.
மாநிலங்களவையின் பங்கு
ஏழு நீதிபதிகள் கொண்ட அமர்வானது பல்வேறு விளைவுகளை ஏற்படுத்தும். ரோஜர் மேத்யூ வழக்கில், நமது தேசம் பிரதிநிதித்துவப்படுத்தும் பன்மைத்துவத்திற்கு ஒரு அங்கமாக மாநிலங்களவை இருக்க வேண்டும் என்று அதன் முக்கியத்துவத்தை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் சுட்டிக்காட்டினார்.
அரசியலமைப்பின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கு மாநிலங்களவை மிகவும் முக்கியமானது. மாநிலங்களவையை புறக்கணிப்பதன் மூலம் நாடாளுமன்றத்தின் இரு அவைகளுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகளை தீர்க்க முடியாது. நமது கூட்டாட்சி அமைப்பில், ஒரு மசோதாவை பண மசோதாவாக அங்கீகரிக்கும் சபாநாயகரின் முடிவை நீதிமன்றம் மறுஆய்வு செய்யலாம் என்றுநீதிபதி சந்திரசூட் சுட்டிக்காட்டினார்.
மாநிலங்களவை அடிப்படை நிர்வாகத்திற்கான நிதியை அரசாங்கத்தின் தேவைகளைத் தடுக்காது என்பதை உறுதிப்படுத்த பண மசோதாக்கள் பயன்படுத்தப்படுகின்றன. நாட்டின் சட்டமன்ற செயல்பாடுகளை சரிபார்ப்பதில் மாநிலங்களவையின் பங்கை புறக்கணிக்க பண மசோதாவைப் பயன்படுத்துவது அரசியலமைப்பை தவறாக வழி வழிநடத்துவதாகும். இந்த நடைமுறையை நீதிமன்றம் அனுமதித்தால், அது நமது ஜனநாயகத்தின் அடித்தளத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும்.
சுஹ்ரித் பார்த்தசாரதி, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார்.